சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.063   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மின்னும் சடைமேல் இளவெண் திங்கள்
பண் - காந்தாரம்   (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசளித்தவீசுவரர் அழகம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=fbpfJzfaoqs
5.061   திருநாவுக்கரசர்   தேவாரம்   முத்து ஊரும் புனல் மொய்
பண் - திருக்குறுந்தொகை   (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசளித்தவீசுவரர் அழகம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=vZRglV02Emc
7.009   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை
பண் - இந்தளம்   (திருஅரிசிற்கரைப்புத்தூர் படிக்காசுவைத்தவீசுவரர் அழகம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=FgVItiMOny4

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.063   மின்னும் சடைமேல் இளவெண் திங்கள்  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருஅரிசிற்கரைப்புத்தூர் ; (திருத்தலம் அருள்தரு அழகம்மை உடனுறை அருள்மிகு படிக்காசளித்தவீசுவரர் திருவடிகள் போற்றி )
மின்னும் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே,
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர்
அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு,
பொன்னும் மணியும் பொரு தென் கரைமேல் புத்தூரே.

[1]
மேவா அசுரர் மேவு எயில் வேவ, மலைவில்லால்,
ஏ ஆர் எரி வெங்கணையால், எய்தான் எய்தும் ஊர்
நாவால் நாதன் நாமம் ஓதி, நாள்தோறும்,
பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே.

[2]
பல் ஆர் தலை சேர் மாலை சூடி, பாம்பும் பூண்டு
எல்லா இடமும் வெண் நீறு அணிந்து, ஓர் ஏறு ஏறி,
கல் ஆர் மங்கை பங்கரேனும், காணுங்கால்,
பொல்லார் அல்லர்; அழகியர் புத்தூர்ப் புனிதரே.
[3]
வரி ஏர் வளையாள் அரிவை அஞ்ச, வருகின்ற,
கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர்
அரி ஏர் கழனிப் பழனம் சூழ்ந்து, அங்கு அழகு ஆய
பொரி ஏர் புன்கு சொரி பூஞ்சோலைப் புத்தூரே.

[4]
என்போடு, அரவம், ஏனத்து எயிறோடு, எழில் ஆமை,
மின் போல் புரி நூல், விரவிப் பூண்ட வரைமார்பர்;
அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர்; அமரும் ஊர்-
பொன்போது அலர் கோங்கு ஓங்கு சோலைப் புத்தூரே.

[5]
வள்ளி முலை தோய் குமரன் தாதை, வான் தோயும்
வெள்ளிமலை போல் விடை ஒன்று உடையான், மேவும் ஊர்
தெள்ளி வரு நீர் அரிசில் தென்பால், சிறைவண்டும்
புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே.

[6]
நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான்,
சிலந்தி செங்கண் சோழன் ஆகச் செய்தான், ஊர்
அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி,
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.

[7]
இத் தேர் ஏக, இம் மலை பேர்ப்பன் என்று ஏந்தும்
பத்து ஓர்வாயான் வரைக்கீழ் அலற, பாதம்தான்
வைத்து, ஆர் அருள் செய் வரதன் மருவும்(ம்) ஊர் ஆன
புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே.

[8]
முள் ஆர் கமலத்து அயன், மால், முடியோடு அடி தேட,
ஒள் ஆர் எரி ஆய் உணர்தற்கு அரியான் ஊர்போலும்
கள் ஆர் நெய்தல், கழுநீர், ஆம்பல், கமலங்கள்,
புள் ஆர் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே.

[9]
கை ஆர் சோறு கவர் குண்டர்களும், துவருண்ட
மெய் ஆர் போர்வை மண்டையர், சொல்லு மெய் அல்ல;
பொய்யா மொழியால் அந்தணர் போற்றும் புத்தூரில்
ஐயா! என்பார்க்கு, ஐயுறவு இன்றி அழகு ஆமே.

[10]
நறவம் கமழ் பூங் காழி ஞானசம்பந்தன்,
பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல்,
செறி வண்தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள்,
அறவன் கழல் சேர்ந்து, அன்பொடு இன்பம் அடைவாரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.061   முத்து ஊரும் புனல் மொய்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருஅரிசிற்கரைப்புத்தூர் ; (திருத்தலம் அருள்தரு அழகம்மை உடனுறை அருள்மிகு படிக்காசளித்தவீசுவரர் திருவடிகள் போற்றி )
முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரைப்
புத்தூரன்(ன்) அடி போற்றி! என்பார் எலாம்
மொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய
மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே.

[1]
பிறைக்கணிச் சடை எம்பெருமான் என்று-
கறைக் கணித்தவர் கண்ட வணக்கத்து ஆய்
உறக் கணித்து-உருகா மனத்தார்களைப்
புறக்கணித்திடும், புத்தூர்ப் புனிதனே.

[2]
அரிசிலின் கரைமேல், அணி ஆர்தரு
புரிசை, நம் திருப் புத்தூர்ப் புனிதனைப்
பரிசொடும் பரவிப் பணிவார்க்கு எலாம்
துரிசு இல் நன்நெறி தோன்றிடும்; காண்மினே!

[3]
வேதனை(ம்), மிகு வீணையில் மேவிய
கீதனை, கிளரும் நறுங்கொன்றை அம்-
போதனை, புனல் சூழ்ந்த புத்தூரனை,
நாதனை(ந்), நினைந்து என் மனம் நையுமே.

[4]
அருப்புப் போல் முலையார் அல்லல் வாழ்க்கை மேல்
விருப்புச் சேர் நிலை விட்டு, நல் இட்டம் ஆய்,
திருப் புத்தூரனைச் சிந்தைசெயச் செய,
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்கும்; காண்மினே!

[5]
பாம்பொடு(ம்) மதியும் படர் புன் சடைப்
பூம்புனலும் பொதிந்த புத்தூர் உளான்,
நாம் பணிந்து அடி போற்றிட, நாள்தொறும்
சாம்பல் என்பு தனக்கு அணி ஆகுமே.

[6]
கனல் அங்கைதனில் ஏந்தி, வெங்காட்டு இடை
அனல் அங்கு எய்தி, நின்று, ஆடுவர்; பாடுவர்;
பினல் அம் செஞ்சடைமேல் பிலயம் தரு
புனலும் சூடுவர் போலும்-புத்தூரரே.

[7]
காற்றிலும் கடிது ஆகி நடப்பது ஓர்
ஏற்றினும்(ம்) இசைந்து ஏறுவர்; என்பொடு
நீற்றினை அணிவர்; நினைவுஆய்த் தமை,
போற்றி! என்பவர்க்கு அன்பர்-புத்தூரரே.

[8]
முன்னும் முப்புரம் செற்றனர் ஆயினும்
அன்னம் ஒப்பர், அலந்து அடைந்தார்க்கு எலாம்;
மின்னும் ஒப்பர், விரிசடை; மேனி செம்-
பொன்னும் ஒப்பர்-புத்தூர் எம் புனிதரே.

[9]
செருத்தனால்-தன தேர் செல உய்த்திடும்
கருத்தனாய்க் கயிலை எடுத்தான் உடல்,
பருத்த தோள் கெடப் பாதத்து ஒருவிரல்
பொருத்தினார்-பொழில் ஆர்ந்த புத்தூரரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.009   மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருஅரிசிற்கரைப்புத்தூர் ; (திருத்தலம் அருள்தரு அழகம்மை உடனுறை அருள்மிகு படிக்காசுவைத்தவீசுவரர் திருவடிகள் போற்றி )
மலைக்கும்(ம்) மகள் அஞ்ச(ம்) மதகரியை உரித்தீர்; எரித்தீர், வரு முப்புரங்கள்;
சிலைக்கும் கொலைச் சே உகந்து ஏறு ஒழியீர்; சில்பலிக்கு இல்கள் தொறும் செலவு ஒழியீர்
கலைக் கொம்பும் கரி மருப்பும்(ம்) இடறி, கலவம் மயில் பீலியும் கார் அகிலும்
அலைக்கும் புனல் சேர் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே! .

[1]
அரு மலரோன் சிரம் ஒன்று அறுத்தீர்; செறுத்தீர், அழல் சூலத்தில் அந்தகனை;
திருமகள் கோன் நெடுமால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில்,
ஒரு மலர் ஆயிரத்தில் குறைவா, நிறைவு ஆக ஓர் கண்மலர் சூட்டலுமே,
பொரு விறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழில் ஆர் திருப்புத்தூர்ப் புனிதனீரே!.

[2]
தரிக்கும் தரை, நீர், தழல், காற்று, அந்தரம், சந்திரன், சவிதா, இயமானன், ஆனீர்;
சரிக்கும் பலிக்குத் தலை அங்கை ஏந்தி, தையலார் பெய்ய, கொள்வது தக்கது அன்றால்
முரிக்கும் தளிர்ச் சந்தனத்தொடு, வேயும், முழங்கும் திரைக் கைகளால் வாரி மோதி
அரிக்கும் புனல் சேர் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே! .

[3]
கொடி உடை மும்மதில் வெந்து அழிய, குன்றம் வில்லா, நாணியின் கோல் ஒன்றி(ன்)னால்
இடிபட எய்து எரித்தீர், இமைக்கும் அளவில்; உமக்கு ஆர் எதிர்? எம்பெருமான்!
கடி படு ங்கணையான், கருப்புச் சிலைக் காமனை, வேவக் கடைக் கண்ணி(ன்)னால்
பொடி பட நோக்கியது என்னை கொல்லோ? பொழில் ஆர் திருப்புத்தூர்ப் புனிதனீரே!

[4]
வணங்கித் தொழுவார் அவர், மால், பிரமன், மற்றும் வானவர், தானவர், மா முனிவர்;
உணங்கல்-தலையில் பலி கொண்டல் என்னே? உலகங்கள் எல்லாம் உடையீர், உரையீர்!
இணங்கிக் கயல் சேல் இளவாளை பாய, இனக்கெண்டை துள்ள, கண்டிருந்த அன்னம்
அணங்கிக் குணம் கொள் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே!

[5]
அகத்து அடிமை செயும் அந்தணன் தான், அரிசில் புனல் கொண்டு வந்து ஆட்டுகின்றான்,
மிகத் தளர்வு எய்தி, குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு, நடுங்குத(ல்)லும்,
வகுத்து அவனுக்கு, நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றிப்
புகழ்த்துணை கைப் புகச் செய்து உகந்தீர் பொழில் ஆர் திருப்புத்தூர்ப் புனிதனீரே! .

[6]
பழிக்கும் பெருந் தக்கன் எச்சம் அழிய, பகலோன் முதலாப் பலதேவரையும்
தெழித்திட்டு, அவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை கொலோ? மை கொள் செம்  மிடற்றீர்!
விழிக்கும் தழைப் பீலியொடு ஏலம் உந்தி, விளங்கும் மணி முத்தொடு பொன் வரன்றி,
அழிக்கும் புனல் சேர் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே!

[7]
பறைக்கண் நெடும் பேய்க் கணம் பாடல் செய்ய, குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க,
பிறைக் கொள் சடை தாழ, பெயர்ந்து, நட்டம், பெருங்காடு அரங்கு ஆக நின்று, ஆடல்  என்னே?
கறைக் கொள் மணிகண்டமும், திண்தோள்களும், கரங்கள், சிரம் தன்னிலும், கச்சும் ஆகப்
பொறிக் கொள் அரவம் புனைந்தீர், பலவும்; பொழில் ஆர் திருப்புத்தூர்ப் புனிதனீரே!

[8]
மழைக் கண் மடவாளை ஓர்பாகம் வைத்தீர்; வளர் புன்சடைக் கங்கையை வைத்து  உகந்தீர்;
முழைக் கொள் அரவொடு என்பு அணிகலனா, முழுநீறு மெய் பூசுதல் என்னைகொலோ?
கழைக் கொள் கரும்பும், கதலிக்கனியும், கமுகின் பழுக்காயும், கவர்ந்து கொண்டு இட்டு,
அழைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே!

[9]
கடிக்கும்(ம்) அரவால் மலையால் அமரர் கடலைக் கடைய, எழு காளகூடம்
ஒடிக்கும்(ம்), உலகங்களை என்று அதனை உமக்கே அமுது ஆக உண்டீர்; உமிழீர்
இடிக்கும் மழை வீழ்த்து இழித்திட்டு, அருவி இருபாலும் ஓடி, இரைக்கும் திரைக் கை
அடிக்கும் புனல் சேர் அரிசில்-தென்கரை அழகு ஆர் திருப்புத்தூர் அழகனீரே!

[10]
கார் ஊர் மழை பெய்து(ப்) பொழி அருவிக் கழையோடு அகில் உந்திட்டு இருகரையும்
போர் ஊர் புனல் சேர் அரிசில்-தென்கரைப் பொழில் ஆர் திருப்புத்தூர்ப் புனிதர் தம்மை,
ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடு ஐந்து அழகால் உரைப்பார்களும் கேட்பவரும்,
சீர் ஊர் தரு தேவர் கணங்களொடும் இணங்கி, சிவலோகம் அது எய்துவரே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list