சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.074   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நறவம் நிறை வண்டு அறை
பண் - தக்கேசி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=bRUUHP2wuvg
1.097   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று
பண் - குறிஞ்சி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=U4x9pIXwrqs
3.084   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பெண் இயல் உருவினர், பெருகிய
பண் - சாதாரி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=IBQf-wnI-Qo

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.074   நறவம் நிறை வண்டு அறை  
பண் - தக்கேசி   (திருத்தலம் திருப்புறவம் ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
நறவம் நிறை வண்டு அறை தார்க்கொன்றை நயந்து, நயனத்தால்
சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான்,
புறவம் உறை வண்பதியா, மதியார் புரம் மூன்று எரி செய்த
இறைவன், அறவன், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[1]
உரவன், புலியின் உரி-தோல் ஆடை உடைமேல் பட நாகம்
விரவி விரி பூங்கச்சா அசைத்த விகிர்தன், உகிர்தன்னால்
பொரு வெங்களிறு பிளிற உரித்து, புறவம் பதி ஆக,
இரவும் பகலும் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[2]
பந்தம் உடைய பூதம் பாட, பாதம் சிலம்பு ஆர்க்க,
கந்தம் மல்கு குழலி காண, கரிகாட்டு எரி ஆடி,
அம் தண்கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி,
எம் தம்பெருமான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[3]
நினைவார் நினைய இனியான், பனி ஆர் மலர் தூய், நித்தலும்;
கனை ஆர் விடை ஒன்று உடையான்; கங்கை, திங்கள், கமழ்கொன்றை,
புனை வார்சடையின் முடியான்; கடல் சூழ் புறவம் பதி ஆக,
எனை ஆள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[4]
செங்கண் அரவும், நகுவெண்தலையும், முகிழ் வெண் திங்களும்,
தங்கு சடையன்; விடையன்; உடையன், சரி கோவண ஆடை;
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக,
எங்கும் பரவி இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[5]
பின்னுசடைகள் தாழக் கேழல் எயிறு பிறழப் போய்,
அன்ன நடையார் மனைகள் தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து,
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக,
என்னை உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[6]
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு, ஒரு தோழம்தேவர்
விண்ணில் பொலிய, அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல்,
பண்ணில் சிறைவண்டு அறை பூஞ்சோலைப் புறவம் பதி ஆக,
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[7]
விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன்
திண்தோள் உடலும் முடியும் நெரியச் சிறிதே ஊன்றிய
புண்தான் ஒழிய அருள்செய் பெருமான், புறவம் பதி ஆக,
எண்தோள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[8]
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடிக் காண்கில்லாப்
படி ஆம் மேனி உடையான், பவளவரை போல்-திருமார்பில்
பொடி ஆர் கோலம் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக,
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[9]
ஆலும் மயிலின் பீலி அமணர், அறிவு இல் சிறுதேரர்,
கோலும் மொழிகள் ஒழிய, குழுவும் தழலும் எழில் வானும்
போலும் வடிவும் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக,
ஏலும் வகையால் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[10]
பொன் ஆர் மாடம் நீடும் செல்வப் புறவம் பதி ஆக
மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை,
தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ்மாலை
பல்-நாள் பாடி ஆட, பிரியார், பரலோகம்தானே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.097   எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருப்புறவம் ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்த
மை ஆர் கண்டன், மாது உமை வைகும் திருமேனிச்
செய்யான், வெண்நீறு அணிவான், திகழ் பொன் பதிபோலும்
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே.

[1]
மாது ஒருபாலும் மால் ஒருபாலும் மகிழ்கின்ற
நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர்போலும்
மாதவி மேய வண்டு இசை பாட, மயில் ஆட,
போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே.

[2]
வற்றா நதியும் மதியும் பொதியும் சடைமேலே
புற்று ஆடு அரவின் படம் ஆடவும், இப் புவனிக்கு ஓர்
பற்று ஆய், இடுமின், பலி! என்று அடைவார் பதிபோலும்
பொன்தாமரையின் பொய்கை நிலாவும் புறவமே.

[3]
துன்னார்புரமும் பிரமன் சிரமும் துணிசெய்து,
மின் ஆர் சடைமேல் அரவும் மதியும் விளையாட,
பல்-நாள், இடுமின், பலி! என்று அடைவார் பதிபோலும்
பொன் ஆர் புரிநூல் அந்தணர் வாழும் புறவமே.

[4]
தேவா! அரனே! சரண்! என்று இமையோர் திசைதோறும்,
காவாய்! என்று வந்து அடைய, கார்விடம் உண்டு,
பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதிபோலும்
பூ ஆர் கோலச் சோலை சுலாவும் புறவமே.

[5]
கற்று அறிவு எய்தி, காமன் முன் ஆகும் உகவு எல்லாம்
அற்று, அரனே! நின் அடி சரண்! என்னும் அடியோர்க்குப்
பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி என்பர்
பொந்திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவமே.

[6]
எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன,
கொண்டு எழு கோல முகில் போல், பெரிய கரிதன்னைப்
பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர்
புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவமே.

[7]
பரக்கும் தொல் சீர்த் தேவர்கள் சேனைப்பௌவத்தைத்
துரக்கும் செந்தீப் போல் அமர் செய்யும் தொழில் மேவும்
அரக்கன் திண்தோள் அழிவித்தான், அக் காலத்தில்;
புரக்கும் வேந்தன்; சேர்தரு மூதூ புறவமே.

[8]
மீத் திகழ் அண்டம் தந்தயனோடு மிகு மாலும்,
மூர்த்தியை நாடிக் காண ஒணாது, முயல் விட்டு, ஆங்கு
ஏத்த, வெளிப்பாடு எய்தியவன் தன் இடம் என்பர்
பூத் திகழ் சோலைத் தென்றல் உலாவும் புறவமே.

[9]
வையகம், நீர், தீ, வாயுவும், விண்ணும், முதல் ஆனான்;
மெய் அல தேரர், உண்டு, இலை என்றே நின்றே தம்
கையினில் உண்போர், காண ஒணாதான்; நகர் என்பர்
பொய் அகம் இல்லாப் பூசுரர் வாழும் புறவமே.

[10]
பொன் இயல் மாடப் புரிசை நிலாவும் புறவத்து
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற
தன் இயல்பு இல்லாச் சண்பையர்கோன்-சீர்ச் சம்பந்தன்-
இன் இசைஈர்-ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.084   பெண் இயல் உருவினர், பெருகிய  
பண் - சாதாரி   (திருத்தலம் திருப்புறவம் ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )
பெண் இயல் உருவினர், பெருகிய புனல் விரவிய பிறைக்
கண்ணியர், கடு நடை விடையினர், கழல் தொழும் அடியவர்
நண்ணிய பிணி கெட அருள்புரிபவர், நணுகு உயர் பதி
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே.

[1]
கொக்கு உடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்கு உடை வடமும் ஒர் அரவமும் அலர் அரைமிசையினில்
திக்கு உடை மருவிய உருவினர், திகழ் மலைமகளொடும்
புக்கு உடன் உறைவது புதுமலர் விரை கமழ் புறவமே.

[2]
கொங்கு இயல் சுரிகுழல், வரிவளை, இளமுலை, உமை ஒரு-
பங்கு இயல் திரு உரு உடையவர்; பரசுவொடு இரலை மெய்
தங்கிய கரதலம் உடையவர்; விடையவர்; உறைபதி
பொங்கிய பொருகடல் கொள, அதன்மிசை உயர் புறவமே.

[3]
மாதவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை,
மேதகு திருவடி இறை உற, உயிர் அது விலகினார்
சாதக உரு இயல் சுரன் இடை, உமை வெரு உற, வரு
போதக உரி-அதள் மருவினர்; உறை பதி-புறவமே.

[4]
காமனை அழல் கொள விழிசெய்து, கருதலர் கடிமதில்
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி
ஓமமொடு உயர்மறை, பிற இயவகைதனொடு, ஒளி, கெழு
பூமகள், அலரொடு, புனல்கொடு, வழிபடு புறவமே.

[5]
சொல்-நயம் உடையவர், சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையர், நடு உணர் பெருமையர், திருவடி பேணிட,
முன்னைய முதல்வினை அற அருளினர் உறை முது பதி
புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே.

[6]
வரி தரு புலி அதள் உடையினர், மழு எறி படையினர்
பிரிதரு நகுதலைவடம் முடிமிசை அணி பெருமையர்,
எரிதரும் உருவினர், இமையவர் தொழுவது ஒர் இயல்பினர்
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே.

[7]
வசி தரும் உருவொடு மலர்தலை உலகினை வலிசெயும்
நிசிசரன் உடலொடு நெடு முடி ஒருபதும் நெரிவு உற
ஒசிதர ஒருவிரல் நிறுவினர், ஒளி வளர் வெளிபொடி
பொசிதரு திரு உரு உடையவர், உறை பதி புறவமே.

[8]
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய்தவிசினில்
ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வு உடை ஒருவனும்,
வானகம் வரை அகம் மறிகடல் நிலன் எனும் எழுவகைப்
போனகம் மருவினன், அறிவு அரியவர் பதி புறவமே.

[9]
கோசரம் நுகர்பவர், கொழுகிய துவர் அன துகிலினர்
பாசுர வினை தரு பளகர்கள், பழி தரு மொழியினர்
நீசரை விடும், இனி! நினைவு உறும் நிமலர்தம் உறைபதி,
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி, புறவமே!

[10]
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை,
வேதியர் அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன்-
ஓதிய ஒருபதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும்
நீதியர் அவர், இரு நிலன் இடை நிகழ்தரு பிறவியே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list