சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

3.073   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்பட்டீச்சரம் - சாதாரி அருள்தரு பல்வளைநாயகியம்மை உடனுறை அருள்மிகு பட்டீச்சரநாதர் திருவடிகள் போற்றி
திருஞானசம்பந்தர், திருச்செங்குன்றூரிலிருந்து புறப்பட்டுப் பாண்டிக் கொடுமுடி, வெஞ்சமாக் கூடல், கருவூர் ஆனிலை முதலிய தலங்களைப் பணிந்து சோழ நாடு மீண்டு திருச்சிராப்பள்ளி முதலிய காவிரித் தென்கரைத் தலங்களை வணங்கிக் கொண்டு திருவலஞ்சுழி வந்தடைந்தார். அப்போது இளவேனிற் பருவம் தொடங்கியது. திருவலஞ்சுழி இறைவனை வணங்கிப் பழையாறை மேற்றளியையும் திருச்சத்தி முற்றத்தையும் பணிந்து நண்பகற்போதில் பட்டீச்சுரம் வந்தடைந்தார். சிவபூதங்கள் வானத்தில் மறைந்து நின்று பட்டீசுரர் அளித்த முத்துப் பந்தரை ஏந்தியவாறு இது சிவபெருமான் அளித்தது எனக் கூறி ஞானசம்பந்தரின் சிவிகையின் மேல் ஏந்தி நிழல் செய்தன. அடியவர் வானினின்று இழியும் அப்பந்தரை ஏந்தியவர்களாய்த் தண்ணிழலில் ஞானசம்பந்தரை ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர். ஞானசம்பந்தர் இறைவனது தடங் கருணையை வியந்தவாறு பாடல் மறை பதிகம் பாடிப் பட்டீச்சுரரை வழிபட்டு மகிழ்ந்தார்.
திருத்தல பயணங்கள் இனிதே சிரமங்கள் இன்றி நடக்க
Audio: https://www.youtube.com/watch?v=sKE5tlWTjIk  
பாடல் மறை, சூடல் மதி, பல்வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால்
கூட எரியூட்டி, எழில் காட்டி, நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள்
மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய, கடி கட்டு அரவினார்
வேடம் நிலை கொண்டவரை வீடுநெறி காட்டி, வினை வீடுமவரே.


[ 1]


நீரின் மலி புன்சடையர்; நீள் அரவு, கச்சை அது; நச்சு
இலையது ஓர்
கூரின் மலி சூலம் அது ஏந்தி; உடை கோவணமும், மானின் உரி-தோல்;
காரின் மலி கொன்றை விரிதார் கடவுள்; காதல் செய்து மேய நகர்தான்,
பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம்; ஏத்த, வினை பற்று அழியுமே.


[ 2]


காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை, கடி ஆர் மறுகு எலாம்
மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர்ப்
பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார்
மேலை ஒரு மால்கடல்கள் போல் பெருகி, விண்ணுலகம்
ஆளுமவரே.


[ 3]


கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப, முகம் ஏத்து கமழ்
செஞ்சடையினான்,
பண்ணின்மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான்,
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார்
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது
மேவல் எளிதே.


[ 4]


மருவ முழவு அதிர, மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க, வரை ஆர்
பருவ மழை பண் கவர் செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான்;
வெருவ மதயானை உரி போர்த்து, உமையை அஞ்ச வரு
வெள்விடையினான்;
உருவம் எரி; கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா, வினைகளே


[ 5]


Go to top
மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி, விரவு ஆர்
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர்
பிறையினொடு, மருவியது ஒர் சடையின் இடை, ஏற்ற புனல்,
தோற்றம் நிலை ஆம்-
இறைவன் அடி முறை முறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள்
இல்லர், மிகவே.


[ 6]


பிறவி, பிணி, மூப்பினொடு நீங்கி, இமையோர் உலகு பேணல் உறுவார்
துறவி எனும் உள்ளம் உடையார்கள், கொடி வீதி அழகு ஆய தொகு சீர்
இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள், வினை ஏதும் இல ஆய்,
நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே.


[ 7]


நேசம் மிகு தோள் வலவன் ஆகி, இறைவன் மலையை நீக்கியிடலும்,
நீசன் விறல் வாட்டி, வரை உற்றது உணராத, நிரம்பா மதியினான்,
ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இல ஆய்
நாசம் அற வேண்டுதலின், நண்ணல் எளிது ஆம், அமரர்
விண்ணுலகமே.


[ 8]


தூய மலரானும் நெடியானும் அறியார், அவன் தோற்றம்; நிலையின்
ஏய வகையான் அதனை யார் அது அறிவார்? அணி கொள் மார்பின் அகலம்
பாய நல நீறு அது அணிவான், உமைதனோடும் உறை பட்டிசுரமே
மேயவனது ஈர் அடியும் ஏத்த, எளிது ஆகும், நல மேல் உலகமே.


[ 9]


தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடு பிண்டம் அது உண்டு உழல்தரும்
கடுப்பொடி, உடல் கவசர், கத்து மொழி காதல் செய்திடாது, கமழ் சேர்
மடைக் கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள்
படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த, வினை பற்று அறுதலே.


[ 10]


Go to top
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள்
பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன்சடையனை,
அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர்
செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை
நிற்பது இலவே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பட்டீச்சரம்
3.073   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பாடல் மறை, சூடல் மதி,
Tune - சாதாரி   (திருப்பட்டீச்சரம் பட்டீச்சரநாதர் பல்வளைநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song