சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
4.066   திருநாவுக்கரசர்   தேவாரம்   கச்சை சேர் அரவர் போலும்;
பண் - திருநேரிசை   (திருநாகேச்சரம் சண்பகாரண்ணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=L0ZzU3V5SJ0
5.052   திருநாவுக்கரசர்   தேவாரம்   நல்லர்; நல்லது ஓர் நாகம்
பண் - திருக்குறுந்தொகை   (திருநாகேச்சரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Yu4It1GWmPw
6.066   திருநாவுக்கரசர்   தேவாரம்   தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும்
பண் - திருத்தாண்டகம்   (திருநாகேச்சரம் சண்பகாரண்ணியேசுவரர் குன்றமுலைநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=xcgu5XmwG8M
7.099   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பிறை அணி வாள் நுதலாள்
பண் - பஞ்சமம்   (திருநாகேச்சரம் செண்பகாரணியேசுவரர் குன்றமுலையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=1om-VxulkEw

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.066   கச்சை சேர் அரவர் போலும்;  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருநாகேச்சரம் ; (திருத்தலம் அருள்தரு குன்றமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு சண்பகாரண்ணியேசுவரர் திருவடிகள் போற்றி )
கச்சை சேர் அரவர் போலும்; கறை அணி மிடற்றர் போலும்;
பிச்சை கொண்டு உண்பர் போலும்; பேர் அருளாளர் போலும்;
இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை
நச்சுவார்க்கு இனியர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

[1]
வேடு உறு வேடர் ஆகி விசயனோடு எய்தார் போலும்;
காடு உறு பதியர் போலும்; கடிபுனல் கங்கை நங்கை
சேடு எறி சடையர் போலும்; தீவினை தீர்க்க வல்ல
நாடு அறி புகழர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

[2]
கல்-துணை வில் அது ஆகக் கடி அரண் செற்றார் போலும்;
பொன்துணைப் பாதர் போலும்; புலி அதள் உடையார் போலும்;
சொல்-துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம்
நல்-துணை ஆவர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

[3]
கொம்பு அனாள் பாகர் போலும்; கொடி உடை விடையர் போலும்;
செம்பொன் ஆர் உருவர் போலும்; திகழ் திரு நீற்றர் போலும்;
எம்பிரான்! எம்மை ஆளும் இறைவனே! என்று தம்மை
நம்புவார்க்கு அன்பர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

[4]
கடகரி உரியர் போலும்; கனல் மழுவாளர் போலும்;
பட அரவு அரையர் போலும்; பாரிடம் பலவும் கூடிக்
குடம் உடை முழவம் ஆர்ப்ப, கூளிகள் பாட, நாளும்
நடம் நவில் அடிகள் போலும் நாக ஈச்சுரவனாரே.

[5]
பிறை உறு சடையர் போலும்; பெண் ஒரு பாகர் போலும்;
மறை உறு மொழியர் போலும்; மால், மறையவன் தன்னோடு,
முறை முறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற
நறவு அமர் கழலர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

[6]
வஞ்சகர்க்கு அரியர் போலும்; மருவினோர்க்கு எளியர் போலும்;
குஞ்சரத்து உரியர் போலும்; கூற்றினைக் குமைப்பர் போலும்;
விஞ்சையர் இரிய அன்று வேலைவாய் வந்து எழுந்த
நஞ்சு அணி மிடற்றர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

[7]
போகம் ஆர் மோடி கொங்கை புணர் தரு புனிதர் போலும்;
வேகம் ஆர் விடையர் போலும்; வெண் பொடி ஆடும் மேனிப்
பாகம் மால் உடையர் போலும்; பருப்பத வில்லர் போலும்;
நாகம் நாண் உடையர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

[8]
கொக்கரை, தாளம், வீணை, பாணி செய் குழகர் போலும்;
அக்கு அரை அணிவர் போலும்; ஐந்தலை அரவர் போலும்;
வக்கரை அமர்வர் போலும்; மாதரை மையல் செய்யும்
நக்க(அ)ரை உருவர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

[9]
வின்மையால் புரங்கள் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும்;
தன்மையால் அமரர் தங்கள் தலைவர்க்கும் தலைவர் போலும்;
வன்மையால் மலை எடுத்தான் வலியினைத் தொலைவித்து, ஆங்கே
நன்மையால் அளிப்பர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.052   நல்லர்; நல்லது ஓர் நாகம்  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருநாகேச்சரம் ; (திருத்தலம் அருள்தரு குன்றமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு செண்பகாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
நல்லர்; நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர்;
வல்லர், வல்வினை தீர்க்கும் மருந்துகள்;
பல் இல் ஓடு கை ஏந்திப் பலி திரி
செல்வர் போல்-திரு நாகேச்சுரவரே.

[1]
நாவல் அம்பெருந்தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி, வினையொடு
பாவம் ஆயின பற்று அறுவித்திடும்
தேவர்போல்-திரு நாகேச்சுரவரே.

[2]
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவர்;
ஆதியார், அயனோடு அமரர்க்கு எலாம்;
மாது ஓர் கூறர்; மழு வலன் ஏந்திய
நாதர்போல்-திரு நாகேச்சுரவரே.

[3]
சந்திர(ன்)னொடு சூரியர்தாம் உடன்
வந்து சீர் வழிபாடுகள் செய்தபின்,
ஐந்தலை அரவின் பணி கொண்டு, அருள்
மைந்தர்போல்-மணி நாகேச்சுரவரே.

[4]
பண்டு ஓர் நாள் இகழ் வான் பழித் தக்கனார்
கொண்ட வேள்விக் குமண்டை அது கெட,
தண்டமா, விதாதாவின் தலை கொண்ட
செண்டர்போல்-திரு நாகேச்சுரவரே.

[5]
வம்பு பூங் குழல் மாது மறுக ஓர்
கம்ப யானை உரித்த கரத்தினர்;
செம்பொன் ஆர் இதழி(ம்) மலர்ச் செஞ்சடை
நம்பர்போல்-திரு நாகேச்சுரவரே.

[6]
மானை ஏந்திய கையினர்; மை அறு
ஞானச் சோதியர்; ஆதியர்; நாமம்தான்
ஆன அஞ்சு எழுத்து ஓத, வந்து அண்ணிக்கும்
தேனர்போல்-திரு நாகேச்சுரவரே.

[7]
கழல் கொள் காலினர்; காலனைக் காய்ந்தவர்;
தழல் கொள் மேனியர்; சாந்த வெண் நீறு அணி
அழகர்; ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய
குழகர்போல்-குளிர் நாகேச்சுரவரே.

[8]
வட்ட மா மதில் மூன்று உடன் வல் அரண்
சுட்ட செய்கையர் ஆகிலும், சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்து, குளிர்விக்கும்
சிட்டர்போல்-திரு நாகேச்சுரவரே.

[9]
தூர்த்தன் தோள்முடிதாளும் தொலையவே
சேர்த்தினார், திருப்பாதத்து ஒருவிரல்;
ஆர்த்து வந்து, உலகத்தவர் ஆடிடும்
தீர்த்தர்போல்-திரு நாகேச்சுரவரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.066   தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருநாகேச்சரம் ; (திருத்தலம் அருள்தரு குன்றமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு சண்பகாரண்ணியேசுவரர் திருவடிகள் போற்றி )
தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை, மலையவனை, உலகம் எல்லாம்
ஆயவனை, சேயவனை, அணியான் தன்னை, அழலவனை, நிழலவனை, அறிய ஒண்ணா
மாயவனை, மறையவனை, மறையோர் தங்கள் மந்திரனை, தந்திரனை, வளரா நின்ற
தீ அவனை, திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

[1]
உரித்தானை, மத வேழம் தன்னை; மின் ஆர் ஒளி முடி எம்பெருமானை; உமை ஓர்பாகம்
தரித்தானை; தரியலர் தம் புரம் எய்தானை; தன் அடைந்தார் தம் வினை நோய் பாவம் எல்லாம்
அரித்தானை; ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு
அறம், பொருள், வீடு, இன்பம், ஆறு அங்கம், வேதம்,
தெரித்தானை; திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

[2]
கார் ஆனை உரி போர்த்த கடவுள் தன்னை; காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்
வாரானை; மதிப்பவர் தம் மனத்து உளானை; மற்று ஒருவர் தன் ஒப்பார், ஒப்பு, இலாத,
ஏரானை; இமையவர் தம் பெருமான் தன்னை; இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க
சீரானை; திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

[3]
தலையானை, எவ் உலகும் தான் ஆனானை, தன் உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா
நிலையானை, நேசர்க்கு நேசன் தன்னை, நீள் வானமுகடு அதனைத் தாங்கி நின்ற
மலையானை, வரி அரவு நாணாக் கோத்து   வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த
சிலையானை, திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

[4]
மெய்யானை, தன் பக்கல் விரும்புவார்க்கு; விரும்பாத அரும் பாவியவர்கட்கு என்றும்
பொய்யானை; புறங்காட்டில் ஆடலானை; பொன் பொலிந்த சடையானை; பொடி கொள் பூதிப்
பையானை; பை அரவம் அசைத்தான் தன்னை; பரந்தானை; பவள மால்வரை போல் மேனிச்
செய்யானை; திரு நாகேச்சுரத்து உளானை; சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

[5]
துறந்தானை, அறம் புரியாத் துரிசர் தம்மை; தோத்திரங்கள் பல சொல்லி வானோர் ஏத்த
நிறைந்தானை; நீர், நிலம், தீ, வெளி, காற்று, ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை;
மறந்தானை, தன் நினையா வஞ்சர் தம்மை; அஞ்சு எழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும்
சிறந்தானை; திரு நாகேச்சுரத்து உளானை; சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

[6]
மறையானை, மால் விடை ஒன்று ஊர்தியானை, மால்கடல் நஞ்சு உண்டானை, வானோர் தங்கள்-
இறையானை, என் பிறவித்துயர் தீர்ப்பானை,   இன்னமுதை, மன்னிய சீர் ஏகம்பத்தில்
உறைவானை, ஒருவரும் ஈங்கு அறியா வண்ணம் என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த
சிறையானை, திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

[7]
எய்தானை, புரம் மூன்றும் இமைக்கும் போதில்; இரு விசும்பில் வருபுனலைத் திரு ஆர் சென்னிப்
பெய்தானை; பிறப்பு இலியை; அறத்தில் நில்லாப் பிரமன் தன் சிரம் ஒன்றைக் கரம் ஒன்றி(ன்)னால்
கொய்தானை; கூத்து ஆட வல்லான் தன்னை; குறி இலாக் கொடியேனை அடியேன் ஆகச்
செய்தானை; திரு நாகேச்சுரத்து உளானை; சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

[8]
அளியானை, அண்ணிக்கும் ஆன்பால் தன்னை, வான் பயிரை, அப் பயிரின் வாட்டம் தீர்க்கும்
துளியானை, அயன் மாலும் தேடிக் காணாச் சுடரானை, துரிசு அறத் தொண்டுபட்டார்க்கு
எளியானை, யாவர்க்கும் அரியான் தன்னை, இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல்,-
தெளியானை, திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன் நெறிக் கண் சேராதாரே.

[9]
சீர்த்தானை; உலகு ஏழும் சிறந்து போற்றச் சிறந்தானை; நிறைந்து ஓங்கு செல்வன் தன்னை;
பார்த்தானை, மதனவேள் பொடி ஆய் வீழ; பனிமதி அம் சடையானை; புனிதன் தன்னை;
ஆர்த்து ஓடி மலை எடுத்த அரக்கன் அஞ்ச
அருவிரலால் அடர்த்தானை; அடைந்தோர் பாவம்
தீர்த்தானை; திரு நாகேச்சுரத்து உளானை; சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.099   பிறை அணி வாள் நுதலாள்  
பண் - பஞ்சமம்   (திருத்தலம் திருநாகேச்சரம் ; (திருத்தலம் அருள்தரு குன்றமுலையம்மை உடனுறை அருள்மிகு செண்பகாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
பிறை அணி வாள் நுதலாள் உமையாள் அவள் பேழ் கணிக்க
நிறை அணி நெஞ்சு அனுங்க(ந்), நீலமால்விடம் உண்டது என்னே?
குறை அணி குல்லை, முல்லை, அளைந்து(க்), குளிர் மாதவி மேல்
சிறை அணி வண்டுகள் சேர்-திரு நாகேச்சுரத்து அரனே!

[1]
அருந்தவம் மா முனிவர்க்கு அருள் ஆகி, ஓர் ஆல் அதன் கீழ்
இருந்து, அறமே புரிதற்கு இயல்பு ஆகியது என்னைகொல் ஆம்!-
குருந்து அயலே குரவம்(ம்) அரவின்(ன்) எயிறு ஏற்று அரும்ப,
செருந்தி செம்பொன் மலரும்-திரு நாகேச்சுரத்து அரனே!

[2]
பாலனது ஆர் உயிர்மேல் பரியாது கைத்து எழுந்த
காலனை வீடுவித்து, கருத்து ஆக்கியது என்னைகொல் ஆம்?-
கோல மலர்க்குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில்,
சேலொடு வாளைகள் பாய்-திரு நாகேச்சுரத்து அரனே!

[3]
குன்ற-மலைக்கு மரீ-கொடி ஏர் இடையாள்-வெருவ,
வென்றி மதகரியின்(ன்) உரி போர்த்ததும் என்னைகொல் ஆம்?-
முன்றில் இளங் கமுகின் முது பாளை மது அளைந்து,
தென்றல் புகுந்து உலவும்-திரு நாகேச்சுரத்து அரனே!

[4]
அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்து, ஒரு நால்மறை நூல்
உரை பெருக(வ்) உரைத்து, அன்று உகந்து(வ்), அருள்செய்தது என்னே?-
வரை தரு மா மணியும், வரைச் சந்து, அகிலோடும், உந்தித்
திரை பொரு தண்பழன-திரு நாகேச்சுரத்து அரனே!

[5]
தங்கிய மா தவத்தின் தழல் வேள்வியின் நின்று எழுந்த
சிங்கமும் நீள் புலியும் செழு மால்கரியோடு அலறப்
பொங்கிய போர் புரிந்து(ப்), பிளந்து, ஈர் உரி போர்த்தது என்னே?-
செங்கயல் பாய் கழனி-திரு நாகேச்சுரத்து அரனே!

[6]
நின்ற இம் மா தவத்தை ஒழிப்பான் சென்று, அணைந்து, மிகப்
பொங்கிய பூங்கணை வேள் பொடி ஆக விழித்தல் என்னே?-
பங்கய மா மலர்மேல் மது உண்டு, வண் தேன் முரல,
செங்கயல் பாய் வயல் சூழ்-திரு நாகேச்சுரத்து அரனே!

[7]
வரி அர நாண் அது(வ்) ஆக, மாமேரு வில் அது(வ்) ஆக,
அரியன முப்புரங்கள்(ள்) அவை ஆர் அழல் மூட்டல் என்னே?-
விரிதரு மல்லிகையும், மலர்ச் சண்பகமும்(ம்), அளைந்து
திரிதரு வண்டு பண்செய்-திரு நாகேச்சுரத்து அரனே!

[8]
அங்கு இயல் யோகு தன்னை அழிப்பான் சென்று அணைந்து மிகப்
பொங்கிய பூங்கணை வேள் பொடி ஆக விழித்தல் என்னே?-
பங்கய மா மலர்மேல் மது உண்டு, பண் வண்டு அறைய,
செங்கயல் நின்று உகளும்-திரு நாகேச்சுரத்து அரனே!

[9]
குண்டரை, கூறை இன்றித் திரியும் சமண்சாக்கியப்பேய்-
மிண்டரை, கண்ட தன்மை விரவு ஆகியது என்னைகொலோ?
தொண்டு இரைத்து(வ்), வணங்கி, தொழில் பூண்டு, அடியார் பரவும்
தெண்திரைத் தண்வயல் சூழ் திரு நாகேச்சுரத்து அரனே!

[10]
கொங்கு அணை வண்டு அரற்ற, குயிலும் மயிலும் பயிலும்
தெங்கு அணை பூம்பொழில் சூழ் திரு நாகேச்சுரத்து அரனை,
வங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன், சொன்ன
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்தம் வினை பற்று அறுமே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list