சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

சிவபுராணம் - மாணிக்க வாசகர்
This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
கற்பக விநாயகர் மலரடி! போற்றி போற்றி!
நம பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்திக்கு! போற்றி போற்றி

சமய குரவர் துதி
பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசை கன்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி
வாழிதிரு நாவலூர் வன்றொண்டன் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

புறச்சந்தான குரவர் துதி
ஈராண்டிற் சிவஞானம் பெற்றுயர்ந்த மெய்கண்டார் இணைத்தாள் போற்றி
நாராண்ட பல்லடியார்க் கருள்புரிந்த அருணந்தி நற்றாள் போற்றி
நீராண்ட கடந்தைநகர் மறைஞான சம்பந்தர் நிழற்றாள் போற்றி
சீராண்ட தில்லைநகர் உமாபதியார் செம்பதுமத் திருத்தாள் போற்றி

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்.

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8 -ஆம் திருமுறை   பதிகம் 8.101  
சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க  
பண் -   (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் )
கலிவெண்பா

Audio: https://sivaya.org/thiruvasagam2/01 Sivapuranam.mp3
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!

[1]
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!

[2]
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!

[3]
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,
சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை,
முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்:

[4]
கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி,
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி;
விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்!
எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர்,
பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்;

[5]
புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி,
பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,
கல்ஆ(ய்,) மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,
வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்,

[6]
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!
மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;
உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரம் ஆய் நின்ற
மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள்
ஐயா என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே!

[7]
வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா!
பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி,
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!

[8]
ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்;
நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!

[9]
கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தால் போலச்
சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று,
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை

[10]
மறைந்திட மூடிய மாய இருளை,
அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி,
புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

[11]
விலங்கு மனத்தால், விமலா! உனக்குக்
கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம் தன் மேல் வந்தருளி, நீள் கழல்கள் காட்டி,
நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு,

[12]
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே!
மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே!
தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!
பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே!
நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,

[13]
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

[14]
அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம்
சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே!
ஆதியனே! அந்தம், நடு, ஆகி, அல்லானே!
ஈர்த்து என்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்

[15]
நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே!
போக்கும், வரவும், புணர்வும், இலாப் புண்ணியனே!
காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே!
ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்! நின்ற
தோற்றச் சுடர் ஒளி ஆய், சொல்லாத நுண் உணர்வு ஆய்,

[16]
மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவு ஆம்
தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்
ஊற்று ஆன உண் ஆர் அமுதே! உடையானே!
வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
ஆற்றேன்; எம் ஐயா, அரனே! ஓ! என்று என்று

[17]
போற்றி, புகழ்ந்திருந்து, பொய் கெட்டு, மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து, வினைப் பிறவி சாராமே,
கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே!
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே!
தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!

[18]
அல்லல் பிறவி அறுப்பானே! ஓ!' என்று,
சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95)
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[19]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7 -ஆம் திருமுறை   பதிகம் 7.039  
தில்லை வாழ் அந்தணர் தம்  
பண் - கொல்லிக்கௌவாணம்   (திருவாரூர் )
வழக்கம்போல் ஒரு நாள் நம்பியாரூரர் தியாகேசன் திருக்கோயிலை அடைந்து வணங்கப் புறப்பட்டு சென்று அடைந்தார். அப்போது தேவாசிரிய மண்டபத்திலே அடியார்கள் பலர் கூடியிருப்பதைக் கண்டார். இவர்களுக்கெல்லாம் நான் அடியவனாகும் நாள் எந்நாளோ? என்று எண்ணிக்கொண்டே இறைவன் திருமுன் சென்றார். தியாகேசப் பெருமான் நம்பியாரூரர் கருத்தறிந்து பெருமான், அவரைப் பார்த்து முறைப்படி அடியார்களைப் பணிந்து அவர்களைப் பாடுக என்றருளிச் செய்தார். நம்பியாரூரர், அடியார்களுடைய வரலாற்றையும் அன்பின் பெருமையையும் அறியாதேனாகிய நான் எவ்வாறு பாடித் துதிப்பேன். அத்தகுதியை அடியேனுக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமான் வேதம் விரித்த தம் திருவாயால் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடும்படிப் பணித்தருளி மறைந்தார். நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருந்த அடியவர்களை வணங்கி அடியார் பெருமையை விளக்கித் திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார். சிவனடியார்கள் ஆசி பெற

Audio: https://www.youtube.com/watch?v=F-qNMxHIme8 Audio: https://www.youtube.com/watch?v=j3zT6yhDffM
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்;
திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்;
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்;
இளையான் தன் குடிமாறன்அடியார்க்கும் அடியேன்;
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்;
விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்;
அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[1]
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்;
ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்;
கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க்கு அடியேன்;
கடவூரில் கலயன் தன் அடியார்க்கும்  அடியேன்;
மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன்,
எஞ்சாத வாள்-தாயன், அடியார்க்கும்  அடியேன்;
அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[2]
மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன்;
முருகனுக்கும், உருத்திர பசுபதிக்கும், அடியேன்;
செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்;
திருக்குறிப்புத் தொண்டர் தம்    அடியார்க்கும் அடியேன்;
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க,
வெகுண்டு எழுந்த தாதைதாள் மழுவினால்  எறிந்த,
அம்மையான் அடி சண்டிப் பெருமானுக்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[3]
திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்;
பெரு நம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்;
பெரு மிழலைக் குறும்பற்கும்,   பேயார்க்கும், அடியேன்;
ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்;
ஒலி புனல் சூழ் சாத்த மங்கை நீல நக்கற்கு  அடியேன்;
அரு நம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[4]
வம்பு அறா வரிவண்டு மணம் நாற மலரும்
மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா
எம்பிரான்-சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்;
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும்  அடியேன்;
நம்பிரான்-திருமூலன் அடியார்க்கும் அடியேன்;
நாட்டம் மிகு தண்டிக்கும், மூர்க்கற்கும்,  அடியேன்;
அம்பரான்-சோமாசிமாறனுக்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .

[5]
வார் கொண்ட வன முலையாள் உமை பங்கன் கழலே
மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன்;
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்;
செங்காட்டங்குடி மேய  சிறுத்தொண்டற்கு அடியேன்;
கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்;
கடல் காழி கணநாதன்  அடியார்க்கும் அடியேன்;
ஆர் கொண்ட வேல் கூற்றன்-களந்தைக் கோன்-அடியேன்;
ஆரூரன் ஆரூரில்   அம்மானுக்கு ஆளே .

[6]
பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்;
பொழில் கருவூர்த் துஞ்சிய  புகழ்ச்சோழற்கு அடியேன்;
மெய் அடியான்-நரசிங்க முனையரையற்கு அடியேன்;
விரி திரை சூழ் கடல் நாகை  அதிபத்தற்கு அடியேன்;
கை தடிந்த வரிசிலையான்-கலிக் கம்பன், கலியன்,
கழல் சத்தி-வரிஞ்சையர்கோன்,-  அடியார்க்கும் அடியேன்;
ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[7]
கறைக் கண்டன் கழல் அடியே காப்புக் கொண்டிருந்த
கணம் புல்ல நம்பிக்கும், காரிக்கும், அடியேன்;
நிறைக் கொண்ட சிந்தையான், நெல்வேலி வென்ற
நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும்  அடியேன்;
துறைக் கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித்
தொல் மயிலை வாயிலான்   அடியார்க்கும் அடியேன்;
அறைக் கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன்;
ஆரூரன் ஆரூரில்அம்மானுக்கு ஆளே .

[8]
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான்-
காடவர் கோன்-கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்;
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும், தஞ்சை
மன்னவன் ஆம்செருத்துணை தன்  அடியார்க்கும் அடியேன்;
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி
பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்   துணைக்கும் அடியேன்;
அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[9]
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்;
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்;
சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன்;
திரு ஆரூர்ப் பிறந்தார்கள்  எல்லார்க்கும் அடியேன்;
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்;
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்;
அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன்;
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு  ஆளே .

[10]
மன்னிய சீர் மறை நாவன்நின்றவூர் பூசல்,
வரிவளையாள் மானிக்கும், நேசனுக்கும், அடியேன்;
தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்;
திருநீல கண்டத்துப்  பாணனார்க்கு அடியேன்;
என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன்,
இசைஞானி, காதலன்-திரு   நாவலூர்க் கோன்,
அன்னவன் ஆம் ஆரூரன்-அடிமை கேட்டு உவப்பார்
ஆரூரில் அம்மானுக்கு அன்பர்  ஆவாரே .

[11]
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி
Back to Top


          send corrections and suggestions to admin-at-sivaya.org

sivapuraanam tamil


This page was last modified on Thu, 09 May 2024 05:41:55 +0000