சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

7.074   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - காந்தாரம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
திருத்துருத்தியை அடைந்த சுந்தரர் திருக்கோயிலுக்குட் சென்று வழிபட்டு, அடியேன் உடம்பின்மேல் உள்ள பிணியை ஒழித்தருளவேண்டுமென்று வேண்டித் துதித்தார். சிவபிரான், இக் கோயிலுக்கு வடபால் உள்ள குளத்தில் நீராடில் இந்நோய் நீங்கும் என்று திருவருள் புரிந்தார். அவ்வண்ணமே சுந்தரர் திருக்குளத்தை யடைந்து நீராடினார் நீராடி எழும்போது, உடல்நோய் நீங்கப்பெற்று ஒளிவீசும் திருமேனியைப் பெற்றார். எழுந்து கரையேறித் திருக்கோயிலுக்குச் சென்று. மின்னுமா மேகங்கள் என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித் துதித்தார்.
Audio: https://www.youtube.com/watch?v=hUJDa9QfMWQ  
மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்த(அ)ருவி வெடிபடக் கரையொடும் திரை கொணர்ந்து எற்றும்
அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார்; அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம்  அடியார்
சொன்ன ஆறு அறிவார்; துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன்  நாயேன்
என்னை, நான் மறக்கும் ஆறு? எம் பெருமானை, என் உடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை .


[ 1]


கூடும் ஆறு உள்ளன கூடியும், கோத்தும், கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி,
மாடு மா கோங்கமே மருதமே பொருது, மலை எனக் குலைகளை மறிக்கும் ஆறு உந்தி,
ஓடு மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன்
பாடும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, பழவினை உள்ளன பற்று அறுத்தானை.


[ 2]


கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழுங் கனிச் செழும் பயன் கொண்டு, கூட்டு எய்தி,
புல்கியும், தாழ்ந்தும், போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்
செல்லும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன்
சொல்லும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, தொடர்ந்து அடும் கடும் பிணித் தொடர்வு அறுத்தானை .


[ 3]


பொறியும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொழிந்து, இழிந்து, அருவிகள் புன்புலம் கவர,
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி, கடல் உற விளைப்பதே கருதி, தன் கை போய்
எறியும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன்
அறியும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, அருவினை உள்ளன ஆசு அறுத்தானை .


[ 4]


பொழிந்து இழி மும்மதக் களிற்றின மருப்பும், பொன்மலர் வேங்கையின் நல் மலர் உந்தி,
இழிந்து இழிந்து, அருவிகள் கடும் புனல் ஈண்டி, எண் திசையோர்களும் ஆட வந்து இங்கே
சுழிந்து இழி காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன்   நாயேன்
ஒழிந்திலேன், பிதற்றும் ஆறு; எம்பெருமானை, உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை .


[ 5]


Go to top
புகழும் மா சந்தனத் துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும், நல் மலர் உந்தி,
அகழும் மா அருங் கரை வளம் படப் பெருகி, ஆடுவார் பாவம் தீர்த்து, அஞ்சனம் அலம்பி,
திகழும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன்
இகழும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை .


[ 6]


வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் வருடியும், வணக்கியும், மராமரம் பொருது,
கரையும் மா கருங்கடல் காண்பதே கருத்து ஆய், காம்(பு) பீலி சுமந்து, ஒளிர் நித்திலம் கை   போய்,
விரையும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன்   நாயேன்
உரையும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, உலகு அறி பழவினை அற ஒழித்தானை .


[ 7]


ஊரும் மா தேசமே மனம் உகந்து, உள்ளி, புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள,
காரும் மா கருங்கடல் காண்பதே கருத்து ஆய், கவரி மா மயிர் சுமந்து, ஒண் பளிங்கு இடறி,
தேரும் மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன்
ஆரும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை .


[ 8]


புலங்களை வளம்படப் போக்கு அறப் பெருகி, பொன்களே சுமந்து, எங்கும் பூசல் செய்து   ஆர்ப்ப,
இலங்கும் ஆர் முத்தினோடு இனமணி இடறி, இருகரைப் பெரு மரம் பீழந்து கொண்டு   எற்றி,
கலங்கு மா காவிரித் துருத்தியார்; வேள்விக்-குடி உளார்; அடிகளை, செடியனேன் நாயேன்
விலங்கும் ஆறு அறிகிலேன்-எம்பெருமானை, மேலை நோய் இம்மையே வீடு வித்தானை .


[ 9]


மங்கை ஓர்கூறு உகந்து, ஏறு உகந்து ஏறி, மாறலார் திரிபுரம் நீறு எழச் செற்ற
அம் கையான் கழல் அடி அன்றி, மற்று அறியான்-அடியவர்க்கு அடியவன், தொழுவன்,   ஆரூரன்-
கங்கை ஆர் காவிரித் துருத்தியார் வேள்விக்-குடி உளார், அடிகளைச் சேர்த்திய பாடல்
தம் கையால்-தொழுது, தம் நாவின் மலர் கொள்வார் தவநெறி சென்று அமருலகம்   ஆள்பவரே .


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும்
3.090   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஓங்கி மேல் உழிதரும் ஒலி
Tune - சாதாரி   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
7.018   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை;
Tune - நட்டராகம்   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )
7.074   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மின்னும் மா மேகங்கள் பொழிந்து
Tune - காந்தாரம்   (திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song