சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

6.082   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருச்சாய்க்காடு (சாயாவனம்) - திருத்தாண்டகம் அருள்தரு குயிலின்நன்மொழியம்மை உடனுறை அருள்மிகு சாயவனேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=7q7wO_NpGbU  
வானத்து இளமதியும் பாம்பும் தன்னில் வளர் சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்;
தேனைத் திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும்;
ஞானத்தின் ஒண் சுடர் ஆய் நின்றார் போலும்; நன்மையும் தீமையும் ஆனார் போலும்;
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.


[ 1]


விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும்;   வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும்;
அண்ணாமலை உறையும் அண்ணல் போலும்; அதியரைய மங்கை அமர்ந்தார் போலும்;
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும்
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண்நீர்த் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.


[ 2]


கான் இரிய வேழம் உரித்தார் போலும்; காவிரிப் பூம்பட்டினத்து உள்ளார் போலும்;
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும்; வட கயிலை மலை அது தம் இருக்கை போலும்;
ஊன் இரியத் தலை கலனா உடையார் போலும்; உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும்
தேன் இரிய மீன் பாயும் தெண்நீர்ப் பொய்கைத் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.


[ 3]


ஊன் உற்ற வெண்தலை சேர் கையர்போலும்; ஊழி பல கண்டு இருந்தார் போலும்;
மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும்; மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்;
கான் உற்ற ஆடல் அமர்ந்தார் போலும்; காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்
தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.


[ 4]


கார் மல்கு கொன்றை அம்தாரார் போலும்; காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும்;
பார் மல்கி ஏத்தப்படுவார் போலும்; பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும்;
ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும்; ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும்;
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.


[ 5]


Go to top
மா வாய் பிளந்து உகந்த மாலும், செய்ய- மலரவனும், தாமேயாய் நின்றார் போலும்;
மூவாத மேனி முதல்வர் போலும்; முதுகுன்றமூதூர் உடையார் போலும்;
கோ ஆய முனிதன்மேல் வந்த கூற்றைக் குரை கழலால், அன்று, குமைத்தார் போலும்;
தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.


[ 6]


கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும்; காரோணத்து என்றும் இருப்பார் போலும்;
இடி குரல் வாய்ப் பூதப்படையார் போலும்;   ஏகம்பம் மேவி இருந்தார் போலும்;
படி ஒருவர் இல்லாப் படியார் போலும்;   பாண்டிக்கொடு முடியும் தம் ஊர் போலும்;
செடி படு நோய் அடியாரைத் தீர்ப்பார் போலும்  திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.


[ 7]


விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும்; வெண்நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும்;
மலையினார் மங்கை மணாளர் போலும்; மாற்பேறு காப்பு ஆய் மகிழ்ந்தார் போலும்;
தொலைவு இலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும்; சோற்றுத்துறை, துருத்தி, உள்ளார் போலும்;
சிலையின் ஆர் செங்கண் அரவர் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.


[ 8]


அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும்; அமருலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சிபோலும்;
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்; நள்ளாறு நாளும் பிரியார் போலும்;
முல்லை முகை நகையாள் பாகர் போலும்; முன்னமே தோன்றி முளைத்தார் போலும்;
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.


[ 9]


உறைப்பு உடைய இராவணன் பொன்மலையைக் கையால்  ஊக்கம் செய்து எடுத்தலுமே, உமையாள் அஞ்ச,
நிறைப் பெருந்தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர, விரல் வைத்த நிமலர் போலும்;
பிறைப்பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும்; பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும்;
சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்சாய்க்காடு (சாயாவனம்)
2.038   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நித்தலும் நியமம் செய்து, நீர்மலர்
Tune - இந்தளம்   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
2.041   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மண் புகார், வான்புகுவர்; மனம்
Tune - சீகாமரம்   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
4.065   திருநாவுக்கரசர்   தேவாரம்   தோடு உலாம் மலர்கள் தூவித்
Tune - திருநேரிசை   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை)
6.082   திருநாவுக்கரசர்   தேவாரம்   வானத்து இளமதியும் பாம்பும் தன்னில்
Tune - திருத்தாண்டகம்   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song