சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

6.077   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவாய்மூர் - திருத்தாண்டகம் அருள்தரு பாலினுநன்மொழியம்மை உடனுறை அருள்மிகு வாய்மூரீசுவரர் திருவடிகள் போற்றி
முன்னே சென்று கொண்டிருந்த பெருமான் பொற்கோயில் ஒன்றைக் காட்டி மறைந்தனன். ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசர் வாய்மூருக்குச் சென்றதை யறிந்து அவரைத் தொடர்ந்து வாய்மூரை அடைந்தார்.திறக்கப்பாடிய என்னினும் அடைக்கப்பாடிய ஞானசம்பந்தரும் வந்துவிட்டார். இனியும் தம்மைக் காட்டாது மறைப்பரோன்று பாடினார். இறைவன் ஞானசம்பந்தர் காணக் காட்சி வழங்கினன். ஞானசம்பந்தர் காட்ட நாவுக்கரசரும் இறைவன் திருக்காட்சி கண்டு இன்புற்று பாட அடியார்என்று தொடங்கிப் பாடிப் பணிந்தார்.
Audio: https://www.youtube.com/watch?v=dW7dH_3fNrg  
பாட அடியார், பரவக் கண்டேன்; பத்தர் கணம் கண்டேன்; மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிரக் கண்டேன்; அங்கை   அனல் கண்டேன்; கங்கையாளைக்
கோடல், அரவு, ஆர் சடையில் கண்டேன்; கொக்கின் இதழ் கண்டேன்; கொன்றை கண்டேன்;
வாடல்-தலை ஒன்று கையில் கண்டேன்-வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.


[ 1]


பாலின் மொழியாள் ஓர் பாகம் கண்டேன்; பதினெண்கணமும் பயிலக் கண்டேன்;
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன்; நெற்றி-நுதல் கண்டேன்; பெற்றம் கண்டேன்;
காலைக் கதிர் செய் மதியம் கண்டேன்; கரந்தை திருமுடிமேல்-தோன்றக் கண்டேன்;
மாலைச் சடையும் முடியும் கண்டேன்-வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.


[ 2]


மண்ணைத் திகழ நடம் அது ஆடும், வரை சிலம்பு ஆர்க்கின்ற, பாதம் கண்டேன்;
விண்ணில்-திகழும் முடியும் கண்டேன்; வேடம் பல ஆம் சரிதை கண்டேன்;
நண்ணிப் பிரியா மழுவும் கண்டேன்; நாலுமறை அங்கம் ஓதக் கண்டேன்;
வண்ணம் பொலிந்து-இலங்கு கோலம் கண்டேன்-   வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.


[ 3]


விளைத்த பெரும் பத்தி கூர, நின்று மெய் அடியார் தம்மை விரும்பக் கண்டேன்;
இளைக்கும் கதம் நாகம் மேனி கண்டேன்; என் பின்கலம் திகழ்ந்து தோன்றக் கண்டேன்;
திளைக்கும் திருமார்பில் நீறு கண்டேன்; சேண் ஆர் மதில் மூன்றும் பொன்ற, அன்று,
வளைத்த வரிசிலையும் கையில் கண்டேன்-   வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.


[ 4]


கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன்; காலில் கழல் கண்டேன்; கரியின் தோல் கொண்டு
ஊன் மறையப் போர்த்த வடிவும் கண்டேன்; உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன்;
நால் மறையானோடு நெடிய மாலும் நண்ணி வரக் கண்டேன்; திண்ணம் ஆக
மான்மறி தம் கையில் மருவக் கண்டேன்-   வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.


[ 5]


Go to top
அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்பக் கண்டேன்; அவ் அவர்க்கே ஈந்த கருணை கண்டேன்;
முடி ஆர் சடைமேல் அரவம் மூழ்க மூரிப்   பிறை போய் மறையக் கண்டேன்;
கொடி, ஆர், அதன்மேல் இடபம் கண்டேன்; கோவணமும் கீளும் குலாவக் கண்டேன்;
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன்-   வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.


[ 6]


குழை ஆர் திருத்தோடு காதில் கண்டேன்; கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்;
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன்; ஏழ் இசை யாழ், வீணை, முரலக் கண்டேன்;
தழை ஆர் சடை கண்டேன்; தன்மை கண்டேன்; தக்கையொடு தாளம் கறங்கக் கண்டேன்;
மழை ஆர் திருமிடறும் மற்றும் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.


[ 7]


பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்; போற்று இசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்;
பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன்; பார் ஆகிப் புனல் ஆகி நிற்கை கண்டேன்;
விருந்து ஆய்ப் பரந்த தொகுதி கண்டேன்; மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்;
மருந்து ஆய்ப் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.


[ 8]


மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன்;   வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன்;
கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன்; கங்கணமும், அங்கைக் கனலும், கண்டேன்;
ஐயம் பல ஊர் திரியக் கண்டேன்; அன்றவன் தன் வேள்வி அழித்து உகந்து,
வையம் பரவ இருத்தல் கண்டேன்-வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.


[ 9]


கலங்க இருவர்க்கு அழல் ஆய் நீண்ட   காரணமும் கண்டேன்; கரு ஆய் நின்று,
பலங்கள் தரித்து, உகந்த பண்பும் கண்டேன்; பாடல் ஒலி எலாம் கூடக் கண்டேன்;
இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து, அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன்;
வலங்கைத் தலத்துள் அனலும் கண்டேன்- வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாய்மூர்
2.111   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தளிர் இள வளர் என
Tune - நட்டராகம்   (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
5.050   திருநாவுக்கரசர்   தேவாரம்   எங்கே என்ன, இருந்த இடம்
Tune - திருக்குறுந்தொகை   (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)
6.077   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாட அடியார், பரவக் கண்டேன்;
Tune - திருத்தாண்டகம்   (திருவாய்மூர் வாய்மூரீசுவரர் பாலினுநன்மொழியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song