சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

4.067   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கொண்டீச்சரம் - திருநேரிசை அருள்தரு சாந்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு பசுபதீசுவரர் திருவடிகள் போற்றி
வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப் பிறவி மாயப்
புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன்;
அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே! அஞ்சல்! என்னாய்
திரை உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!


[ 1]


தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து பேர்வது ஓர் வழியும் காணேன்;
அண்டனே! அண்டவாணா! அறிவனே! அஞ்சல்! என்னாய்
தெண் திரைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே!


[ 2]


கால் கொடுத்து, எலும்பு மூட்டி, கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்து
தோல் உடுத்து, உதிரம் அட்டி, தொகு மயிர் மேய்ந்த கூரை
ஓல் எடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன்-
சேல் உடைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே!


[ 3]


கூட்டம் ஆய் ஐவர் வந்து கொடுந் தொழில் குணத்தர் ஆகி
ஆட்டுவார்க்கு ஆற்றகில்லேன் ஆடு அரவு அசைத்த கோவே!
காட்டு இடை அரங்கம் ஆக ஆடிய கடவுளேயோ!
சேட்டு இரும் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!


[ 4]


பொக்கம் ஆய் நின்ற பொல்லாப் புழு மிடை முடை கொள் ஆக்கை
தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்று அறுவரும் துயக்கம் எய்த,
மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்து போனேன்
செக்கரே திகழும் மேனித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!


[ 5]


Go to top
ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடைகலம் ஆவது, என்றும்;
மான் உலாம் மழைக்கணார் தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி,
நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன்; எண்ணம் இல்லேன்
தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே!


[ 6]


சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடைப் பதிக்கு நாதர்
வாணிகர் ஐவர் தொண்ணூற்று அறுவரும் மயக்கம் செய்து,
பேணிய பதியின் நின்று பெயரும் போது அறிய மாட்டேனெ
சேண் உயர் மாடம் நீடு திருக்கொண்டீச்சுரத்து உளானே!


[ 7]


பொய்ம் மறித்து இயற்றி வைத்து, புலால் கமழ் பண்டம் பெய்து
பைம் மறித்து இயற்றியன்ன பாங்கு இலாக் குரம்பை நின்று
கைம் மறித்தனைய ஆவி கழியும் போது அறிய மாட்டேன்;
செந்நெறிச் செலவு காணேன்திருக்கொண்டீச்சுரத்து உளானே!


[ 8]


பாலனாய்க் கழிந்த நாளும், பனிமலர்க் கோதை மார் தம்
மேலனாய்க் கழிந்த நாளும், மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும், குறிக்கோள் இலாது கெட்டேன்-
சேல் உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!


[ 9]


விரை தரு கருமென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண் கண்ணாள
வெருவர, இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்று,
பருவரை அனைய தோளும் முடிகளும் பாரி வீழத்
திருவிரல் ஊன்றினானே திருக்கொண்டீச்சுரத்து உளானே!


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கொண்டீச்சரம்
4.067   திருநாவுக்கரசர்   தேவாரம்   வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப்
Tune - திருநேரிசை   (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை)
5.070   திருநாவுக்கரசர்   தேவாரம்   கண்ட பேச்சினில் காளையர் தங்கள்
Tune - திருக்குறுந்தொகை   (திருக்கொண்டீச்சரம் பசுபதீசுவரர் சாந்தநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song