சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.065   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அடையார் தம் புரங்கள் மூன்றும்
பண் - தக்கேசி   (திருப்பல்லவனீச்சரம் பல்லவனேசர் சவுந்தராம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=FkNYeDBbc04
3.112   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பரசு பாணியர், பாடல் வீணையர்,
பண் - பழம்பஞ்சுரம்   (திருப்பல்லவனீச்சரம் )
Audio: https://www.youtube.com/watch?v=F5-uumlzpkA

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.065   அடையார் தம் புரங்கள் மூன்றும்  
பண் - தக்கேசி   (திருத்தலம் திருப்பல்லவனீச்சரம் ; (திருத்தலம் அருள்தரு சவுந்தராம்பிகையம்மை உடனுறை அருள்மிகு பல்லவனேசர் திருவடிகள் போற்றி )
அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த,
விடை ஆர் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேய இடம்
கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ,
படை ஆர் புரிசைப் பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே.

[1]
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான், இமையோர்
கண் ஆய் உலகம் காக்க நின்ற கண்ணுதல், நண்ணும் இடம்
மண் ஆர் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்தி,
பண் ஆர் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

[2]
மங்கை அங்கு ஓர் பாகம் ஆக, வாள் நிலவு ஆர் சடைமேல்
கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம்
பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல்
பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

[3]
தார் ஆர் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார்பு-அகலம்
நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம்
போர் ஆர் வேல்கண் மாதர் மைந்தர் புக்கு இசைபாடலினால்,
பார் ஆர்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

[4]
மை சேர் கண்டர், அண்டவாணர், வானவரும் துதிப்ப,
மெய் சேர் பொடியர், அடியார் ஏத்த மேவி இருந்த இடம்
கை சேர் வளையார், விழைவினோடு காதன்மையால், கழலே,
பை சேர் அரவு ஆர் அல்குலார், சேர் பல்லவனீச்சுரமே.

[5]
குழலின் ஓசை, வீணை, மொந்தை கொட்ட, முழவு அதிர,
கழலின் ஓசை ஆர்க்க, ஆடும் கடவுள் இருந்த இடம்
சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண்திரை மொண்டு எறிய,
பழி இலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

[6]
வெந்தல் ஆய வேந்தன் வேள்வி வேர் அறச் சாடி, விண்ணோர்
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம்
மந்தல் ஆய மல்லிகையும், புன்னை, வளர் குரவின்
பந்தல் ஆரும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

[7]
தேர் அரக்கன் மால்வரையைத் தெற்றி எடுக்க, அவன்
தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர்
கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர,
பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

[8]
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன், நெடுமால்,
தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம்
வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப,
பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

[9]
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார்,
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார், கண்டு அறியாத இடம்
தண்டு, உடுக்கை, தாளம், தக்கை, சார நடம் பயில்வார்
பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே.

[10]
பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சுரத்து எம்
அத்தன்தன்னை, அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல்
சித்தம் சேரச் செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய்,
ஒத்து அமைந்த உம்பர்வானில் உயர்வினொடு ஓங்குவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.112   பரசு பாணியர், பாடல் வீணையர்,  
பண் - பழம்பஞ்சுரம்   (திருத்தலம் திருப்பல்லவனீச்சரம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பரசு பாணியர், பாடல் வீணையர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
அரசு பேணி நின்றார், இவர் தன்மை அறிவார் ஆர்?

[1]
பட்டம் நெற்றியர், நட்டம் ஆடுவர், பட்டினத்து உறை
பல்லவனீச்சுரத்து
இட்டம் ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

[2]
பவளமேனியர், திகழும் நீற்றினர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
அழகராய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

[3]
பண்ணில் யாழினர், பயிலும் மொந்தையர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
அண்ணலாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

[4]
பல் இல் ஓட்டினர், பலி கொண்டு உண்பவர், பட்டினத்து
பல்லவனீச்சுரத்து
எல்லி ஆட்டு உகந்தார், இவர் தன்மை அறிவார் ஆர்?

[5]
பச்சை மேனியர், பிச்சை கொள்பவர், பட்டினத்து உறை
பல்லவனீச்சுரத்து
இச்சை ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

[6]
பைங்கண் ஏற்றினர், திங்கள் சூடுவர், பட்டினத்து உறை
பல்லவனீச்சுரத்து
எங்கும் ஆய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

[7]
பாதம் கைதொழ வேதம் ஓதுவர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
ஆதியாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

[8]
படி கொள் மேனியர், கடி கொள் கொன்றையர், பட்டினத்து
உறை பல்லவனீச்சுரத்து
அடிகளாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

[9]
பறை கொள் பாணியர், பிறை கொள் சென்னியர், பட்டினத்து
உறை பல்லவனீச்சுரத்து
இறைவராய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?

[10]
வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர்
பல்லவனீச்சுரத்தானை
ஞானசம்பந்தன் நல்-தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list