சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

1.100   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்பரங்குன்றம் - குறிஞ்சி அருள்தரு ஆவுடைநாயகியம்மை உடனுறை அருள்மிகு பரங்கிரிநாதர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=3wtL44T-VIM  
நீடு அலர் சோதி வெண்பிறையோடு நிரை கொன்றை
சூடலன், அந்திச் சுடர் எரி ஏந்திச் சுடுகானில்
ஆடலன், அம் சொல் அணியிழையாளை ஒருபாகம்
பாடலன், மேய நன்நகர்போலும் பரங்குன்றே.


[ 1]


அங்கம் ஓர் ஆறும் அருமறை நான்கும் அருள் செய்து,
பொங்கு வெண் நூலும் பொடி அணி மார்பில் பொலிவித்து,
திங்களும் பாம்பும் திகழ்சடை வைத்து ஓர் தேன்மொழி
பங்கினன் மேய நன்நகர்போலும் பரங்குன்றே.


[ 2]


நீர் இடம் கொண்ட நிமிர் சடை தன்மேல் நிரை கொன்றை
சீர் இடம் கொண்ட எம் இறைபோலும், சேய்து ஆய
ஓர் உடம்புள்ளே உமை ஒருபாகம் உடன் ஆகி,
பாரிடம் பாட, இனிது உறை கோயில் பரங்குன்றே.


[ 3]


வளர் பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக்
குளிர்பூஞ்சாரல் வண்டு அறை சோலைப் பரங்குன்றம்,
தளிர் போல் மேனித் தையல் நல்லாளோடு ஒரு பாகம்,
நளிர் பூங்கொன்றை சூடினன் மேய நகர்தானே.


[ 4]


பொன் இயல் கொன்றை பொறி கிளர் நாகம் புரிசடைத்
துன்னிய சோதி ஆகிய ஈசன், தொல்மறை
பன்னிய பாடல் ஆடலன், மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை, உறு நோயே.


[ 5]


Go to top
கடை நெடு மாடக் கடி அரண் மூன்றும் கனல் மூழ்கத்
தொடை நவில்கின்ற வில்லினன், அந்திச் சுடுகானில்
புடை நவில் பூதம் பாட, நின்று ஆடும் பொரு சூலப்-
படை நவில்வான்தன் நன்நகர்போலும் பரங்குன்றே.


[ 6]


அயில் உடை வேல் ஓர் அனல் புல்கு கையின் அம்பு ஒன்றால்
எயில் பட எய்த எம் இறை மேய இடம்போலும்
மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை,
பயில் பெடைவண்டு பாடல் அறாத பரங்குன்றே.


[ 7]


மைத் தகு மேனி வாள் அரக்கன் தன் மகுடங்கள்-
பத்தின, திண்தோள் இருபதும், செற்றான் பரங்குன்றைச்
சித்தம் அது ஒன்றிச் செய் கழல் உன்னிச் சிவன் என்று
நித்தலும் ஏத்த, தொல்வினை நம்மேல் நில்லாவே.


[ 8]


முந்தி இவ் வையம் தாவிய மாலும், மொய் ஒளி
உந்தியில் வந்து இங்கு அருமறை ஈந்த உரவோனும்,
சிந்தையினாலும் தெரிவு அரிது ஆகித் திகழ்சோதி,
பந்து இயல் அம் கை மங்கை ஒர்பங்கன், பரங்குன்றே!


[ 9]


குண்டு ஆய் முற்றும் திரிவார், கூறை மெய் போர்த்து,
மிண்டு ஆய் மிண்டர் பேசிய பேச்சு மெய் அல்ல;
பண்டு ஆல் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றைத்
தொண்டால் ஏத்த, தொல்வினை நம்மேல் நில்லாவே.


[ 10]


Go to top
தட மலி பொய்கைச் சண்பை மன் ஞானசம்பந்தன்,
படம் மலி நாகம் அரைக்கு அசைத்தான் தன் பரங்குன்றைத்
தொடை மலி பாடல் பத்தும் வல்லார், தம் துயர் போகி,
விடம் மலி கண்டன் அருள் பெறும் தன்மை மிக்கோரே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பரங்குன்றம்
1.100   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீடு அலர் சோதி வெண்பிறையோடு
Tune - குறிஞ்சி   (திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியம்மை)
7.002   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்;
Tune - இந்தளம்   (திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song