சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.001   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   செந்நெல் அம் கழனிப் பழனத்து
பண் - இந்தளம்   (திருப்பூந்தராய் )
Audio: https://www.youtube.com/watch?v=RrNhxvmOdr4
3.002   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பந்து சேர் விரலாள், பவளத்துவர்
பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பூந்தராய் )
Audio: https://www.youtube.com/watch?v=MWS5wcspdqE
3.005   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய மிக்க
பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பூந்தராய் )
3.013   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மின் அன எயிறு உடை
பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பூந்தராய் )
Audio: https://www.youtube.com/watch?v=j9OJ3G30aTE

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.001   செந்நெல் அம் கழனிப் பழனத்து  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருப்பூந்தராய் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
செந்நெல் அம் கழனிப் பழனத்து அயலே செழும்
புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய்
துன்னி, நல் இமையோர் முடி தோய் கழலீர்! சொலீர்
பின்னுசெஞ்சடையில் பிறை பாம்புஉடன் வைத்ததே?

[1]
எற்று திண் திரை ஏறிய சங்கினொடு இப்பிகள்
பொன் திகழ் கமலப் பழனம் புகு பூந்தராய்ச்
சுற்றி, நல் இமையோர் தொழு பொன்கழலீர்! சொலீர்
பெற்றம் ஏறுதல் பெற்றிமையோ? பெருமானிரே!

[2]
சங்கு செம்பவளத்திரள் முத்துஅவைதாம்கொடு
பொங்கு தெண்திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய்,
துங்க மால்களிற்றின் உரி போர்த்து உகந்தீர்! சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்புஅதே?

[3]
சேம வல் மதில் பொன் அணி மாளிகை சேண் உயர்
பூ மணம் கமழும் பொழில் சூழ்தரு பூந்தராய்,
சோமனும் அரவும் தொடர் செஞ்சடையீர்! சொலீர்
காமன் வெண்பொடிஆகக் கடைக்கண் சிவந்ததே?

[4]
பள்ளம் மீன் இரை தேர்ந்து உழலும் பகுவாயன
புள்ளும் நாள்தொறும் சேர் பொழில் சூழ்தரு பூந்தராய்,
துள்ளும் மான்மறி ஏந்திய செங்கையினீர்! சொலீர்
வெள்ளநீர் ஒரு செஞ்சடை வைத்த வியப்புஅதே?

[5]
மாது இலங்கிய மங்கையர் ஆட, மருங்குஎலாம்
போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய்,
சோதி அம்சுடர்மேனி வெண்நீறு அணிவீர்! சொலீர்
காதில் அம் குழை சங்கவெண்தோடுஉடன் வைத்ததே?

[6]
வருக்கம் ஆர்தரு வான் கடுவனொடு மந்திகள்
தருக் கொள் சோலை தரும் கனி மாந்திய பூந்தராய்,
துரக்கும் மால்விடைமேல் வருவீர்! அடிகேள்! சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே?

[8]
வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம்
புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய்,
சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர்! சொலீர்
கரிய மால், அயன், நேடி உமைக் கண்டிலாமையே?

[9]
வண்டல் அம் கழனி மடை வாளைகள் பாய் புனல்
புண்டரீகம் மலர்ந்து மதுத் தரு பூந்தராய்,
தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல்கழலீர்! சொலீர்
குண்டர்சாக்கியர் கூறியது ஆம் குறிஇன்மையே?

[10]
மகர வார்கடல் வந்து அணவும் மணல் கானல்வாய்ப்
புகலி ஞானசம்பந்தன், எழில் மிகு பூந்தராய்ப்
பகவனாரைப் பரவு சொல்மாலைபத்தும் வல்லார்
அகல்வர், தீவினை, நல்வினையோடு உடன் ஆவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.002   பந்து சேர் விரலாள், பவளத்துவர்  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருத்தலம் திருப்பூந்தராய் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பந்து சேர் விரலாள், பவளத்துவர் வாயினாள், பனி மா மதி போல் முகத்து
அந்தம் இல் புகழாள், மலைமாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்வு இடம் வானவர் எத்திசையும் நிறைந்து, வலம்செய்து, மாமலர்
புந்தி செய்து இறைஞ்சிப் பொழி பூந்தராய் போற்றுதுமே.

[1]
காவி அம் கருங்கண்ணினாள், கனித்தொண்டைவாய்,கதிர் முத்த நல்வெண் நகை,
தூவி அம் பெடை அன்னம் நடை, சுரி மென்குழலாள்,
தேவியும் திருமேனி ஓர்பாகம் ஆய், ஒன்று இரண்டு ஒரு மூன்றொடு சேர் பதி,
பூவில் அந்தணன் ஒப்பவர், பூந்தராய் போற்றுதுமே.

[2]
பை அரா வரும் அல்குல், மெல் இயல்,பஞ்சின் நேர் அடி, வஞ்சி கொள் நுண் இடை,
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம்
செய் எலாம் கழுநீர் கமலம்மலர்த் தேறல் ஊறலின், சேறு உலராத, நல்
பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே.

[3]
முள்ளி நாள்முகை, மொட்டு இயல் கோங்கின் அரும்பு, தென் கொள் குரும்பை,
மூவாமருந்து உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை,
வெள்ளிமால்வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண்பொழில்
புள் இனம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே.

[4]
பண் இயன்று எழு மென்மொழியாள், பகர் கோதை, ஏர் திகழ் பைந்தளிர்மேனி, ஓர்
பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய்வளையார்
கண் இயன்று எழு காவி, செழுங் கருநீலம், மல்கிய காமரு வாவி, நல்
புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே.

[5]
வாள் நிலாமதி போல் நுதலாள்,மடமாழை ஒண்கணாள், வண் தரள(ந்) நகை,
பாண் நிலாவிய இன் இசை ஆர் மொழிப் பாவையொடும்,
சேண் நிலாத் திகழ் செஞ்சடை எம் அண்ணல் சேர்வது சிகரப் பெருங்கோயில் சூழ்
போழ் நிலா நுழையும் பொழில் பூந்தராய் போற்றுதுமே.

[6]
கார் உலாவிய வார்குழலாள், கயல்கண்ணினாள்,புயல் கால் ஒளிமின் இடை,
வார் உலாவிய மென்முலையாள், மலைமாது உடன் ஆய்,
நீர் உலாவிய சென்னியன் மன்னி,நிகரும் நாமம் முந்நான்கும் நிகழ் பதி
போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே.

[7]
காசை சேர் குழலாள், கயல் ஏர் தடங்கண்ணி, காம்பு அன தோள், கதிர் மென்முலை,
தேசு சேர் மலைமாது அமரும் திருமார்பு அகலத்து
ஈசன் மேவும் இருங்கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணைச்சேவடி
பூசை செய்பவர் சேர் பொழில் பூந்தராய் போற்றுதுமே.

[8]
கொங்கு சேர் குழலாள், நிழல் வெண் நகை, கொவ்வை வாய், கொடி ஏர் இடையாள் உமை
பங்கு சேர் திருமார்பு உடையார்; படர் தீ உரு ஆய்,
மங்குல் வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர்; வான்மிசை வந்து எழு
பொங்கு நீரில் மிதந்த நன் பூந்தராய் போற்றுதுமே.

[9]
கலவமாமயில் ஆர் இயலாள்,கரும்பு அன்ன மென்மொழியாள், கதிர் வாள்நுதல்
குலவு பூங்குழலாள் உமை கூறனை, வேறு உரையால்
அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள்
ஆக்கினான்தனை, நண்ணலும் நல்கும் நன்
புலவர்தாம் புகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதுமே.

[10]
தேம்பல் நுண் இடையாள் செழுஞ் சேல் அன
கண்ணியோடு அண்ணல் சேர்வு இடம், தேன் அமர்
பூம்பொழில் திகழ், பொன் பதி பூந்தராய் போற்றுதும்! என்று
ஓம்பு தன்மையன்-முத்தமிழ் நால்மறை
ஞானசம்பந்தன்-ஒண் தமிழ்மாலை கொண்டு
ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா, வினையே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.005   தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய மிக்க  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருத்தலம் திருப்பூந்தராய் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய
மிக்க செம்மை விமலன், வியன் கழல்
சென்று சிந்தையில் வைக்க, மெய்க்கதி
நன்று அது ஆகிய நம்பன்தானே.

[1]
புள் இனம் புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளம் தாங்கு விகிர்தன் அடி தொழ,
ஞாலத்தில் உயர்வார், உள்கும் நன்நெறி
மூலம் ஆய முதலவன் தானே.

[2]
வேந்தராய் உலகு ஆள விருப்பு உறின்,
பூந்தராய் நகர் மேயவன் பொன் கழல்
நீதியால் நினைந்து ஏத்தி உள்கிட,
சாதியா, வினை ஆனதானே.

[3]
பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய்
ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிட,
சிந்தை நோய் அவை தீர நல்கிடும்
இந்து வார்சடை எம் இறையே.

[4]
பொலிந்த என்பு அணி மேனியன்-பூந்தராய்
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட,
நும்தம் மேல்வினை ஓட, வீடுசெய்
எந்தை ஆய எம் ஈசன்தானே.

[5]
பூதம் சூழப் பொலிந்தவன், பூந்தராய்
நாதன், சேவடி நாளும் நவின்றிட,
நல்கும், நாள்தொறும் இன்பம் நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே.

[6]
புற்றின் நாகம் அணிந்தவன், பூந்தராய்
பற்றி வாழும் பரமனைப் பாடிட,
பாவம் ஆயின தீரப் பணித்திடும்
சே அது ஏறிய செல்வன் தானே.

[7]
போதகத்து உரி போர்த்தவன், பூந்தராய்
காதலித்தான்-கழல் விரல் ஒன்றினால்,
அரக்கன் ஆற்றல் அழித்து, அவனுக்கு அருள்
பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே.

[8]
மத்தம் ஆன இருவர் மருவு ஒணா
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய்,
ஆள் அது ஆக, அடைந்து உய்ம்மின்! நும் வினை
மாளும் ஆறு அருள்செய்யும், தானே.

[9]
பொருத்தம் இல் சமண் சாக்கியர் பொய் கடிந்து,
இருத்தல் செய்த பிரான்-இமையோர் தொழ,
பூந்தராய் நகர் கோயில் கொண்டு, கை
ஏந்தும் மான்மறி எம் இறையே.

[10]
புந்தியால் மிக நல்லவர் பூந்தராய்
அந்தம் இல் எம் அடிகளை, ஞானசம்
பந்தன் மாலை கொண்டு ஏத்தி வாழும்! நும்
பந்தம் ஆர் வினை பாறிடுமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.013   மின் அன எயிறு உடை  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருத்தலம் திருப்பூந்தராய் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மின் அன எயிறு உடை விரவலோர்கள் தம்
துன்னிய புரம் உகச் சுளிந்த தொன்மையர்
புன்னை அம்பொழில் அணி பூந்தராய் நகர்
அன்ன அன்ன(ந்) நடை அரிவை பங்கரே.

[1]
மூதணி முப்புரத்து எண்ணிலோர்களை
வேது அணி சரத்தினால், வீட்டினார் அவர்
போது அணி பொழில் அமர் பூந்தராய் நகர்
தாது அணி குழல் உமை தலைவர்; காண்மினே!

[2]
தருக்கிய திரிபுரத்தவர்கள் தாம் உக,
பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர்
பொரு(க்) கடல் புடை தரு பூந்தராய் நகர்
கரு(க்)கிய குழல் உமை கணவர்; காண்மினே!

[3]
நாகமும் வரையுமே நாணும் வில்லுமா,
மாகம் ஆர் புரங்களை மறித்த மாண்பினர்
பூகம் ஆர் பொழில் அணி பூந்தராய் நகர்
பாகு அமர் பொழி உமை பங்கர்; காண்மினே!

[4]
வெள் எயிறு உடைய அவ் விரவலார்கள் ஊர்
ஒள் எரியூட்டிய ஒருவனார் ஒளிர்
புள் அணி புறவினில் பூந்தராய் நகர்
கள் அணி குழல் உமை கணவர்; காண்மினே!
[5]
துங்கு இயல் தானவர் தோற்றம் மா நகர்
அங்கியில் வீழ்தர ஆய்ந்த அம்பினர்
பொங்கிய கடல் அணி பூந்தராய் நகர்
அம் கயல் அன கணி அரிவை பங்கரே.

[6]
அண்டர்கள் உய்ந்திட, அவுணர் மாய்தரக்
கண்டவர்; கடல்விடம் உண்ட கண்டனார்
புண்டரீக(வ்) வயல் பூந்தராய் நகர்
வண்டு அமர் குழலிதன் மணாளர்; காண்மினே!

[7]
மா சின அரக்கனை வரையின் வாட்டிய,
காய் சின எயில்களைக் கறுத்த கண்டனார்
பூசுரர் பொலி தரு பூந்தராய் நகர்
காசை செய் குழல் உமை கணவர்; காண்மினே!

[8]
தாம் முகம் ஆக்கிய அசுரர்தம் பதி
வேம் முகம் ஆக்கிய விகிர்தர் கண்ணனும்,
பூமகன், அறிகிலா பூந்தராய் நகர்க்
கோமகன், எழில் பெறும் அரிவை கூறரே.

[9]
முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம்
அத் தகும் அழல் இடை வீட்டினார் அமண்
புத்தரும் அறிவு ஒணாப் பூந்தராய் நகர்
கொத்து அணி குழல் உமை கூறர்; காண்மினே!

[10]
புரம் எரி செய்தவர், பூந்தராய் நகர்ப்
பரம் மலி குழல் உமை நங்கை பங்கரைப்
பரவிய பந்தன் மெய்ப் பாடல் வல்லவர்
சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list