சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

4.111   திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது -சரக்கறை திருவிருத்தம் - திருவிருத்தம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=V2RlPFkwLy8  
விடையும் விடைப் பெரும் பாகா! என் விண்ணப்பம்: வெம்மழுவாள்-
படையும், படை ஆய் நிரைத்த பல் பூதமும், பாய்புலித்தோல்-
உடையும், முடைத்தலைமாலையும், மாலைப் பிறை ஒதுங்கும்
சடையும், இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!


[ 1]


விஞ்சத் தடவரை வெற்பா! என் விண்ணப்பம்; மேல் இலங்கு
சங்கக் கலனும், சரி கோவணமும், தமருகமும்,
அந்திப் பிறையும், அனல் வாய் அரவும், விரவி எல்லாம்
சந்தித்து இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!


[ 2]


வீந்தார் தலைகலன் ஏந்தீ! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
சாந்து ஆய வெந்ததவள-வெண் நீறும், தகுணிச்சமும்,
பூந்தாமரை மேனி, புள்ளி உழை-மான் அதள், புலித்தோல்,
தாம்தாம் இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!


[ 3]


வெஞ்சமர் வேழத்து உரியாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
வஞ்சமா வந்த வரு புனல் கங்கையும், வான்மதியும்,
நஞ்சம் மா நாகம், நகுசிரமாலை, நகுவெண்தலை,
தஞ்சமா வாழும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!


[ 4]


வேலைக்-கடல் நஞ்சம் உண்டாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
காலற் கடந்தான் இடம் கயிலாயமும், காமர் கொன்றை,
மாலைப் பிறையும், மணி வாய் அரவும், விரவி எல்லாம்
சாலக் கிடக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!


[ 5]


Go to top
வீழிட்ட கொன்றை அம்தாராய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
சூழ் இட்டு இருக்கும் நல் சூளாமணியும், சுடலை நீறும்,
ஏழ் இட்டு இருக்கும் நல் அக்கும், அரவும், என்பு, ஆமை ஓடும்,
தாழ் இட்டு இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!


[ 6]


விண்டார் புரம் மூன்றும் எய்தாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி-நீறும், தொழுது பாதம்
கண்டார்கள் கண்டிருக்கும் கயிலாயமும், காமர் கொன்றைத்-
தண்தார் இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!


[ 7]


விடு பட்டி ஏறு உகந்து ஏறீ! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
கொடு கொட்டி, கொக்கரை, தக்கை, குழல், தாளம், வீணை, மொந்தை,
வடு விட்ட கொன்றையும், வன்னியும், மத்தமும், வாள் அரவும்,
தடுகுட்டம் ஆடும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!


[ 8]


வெண் திரைக் கங்கை விகிர்தா! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
கண்டிகை பூண்டு, கடி சூத்திரம்மேல் கபாலவடம்,
குண்டிகை, கொக்கரை, கொன்றை, பிறை, குறள் பூதப்படை
தண்டி வைத்திட்ட சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!


[ 9]


வேதித்த வெம்மழு ஆளீ! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
சோதித் திருக்கும், நல் சூளாமணியும், சுடலை நீறும்,
பாதிப்பிறையும், படுதலைத்துண்டமும், பாய் புலித்தோல்,
சாதித்து இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!


[ 10]


Go to top
விவந்து ஆடிய கழல் எந்தாய்! என் விண்ணப்பம்: மேல் இலங்கு
தவந்தான் எடுக்கத் தலைபத்து இறுத்தனை; தாழ் புலித்தோல்
சிவந்து ஆடிய பொடி-நீறும், சிரமாலை சூடி நின்று
தவம் தான் இருக்கும் சரக்கு அறையோ, என் தனி நெஞ்சமே!


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பொது -சரக்கறை திருவிருத்தம்
4.111   திருநாவுக்கரசர்   தேவாரம்   விடையும் விடைப் பெரும் பாகா!
Tune - திருவிருத்தம்   (பொது -சரக்கறை திருவிருத்தம் )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song