சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.067   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கண் மேல் கண்ணும், சடைமேல்
பண் - தக்கேசி   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=OL2vd0T4TY8
4.012   திருநாவுக்கரசர்   தேவாரம்   சொல் மாலை பயில்கின்ற குயில்
பண் - பழந்தக்கராகம்   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=TOqsM3Xa3Fs
4.036   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆடினார் ஒருவர் போலும்; அலர்
பண் - திருநேரிசை   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=vEqnNJ_uXuY
4.087   திருநாவுக்கரசர்   தேவாரம்   மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர்
பண் - திருவிருத்தம்   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=xEIhCMkZD9U
5.035   திருநாவுக்கரசர்   தேவாரம்   அருவனாய், அத்திஈர் உரி போர்த்து
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Im4-8Fy9JFc
6.036   திருநாவுக்கரசர்   தேவாரம்   அலை ஆர் கடல் நஞ்சம்
பண் - திருத்தாண்டகம்   (திருப்பழனம் ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=bZeeVHZ0J_I

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.067   கண் மேல் கண்ணும், சடைமேல்  
பண் - தக்கேசி   (திருத்தலம் திருப்பழனம் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி )
கண் மேல் கண்ணும், சடைமேல் பிறையும், உடையார்; காலனைப்
புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓடப் பொன்றப் புறம்தாளால்
எண்ணாது உதைத்த எந்தை பெருமான்-இமவான் மகளோடும்,
பண் ஆர் களி வண்டு அறை பூஞ்சோலைப் பழன நகராரே.

[1]
பிறையும் புனலும் சடைமேல் உடையார்; பறை போல் விழி கண் பேய்
உறையும் மயானம் இடமா உடையார்; உலகர் தலைமகன்-
அறையும் மலர்கொண்டு அடியார் பரவி, ஆடல் பாடல் செய்
பறையும் சங்கும் பலியும் ஓவாப் பழன நகராரே.

[2]
உரம் மன் உயர்கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில்,
இரவில் பூதம் பாட ஆடி, எழில் ஆர் அலர்மேலைப்
பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான்; எமை ஆளும்
பரமன்; பகவன்; பரமேச்சுவரன்-பழன நகராரே.

[3]
குல வெஞ்சிலையால் மதில் மூன்று எரித்த கொல் ஏறு உடை அண்ணல்
கலவமயிலும் குயிலும் பயிலும் கடல் போல் காவேரி
நல மஞ்சு உடைய நறு மாங்கனிகள் குதிகொண்டு எதிர் உந்தி,
பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே.

[4]
வீளைக் குரலும், விளி சங்கு ஒலியும், விழவின் ஒலி ஓவா,
மூளைத்தலை கொண்டு, அடியார் ஏத்த, பொடியா மதிள் எய்தார்
ஈளைப் படுகில் இலை ஆர் தெங்கின், குலை ஆர் வாழையின்,
பாளைக்கமுகின், பழம் வீழ் சோலைப் பழன நகராரே.

[5]
பொய்யா மொழியார் முறையால் ஏத்திப் புகழ்வார்; திருமேனி
செய்யார்; கரிய மிடற்றார்; வெண் நூல் சேர்ந்த அகலத்தார்;
கை ஆடலினார்; புனலால் மல்கு சடைமேல் பிறையோடும்
பை ஆடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே.

[6]
மஞ்சு ஓங்கு உயரம் உடையான் மலையை மாறு ஆய் எடுத்தான் தோள்
அஞ்சோடு அஞ்சும் ஆறும் நான்கும் அடர ஊன்றினார்;
நஞ்சார் சுடலைப் பொடி-நீறு அணிந்த நம்பான்-வம்பு ஆரும்
பைந்தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே.

[7]
கடி ஆர் கொன்றைச் சுரும்பின் மாலை கமழ் புன் சடையார்; விண்
முடியாப் படி மூ அடியால் உலகம் முழுதும் தாவிய
நெடியான், நீள் தாமரைமேல் அயனும், நேடிக் காணாத
படியார்; பொடி ஆடு அகலம் உடையார் பழன நகராரே.

[8]
கண் தான் கழுவா முன்னே ஓடிக் கலவைக் கஞ்சியை
உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார், பாராட்ட,
வண் தாமரை இன்மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு,
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே.

[9]
வேய் முத்து ஓங்கி, விரை முன் பரக்கும் வேணுபுரம் தன்னுள்
நா உய்த்தனைய திறலால் மிக்க ஞானசம்பந்தன்,
பேசற்கு இனிய பாடல் பயிலும் பெருமான் பழனத்தை
வாயில் பொலிந்த மாலை பத்தும் வல்லார் நல்லாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.012   சொல் மாலை பயில்கின்ற குயில்  
பண் - பழந்தக்கராகம்   (திருத்தலம் திருப்பழனம் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி )
விடம் கண்டு இறந்த மூத்த திருநாவுக் கரசு, அப்பரின் இறை பதிகத்தால், உறங்கி எழுவாரைப்போல எழுந்து பணிந்தார். அப்பூதியாரின் வேண்டுகோளின்படி மீண்டும் அவர்தம் வீட்டிற்கு எழுந்தருளி எல்லோரையும் ஒக்க இருக்கச்செய்து அமுது செய்தருளினார். பின் சில நாட்கள் திங்களூரில் தங்கியிருந்து அப்பூதி அடிகளுடன் திருப்பழனம் சென்று பணிந்து பாடினார். அங்குப் பாடிய திருப்பதிகத்தில் அப்பூதி அடிகளின் பெருமையையும் அமைத்துப் பாடினார்.
சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள்! சொல்லீரே-
பல் மாலை வரிவண்டு பண் மிழற்றும் பழனத்தான்,
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடிச் சென்னிப்
பொன் மாலை மார்பன்(ன்), என புது நலம் உண்டு இகழ்வானோ?

[1]
கண்டகங்காள்! முண்டகங்காள்! கைதைகாள்! நெய்தல்காள
பண்டரங்க வேடத்தான், பாட்டு ஓவாப் பழனத்தான்,
வண்டு உலா(அ)ம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர்வண்ணம்
கொண்ட(ந்)நாள் தான் அறிவான், குறிக் கொள்ளா தொழிவானோ?

[2]
மனைக் காஞ்சி இளங் குருகே! மறந்தாயோ?-மத முகத்த
பனைக்கை மா உரி போர்த்தான், பலர் பாடும் பழனத்தான்,
நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ, நிகழ் வண்டே?-
சுனைக்கு வளைமலர்க்கண்ணாள் சொல்-தூது ஆய்ச் சோர்வார்

[3]
புதியை ஆய் இனியை ஆம் பூந் தென்றல்! புறங்காடு
பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான்,
மதியா தார் வேள்வி தனை மதித்திட்ட மதி கங்கை
விதியாளன், என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ?

[4]
மண் பொருந்தி வாழ்பவர்க்கும், மா தீர்த்த வேதியர்க்கும்,
விண் பொருந்து தேவர்க்கும், வீடு பேறு ஆய் நின்றானை;
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை, என்
கண் பொருந்தும் போழ் தத்தும், கைவிட நான் கடவேனோ?

[5]
பொங்கு ஓதமால் கடலில் புறம் புறம் போய் இரை தேரும்
செங்கால் வெண் மட நாராய்! செயல் படுவது அறியேன், நான்!
அம் கோல வளை கவர்ந்தான், அணி பொழில் சூழ் பழனத்தான்,
தம் கோல நறுங்கொன்றைத்தார் அருளா தொழி வானோ?

[6]
துணை ஆர முயங்கிப் போய்த் துறை சேரும் மடநாராய்!
பணை ஆரவாரத்தான், பாட்டு ஓவாப் பழனத்தான்,
கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடி செய்த
இணை ஆர மார்பன்(ன்) என் எழில் நலம் உண்டு இகழ்வானோ?

[7]
கூவைவாய் மணி வரன்றிக் கொழித்து ஓடும் காவிரிப்பூம்-
பாவை வாய் முத்து இலங்கப் பாய்ந்து ஆடும் பழனத்தான்,
கோவைவாய் மலைமகள் கோன், கொல் ஏற்றின் கொடி ஆடைப்
பூவைகாள்! மழலைகாள்! போகாத பொழுது உளதே?

[8]
புள்ளிமான் பொறி அரவம், புள் உயர்த்தான் மணி நாகப்-
பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான்
உள்ரூவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர், உலகு எல்லாம்;
கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ?

[9]
வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும்,
பஞ்சிக்கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான்
அஞ்சிப் போய்க் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி
குஞ்சிப் பூ ஆய் நின்ற சேவடியாய்!-கோடு இயையே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.036   ஆடினார் ஒருவர் போலும்; அலர்  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருப்பழனம் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி )
ஆடினார் ஒருவர் போலும்; அலர் கமழ் குழலினாளைக்
கூடினார் ஒருவர் போலும்; குளிர்புனல், வளைந்த திங்கள்
சூடினார் ஒருவர் போலும்; தூய நல்மறைகள் நான்கும்
பாடினார் ஒருவர் போலும்;-பழனத்து எம் பரமனாரே.

[1]
போவது ஓர் நெறியும் ஆனார்; புரிசடைப் புனிதனார்;-நான்
வேவது ஓர் வினையில் பட்டு வெம்மை தான் விடவும் கில்லேன்;
கூவல்தான் அவர்கள் கேளார்-குணம் இலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்-பழனத்து எம் பரமனாரே.

[2]
கண்டராய், முண்டர் ஆகி, கையில் ஓர் கபாலம் ஏந்தி,
தொண்டர்கள் பாடி ஆடித் தொழு கழல் பரமனார்தாம்
விண்டவர் புரங்கள் எய்த வேதியர்; வேத நாவர்
பண்டை என் வினைகள் தீர்ப்பார்-பழனத்து எம் பரமனாரே

[3]
நீர் அவன்; தீயினோடு நிழல் அவன்; எழிலது ஆய
பார் அவன்; விண்ணின் மிக்க பரம் அவன்; பரமயோகி;
ஆரவன்; அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகிப்
பார் அகத்து அமுதம் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.

[4]
ஊழியார்; ஊழிதோறும் உலகினுக்கு ஒருவர் ஆகிப்
பாழியார்; பாவம் தீர்க்கும் பராபரர்; பரம் அது ஆய,
ஆழியான் அன்னத்தானும் அன்று அவர்க்கு அளப்ப(அ) ரீய,
பாழியார்-பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே.

[5]
ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச்செய்து
நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகி நின்று,
காலின் கீழ்க் காலன் தன்னைக் கடுகத் தான் பாய்ந்து, பின்னும்
பாலின் கீழ் நெய்யும் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.

[6]
ஆதித்தன், அங்கி, சோமன், அயனொடு, மால், புத(ன்)னும்,
போதித்து நின்று உல(ஃ)கில் போற்று இசைத்தார்; இவர்கள்
சோதித்தார்; ஏழு உல(ஃ)கும் சோதியுள்சோதி ஆகிப்
பாதிப் பெண் உருவம் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.

[7]
கால்-தனால் காலற் காய்ந்து கார் உரி போர்த்த ஈசர்
தோற்றனார், கடலுள் நஞ்சை; தோடு உடைக் காதர்; சோதி
ஏற்றினார் இளவெண்திங்கள், இரும் பொழில் சூழ்ந்த காயம்;
பாற்றினார், வினைகள் எல்லாம்;-பழனத்து எம் பரமனாரே.

[8]
கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தே
எண்ணியும் துதித்தும் ஏத்த, எரி உரு ஆகி நின்று,
வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப்
பண் உலாம் பாடல் கேட்டார்-பழனத்து எம் பரமனாரே.

[9]
குடை உடை அரக்கன் சென்று, குளிர் கயிலாய வெற்பின்
இடை மட வரலை அஞ்ச, எடுத்தலும், இறைவன் நோக்கி
விடை உடை விகிர்தன் தானும் விரலினால் ஊன்றி மீண்டும்
படை கொடை அடிகள்போலும்- பழனத்து எம் பரமனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.087   மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர்  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருப்பழனம் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி )
மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர் துக்கம் எல்லாம்;
ஆவித்து நின்று கழிந்தன, அல்லல்; அவை அறுப்பான்
பாவித்த பாவனை நீ அறிவாய்;-பழனத்து அரசே!-
கூவித்துக் கொள்ளும் தனை அடியேனைக் குறிக்கொள்வதே!

[1]
சுற்றி நின்றார்; புறம் காவல் அமரர்; கடைத் தலையில்
மற்று நின்றார்; திருமாலொடு நான்முகன் வந்து அடிக்கீழ்ப்
பற்றி நின்றார், -பழனத்து அரசே!-உன் பணி அறிவான்
உற்று நின்றார்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

[2]
ஆடி நின்றாய், அண்டம் ஏழும் கடந்து போய்; மேல் அவையும்
கூடி நின்றாய்; குவிமென் முலையாளையும் கொண்டு உடனே-
பாடி நின்றாய்;-பழனத்து அரசே!-அங்கு ஓர் பால் மதியம்
சூடி நின்றாய்; அடியேனை அஞ்சாமைக் குறிக்கொள்வதே!

[3]
எரித்து விட்டாய், அம்பினால் புரம் மூன்றும் முன்னே படவும்;
உரித்து விட்டாய், உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை;
பரித்து விட்டாய்,-பழனத்து அரசே!-கங்கை வார் சடை மேல்-
தரித்து விட்டாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

[4]
முன்னியும் முன்னை முளைத்தன மூஎயிலும்(ம்) உடனே-
மன்னியும், அங்கும் இருந்தனை; மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசு அறிவாய்;-பழனத்து அரசே!
உன்னியும் உன் அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

[5]
ஏய்ந்து அறுத்தாய், இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை;
காய்ந்து அறுத்தாய், கண்ணினால் அன்று காமனை; காலனையும்
பாய்ந்து அறுத்தாய்;-பழனத்து அரசே!-என் பழவினை நோய்
ஆய்ந்து அறுத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

[6]
மற்று வைத்தாய், அங்கு ஓர் மால் ஒரு பாகம்; மகிழ்ந்து உடனே-
உற்று வைத்தாய், உமையாளொடும் கூடும் பரிசு எனவே;
பற்றி வைத்தாய்,-பழனத்து அரசே!-அங்கு ஓர் பாம்பு ஒரு கை
சுற்றி வைத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

[7]
ஊரின் நின்றாய், ஒன்றி நின்று; விண்டாரையும் ஒள் அழலால்
போரில் நின்றாய்; பொறையால் உயிர்-ஆவி சுமந்து கொண்டு
பாரில் நின்றாய்;-பழனத்து அரசே!-பணி செய்பவர்கட்கு
ஆர நின்றாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

[8]
போகம் வைத்தாய், புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை;
ஆகம் வைத்தாய், மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே
பாகம் வைத்தாய்;-பழனத்து அரசே!-உன் பணி அருளால்
ஆகம் வைத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

[9]
அடுத்து இருந்தாய், அரக்கன் முடி வாயொடு தோள் நெரியக்
கெடுத்து இருந்தாய்; கிளர்ந்தார் வலியைக் கிளையோடு உடனே-
படுத்திருந்தாய்;-பழனத்து அரசே!-புலியின்(ன்) உரி-தோல்
உடுத்திருந்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.035   அருவனாய், அத்திஈர் உரி போர்த்து  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருப்பழனம் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி )
அருவனாய், அத்திஈர் உரி போர்த்து உமை
உருவனாய், ஒற்றியூர் பதி ஆகிலும்,
பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான்,
திருவினால்-திரு வேண்டும், இத் தேவர்க்கே.

[1]
வையம் வந்து வணங்கி வலம் கொளும்
ஐயனை அறியார், சிலர் ஆதர்கள்;
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பழனன்பால்
பொய்யர் காலங்கள் போக்கிடுவார்களே.

[2]
வண்ணம் ஆக முறுக்கிய வாசிகை
திண்ணம் ஆகத் திருச்சடைச் சேர்த்தியே
பண்ணும் ஆகவே பாடும், பழனத்தான்;
எண்ணும், நீர் அவன் ஆயிரம் நாமமே!

[3]
மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட,
வாக்கு அப் பாம்பினைக் கண்ட துணிமதி
பாக்க, பாம்பினைப் பற்றும் பழனத்தான்,
தார்க் கொள் மாலை சடைக் கரந்திட்டதே.

[4]
நீலம் உண்ட மிடற்றினன்; நேர்ந்தது ஓர்
கோலம் உண்ட குணத்தான்; நிறைந்தது ஓர்-
பாலும் உண்டு, பழனன்பால்; என்னிடை
மாலும் உண்டு, இறை என் தன் மனத்துளே.

[5]
மந்தம் ஆக வளர்பிறை சூடி ஓர்
சந்தம் ஆகத் திருச்சடை சாத்துவான்,
பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான்,
எந்தை தாய் தந்தை எம்பெருமானுமே.

[6]
மார்க்கம் ஒன்று அறியார், மதி இ(ல்)லிகள்;
பூக் கரத்தின் புரிகிலர், மூடர்கள்;-
பார்க்க நின்று பரவும் பழனத்தான்
தாள்கண் நின்று தலை வணங்கார்களே.

[7]
ஏறினார் இமையோர்கள் பணி கண்டு
தேறுவார் அலர், தீவினையாளர்கள்;
பாறினார் பணி வேண்டும் பழனத்தான்
கூறினான், உமையாளொடும் கூடவே.

[8]
சுற்றுவார்; தொழுவார்; சுடர்வண்ணன், மேல்-
தெற்றினார் திரியும் புரம்மூன்று எய்தான்,
பற்றினார் வினை தீர்க்கும் பழனனை,
எற்றினான் மறக்கேன், எம்பிரானையே?

[9]
பொங்கு மாகடல் சூழ் இலங்கைக்கு இறை
அங்கம் ஆன இறுத்து அருள் செய்தவன்,
பங்கன், என்றும் பழனன், உமையொடும்
தங்கன், தாள் அடியேன் உடை உச்சியே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.036   அலை ஆர் கடல் நஞ்சம்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருப்பழனம் ; (திருத்தலம் அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி )
அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார் தாமே; அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதி தாமே;
கொலை ஆய கூற்றம் உதைத்தார் தாமே; கொல் வேங்கைத் தோல் ஒன்று அசைத்தார் தாமே;
சிலையால் புரம் மூன்றும் எரித்தார் தாமே; தீ நோய் களைந்து என்னை ஆண்டார் தாமே;
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

[1]
வெள்ளம் ஒரு சடைமேல் ஏற்றார் தாமே; மேலார்கள் மேலார்கள் மேலார் தாமே;
கள்ளம் கடிந்து என்னை ஆண்டார் தாமே; கருத்து உடைய பூதப்படையார் தாமே;
உள்ளத்து உவகை தருவார் தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார் தாமே
பள்ளப் பரவை நஞ்சு உண்டார் தாமே பழன நகர் எம்பிரானார் தாமே.

[2]
இரவும் பகலும் ஆய் நின்றார் தாமே; எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார் தாமே;
அரவம் அரையில் அசைத்தார் தாமே; அனல் ஆடி அங்கை மறித்தார் தாமே;
குரவம் கமழும் குற்றாலர் தாமே; கோலங்கள் மேல் மேல் உகப்பார் தாமே;
பரவும் அடியார்க்குப் பாங்கர் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

[3]
மாறு இல் மதில் மூன்றும் எய்தார் தாமே; வரி அரவம் கச்சு ஆக ஆர்த்தார் தாமே;
நீறு சேர் திருமேனி நிமலர் தாமே; நெற்றி நெருப்புக்   கண் வைத்தார் தாமே;
ஏறு கொடுஞ் சூலக் கையார் தாமே; என்பு ஆபரணம் அணிந்தார் தாமே;
பாறு உண் தலையில் பலியார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

[4]
சீரால் வணங்கப்படுவார் தாமே; திசைக்கு எல்லாம் தேவு ஆகி நின்றார் தாமே;
ஆரா அமுதம் ஆனார் தாமே; அளவு இல் பெருமை உடையார் தாமே;
நீர் ஆர் நியமம் உடையார் தாமே; நீள்வரை வில் ஆக வளைத்தார் தாமே;
பாரார் பரவப்படுவார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

[5]
காலன் உயிர் வௌவ வல்லார் தாமே; கடிது ஓடும் வெள்ளை விடையார் தாமே;
கோலம் பலவும் உகப்பார் தாமே; கோள் நாகம் நாண் ஆகப் பூண்டார் தாமே;
நீலம் பொலிந்த மிடற்றார் தாமே; நீள்வரையின் உச்சி இருப்பார் தாமே;
பால விருத்தரும் ஆனார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

[6]
ஏய்ந்த உமை நங்கை பங்கர் தாமே; ஏழ் ஊழிக்கு   அப் புறம் ஆய் நின்றார் தாமே;
ஆய்ந்து மலர் தூவ நின்றார் தாமே; அளவு இல் பெருமை உடையார் தாமே;
தேய்ந்த பிறை சடைமேல் வைத்தார் தாமே; தீ வாய் அரவு அதனை ஆர்த்தார் தாமே;
பாய்ந்த படர் கங்கை ஏற்றார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

[7]
ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே; உள் ஊறும் அன்பர் மனத்தார் தாமே;
பேராது என் சிந்தை இருந்தார் தாமே; பிறர்க்கு என்றும் காட்சிக்கு அரியார் தாமே;
ஊர் ஆரும் மூஉலகத்து உள்ளார் தாமே; உலகை நடுங்காமல் காப்பார் தாமே;
பார் ஆர் முழவத்து இடையார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

[8]
நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார் தாமே; நேரிழையை ஒரு பாகம் வைத்தார் தாமே;
பூண்டு அரவைப் புலித்தோல் மேல் ஆர்த்தார் தாமே;   பொன் நிறத்த வெள்ளச்சடையார் தாமே;
ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார்
தாமே; அங்கு அங்கே சிவம் ஆகி நின்றார் தாமே;
பாண்டவரில் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

[9]
விடை ஏறி, வேண்டு உலகத்து இருப்பார் தாமே; விரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே;
புடை சூழ் தேவர் குழாத்தார் தாமே; பூந்துருத்தி, நெய்த்தானம், மேயார் தாமே;
அடைவே புனல் சூழ் ஐயாற்றார் தாமே; அரக்கனையும் ஆற்றல் அழித்தார் தாமே;
படையாப் பல்பூதம் உடையார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list