சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.038   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்!
பண் - கொல்லி   (திருக்கண்டியூர் வீரட்டேசுவரர் மங்கைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=dVdbjNbpawc
4.093   திருநாவுக்கரசர்   தேவாரம்   வானவர் தானவர் வைகல் மலர்
பண் - திருவிருத்தம்   (திருக்கண்டியூர் செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=NnhnaN6N0fs

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.038   வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்!  
பண் - கொல்லி   (திருத்தலம் திருக்கண்டியூர் ; (திருத்தலம் அருள்தரு மங்கைநாயகியம்மை உடனுறை அருள்மிகு வீரட்டேசுவரர் திருவடிகள் போற்றி )
வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்! அருள் வேண்டுவீர்
கனைவில் ஆர் புனல் காவிரிக் கரை மேய கண்டியூர் வீரட்டன்,
தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம் ஆள, தான்
வனனில் வாழ்க்கை கொண்டு ஆடிப் பாடி, இவ் வையம் மாப் பலி தேர்ந்ததே?

[1]
உள்ள ஆறு எனக்கு உரை செய்ம்மின்(ன்)! உயர்வு ஆய மா தவம் பேணுவீர்
கள் அவிழ் பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்து உறை காதலான்
பிள்ளைவான் பிறை செஞ்சடை(ம்) மிசை வைத்ததும், பெரு நீர் ஒலி-
வெள்ளம் தாங்கியது என்கொலோ, மிகு மங்கையாள் உடன் ஆகவே?

[2]
அடியர் ஆயினீர்! சொல்லுமின்-அறிகின்றிலேன், அரன் செய்கையை;
படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர் வீரட்டத்து உறை பான்மையான்,
முடிவும் ஆய், முதல் ஆய், இவ் வையம் முழுதும் ஆய், அழகு ஆயது ஓர்
பொடி அது ஆர் திருமார்பினில் புரிநூலும் பூண்டு, எழு பொற்பு அதே!

[3]
பழைய தொண்டர்கள்! பகருமின்-பல ஆய வேதியன் பான்மையை!
கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர் வீரட்டன்
குழை ஒர் காதினில் பெய்து உகந்து, ஒரு குன்றின் மங்கை வெரு உறப்
புழை நெடுங்கை நன் மா உரித்து, அது போர்த்து உகந்த பொலிவு அதே!

[4]
விரவு இலாது உமைக் கேட்கின்றேன்; அடி விரும்பி ஆட்செய்வீர்! விளம்புமின்-
கரவு எலாம் திரை மண்டு காவிரிக் கண்டியூர் உறை வீரட்டன்
முரவம், மொந்தை, முழா, ஒலிக்க, முழங்கு பேயொடும் கூடிப் போய்,
பரவு வானவர்க்கு ஆக வார்கடல் நஞ்சம் உண்ட பரிசு அதே!

[5]
இயலும் ஆறு எனக்கு இயம்புமின்(ன்) இறைவ(ன்)னும் ஆய் நிறை செய்கையை!
கயல் நெடுங்கண்ணினார்கள் தாம் பொலி கண்டியூர் உறை வீரட்டன்
புயல் பொழிந்து இழி வான் உளோர்களுக்கு ஆக அன்று, அயன் பொய்ச் சிரம்,
அயல் நக(வ்), அது அரிந்து, மற்று அதில் ஊன் உகந்த அருத்தியே!

[6]
திருந்து தொண்டர்கள்! செப்புமின்-மிகச் செல்வன் த(ன்)னது திறம் எலாம்!
கருந் தடங்கண்ணினார்கள் தாம் தொழு கண்டியூர் உறை வீரட்டன்
இருந்து நால்வரொடு, ஆல்நிழல், அறம் உரைத்ததும், மிகு வெம்மையார்
வருந்த வன் சிலையால் அம் மா மதில் மூன்றும் மாட்டிய வண்ணமே!

[7]
நா விரித்து அரன் தொல் புகழ்பல பேணுவீர்! இறை நல்குமின்-
காவிரித் தடம் புனல் செய் கண்டியூர் வீரட்டத்து உறை கண்ணுதல்
கோ விரிப் பயன் ஆன் அஞ்சு ஆடிய கொள்கையும், கொடி வரை பெற
மா வரைத்தலத்தால் அரக்கனை வலியை வாட்டிய மாண்பு அதே!

[8]
பெருமையே சரண் ஆக வாழ்வு உறு மாந்தர்காள்! இறை பேசுமின்-
கருமை ஆர் பொழில் சூழும் தண்வயல் கண்டியூர் உறை வீரட்டன்
ஒருமையால் உயர் மாலும், மற்றை மலரவன், உணர்ந்து ஏத்தவே,
அருமையால் அவருக்கு உயர்ந்து எரி ஆகி நின்ற அத் தன்மையே!

[9]
நமர் எழுபிறப்பு அறுக்கும் மாந்தர்கள்! நவிலுமின், உமைக் கேட்கின்றேன்!
கமர் அழி வயல் சூழும் தண்புனல் கண்டியூர் உறை வீரட்டன்
தமர் அழிந்து எழு சாக்கியச் சமண் ஆதர் ஓதுமது கொள
அமரர் ஆனவர் ஏத்த, அந்தகன் தன்னைச் சூலத்தில் ஆய்ந்ததே!
[10]
கருத்தனை, பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்து உறை கள்வனை,
அருத்தனை, திறம் அடியர்பால் மிகக் கேட்டு உகந்த வினா உரை
திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ்
ஒருத்தர் ஆகிலும், பலர்கள் ஆகிலும், உரைசெய்வார் உயர்ந்தார்களே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.093   வானவர் தானவர் வைகல் மலர்  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருக்கண்டியூர் ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )
வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சித்
தானவர் மால் பிரமன்(ன்) அறியாத தகைமையினான்,
ஆனவன், ஆதிபுராணன், அன்று ஓடிய பன்றி எய்த
கானவனை, கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே.

[1]
வானமதியமும் வாள் அரவும் புனலோடு சடைத்
தானம் அது என வைத்து உழல்வான், தழல் போல் உருவன்,
கானமறி ஒன்று கை உடையான், கண்டியூர் இருந்த
ஊனம் இல் வேதம் உடையனை, நாம் அடி உள்குவதே.

[2]
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை,
உண்டு, அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும்;
கண்டம் கறுத்த மிடறு உடையான்; கண்டியூர் இருந்த
தொண்டர் பிரானை- கண்டீர்- அண்டவாணர் தொழுகின்றதே.

[3]
முடியின் முற்றாதது ஒன்று இல்லை, எல்லாம் உடன் தான் உடையான்
கொடியும் உற்ற(வ்) விடை ஏறி, ஓர் கூற்று ஒருபால் உடையான்;
கடிய முற்று அவ் வினைநோய் களைவான், கண்டியூர் இருந்தான்;
அடியும் உற்றார் தொண்டர்; இல்லைகண்டீர், அண்டவானரே.

[4]
பற்றி ஓர் ஆனை உரித்த பிரான்,பவளத்திரள் போல்
முற்றும் அணிந்தது ஓர் நீறு உடையான், முன்னமே கொடுத்த
கல்- தம் குடையவன் தான் அறியான் கண்டியூர் இருந்த
குற்றம் இல் வேதம் உடையானை ஆம், அண்டர் கூறுவதே.

[5]
போர்ப் பனை யானை உரித்த பிரான்; பொறி வாய் அரவம்
சேர்ப்பது, வானத் திரை கடல் சூழ் உலகம்(ம்) இதனைக்
காப்பது காரணம் ஆக, கொண்டான்; கண்டியூர் இருந்த
கூர்ப்பு உடை ஒள்வாள் மழுவனை ஆம், அண்டர் கூறுவதே.

[6]
அட்டது காலனை; ஆய்ந்தது வேதம் ஆறு அங்கம்; அன்று
சுட்டது காமனை, கண் அதனாலே; தொடர்ந்து எரியக்
கட்டு அவை மூன்றும் எரித்த பிரான்; கண்டியூர் இருந்த
குட்டம் முன் வேதப்படையனை ஆம், அண்டர் கூறுவதே.

[7]
அட்டும் ஒலிநீர், அணி மதியும், மலர் ஆன எல்லாம்,
இட்டுப் பொதியும் சடைமுடியான், இண்டைமாலை; அம் கைக்
கட்டும் அரவு அது தான் உடையான்; கண்டியூர் இருந்த
கொட்டும் பறை உடை கூத்தனை ஆம், அண்டர் கூறுவதே.

[8]
மாய்ந்தன, தீவினை; மங்கின நோய்கள் மறுகி விழத்
தேய்ந்தன; பாவம் செறுக்ககில்லா, நம்மை; செற்று அநங்கைக்
காய்ந்த பிரான், கண்டியூர் எம்பிரான், அங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரான், அல்லனோ, அடியேனை ஆட்கொண்டவனே?

[9]
மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அவ் வாசுகியைத்
தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி
உண்ட பிரான், நஞ்சு ஒளித்த பிரான், அஞ்சி ஓடி நண்ணக்
கண்ட பிரான், அல்லனோ, கண்டியூர் அண்டவானவனே?


[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list