சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.082   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கொம்பு இரிய வண்டு உலவு
பண் - சாதாரி   (திருஅவளிவணல்லூர் சாட்சிநாயகர் சவுந்தரநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Ao3mW_l30rI
4.059   திருநாவுக்கரசர்   தேவாரம்   தோற்றினான் எயிறு கவ்வித் தொழில்
பண் - திருநேரிசை   (திருஅவளிவணல்லூர் சாட்சிநாயகேசுவரர் சவுந்தரநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=nGJFOf8yoo4

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.082   கொம்பு இரிய வண்டு உலவு  
பண் - சாதாரி   (திருத்தலம் திருஅவளிவணல்லூர் ; (திருத்தலம் அருள்தரு சவுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு சாட்சிநாயகர் திருவடிகள் போற்றி )
கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை, புரிநூலொடு குலாவி,
தம் பரிசினோடு சுடுநீறு தடவந்து, இடபம் ஏறி,
கம்பு அரிய செம்பொன் நெடுமாட மதில், கல்வரை வில் ஆக,
அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே.

[1]
ஓமையன, கள்ளியன, வாகையன, கூகை முரல் ஓசை,
ஈமம் எரி, சூழ் சுடலை வாசம்; முதுகாடு நடம் ஆடி;
தூய்மை உடை அக்கொடு அரவம் விரவி, மிக்கு ஒளி துளங்க,
ஆமையொடு பூணும் அடிகள்(ள்); உறைவது
அவளிவணலூரே.

[2]
நீறு உடைய மார்பில் இமவான் மகள் ஒர்பாகம் நிலைசெய்து
கூறு உடைய வேடமொடு கூடி, அழகு ஆயது ஒரு கோலம்
ஏறு உடையரேனும், இடுகாடு, இரவில் நின்று, நடம் ஆடும்
ஆறு உடைய வார்சடையினான் உறைவது அவளிவணலூரே.

[3]
பிணியும் இலர், கேடும் இலர், தோற்றம் இலர் என்று உலகு பேணிப்
பணியும் அடியார்களன பாவம் அற இன் அருள் பயந்து,
துணி உடைய தோலும், உடை கோவணமும், நாகம், உடல் தொங்க
அணியும் அழகு ஆக உடையான் உறைவது
அவளிவணலூரே.

[4]
குழலின் வரிவண்டு முரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு
கழலின் மிசை இண்டை புனைவார் கடவுள் என்று அமரர் கூடித்
தொழலும் வழிபாடும் உடையார்; துயரும் நோயும் இலர் ஆவர்
அழலும் மழு ஏந்து கையினான்; உறைவது அவளிவணலூரே.

[5]
துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த, அருள் செய்து
நஞ்சு மிடறு உண்டு, கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன்;
மஞ்சு உற நிமிர்ந்து, உமை நடுங்க, அகலத்தொடு அளாவி,
அஞ்ச, மதவேழ உரியான்; உறைவது அவளிவணலூரே.

[6]
கூடு அரவம் மொந்தை, குழல், யாழ், முழவினோடும் இசை செய்ய,
பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து, பேர் இடபமோடும்,
காடு அரவம் ஆகு கனல் கொண்டு, இரவில் நின்று, நடம் ஆடி,
ஆடு அரவம் ஆர்த்த பெருமான் உறைவது
அவளிவணலூரே.

[7]
ஒருவரையும் மேல் வலி கொடேன் என எழுந்த விறலோன், இப்
பெருவரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ? என வெகுண்ட
கருவரையும் ஆழ்கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை,
அரு வரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே.

[8]
பொறி வரிய நாகம் உயர் பொங்கு அணை அணைந்த புகழோனும்,
வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர்மேல் விழுமியோனும்,
செறிவு அரிய தோற்றமொடு ஆற்றல் மிக நின்று, சிறிதேயும்
அறிவு அரியன் ஆய பெருமான் உறைவது அவளிவணலூரே.

[9]
கழி அருகு பள்ளி இடம் ஆக அடும் மீன்கள் கவர்வாரும்,
வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும்
பழி அருகினார் ஒழிக! பான்மையொடு நின்று தொழுது ஏத்தும்
அழி அருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே.

[10]
ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளி வணலூர் மேல்,
போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன்-
ஞான மொழிமாலை பல நாடு புகழ் ஞானசம்பந்தன்-
தேன மொழிமாலை புகழ்வார், துயர்கள் தீயது இலர், தாமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.059   தோற்றினான் எயிறு கவ்வித் தொழில்  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருஅவளிவணல்லூர் ; (திருத்தலம் அருள்தரு சவுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு சாட்சிநாயகேசுவரர் திருவடிகள் போற்றி )
சிவபெருமான் முனிவராய்த் தோன்றியதையும், பின்னர் தன்னை அருகில் இருந்த ஒரு குளத்தில் மூழ்கி எழுமாறு சொன்னதையும் நினைத்து, மகிழ்ந்த அப்பர் பிரான் இறைவனின் கருணையை நினைந்து வேற்றாகி விண்ணாகி என்று தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தை அருளினார்; பின்னர் அஞ்செழுத்து மந்திரத்தை ஓதியபடியே, இறைவனைப் பணித்தபடி அந்த பொய்கையில் மூழ்கினார். இவ்வாறு, இறைவனின் ஆணையை சிரமேற்கொண்டு அந்தக் குளத்தில் மூழ்கிய அப்பர் பிரான், தான் எழுந்த போது திருவையாற்றுக் குளத்தில் இருப்பதை உணர்ந்தார். குளத்தில் இருந்து எழுந்த அப்பர் பிரான் இறைவனின் திருவடிகளை வணங்கும் பொருட்டு திருக்கோயிலுக்குச் சென்றார். செல்லும் வழியில் உள்ள உயிர்கள் அனைத்தும் தத்தம் துணையுடன் கூடி விளங்கும் தோற்றத்தைக் கண்டார். அந்தத் தோற்றத்தை இந்த பதிகத்தின் பாடல்களில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். கோயிலின் முன் வந்து நின்ற அப்பர் பெருமானுக்கு எதிரே தோன்றும் கோயிலே கயிலாய மலையாக காட்சி அளித்தது, திருமால், பிரமன், இந்திரன் முதலான தேவர்கள் அன்புடன் வழிபடும் ஒலிகளும், மறைகளின் ஒலிகளும் தனித்தனியாக அப்பர் பெருமானுக்கு கேட்டன
தோற்றினான் எயிறு கவ்வித் தொழில் உடை அரக்கன் தன்னைத்
தேற்றுவான் சென்று சொல்ல, சிக்கெனத் தவிரும்! என்று,
வீற்றினை உடையன் ஆகி வெடு வெடுத்து எடுத்தவன் தன்
ஆற்றலை அழிக்க வல்லார்-அவளி வணல்லூராரே.

[1]
வெம்பினார் அரக்கர் எல்லாம்; மிகச் சழக்கு ஆயிற்று என்று,
செம்பினால் எடுத்த கோயில் சிக்கெனச் சிதையும்! என்ன,
நம்பினார் என்று சொல்லி நன்மையால் மிக்கு நோக்கி,
அம்பினால் அழிய எய்தார்-அவளி வணல்லூராரே.

[2]
கீழ்ப்படக் கருதல் ஆமோ, கீர்த்திமை உள்ளது ஆகில்?
தோள் பெரு வலியினாலே தொலைப்பன், யான் மலையை என்று
வேள் பட வைத்த ஆறே விதிர் விதிர்த்து அரக்கன் வீழ்ந்து(வ்)
ஆட்படக் கருதிப் புக்கார்-அவளி வணல்லூராரே.

[3]
நிலை வலம் வல்லன் அல்லன், நேர்மையை நினைய மாட்டான்,
சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை தன்னைத்
தலை வலம் கருதிப் புக்குத் தாங்கினான் தன்னை, அன்று(வ்)
அலை குலை ஆக்குவித்தார்-அவளி வணல்லூராரே.

[4]
தவ் வலி ஒன்றன் ஆகித் தனது ஒரு பெருமையாலே;
மெய்(வ்) வலி உடையன் என்று மிகப் பெருந் தேரை ஊர்ந்து
செவ் வலி கூர் விழி(ய்)யான் சிரமத்தான் எடுக்குற்றானை
அவ் வலி தீர்க்க வல்லார்-அவளி வணல்லூராரே.

[5]
நன்மை தான் அறியமாட்டான், நடு இலா அரக்கர் கோமான்
வன்மையே கருதிச் சென்று, வலி தனைச் செலுத்தல் உற்றுக்
கன்மையால் மலையை ஓடி, கருதித் தான் எடுத்து, வாயால்
அம்மையோ! என்ன வைத்தார்-அவளி வணல்லூராரே.

[6]
கதம் படப் போது வார்கள் போதும் அக் கருத்தினாலே
சிதம்பட நின்ற நீர்கள் சிக்கெனத் தவிரும்! என்று,
மதம் படு மனத்தன் ஆகி, வண்மையான் மிக்கு நோக்க,
அதம் பழத்து உருவு செய்தார்-அவளி வணல்லூராரே.

[7]
நாடு மிக்கு உழிதர்கின்ற நடு இலா அரக்கர் கோனை,
ஓடு, மிக்கு! என்று சொல்லி, ஊன்றினான், உகிரினாலே;
பாடு மிக்கு உய்வன் என்று பணிய, நல்-திறங்கள் காட்டி
ஆடு மிக்கு அரவம் பூண்டார்-அவளி வணல்லூராரே.

[8]
ஏனம் ஆய்க் கிடந்த மாலும், எழில் தரு முளரியானும்,
ஞானம் தான் உடையர் ஆகி நன்மையை அறிய மாட்டார்
சேனம் தான் இலா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி
ஆனந்த அருள்கள் செய்தார்-அவளி வணல்லூராரே.

[9]
ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன் தன்னைத்
தாக்கினான், விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி;
நோக்கினார், அஞ்சத் தன்னை, நோன்பு இற; ஊன்று சொல்லி
ஆக்கினார், அமுதம் ஆக-அவளி வணல்லூராரே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list