சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=ZBhQwkvFN8o
3.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்) - காந்தாரபஞ்சமம் அருள்தரு பூங்குழனாயகியம்மை உடனுறை அருள்மிகு பிரமபுரிநாதேசுவரர் திருவடிகள் போற்றி
எரிதர அனல் கையில் ஏந்தி, எல்லியில்,
நரி திரி கான் இடை, நட்டம் ஆடுவர்
அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர்
குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே.
[ 1]
மைய கண் மலைமகள் பாகம் ஆய், இருள
கையது ஓர் கனல்-எரி கனல ஆடுவர்
ஐய நன் பொரு புனல் அம்பர், செம்பியர்
செய்யகண் இறை செய்த கோயில் சேர்வரே.
[ 2]
மறை புனை பாடலர், சுடர் கை மல்க, ஓர்
பிறை புனை சடைமுடி பெயர, ஆடுவர்
அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர்
இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே.
[ 3]
இரவு மல்கு இளமதி சூடி, ஈடு உயர்
பரவ மல்கு அருமறை பாடி, ஆடுவர்
அரவமோடு உயர் செம்மல் அம்பர், கொம்பு அலர்
மரவம் மல்கு எழில் நகர், மருவி வாழ்வரே.
[ 4]
சங்கு அணி குழையினர், சாமம் பாடுவர்
வெங்கனல் கனல்தர வீசி ஆடுவர்
அங்கு அணி விழவு அமர் அம்பர் மா நகர்
செங்கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே.
[ 5]
Go to top
கழல் வளர் காலினர், சுடர் கை மல்க, ஓர்
சுழல் வளர் குளிர்புனல் சூடி, ஆடுவர்
அழல் வளர் மறையவர் அம்பர், பைம்பொழில்
நிழல் வளர் நெடு நகர், இடம் அது என்பரே.
[ 6]
இகல் உறு சுடர் எரி இலங்க வீசியே,
பகல் இடம் பலி கொளப் பாடி ஆடுவர்
அகலிடம் மலி புகழ் அம்பர், வம்பு அவிழ்
புகல் இடம் நெடு நகர் புகுவர்போலுமே.
[ 7]
எரி அன மணி முடி இலங்கைக்கோன் தன
கரி அன தடக்கைகள் அடர்த்த காலினர்,
அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு
புரியவர், பிரிவு இலாப் பூதம் சூழவே.
[ 8]
வெறி கிளர் மலர்மிசையவனும், வெந் தொழில்
பொறி கிளர் அரவு அணைப் புல்கு செல்வனும்,
அறிகில அரியவர் அம்பர், செம்பியர்
செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே.
[ 9]
வழி தலை, பறி தலை, அவர்கள் கட்டிய
மொழிதலைப் பயன் என மொழியல்! வம்மினோ!
அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர்
உழிதலை ஒழிந்து உளர், உமையும் தாமுமே.
[ 10]
Go to top
அழகரை, அடிகளை, அம்பர் மேவிய
நிழல் திகழ் சடைமுடி நீலகண்டரை,
உமிழ் திரை உலகினில் ஓதுவீர்! கொண்மின்-
தமிழ் கெழு விரகினன் தமிழ்செய்மாலையே!
[ 11]
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்)
3.019
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
எரிதர அனல் கையில் ஏந்தி,
Tune - காந்தாரபஞ்சமம்
(திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்) பிரமபுரிநாதேசுவரர் பூங்குழனாயகியம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400