சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.007   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பாடக மெல் அடிப் பாவையோடும்,
பண் - நட்டபாடை   (திருநள்ளாறும் திருஆலவாயும் தெர்ப்பாரணியேசுவரர் சொக்கநாதசுவாமி போகமார்த்தபூண்முலையம்மை மீனாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=w_eG8VBBwkQ
1.049   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   போகம் ஆர்த்த பூண் முலையாள்
பண் - பழந்தக்கராகம்   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ba-MJnMHA28
2.033   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஏடு மலி கொன்றை, அரவு,
பண் - இந்தளம்   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=cwZC0zEYn14
5.068   திருநாவுக்கரசர்   தேவாரம்   உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,
பண் - திருக்குறுந்தொகை   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=FlzPTAwnCQ4
6.020   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்)
பண் - திருத்தாண்டகம்   (திருநள்ளாறு தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=HpYN_BrOtTU
7.068   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   செம்பொன் மேனி வெண் நீறு
பண் - தக்கேசி   (திருநள்ளாறு தெர்ப்பாரணியயீசுவரர் போகமார்த்தபூண்முலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=mMS9HwYUoWk

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.007   பாடக மெல் அடிப் பாவையோடும்,  
பண் - நட்டபாடை   (திருத்தலம் திருநள்ளாறும் திருஆலவாயும் ; (திருத்தலம் அருள்தரு போகமார்த்தபூண்முலையம்மை மீனாட்சியம்மை உடனுறை அருள்மிகு தெர்ப்பாரணியேசுவரர் சொக்கநாதசுவாமி திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தர் கொள்ளம்பூதூர் ஆலயத்தை அடைந்து எடுத்த திருப்பதிகத்தின் எஞ்சிய பாடல்களால் இறைவனைப் பரவினார். திருநள்ளாறு அடைந்து மதுரை மாநகருக்கு வந்து அனல் வாதத்தில் வெற்றியருளிய நள்ளாற்றிறைவன் மீது பாடகமெல்லடி என்ற பதிகத்தால் போற்றித் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
பாடக மெல் அடிப் பாவையோடும், படு பிணக்காடு இடம் பற்றி நின்று,
நாடகம் ஆடும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த,
ஆடகமாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?

[1]
திங்கள் அம்போதும் செழும்புனலும் செஞ்சடைமாட்டு அயல் வைத்து உகந்து,
நம் கண் மகிழும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
பொங்கு இளமென் முலையார்களோடும் புனமயில் ஆட, நிலா முளைக்கும்
அம் களகச் சுதை மாடக் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

[2]
தண் நறுமத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும் தாங்கி, யார்க்கும்
நண்ணல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
புண்ணியவாணரும் மா தவரும் புகுந்து உடன் ஏத்த, புனையிழையார்
அண்ணலின் பாடல் எடுக்கும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

[3]
பூவினில் வாசம், புனலில் பொற்பு, புது விரைச்சாந்தினில் நாற்றத்தோடு,
நாவினில் பாடல், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
தேவர்கள், தானவர், சித்தர், விச்சாதரர், கணத்தோடும் சிறந்து பொங்கி,
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?

[4]
செம்பொன் செய் மாலையும், வாசிகையும், திருந்து புகையும், அவியும், பாட்டும்,
நம்பும் பெருமை, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
உம்பரும், நாகர் உலகம் தானும், ஒலி கடல் சூழ்ந்த உலகத்தோரும்,
அம்புதம் நால்களால் நீடும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?

[5]
பாகமும் தேவியை வைத்துக்கொண்டு, பை விரி துத்திப் பரிய பேழ்வாய்
நாகமும் பூண்ட, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப் புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

[6]
கோவண ஆடையும், நீற்றுப்பூச்சும், கொடுமழு ஏந்தலும், செஞ்சடையும்,
நாவணப் பாட்டும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
பூவண மேனி இளைய மாதர், பொன்னும் மணியும் கொழித்து எடுத்து,
ஆவண வீதியில் ஆடும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

[7]
இலங்கை இராவணன் வெற்பு எடுக்க, எழில் விரல் ஊன்றி, இசை விரும்பி,
நலம் கொளச் சேர்ந்த, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
புலன்களைச் செற்று, பொறியை நீக்கி, புந்தியிலும் நினைச் சிந்தைசெய்யும்
அலங்கல் நல்லார்கள் அமரும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

[8]
பணி உடை மாலும் மலரினோனும், பன்றியும் வென்றிப் பறவை ஆயும்,
நணுகல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

[9]
தடுக்கு உடைக் கையரும் சாக்கியரும், சாதியின் நீங்கிய அத் தவத்தர்
நடுக்கு உற நின்ற, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்நாள் விழவும் இரும் பலி இன்பினோடு எத்திசையும்
அடுக்கும் பெருமை சேர் மாடக் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

[10]
அன்பு உடையானை, அரனை, கூடல் ஆலவாய் மேவியது என்கொல்? என்று,
நன்பொனை, நாதனை, நள்ளாற்றானை, நயம் பெறப் போற்றி, நலம் குலாவும்
பொன் புடை சூழ்தரு மாடக் காழிப் பூசுரன்-ஞானசம்பந்தன்-சொன்ன
இன்பு உடைப் பாடல்கள்பத்தும் வல்லார், இமையவர் ஏத்த இருப்பர் தாமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.049   போகம் ஆர்த்த பூண் முலையாள்  
பண் - பழந்தக்கராகம்   (திருத்தலம் திருநள்ளாறு ; (திருத்தலம் அருள்தரு போகமார்த்தபூண்முலையம்மை உடனுறை அருள்மிகு தெர்ப்பாரணியர் திருவடிகள் போற்றி )
யாழ்ப்பாணர் அப்பதிகஇசை தம் கருவியில் அடங்காததை உணர்ந்து இக்கருவியினாலன்றோ உறவினர் ஞானசம்பந்தரையும் தன்னையும் ஏற்றத் தாழ்வு கற்பிக்க முற்பட்டனர் என, அதனை உடைத்தற்கு ஓங்கினார். ஞானசம்பந்தர் அதனைத் தடுத்து, இறைவன் பெருமை இக்கருவியில் அடங்குமெனக் கருதல் கூடாது. ஆயினும் இயன்றவாறு வாசிப்பீர் எனத் திரும்பக் கொடுத்து, இசைத் தொண்டு செய்யப் பணித்து, சிலநாள் அப்பதியில் தங்கி, திருநள்ளாறு அடைந்து போகமார்த்த பூண் முலையாள் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடி நள்ளாற்றிறைவரை வணங்கித் திருச்சாத்த மங்கைக்கு எழுந்தருளினார்.
பச்சை திருப்பதிகம் - வினை நீக்கம்‌ - சனிக்கிரக தாக்குதல்‌ நீங்க ஓத வேண்டிய பதிகம்
போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல், பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின் மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.

[1]
தோடு உடைய காது உடையன், தோல் உடையன், தொலையாப்
பீடு உடைய போர் விடையன், பெண்ணும் ஓர்பால் உடையன்,
ஏடு உடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடு உடைய நம் பெருமான், மேயது நள்ளாறே.

[2]
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி, அணியிழை ஓர்
பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த,
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நால் மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே.

[3]
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி,
பல்க வல்ல தொண்டர் தம் பொன்பாத நிழல் சேர,
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.

[4]
ஏறு தாங்கி, ஊர்தி பேணி, ஏர் கொள் இளமதியம்
ஆறு தாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி,
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.

[5]
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன்-இமையோர்கள்,
எங்கள் உச்சி எம் இறைவன்! என்று அடியே இறைஞ்ச,
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான்-மேயது நள்ளாறே.

[6]
வெஞ்சுடர்த் தீ அங்கை ஏந்தி, விண் கொள் முழவு அதிர,
அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும், போய்,
செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி, திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

[7]
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால்
சுட்டு மாட்டி, சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும், போய்ப்
பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.

[8]
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி,
அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்
எண்ணல் ஆகா, உள் வினை என்று எள்க வலித்து, இருவர்
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே.

[9]
மாசு மெய்யர், மண்டைத் தேரர், குண்டர் குணம் இலிகள்
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி, அந் நெறி செல்லன்மின்!
மூசு வண்டு ஆர் கொன்றை சூடி, மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம் பெருமான் மேயது நள்ளாறே.

[10]
தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன், நல்ல
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார்
உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.033   ஏடு மலி கொன்றை, அரவு,  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருநள்ளாறு ; (திருத்தலம் அருள்தரு போகமார்த்தபூண்முலையம்மை உடனுறை அருள்மிகு தெர்ப்பாரணியர் திருவடிகள் போற்றி )
ஏடு மலி கொன்றை, அரவு, இந்து, இள வன்னி,
மாடு அவல செஞ்சடை எம் மைந்தன் இடம் என்பர்
கோடு மலி ஞாழல், குரவு, ஏறு சுரபுன்னை,
நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே.

[1]
விண் இயல் பிறைப்பிளவு, அறைப்புனல், முடித்த
புண்ணியன் இருக்கும் இடம் என்பர் புவிதன்மேல்
பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள்
நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே.

[2]
விளங்கு இழை மடந்தைமலைமங்கை ஒருபாகத்து
உளம் கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர்
வளம் கெழுவு தீபமொடு, தூபம், மலர் தூவி,
நளன் கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே.

[3]
கொக்கு, அரவர், கூன்மதியர், கோபர், திருமேனிச்
செக்கர் அவர், சேரும் இடம் என்பர் தடம் மூழ்கிப்
புக்கு அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி,
நக்கர் அவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே.

[4]
நெஞ்சம் இது கண்டுகொள், உனக்கு! என நினைந்தார்
வஞ்சம் அது அறுத்துஅருளும் மற்றவனை; வானோர்
அஞ்ச, முதுகுஆகியவர் கைதொழ, எழுந்த
நஞ்சு அமுதுசெய்தவன்; இருப்பு இடம் நள்ளாறே.

[5]
பாலன் அடி பேண, அவன் ஆர் உயிர் குறைக்கும்
காலன் உடன்மாள முன் உதைத்த அரன் ஊர் ஆம்
கோல மலர், நீர்க் குடம், எடுத்து மறையாளர்
நாலின்வழி நின்று, தொழில் பேணிய நள்ளாறே.

[6]
நீதியர், நெடுந்தகையர், நீள்மலையர், பாவை
பாதியர், பராபரர், பரம்பரர், இருக்கை
வேதியர்கள், வேள்வி ஒழியாது, மறை நாளும்
ஓதி, அரன்நாமமும் உணர்த்திடும் நள்ளாறே.

[7]
கடுத்து, வல் அரக்கன், முன் நெருக்கி வரைதன்னை
எடுத்தவன், முடித் தலைகள்பத்தும் மிகு தோளும்
அடர்த்தவர்தமக்கு இடம் அது என்பர் அளி பாட,
நடத்த கலவத்திரள்கள் வைகிய நள்ளாறே.

[8]
உயர்ந்தவன், உருக்கொடு திரிந்து, உலகம் எல்லாம்
பயந்தவன், நினைப்பரிய பண்பன் இடம் என்பர்
வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும்
நயம் தரும் அ வேதஒலி ஆர் திரு நள்ளாறே.

[9]
சிந்தை திருகல் சமணர், தேரர், தவம் என்னும்
பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன் ஊர்
மந்த முழவம் தரு விழாஒலியும், வேதச்
சந்தம் விரவி, பொழில் முழங்கிய நள்ளாறே.

[10]
ஆடல் அரவு ஆர் சடையன் ஆயிழைதனோடும்
நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை,
மாடம் மலி காழி வளர் பந்தனது செஞ்சொல்
பாடல் உடையாரை அடையா, பழிகள் நோயே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.068   உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருநள்ளாறு ; (திருத்தலம் அருள்தரு போகமார்த்தபூண்முலையம்மை உடனுறை அருள்மிகு தெர்ப்பாரணியர் திருவடிகள் போற்றி )
உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,
தெள் ஆறாச் சிவசோதித்திரளினை,
கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை
நள்ளாறா! என, நம் வினை நாசமே.

[1]
ஆரணப் பொருள் ஆம் அருளாளனார்
வாரணத்து உரி போர்த்த மணாளனார்-
நாரணன் நண்ணி ஏத்தும் நள்ளாறனார்;
காரணக் கலைஞானக் கடவுளே.

[2]
மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு, எயில்
சோகம் பூண்டு அழல் சோர, தொட்டான் அவன்
பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு,
நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே.

[3]
மலியும் செஞ்சடை வாள் அரவ(ம்)மொடு
பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார்,
நலியும் கூற்றை நலிந்த நள்ளாறர் தம்
வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே.

[4]
உறவனாய் நிறைந்து, உள்ளம் குளிர்ப்பவன்;
இறைவன் ஆகி நின்று, எண் நிறைந்தான் அவன்
நறவம் நாறும் பொழில்-திரு நள்ளாறன்;
மறவனாய்ப் பன்றிப் பின் சென்ற மாயமே!

[5]
செக்கர் அங்கு அழி செஞ்சுடர்ச் சோதியார்;
நக்கர்-அங்கு அரவு ஆர்த்த நள்ளாறனார்;
வக்கரன்(ன்) உயிர் வவ்விய மாயற்குச்
சக்கரம்(ம்) அருள் செய்த சதுரரே.

[6]
வஞ்ச நஞ்சின் பொலிகின்ற கண்டத்தர்;
விஞ்சையின் செல்வப் பாவைக்கு வேந்தனார்;
வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழி கொடார்-
நஞ்ச நெஞ்சர்க்கு அருளும் நள்ளாறரே.

[7]
அல்லன் என்றும் அலர்க்கு, அருள் ஆயின
சொல்லன் என்று,-சொல்லா மறைச்சோதியான்,-
வல்லன் என்றும், வல்லார் வளம் மிக்கவர்;
நல்லன், என்றும் நல்லார்க்கு, நள்ளாறனே.

[8]
பாம்பு அணைப் பள்ளி கொண்ட பரமனும்,
பூம் பணைப் பொலிகின்ற புராணனும்,
தாம் பணிந்து அளப்ப ஒண்ணாத் தனித் தழல்-
நாம் பணிந்து அடி போற்றும் நள்ளாறனே.

[9]
இலங்கை மன்னன் இருபது தோள் இற
மலங்க மால்வரை மேல் விரல் வைத்தவர்,
நலம் கொள் நீற்றர், நள்ளாறரை, நாள் தொறும்
வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.020   ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்)  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருநள்ளாறு ; (திருத்தலம் அருள்தரு போகமார்த்தபூண்முலையம்மை உடனுறை அருள்மிகு தெர்ப்பாரணியர் திருவடிகள் போற்றி )
ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்) அல்லாத   சொல் உரைக்கத் தன் கை வாளால்
சேதித்த திருவடியை, செல்ல நல்ல சிவலோக நெறி வகுத்துக் காட்டுவானை,
மா மதியை, மாது ஓர் கூறு ஆயினானை, மா மலர்மேல்   அயனோடு மாலும் காணா
நாதியை, நம்பியை, நள்ளாற்றானை, -நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

[1]
படையானை, பாசுபத வேடத்தானை, பண்டு அனங்கற் பார்த்தானை, பாவம் எல்லாம்
அடையாமைக் காப்பானை, அடியார் தங்கள் அரு மருந்தை, ஆவா! என்று அருள் செய்வானை,
சடையானை, சந்திரனைத் தரித்தான் தன்னை, சங்கத்த முத்து அனைய வெள்ளை ஏற்றின்
நடையானை, நம்பியை, நள்ளாற்றானை, -நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

[2]
பட அரவம் ஒன்று கொண்டு அரையில் ஆர்த்த பராபரனை, பைஞ்ஞீலி மேவினானை,
அடல் அரவம் பற்றிக் கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை, ஆதியானை,
மடல் அரவம் மன்னு பூங்கொன்றையானை, மாமணியை, மாணிக்குஆய்க் காலன் தன்னை
நடல் அரவம் செய்தானை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

[3]
கட்டங்கம் ஒன்று தம் கையில் ஏந்தி, கங்கணமும் காதில் விடு தோடும் இட்டு,
சுட்ட(அ)ங்கம் கொண்டு துதையப் பூசி, சுந்தரனாய்ச் சூலம் கை ஏந்தினானை;
பட்ட(அ)ங்கமாலை நிறையச் சூடி, பல்கணமும் தாமும் பரந்த காட்டில்
நட்டங்கம் ஆடியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

[4]
உலந்தார் தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை, உலப்பு இல் செல்வம்
சிலந்தி தனக்கு அருள் செய்த தேவதேவை, திருச் சிராப்பள்ளி எம் சிவலோக(ன்)னை,
கலந்தார் தம் மனத்து என்றும் காதலானை, கச்சி ஏகம்பனை, கமழ் பூங்கொன்றை
நலம் தாங்கும் நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தஆறே!.

[5]
குலம் கொடுத்துக் கோள் நீக்க வல்லான் தன்னை, குலவரையின் மடப்பாவை இடப்பாலானை,
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டிக் கொண்ட மறையவனை, பிறை தவழ் செஞ்சடையினானை
சலம் கெடுத்துத் தயா மூல தன்மம் என்னும்
தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம்
நலம் கொடுக்கும் நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

[6]
பூ விரியும் மலர்க் கொன்றைச் சடையினானை,   புறம்பயத்து எம்பெருமானை, புகலூரானை,
மா இரியக் களிறு உரித்த மைந்தன் தன்னை,   மறைக்காடும் வலி வலமும் மன்னினானை,
தே இரியத் திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை,   உதைத்து அவன் தன் சிரம் கொண்டானை,
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

[7]
சொல்லானை, சுடர்ப் பவளச் சோதியானை, தொல் அவுணர் புரம் மூன்றும் எரியச் செற்ற
வில்லானை, எல்லார்க்கும் மேல் ஆனானை, மெல்லியலாள் பாகனை, வேதம் நான்கும்
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை, காளத்தியானை, கயிலை மேய
நல்லானை, நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

[8]
குன்றாத மா முனிவன் சாபம் நீங்கக் குரை கழலால் கூற்றுவனைக் குமைத்த கோனை,
அன்றாக அவுணர் புரம் மூன்றும் வேவ ஆர் அழல் வாய் ஓட்டி அடர்வித்தானை,
சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்தன்னை,
சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும்
நன்று ஆகும் நம்பியை, நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே!.

[9]
இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி,
உறவு ஆகி, இன் இசை கேட்டு, இரங்கி, மீண்டே உற்ற பிணி தவிர்த்து, அருள வல்லான் தன்னை;
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை; மா மதியம், மலர்க் கொன்றை, வன்னி, மத்தம்,
நறவு, ஆர் செஞ்சடையானை; நள்ளாற்றானை;-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.068   செம்பொன் மேனி வெண் நீறு  
பண் - தக்கேசி   (திருத்தலம் திருநள்ளாறு ; (திருத்தலம் அருள்தரு போகமார்த்தபூண்முலையம்மை உடனுறை அருள்மிகு தெர்ப்பாரணியயீசுவரர் திருவடிகள் போற்றி )
செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை, கரிய கண்டனை, மால் அயன் காணாச்
சம்புவை, தழல் அங்கையினானை, சாமவேதனை, தன் ஒப்பு இலானை,
கும்ப மாகரியின்(ந்) உரியானை, கோவின் மேல் வரும் கோவினை, எங்கள்
நம்பனை, நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

[1]
விரை செய் மா மலர்க் கொன்றையினானை; வேத கீதனை; மிகச் சிறந்து உருகிப்
பரசுவார் வினைப் பற்று அறுப்பானை; பாலொடு ஆன் அஞ்சும் ஆட வல்லானை;
குரை கடல், வரை, ஏழ், உலகு உடைய கோனை; ஞானக் கொழுந்தினை; தொல்லை
நரை விடை உடை நள்ளாறனை; அமுதை; நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

[2]
பூவில் வாசத்தை, பொன்னினை, மணியை, புவியை, காற்றினை, புனல், அனல், வெளியை,
சேவின் மேல் வரும் செல்வனை, சிவனை, தேவ தேவனை, தித்திக்கும் தேனை,
காவி அம் கண்ணி பங்கனை, கங்கைச் சடையனை, காமரத்து இசை பாட
நாவில் ஊறும் நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

[3]
தஞ்சம் என்று தன் தாள் அது அடைந்த பாலன் மேல் வந்த காலனை, உருள
நெஞ்சில் ஓர் உதை கொண்ட பிரானை; நினைப்பவர் மனம் நீங்க கில்லானை;
விஞ்சை வானவர், தானவர், கூடிக் கடைந்த வேலையுள் மிக்கு எழுந்து எரியும்
நஞ்சம் உண்ட நள்ளாறனை; அமுதை; நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

[4]
மங்கை பங்கனை, மாசு இலா மணியை, வான நாடனை, ஏனமோடு அன்னம்
எங்கும் நாடியும் காண்பு அரியானை, ஏழையேற்கு எளி வந்த பிரானை,
அங்கம் நால்மறையால் நிறைகின்ற அந்தணாளர் அடி அது போற்றும்
நங்கள் கோனை, நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

[5]
கற்பகத்தினை, கனக மால் வரையை, காம கோபனை, கண் நுதலானை,
சொல் பதப் பொருள் இருள் அறுத்து அருளும் தூய சோதியை, வெண்ணெய் நல்லூரில்
அற்புதப் பழ ஆவணம் காட்டி அடியனா என்னை ஆள் அது கொண்ட
நல் பதத்தை, நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

[6]
மறவனை, அன்று பன்றிப் பின் சென்ற மாயனை, நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த
அறவனை, அமரர்க்கு அரியானை, அமரர் சேனைக்கு நாயகன் ஆன
குறவர் மங்கை தன் கேள்வனைப் பெற்ற கோனை, நான் செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறை விரி(ய்)யும் நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

[7]
மாதினுக்கு உடம்பு இடம் கொடுத்தானை, மணியினை, பணிவார் வினை கெடுக்கும்
வேதனை, வேத வேள்வியர் வணங்கும் விமலனை, அடியேற்கு எளிவந்த
தூதனை, தன்னைத் தோழமை அருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும்
நாதனை, நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .

[8]
இலங்கை வேந்தன், எழில் திகழ் கயிலை எடுப்ப, ஆங்கு இமவான் மகள் அஞ்ச,
துலங்கு நீள் முடி ஒருபதும் தோள்கள்-இருபதும் நெரித்து, இன் இசை கேட்டு,
வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை; பிள்ளை மாமதிச் சடை மேல்
நலம் கொள் சோதி நள்ளாறனை; அமுதை; நாயினேன் மறந்து என் நினைக்கேனே?.

[9]
செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்று எம் சிவனை, நாவலூர்ச் சிங்கடி தந்தை,
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது? என்று வனப் பகை அப்பன், ஊரன், வன்தொண்டன்-
சிறந்த மாலைகள் அஞ்சினோடு அஞ்சும் சிந்தையுள் உருகிச் செப்ப வல்லார்க்கு
இறந்து போக்கு இல்லை, வரவு இல்லை ஆகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள், இனிதே .

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list