சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

1.051   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருச்சோபுரம் (தியாகவல்லி) - பழந்தக்கராகம் அருள்தரு சோபுரநாயகியம்மை உடனுறை அருள்மிகு சோபுரநாதர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=H2I_u74H02A  
வெங் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து, விளங்கும் மொழி
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை கொல் ஆம்?
கங்கையோடு திங்கள் சூடி, கடி கமழும் கொன்றைத்
தொங்கலானே! தூய நீற்றாய்! சோபுரம் மேயவனே!


[ 1]


விடை அமர்ந்து, வெண்மழு ஒன்று ஏந்தி, விரிந்து இலங்கு
சடை ஒடுங்க, தண் புனலைத் தாங்கியது என்னை கொள் ஆம்?
கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த,
தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய்! சோபுரம் மேயவனே!


[ 2]


தீயர் ஆய வல் அரக்கர் செந்தழலுள் அழுந்தச்
சாய எய்து, வானவரைத் தாங்கியது என்னை கொள் ஆம்?
பாயும் வெள்ளை ஏற்றை ஏறி, பாய் புலித்தோல் உடுத்த
தூய வெள்ளை நீற்றினானே! சோபுரம் மேயவனே!


[ 3]


பல் இல் ஓடு கையில் ஏந்தி, பல்கடையும் பலி தேர்ந்து,
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை கொல் ஆம்?
வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும்
தொல்லை ஊழி ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே!


[ 4]


நாற்றம் மிக்க கொன்றை துன்று செஞ்சடைமேல் மதியம்
ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை கொல் ஆம்?
ஊற்றம் மிக்க காலன்தன்னை ஒல்க உதைத்து அருளி,
தோற்றம் ஈறும் ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே!


[ 5]


Go to top
கொல் நவின்ற மூ இலைவேல், கூர் மழுவாள் படையன்,
பொன்னை வென்ற கொன்றைமாலை சூடும் பொற்பு என்னை கொல் ஆம்?
அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து, அரை சேர்
துன்ன வண்ண ஆடையினாய்! சோபுரம் மேயவனே!


[ 6]


குற்றம் இன்மை, உண்மை, நீ என்று உன் அடியார் பணிவார்,
கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை கொல் ஆம்?
வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு, அயன் வெண் தலையில்
துற்றல் ஆன கொள்கையானே! சோபுரம் மேயவனே!


[ 7]


விலங்கல் ஒன்று வெஞ்சிலையாக் கொண்டு, விறல் அரக்கர்
குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை கொல் ஆம்?
இலங்கை மன்னு வாள் அவுணர்கோனை எழில் விரலால்
துலங்க ஊன்றிவைத்து உகந்தாய்! சோபுரம் மேயவனே!


[ 8]


விடம் கொள் நாகம் மால்வரையைச் சுற்றி, விரிதிரை நீர்
கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை கொல் ஆம்?
இடந்து மண்ணை உண்ட மாலும், இன் மலர்மேல் அயனும்,
தொடர்ந்து முன்னம் காணமாட்டாச் சோபுரம் மேயவனே!


[ 9]


புத்தரோடு புன்சமணர் பொய் உரையே உரைத்து,
பித்தர் ஆகக் கண்டு உகந்த பெற்றிமை என்னை கொல் ஆம்?
மத்தயானை ஈர் உரிவை போர்த்து, வளர் சடைமேல்
துத்திநாகம் சூடினானே! சோபுரம் மேயவனே!


[ 10]


Go to top
சோலை மிக்க தண்வயல் சூழ் சோபுரம் மேயவனை,
சீலம் மிக்க தொல்புகழ் ஆர் சிரபுரக் கோன்-நலத்தான்,
ஞாலம் மிக்க தண் தமிழான், ஞானசம்பந்தன்-சொன்ன
கோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர், வான் உலகே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்சோபுரம் (தியாகவல்லி)
1.051   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெங் கண் ஆனை ஈர்
Tune - பழந்தக்கராகம்   (திருச்சோபுரம் (தியாகவல்லி) சோபுரநாதர் சோபுரநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song