சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

3.065   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருக்கச்சிநெறிக்காரைக்காடு - பஞ்சமம் அருள்தரு காரார்குழலியம்மை உடனுறை அருள்மிகு காரைத்திருநாதஈசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=44b9bVlOxLk  
வார் அணவு முலை மங்கை பங்கினராய், அம் கையினில்
போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி, வெண்பொடி அணிவர்
கார் அணவு மணி மாடம் கடை நவின்ற கலிக் கச்சி,
நீர் அணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக்காட்டாரே.


[ 1]


கார் ஊரும் மணிமிடற்றார், கரிகாடர், உடைதலை கொண்டு
ஊர் ஊரன் பலிக்கு உழல்வார், உழைமானின் உரி-அதளர்
தேர் ஊரும் நெடுவீதிச் செழுங் கச்சி மா நகர் வாய்,
நீர் ஊரும் மலர்ப்பொய்கை நெறிக்காரைக்காட்டாரே.


[ 2]


கூறு அணிந்தார், கொடியிடையை; குளிர்சடைமேல்
இளமதியோடு
ஆறு அணிந்தார்; ஆடு அரவம் பூண்டு உகந்தார்; ஆள் வெள்ளை
ஏறு அணிந்தார், கொடி அதன்மேல்; என்பு அணிந்தார், வரைமார்பில்,
நீறு அணிந்தார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.


[ 3]


பிறை நவின்ற செஞ்சடைகள் பின் தாழ, பூதங்கள்
மறை நவின்ற பாடலோடு ஆடலராய், மழு ஏந்தி,
சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனிவாய்த் தேன் கதுவும்
நிறை நவின்ற கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.


[ 4]


அன்று ஆலின் கீழ் இருந்து, அங்கு அறம் உரைத்த அருள
குன்றாத வெஞ்சிலையில் கோள் அரவம் நாண் கொளுவி,
ஒன்றாதார் புரம் மூன்றும் ஓங்கு எரியில் வெந்து அவிய
நின்றாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.


[ 5]


Go to top
பல்மலர்கள் கொண்டு அடிக்கீழ் வானோர்கள் பணிந்து இறைஞ்ச,
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும், ஒரு நொடியில்,
வில் மலையில் நாண் கொளுவி, வெங்கணையால் எய்து அழித்த
நின்மலனார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.


[ 6]


புற்று இடை வாள் அரவினொடு, புனை கொன்றை, மத மத்தம்,
எற்று ஒழியா அலைபுனலோடு, இளமதியம், ஏந்து சடைப்
பெற்று உடையார்; ஒருபாகம் பெண் உடையார்; கண் அமரும்
நெற்றியினார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.


[ 7]


ஏழ்கடல் சூழ் தென் இலங்கைக் கோமானை எழில் வரைவாய்த்
தாழ்விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார், நன்மையினார்
ஆழ் கிடங்கும், சூழ் வயலும், மதில் புல்கி அழகு அமரும்
நீள்மறுகின், கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.


[ 8]


ஊண்தானும் ஒலி கடல் நஞ்சு; உடை தலையில் பலி கொள்வர்
மாண்டார் தம் எலும்பு அணிவர்; வரி அரவோடு எழில் ஆமை
பூண்டாரும்; ஓர் இருவர் அறியாமைப் பொங்கு எரி ஆய்
நீண்டாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.


[ 9]


குண்டாடிச் சமண் படுவார், கூறை தனை மெய் போர்த்து
மிண்டாடித் திரிதருவார், உரைப்பனகள் மெய் அல்ல;
வண்டு ஆரும் குழலாளை வரை ஆகத்து ஒருபாகம்
கண்டாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.


[ 10]


Go to top
கண் ஆரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டு உறையும்
பெண் ஆரும் திருமேனிப் பெருமானது அடி வாழ்த்தி,
தண் ஆரும் பொழில் காழித் தமிழ் ஞானசம்பந்தன்
பண் ஆரும் தமிழ் வல்லார், பரலோகத்து இருப்பாரே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கச்சிநெறிக்காரைக்காடு
3.065   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வார் அணவு முலை மங்கை
Tune - பஞ்சமம்   (திருக்கச்சிநெறிக்காரைக்காடு காரைத்திருநாதஈசுவரர் காரார்குழலியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song