சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.105   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மின் உலாவிய சடையினர், விடையினர்,
பண் - நட்டராகம்   (திருக்கீழ்வேளூர் அட்சயலிங்கநாதர் வனமுலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=oXeTl6-fDCY
6.067   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்
பண் - திருத்தாண்டகம்   (திருக்கீழ்வேளூர் அட்சயலிங்கநாதர் வனமுலைநாயகியம்மை)

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.105   மின் உலாவிய சடையினர், விடையினர்,  
பண் - நட்டராகம்   (திருத்தலம் திருக்கீழ்வேளூர் ; (திருத்தலம் அருள்தரு வனமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு அட்சயலிங்கநாதர் திருவடிகள் போற்றி )
மின் உலாவிய சடையினர், விடையினர், மிளிர்தரும்
அரவோடும்
பன் உலாவிய மறைஒலி நாவினர், கறை அணி கண்டத்தர்,
பொன் உலாவிய கொன்றை அம்தாரினர், புகழ் மிகு
கீழ்வேளூர்
உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட, வீடு ஆமே.

[1]
நீர் உலாவிய சடை இடை அரவொடு, மதி, சிரம்
நிரைமாலை,
வார் உலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை
ஆர்க்க,
ஏர் உலாவிய இறைவனது உறைவு இடம் எழில் திகழ்
கீழ்வேளூர்
சீர் உலாவிய சிந்தை செய்து அணைபவர் பிணியொடு
வினை போமே.

[2]
வெண் நிலா மிகு விரிசடை அரவொடும், வெள் எருக்கு,
அலர்மத்தம்,
பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வு உறு
கீழ்வேளூர்,
பெண் நிலாவிய பாகனை, பெருந்திருக்கோயில்
எம்பெருமானை,
உள் நிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில்
உள்ளாரே.

[3]
சேடு உலாவிய கங்கையைச் சடை இடைத் தொங்கவைத்து
அழகு ஆக
நாடு உலாவிய பலி கொளும் நாதனார், நலம் மிகு
கீழ்வேளூர்ப்
பீடு உலாவிய பெருமையர், பெருந்திருக்கோயிலுள் பிரியாது
நீடு உலாவிய நிமலனைப் பணிபவர் நிலை மிகப்
பெறுவாரே.

[4]
துன்று வார்சடைச் சுடர் மதி, நகுதலை, வடம் அணி
சிரமாலை,
மன்று உலாவிய மா தவர் இனிது இயல் மணம் மிகு
கீழ்வேளூர்
நின்று நீடிய பெருந்திருக்கோயிலின் நிமலனை,
நினைவோடும்
சென்று உலாவி நின்று, ஏத்த வல்லார் வினை தேய்வது
திணம் ஆமே.

[5]
கொத்து உலாவிய குழல் திகழ் சடையனை, கூத்தனை,
மகிழ்ந்து உள்கித்
தொத்து உலாவிய நூல் அணி மார்பினர் தொழுது எழு
கீழ்வேளூர்
பித்து உலாவிய பத்தர்கள் பேணிய பெருந்திருக்கோயில்
மன்னும்
முத்து உலாவிய வித்தினை, ஏத்துமின்! முடுகிய இடர்
போமே.

[6]
பிறை நிலாவிய சடை இடைப் பின்னலும் வன்னியும் துன்
ஆரும்
கறை நிலாவிய கண்டர், எண்தோளினர், காதல் செய்
கீழ்வேளூர்
மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெருந்திருக்கோயில்
மன்னும்
நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை
போமே.

[7]
மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை எடுத்தலும்,
அரக்கன்தன்
தலை எலாம் நெரிந்து அலறிட, ஊன்றினான் உறைதரு
கீழ்வேளூர்
கலை நிலாவிய நாவினர் காதல் செய் பெருந்திருக்கோயிலுள
நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய, வல்வினை
போமே.

[8]
மஞ்சு உலாவிய கடல் கிடந்தவனொடு மலரவன் காண்பு
ஒண்ணாப்
பஞ்சு உலாவிய மெல் அடிப் பார்ப்பதி பாகனை,
பரிவோடும்
செஞ்சொலார்பலர் பரவிய தொல்புகழ் மல்கிய கீழ்வேளூர்
நஞ்சு உலாவிய கண்டனை, நணுகுமின்! நடலைகள்
நணுகாவே.

[9]
சீறு உலாவிய தலையினர் நிலை இலா அமணர்கள்,
சீவரத்தார்,
வீறு இலாத வெஞ்சொல் பல விரும்பன் மின்! சுரும்பு
அமர் கீழ்வேளூர்
ஏறு உலாவிய கொடியனை ஏதம் இல் பெருந்திருக்கோயில்
மன்னு
பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணுமின்! தவம்
ஆமே.

[10]
குருண்ட வார் குழல் சடை உடைக் குழகனை, அழகு அமர்
கீழ்வேளூர்த்
திரண்ட மா மறையவர் தொழும் பெருந்திருக்கோயில்
எம்பெருமானை,
இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன்
சம்பந்தன்
தெருண்ட பாடல் வல்லார் அவர், சிவகதி பெறுவது திடம்
ஆமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.067   ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருக்கீழ்வேளூர் ; (திருத்தலம் அருள்தரு வனமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு அட்சயலிங்கநாதர் திருவடிகள் போற்றி )
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன் தன்னை, ஆன் அஞ்சும் ஆடியை, நான் அபயம் புக்க
தாளானை, தன் ஒப்பார் இல்லாதானை, சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த
தோளானை, தோளாத முத்து ஒப்பானை, தூ வெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த
கீளானை, கீழ் வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.

[1]
சொல் பாவும் பொருள் தெரிந்து, தூய்மை நோக்கி, தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை;
நல் பான்மை அறியாத நாயினேனை நன்நெறிக்கே செலும் வண்ணம் நல்கினானை;
பல்பாவும் வாய் ஆரப் பாடி, ஆடி, பணிந்து, எழுந்து, குறைந்து, அடைந்தார் பாவம் போக்க-
கிற்பானை; கீழ்வேளூர் ஆளும் கோவை; கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.

[2]
அளை வாயில் அரவு அசைத்த அழகன் தன்னை, ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும்
விளைவானை, மெய்ஞ்ஞானப் பொருள் ஆனானை, வித்தகனை, எத்தனையும் பத்தர் பத்திக்கு
உளைவானை, அல்லாதார்க்கு உளையாதானை, உலப்பு இலியை, உள் புக்கு என் மனத்து மாசு
கிளைவானை, கீழ்வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.

[3]
தாள் பாவு கமல மலர் தயங்குவானைத் தலை   அறுத்து மா விரதம் தரித்தான் தன்னை,
கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை,
கொடுவினையேன் கொடு நரகக்குழியில் நின்றால்
மீட்பானை, வித்துருவின் கொத்து ஒப்பானை,
வேதியனை, வேதத்தின் பொருள் கொள் வீணை
கேட்பானை, கீழ்வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.

[4]
நல்லானை, நரை விடை ஒன்று ஊர்தியானை, நால் வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டாச்
சொல்லானை, சுடர் மூன்றும் ஆனான் தன்னை,
தொண்டு ஆகிப் பணிவார்கட்கு அணியான் தன்னை,
வில்லானை, மெல்லியல் ஓர் பங்கன் தன்னை, மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க-
கில்லானை, கீழ்வேளூர் ஆளும் கோவை, கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.

[5]
சுழித்தானை, கங்கை; மலர் வன்னி, கொன்றை, தூ மத்தம், வாள் அரவம், சூடினானை;
அழித்தானை, அரணங்கள் மூன்றும் வேவ; ஆலால-நஞ்சு அதனை உண்டான் தன்னை;
விழித்தானை, காமன் உடல் பொடி ஆய் வீழ; மெல்லியல் ஓர் பங்கனை; முன் வேல் நல் ஆனை
கிழித்தானை; கீழ்வேளூர் ஆளும் கோவை; கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.

[6]
உளர் ஒளியை, உள்ளத்தினுள்ளே நின்ற ஓங்காரத்து உள்பொருள் தான் ஆயினானை,
விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும்
ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை,
வளர் ஒளியை, மரகதத்தின் உருவினானை, வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும்
கிளர் ஒளியை, கீழ்வேளூர் ஆளும் கோவை,   கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.

[7]
தடுத்தானை, காலனைக் காலால் பொன்ற; தன் அடைந்த மாணிக்கு அன்று அருள் செய்தானை;
உடுத்தானை, புலி அதளோடு அக்கும் பாம்பும்; உள்குவார் உள்ளத்தின் உள்ளான் தன்னை;
மடுத்தானை, அரு நஞ்சம் மிடற்றுள்-தங்க; வானவர்கள் கூடிய அத் தக்கன் வேள்வி
கெடுத்தானை; கீழ்வேளூர் ஆளும் கோவை; கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.

[8]
மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை, மயானத்தில் கூத்தனை, வாள் அரவோடு என்பு
பூண்டானை, புறங்காட்டில் ஆடலானை, போகாது என் உள் புகுந்து இடம் கொண்டு என்னை
ஆண்டானை, அறிவு அரிய சிந்தையானை, அசங்கையனை, அமரர்கள் தம் சங்கை எல்லாம்
கீண்டானை, கீழ்வேளூர் ஆளும் கோவை,   கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே.

[9]
முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான் தானும் முதுகு இற, முன்கைந் நரம்பை எடுத்துப் பாட,
பறிப்பான் கைச் சிற்றரிவாள் நீட்டினானை; பாவியேன் நெஞ்சு அகத்தே பாதப் போது
பொறித்தானை; புரம் மூன்றும் எரி செய்தானை; பொய்யர்களைப் பொய் செய்து போது போக்கிக்
கிறிப்பானை; கீழ்வேளூர் ஆளும் கோவை;   கேடு இலியை; நாடுமவர் கேடு இலாரே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list