சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.095   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எண் திசைக்கும் புகழ் இன்னம்பர்
பண் - சாதாரி   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=3ofD_0bLR3o
4.072   திருநாவுக்கரசர்   தேவாரம்   விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர்
பண் - திருநேரிசை   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=3Wr2qcFBuPM
Audio: https://www.youtube.com/watch?v=ad3xSv41u9E
4.100   திருநாவுக்கரசர்   தேவாரம்   மன்னும் மலைமகள் கையால் வருடின;
பண் - திருவிருத்தம்   (திருஇன்னம்பர் ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=npcFMuLv1bM
5.021   திருநாவுக்கரசர்   தேவாரம்   என்னில் ஆரும் எனக்கு இனியார்
பண் - திருக்குறுந்தொகை   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=qlYtrb5igBg
6.089   திருநாவுக்கரசர்   தேவாரம்   அல்லி மலர் நாற்றத்து உள்ளார்
பண் - திருத்தாண்டகம்   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.095   எண் திசைக்கும் புகழ் இன்னம்பர்  
பண் - சாதாரி   (திருத்தலம் திருஇன்னம்பர் ; (திருத்தலம் அருள்தரு கொந்தார்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு எழுத்தறிந்தவீசுவரர் திருவடிகள் போற்றி )
எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய
வண்டு இசைக்கும் சடையீரே;
வண்டு இசைக்கும் சடையீர்! உமை வாழ்த்துவார்
தொண்டு இசைக்கும் தொழிலாரே.

[1]
யாழ் நரம்பின்(ன்) இசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடியீரே;
தாழ்தரு சடைமுடியீர்! உமைச் சார்பவர்
ஆழ்துயர் அருவினை இலரே.

[2]
இளமதி நுதலியொடு இன்னம்பர் மேவிய
வள மதி வளர் சடையீரே;
வள மதி வளர் சடையீர்! உமை வாழ்த்துவார்
உளம் மதி மிக உடையாரே.

[3]
இடி குரல் இசை முரல் இன்னம்பர் மேவிய
கடி கமழ் சடைமுடியீரே;
கடி கமழ் சடைமுடியீர்! உம கழல் தொழும்
அடியவர் அருவினை இலரே.

[4]
இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய
உமை ஒரு கூறு உடையீரே;
உமை ஒரு கூறு உடையீர்! உமை உள்குவார்
அமைகிலர் ஆகிலர், அன்பே.

[5]
எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய
தண் அருஞ் சடைமுடியீரே;
தண் அருஞ் சடைமுடியீர்! உமைச் சார்பவர்
விண்ணவர் அடைவு உடையோரே.

[6]
எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய
நிழல் திகழ் மேனியினீரே;
நிழல் திகழ் மேனியினீர்! உமை நினைபவர்
குழறிய கொடுவினை இலரே.

[7]
ஏத்த(அ)ரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவு செய்தீரே;
தூர்த்தனைத் தொலைவு செய்தீர்! உமைத் தொழுபவர்
கூர்த்த நல் குணம் உடையோரே.

[8]
இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய
அயனும் மால் அறிவு அரியீரே;
அயனும் மால் அறிவு அரியீர்! உமது அடி தொழும்
இயல் உளார் மறுபிறப்பு இலரே.

[9]
ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய
தேர் அமண் சிதைவு செய்தீரே;
தேர் அமண் சிதைவு செய்தீர்! உமைச் சேர்பவர்
ஆர் துயர், அருவினை, இலரே.

[10]
ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை,
நாடு அமர் ஞானசம்பந்தன்
நாடு அமர் ஞானசம்பந்தன நல்-தமிழ்,
பாட வல்லார் பழி இலரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.072   விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர்  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருஇன்னம்பர் ; (திருத்தலம் அருள்தரு கொந்தார்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு எழுத்தறிந்தவீசுவரர் திருவடிகள் போற்றி )
விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் போலும்;
பெண் ஒருபாகர் போலும்; பேடு அலி ஆணர் போலும்;
வண்ண மால் அயனும் காணா மால்வரை எரியர் போலும்;
எண் உரு அநேகர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.

[1]
பன்னிய மறையர் போலும்; பாம்பு அரை உடையர் போலும்;
துன்னிய சடையர் போலும்; தூ மதி மத்தர் போலும்;
மன்னிய மழுவர் போலும்; மாது இடம் மகிழ்வர் போலும்;
என்னையும் உடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.

[2]
மறி ஒரு கையர் போலும்; மாது உமை உடையர் போலும்;
பறி தலைப் பிறவி நீக்கிப் பணி கொள வல்லர் போலும்;
செறிவு உடை அங்கமாலை சேர் திரு உருவர் போலும்;
எறிபுனல் சடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.

[3]
விடம் மலி கண்டர் போலும்; வேள்வியை அழிப்பர் போலும்;
கடவு நல் விடையர் போலும்; காலனைக் காய்வர் போலும்;
படம் மலி அரவர் போலும்; பாய் புலித் தோலர் போலும்;
இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே.

[4]
அளி மலர்க் கொன்றை துன்றும் அவிர்சடை உடையர் போலும்;
களி மயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும்;
வெளி வளர் உருவர் போலும்; வெண் பொடி அணிவர் போலும்;
எளியவர், அடியர்க்கு என்றும்;-இன்னம்பர் ஈசனாரே.

[5]
கணை அமர் சிலையர் போலும்; கரி உரி உடையர் போலும்;
துணை அமர் பெண்ணர் போலும்; தூ மணிக் குன்றர் போலும்;
அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும்
இணை அடி உடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.

[6]
பொருப்பு அமர் புயத்தர் போலும்; புனல் அணி சடையர் போலும்;
மருப்பு இள ஆமை தாங்கு மார்பில் வெண் நூலர் போலும்;
உருத்திரமூர்த்தி போலும்; உணர்வு இலார் புரங்கள் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.

[7]
காடு இடம் உடையர் போலும்; கடிகுரல் விளியர் போலும்;
வேடு உரு உடையர் போலும்; வெண்மதிக் கொழுந்தர் போலும்;
கோடு அலர் வன்னி, தும்பை, கொக்கு இறகு, அலர்ந்த கொன்றை
ஏடு, அமர் சடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.

[8]
காறிடு விடத்தை உண்ட கண்டர்; எண் தோளர் போலும்;
நீறு உடை உருவர் போலும்; நினைப்பினை அரியர் போலும்;
பாறு உடைத் தலை கை ஏந்திப் பலி திரிந்து உண்பர் போலும்;
ஏறு உடைக் கொடியர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.

[9]
ஆர்த்து எழும் இலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும்;
பார்த்தனோடு அமர் பொரூது படை கொடுத்து அருள்வர் போலும்;
தீர்த்தம் ஆம் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்;
ஏத்த ஏழ் உலகும் வைத்தார்-இன்னம்பர் ஈசனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.100   மன்னும் மலைமகள் கையால் வருடின;  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருஇன்னம்பர் ; (திருத்தலம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி )
மன்னும் மலைமகள் கையால் வருடின; மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப் பொருள் ஆயின; தூக் கமலத்து
அன்ன வடிவின; அன்பு உடைத் தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன - இன்னம்பரான்தன் இணை அடியே.

[1]
பைதல்பிணக்குழைக் காளி வெங்கோபம் பங்கப்படுப்பான்
செய்தற்கு அரிய திருநடம் செய்தன; சீர் மறையோன்
உய்தல் பொருட்டு வெங் கூற்றை உதைத்தன; உம்பர்க்கு எல்லாம்
எய்தற்கு அரியன-இன்னம்பரான்தன் இணை அடியே.

[2]
சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின; தூ மலரால்
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின; மன்னும் மறைகள் தம்மில்
பிணங்கி நின்று இன்ன(அ)அளவு என்று அறியாதன; பேய்க்கணத்தோடு
இணங்கி நின்று ஆடின-இன்னம்பரான்தன் இணை அடியே.

[3]
ஆறு ஒன்றிய சமயங்களின் அவ் அவர்க்கு அப் பொருள்கள்
வேறு ஒன்று இலாதன; விண்ணோர் மதிப்பன; மிக்கு உவமன்
மாறு ஒன்று இலாதன; மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறு ஒன்று இலாதன-இன்னம்பரான்தன் இணை அடியே.

[4]
அரக்கர் தம் முப்புரம் அம்பு ஒன்றினால் அடல் அங்கியின் வாய்க்
கரக்க முன் வைதிகத் தேர்மிசை நின்றன; கட்டு உருவம்
பரக்க வெங்கான் இடை வேடு உரு ஆயின; பல்பதிதோறு
இரக்க நடந்தன-இன்னம்பரான்தன் இணை அடியே.

[5]
கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின; கேடு படா
ஆண்டும் பலபலஊழியும் ஆயின; ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின; மேவு சிலம்பு
ஈண்டும் கழலின-இன்னம்பரான்தன் இணை அடியே.

[6]
போற்றும் தகையன; பொல்லா முயலகன் கோபப் புன்மை
ஆற்றும் தகையன; ஆறுசமயத்தவர் அவரைத்
தேற்றும் தகையன; தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றும் தகையன-இன்னம்பரான்தன் இணை அடியே.

[7]
பயம், புன்மை, சேர்தரு பாவம், தவிர்ப்பன; பார்ப்பதிதன்
குயம் பொன்மை மா மலர் ஆகக் குலாவின; கூட ஒண்ணாச்
சயம்பு என்றே, தகு தாணு என்றே, சதுர்வேதங்கள் நின்று
இயம்பும் கழலின-இன்னம்பரான்தன் இணைஅடியே.

[8]
அயன், நெடுமால், இந்திரன், சந்திராதித்தர், அமரர் எல்லாம்
சய சய என்று முப்போதும் பணிவன; தண்கடல் சூழ்
வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும்
இயபரம் ஆவன இன்னம்பரான்தன் இணைஅடியே.

[9]
தருக்கிய தக்கன்தன் வேள்வி தகர்த்தன; தாமரைப்போது,
உருக்கிய செம்பொன், உவமன் இலாதன; ஒண் கயிலை
நெருக்கிய வாள் அரக்கன் தலைபத்தும் நெரித்து, அவன்தன்
இருக்கு இயல்பு ஆயின-இன்னம்பரான்தன் இணை அடியே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.021   என்னில் ஆரும் எனக்கு இனியார்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருஇன்னம்பர் ; (திருத்தலம் அருள்தரு கொந்தார்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு எழுத்தறிந்தவீசுவரர் திருவடிகள் போற்றி )
என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை;
என்னிலும்(ம்) இனியான் ஒருவன்(ன்)உளன்;
என் உளே உயிர்ப்பு ஆய்ப் புறம் போந்து புக்கு
என் உளே நிற்கும், இன்னம்பர் ஈசனே.

[1]
மட்டு உண்பார்கள், மடந்தையர் வாள் கணால்
கட்டுண்பார்கள், கருதுவது என்கொலோ?
தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குழி
எட்டுமூர்த்தியர், இன்னம்பர் ஈசனே,

[2]
கனலும் கண்ணியும், தண்மதியோடு, உடன்
புனலும், கொன்றையும், சூடும் புரிசடை;
அனலும், சூலமும், மான்மறி, கையினர்
எனலும், என் மனத்து, இன்னம்பர் ஈசனே.

[3]
மழைக்கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான்
அழைக்கும், தன் அடியார்கள் தம் அன்பினை;
குழைக்கும் தன்னைக் குறிக்கொள வேண்டியே
இழைக்கும், என் மனத்து-இன்னம்பர் ஈசனே.

[4]
தென்னவன்(ன்); எனை ஆளும் சிவன் அவன்;
மன்னவன்; மதி அம் மறை ஓதியான்;
முன்னம் அன்னவன் சேரலன், பூழியான்,
இன்னம் இன்பு உற்ற இன்னம்பர் ஈசனே.

[5]
விளக்கும், வேறுபடப் பிறர் உள்ளத்தில்;
அளக்கும், தன் அடியார் மனத்து அன்பினை;
குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே
இளக்கும், என் மனத்து-இன்னம்பர் ஈசனே.

[6]
சடைக்கணாள், புனலாள்; அனல் கையது; ஓர்
கடைக்கணால் மங்கை நோக்க, இமவான்மகள்
படைக்கணால் பருகப்படுவான் நமக்கு
இடைக்கண் ஆய் நின்ற இன்னம்பர் ஈசனே.

[7]
தொழுது தூ மலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்,
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்,
எழுதும், கீழ்க்கணக்கு-இன்னம்பர் ஈசனே.

[8]
விரியும் தண் இளவேனில் வெண்பிறை
புரியும் காமனை வேவ, புருவமும்
திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து
எரிய, நோக்கிய இன்னம்பர் ஈசனே.!

[9]
சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்
முனிவனாய் முடிபத்து உடையான் தனைக்
கனிய ஊன்றிய காரணம் என்கொலோ,
இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே?

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.089   அல்லி மலர் நாற்றத்து உள்ளார்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருஇன்னம்பர் ; (திருத்தலம் அருள்தரு கொந்தார்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு எழுத்தறிந்தவீசுவரர் திருவடிகள் போற்றி )
அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும்; அன்பு உடையர் சிந்தை அகலார் போலும்;
சொல்லின், அருமறைகள் தாமே போலும்; தூநெறிக்கு வழி காட்டும் தொழிலார் போலும்;
வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும்; வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும்;
எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.

[1]
கோழிக் கொடியோன் தன் தாதைபோலும்; கொம்பனாள் பாகம் குளிர்ந்தார் போலும்;
ஊழி முதல்வரும் தாமே போலும்; உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும்;
ஆழித்தேர் வித்தகரும் தாமே போலும்; அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும்;
ஏழு பிறவிக்கும் தாமேபோலும் இன்னம்பர்த் தான் தோன்றி   ஈசனாரே.

[2]
தொண்டர்கள் தம் தகவின் உள்ளார் போலும்; தூநெறிக்கும் தூ நெறி ஆய் நின்றார் போலும்;
பண்டு இருவர் காணாப் படியார் போலும்; பத்தர்கள் தம் சித்தத்து இருந்தார் போலும்;
கண்டம் இறையே கறுத்தார் போலும்; காமனையும் காலனையும் காய்ந்தார் போலும்;
இண்டைச் சடை சேர் முடியார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.

[3]
வானத்து இளந்திங்கள் கண்ணி தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும்;
ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும்; ஒளி நீறு பூசும் ஒருவர் போலும்;
தானத்தின் முப்பொழுதும் தாமே போலும்; தம்மின் பிறர்   பெரியார் இல்லை போலும்;
ஏனத்து எயிறு இலங்கப் பூண்டார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.

[4]
சூழும் துயரம் அறுப்பார் போலும்; தோற்றம் இறுதி ஆய் நின்றார் போலும்;
ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும்; ஆடல் உகந்த அழகர் போலும்;
தாழ்வு இல் மனத்தேனை ஆளாக்கொண்டு, தன்மை  அளித்த தலைவர் போலும்;
ஏழு பிறப்பும் அறுப்பார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.

[5]
பாதத்து அணையும் சிலம்பர் போலும்; பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும்;
பூதப்படை ஆள் புனிதர் போலும்; பூம் புகலூர் மேய புராணர்   போலும்;
வேதப் பொருள் ஆய் விளைவார் போலும்; வேடம் பரவித் திரியும் தொண்டர்
ஏதப்படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.

[6]
பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும்; பத்தர்கள் தம் சித்தத்து இருந்தார் போலும்;
கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும்; கற்றவர்கள் ஏதம் களைவார் போலும்;
பொல்லாத பூதப்படையார் போலும்; பொருகடலும் ஏழ்மலையும் தாமே போலும்;
எல்லாரும் ஏத்தத் தகுவார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.

[7]
மட்டு மலியும் சடையார் போலும்; மாதை ஓர் பாகம் உடையார்   போலும்;
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும்; காலன் தன் வாழ்நாள் கழிப்பார் போலும்;
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும்; ஞாலம், எரி, நீர், வெளி, கால், ஆனார் போலும்;
எட்டுத் திசைகளும் தாமே போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.

[8]
கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து, அளித்த கள்வர் போலும்;
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும்; தேவர்க்கும் தேவர் ஆம் செல்வர் போலும்;
மருவில் பிரியாத மைந்தர் போலும்; மலர் அடிகள் நாடி வணங்கல் உற்ற
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர்த்   தான் தோன்றி ஈசனாரே.

[9]
அலங்கல் சடை தாழ, ஐயம் ஏற்று(வ்), அரவம் அரை ஆர்க்க வல்லார் போலும்;
வலங்கை மழு ஒன்று உடையார் போலும்; வான் தக்கன் வேள்வி சிதைத்தார் போலும்;
விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து, மெய்ஞ்ஞரம்பால் கீதம் கேட்டு, அன்று,
இலங்கு சுடர் வாள் கொடுத்தார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list