சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

4.047   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கயிலாயம் - திருநேரிசை அருள்தரு பார்வதியம்மை உடனுறை அருள்மிகு கயிலாயநாதர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=s9ODsmIO0K0  
கனகம் மா வயிரம் உந்தும் மா மணிக் கயிலை கண்டு
முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும், உமையாள் அஞ்ச,
அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும், அலறி வீழ்ந்தான்;
மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!


[ 1]


கதித்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி
அதிர்த்து அவன் எடுத்திட(ல்)லும், அரிவை தான் அஞ்ச, ஈசன்
நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான்;
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!


[ 2]


கறுத்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையைக் கையால்
மறித்தலும், மங்கை அஞ்ச, வானவர் இறைவன் நக்கு,
நெறித்து ஒரு விரலால் ஊன்ற, நெடுவரை போல வீழ்ந்தான்;
மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!


[ 3]


கடுத்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி
எடுத்தலும், மங்கை அஞ்ச, இறையவன் இறையே நக்கு,
நொடிப்பு அளவு(வு) விரலால் ஊன்ற, நோவதும் அலறியிட்டான்;
மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!


[ 4]


கன்றித் தன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி
வென்றித் தன் கைத்தலத்தால் எடுத்தலும், வெருவ மங்கை,
நன்று(த்) தான் நக்கு நாதன் ஊன்றலும், நகழ வீழ்ந்தான்;
மன்றித் தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!


[ 5]


Go to top
களித்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி,
நெளித்து அவன் எடுத்திட(ல்)லும், நேரிழை அஞ்ச, நோக்கி,
வெளித்தவன் ஊன்றியிட்ட வெற்பினால் அலறி வீழ்ந்தான்;
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!


[ 6]


கருத்தனாய்க் கண் சிவந்து, கயிலை நல் மலையைக் கையால்
எருத்தனாய் எடுத்த ஆறே, ஏந்திழை அஞ்ச, ஈசன்
திருத்தனாய் நின்ற தேவன் திருவிரல் ஊன்ற, வீழ்ந்தான்;
வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!


[ 7]


கடியவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி,
வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும், மருவ நோக்கிச்
செடி படத் திருவிர(ல்)லால் ஊன்றலும், சிதைந்து வீழ்ந்தான்;
வடிவு உற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!


[ 8]


கரியத் தான் கண் சிவந்து, கயிலை நல் மலையைப் பற்றி,
இரியத் தான் எடுத்திட(ல்)லும், ஏந்திழை அஞ்ச, ஈசன்
நெரியத் தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது, அலறி வீழ்ந்தான்;
மறியத் தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!


[ 9]


கற்றனன், கயிலை தன்னைக் காண்டலும் அரக்கன் ஓடிச்
செற்றவன் எடுத்த ஆறே, சேயிழை அஞ்ச, ஈசன்
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால், வீழ்ந்தான்;
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கயிலாயம்
1.068   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொடி கொள் உருவர், புலியின்
Tune - தக்கேசி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
3.068   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வாள வரி கோள புலி
Tune - சாதாரி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
4.047   திருநாவுக்கரசர்   தேவாரம்   கனகம் மா வயிரம் உந்தும்
Tune - திருநேரிசை   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.055   திருநாவுக்கரசர்   தேவாரம்   வே(ற்)ற்று ஆகி விண் ஆகி
Tune - குறிஞ்சி   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.056   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொறை உடைய பூமி, நீர்,
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
6.057   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாட்டு ஆன நல்ல தொடையாய்,
Tune - போற்றித்திருத்தாண்டகம்   (திருக்கயிலாயம் கயிலாயநாதர் பார்வதியம்மை)
7.100   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தான் எனை முன் படைத்தான்;
Tune - பஞ்சமம்   (திருக்கயிலாயம் )
11.008   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா   திருக்கயிலாய ஞான உலா
Tune -   (திருக்கயிலாயம் )
11.009   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
Tune -   (திருக்கயிலாயம் )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song