சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.014   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆரிடம் பாடலர், அடிகள், காடு
பண் - காந்தாரபஞ்சமம்   (திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=MvVyrK4wmd0
5.041   திருநாவுக்கரசர்   தேவாரம்   உடையர் கோவணம், ஒன்றும் குறைவு
பண் - திருக்குறுந்தொகை   (திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=JaXkSXJzOX8
7.036   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கார் உலாவிய நஞ்சை உண்டு
பண் - கொல்லி   (திருப்பைஞ்ஞீலி மெய்ஞ்ஞான நீலகண்டேசுவரர் விசாலாட்சியம்மை)

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.014   ஆரிடம் பாடலர், அடிகள், காடு  
பண் - காந்தாரபஞ்சமம்   (திருத்தலம் திருப்பைஞ்ஞீலி ; (திருத்தலம் அருள்தரு விசாலாட்சியம்மை உடனுறை அருள்மிகு நீலகண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
ஆரிடம் பாடலர், அடிகள், காடு அலால்
ஓர் இடம் குறைவு இலர், உடையர் கோவணம்,
நீர் இடம் சடை, விடை ஊர்தி, நித்தலும்
பாரிடம் பணி செயும், பயில் பைஞ்ஞீலியே.

[1]
மருவு இலார் திரிபுரம் எரிய, மால்வரை,
பரு விலாக் குனித்த பைஞ்ஞீலி மேவலான்,
உரு இலான், பெருமையை உளம் கொளாத அத்
திரு இலார் அவர்களைத் தெருட்டல் ஆகுமே?

[2]
அம் சுரும்பு அணி மலர் அமுதம் மாந்தி, தேன்
பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான்-
வெஞ்சுரம்தனில், உமை வெருவ, வந்தது ஓர்
குஞ்சரம் பட, உரி போர்த்த கொள்கையே!

[3]
கோடல்கள் புறவு அணி கொல்லை முல்லைமேல்
பாடல் வண்டு இசை முரல் பயில் பைஞ்ஞீலியார்
பேடு அலர், ஆண் அலர், பெண்ணும் அல்லது, ஓர்
ஆடலை உகந்த எம் அடிகள் அல்லரே!

[4]
விழி இலா நகுதலை, விளங்கு இளம்பிறை,
சுழியில் ஆர் வருபுனல் சூழல் தாங்கினான்-
பழி இலார் பரவு பைஞ்ஞீலி பாடலான்;
கிழி இலார் கேண்மையைக் கெடுக்கல் ஆகுமே?

[5]
விடை உடைக் கொடி வலன் ஏந்தி, வெண்மழுப்
படை உடைக் கடவுள் பைஞ்ஞீலி மேவலான்;
துடி இடைக் கலை அல்குலாள் ஓர்பாகமா,
சடை இடைப் புனல் வைத்த சதுரன் அல்லனே!

[6]
தூயவன், தூய வெண் நீறு மேனிமேல்
பாயவன்-பாய பைஞ்ஞீலி கோயிலா
மேயவன்; வேய் புரை தோளி பாகமா
ஏயவன், எனைச் செயும் தன்மை என்கொலோ?

[7]
தொத்தின தோள் முடி உடையவன் தலை-
பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான்,
முத்தினை முறுவல் செய்தாள் ஒர்பாகமாப்
பொத்தினன், திருந்து அடி பொருந்தி வாழ்மினே!

[8]
நீர் உடைப் போது உறைவானும் மாலும் ஆய்,
சீர் உடைக் கழல் அடி சென்னி காண்கிலர்;
பார் உடைக் கடவுள், பைஞ்ஞீலி மேவிய
தார் உடைக்கொன்றை அம் தலைவர், தன்மையே!

[9]
பீலியார் பெருமையும், பிடகர் நூன்மையும்,
சாலியாதவர்களைச் சாதியாதது, ஓர்
கோலியா அரு வரை கூட்டி எய்த பைஞ்-
ஞீலியான் கழல் அடி நினைந்து வாழ்மினே!

[10]
கண் புனல் விளை வயல் காழிக் கற்பகம்
நண்பு உணர் அருமறை ஞானசம்பந்தன்
பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார்
உண்பின உலகினில், ஓங்கி வாழ்வரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.041   உடையர் கோவணம், ஒன்றும் குறைவு  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருப்பைஞ்ஞீலி ; (திருத்தலம் அருள்தரு விசாலாட்சியம்மை உடனுறை அருள்மிகு நீலகண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
திருநாவுக்கரசர் அங்குநின்றும் நீங்கி, ஆனைக்கா, எறும்பியூர், கற்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பராய்த்துறை முதலிய தலங்களை வணங்கிக் கொண்டு திருப்பைஞ்ஞீலியை அடைந்தார். பைஞ்ஞீலிக்குச்செல்லும் வழியில் நடையால் வருந்தி இளைத்தும் மனந் தளராமல் சென்றுகொண்டிருந்தார். தொண்டர் வருத்தம் தரியாத பெருமான் அவர் வரும் வழியில் சோலைகுளம் உண்டாக்கி அந்தணர் வடிவோடு பொதிசோறு சுமந்து வீற்றிருந்தார். திருநாவுக்கரசர் அருகில் வந்தவுடன் வழிநடை வருத்தத்தால் மிக இளைத்தீர். என்பால் பொதிசோறு இருக்கிறது. உண்டு இளைப்பாறிச் செல்க என்று கூற, அவ்வண்ணமே பொதிசோறு உண்டு இளைப்பு நீங்கிய நாவுக்கரசரும் தாங்கள் யார்? எங்கு செல்கின்றீர்கள் என்று கேட்க, அந்தணரும் நாம் திருப்பைஞ்ஞீலி செல்கின்றோம் என்று கூற, இருவரும் திருப்பைஞ்ஞீலிக்குப் புறப்பட்டனர். அந்தணர் பின்னே அப்பரும் சென்றார். திருப்பைஞ்ஞீலியை அடைந்ததும் இறைவன் மறைந்தான். அப்பர் இறைவனின் எளிவந்த தன்மையை வியந்து பாடித் துதித்தார்.
உடையர் கோவணம், ஒன்றும் குறைவு இலர்-
படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்;
சடையின் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க்கு இல்லை, அவலமே.

[1]
மத்தம்மாமலர் சூடிய மைந்தனார்
சித்தராய்த் திரிவார் வினை தீர்ப்பரால்;
பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம்
அத்தனைத் தொழ வல்லவர் நல்லரே.

[2]
விழுது சூலத்தன்; வெண் மழுவாட்படை,
கழுது துஞ்சு இருள் காட்டு அகத்து ஆடலான்;
பழுது ஒன்று இன்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர்தம் வினை தூளியே.

[3]
ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே
நின்ற சூழல் அறிவு அரியான் இடம்
சென்று பார்!-இடம் ஏத்து பைஞ்ஞீலியுள்
என்றும் மேவி இருந்த அடிகளே.

[4]
வேழத்தின்(ன்) உரி போர்த்த விகிர்தனார்,
தாழச் செஞ்சடைமேல் பிறை வைத்தவர்
தாழைத்தண்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார்;
யாழின் பாட்டை உகந்த அடிகளே.

[5]
குண்டுபட்டு, குறி அறியாச் சமண்-
மிண்டரோடு படுத்து, உய்யப் போந்து, நான்,
கண்டம் கார், வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி, எம்
அண்டவாணன், அடி அடைந்து உய்ந்தெனே.

[6]
வரிப் பை ஆடு அரவு ஆட்டி மதகரி-
உரிப்பை மூடிய உத்தமனார் உறை
திருப் பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய்
இருப்பர், வானவரோடு இனிது ஆகவே.

[7]
கோடல் கோங்கம் புறவு அணி முல்லைமேல்
பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார்,
பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர்-
ஆடும் நாகம் அசைத்த-அடிகளே.

[8]
கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரினான்,
வார் உலாம் முலைமங்கை ஓர் பங்கினன்,
தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம்
ஆர்கிலா அமுதை, அடைந்து உய்ம்மினே!

[9]
தருக்கிச் சென்று தடவரை பற்றலும்
நெருக்கி ஊன்ற நினைந்து, சிவனையே
அரக்கன் பாட, அருளும் எம்மான் இடம்,
இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.036   கார் உலாவிய நஞ்சை உண்டு  
பண் - கொல்லி   (திருத்தலம் திருப்பைஞ்ஞீலி ; (திருத்தலம் அருள்தரு விசாலாட்சியம்மை உடனுறை அருள்மிகு மெய்ஞ்ஞான நீலகண்டேசுவரர் திருவடிகள் போற்றி )
கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட! வெண் தலை ஓடு கொண்டு,
ஊர் எலாம் திரிந்து, என் செய்வீர்? பலி ஓர் இடத்திலே கொள்ளும், நீர்!
பார் எலாம் பணிந்து உம்மையே பரவிப் பணியும் பைஞ்ஞீலியீர்!
ஆரம் ஆவது நாகமோ? சொலும்! ஆரணீய விடங்கரே!

[1]
சிலைத்து நோக்கும், வெள் ஏறு; செந்தழல் வாய பாம்பு அது மூசெனும்;
பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா, பிரானிரே!
மலைத்த சந்தொடு, வேங்கை, கோங்கமும், மன்னு கார் அகில், சண்பகம்,
அலைக்கும் பைம் புனல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே!

[2]
தூயவர், கண்ணும் வாயும் மேனியும்; துன்ன ஆடை, சுடலையில்
பேயொடு ஆடலைத் தவிரும்! நீர் ஒரு பித்தரோ? எம்பிரானிரே!
பாயும் நீர்க் கிடங்கு ஆர் கமலமும், பைந் தண் மாதவி, புன்னையும்,
ஆய பைம்பொழில் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே!

[3]
செந்தமிழ்த் திறம் வல்லிரோ? செங்கண் அரவம் முன் கையில் ஆடவே
வந்து நிற்குமிது என்கொலோ? பலி மாற்றமாட்டோம்; இடகிலோம்;
பைந் தண் மா மலர் உந்து சோலைகள் கந்தம் நாறும் பைஞ்ஞீலியீர்!
அந்தி வானம் உம் மேனியோ சொலும்! ஆரணீய விடங்கரே!

[4]
நீறு நும் திருமேனி நித்திலம்; நீல் நெடுங் கண்ணினாளொடும்
கூறராய் வந்து நிற்றிரால்; கொணர்ந்து இடகிலோம், பலி; நடமினோ!
பாறு வெண்தலை கையில் ஏந்தி, பைஞ்ஞீலியேன் என்றீர், அடிகள் நீர்;
ஆறு தாங்கிய சடையரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!

[5]
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழில் ஆகி நீர்
இரவும் இம் மனை அறிதிரே? இங்கே நடந்து போகவும் வல்லிரே?
பரவி நாள்தொறும் பாடுவார் வினை பற்று அறுக்கும் பைஞ்ஞீலியீர்!
அரவம் ஆட்டவும் வல்லிரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!

[6]
ஏடு உலாம் மலர்க் கொன்றை சூடுதிர்; என்பு எலாம் அணிந்து என் செய்வீர்?
காடு, நும் பதி; ஓடு, கையது; காதல் செய்பவர் பெறுவது என்?
பாடல் வண்டு இசை ஆலும் சோலைப் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்;
ஆடல் பாடலும் வல்லிரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!

[7]
மத்தம், மா மலர், கொன்றை, வன்னியும், கங்கையாளொடு திங்களும்,
மொய்த்த வெண்தலை, கொக்கு இற(ஃ)கொடு, வெள் எருக்கம், உம் சடைய தாம்;
பத்தர் சித்தர்கள் பாடி ஆடும் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்;
அத்தி ஈர் உரி போர்த்திரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!

[8]
தக்கை, தண்ணுமை, தாளம், வீணை, தகுணிச்சம், கிணை, சல்லரி,
கொக்கரை, குட முழவினோடு இசை கூடிப் பாடி நின்று ஆடுவீர்;
பக்கமே குயில் பாடும் சோலைப் பைஞ்ஞீலியேன் என நிற்றிரால்;
அக்கும் ஆமையும் பூண்டிரோ? சொலும்! ஆரணீய விடங்கரே!

[9]
கை ஒர் பாம்பு, அரை ஆர்த்த ஒர் பாம்பு, கழுத்து ஒர் பாம்பு, அவை பின்பு தாழ்
மெய் எலாம் பொடிக் கொண்டு பூசுதிர்; வேதம் ஓதுதிர்; கீதமும்
பையவே விடங்கு ஆக நின்று, பைஞ்ஞீலியேன் என்றீர், அடிகள் நீர்;
ஐயம் ஏற்குமிது என் கொலோ? சொலும்! ஆரணீய விடங்கரே!

[10]
அன்னம் சேர் வயல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை
மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டிக் காதல் மொழிந்த சொல்
மன்னு தொல் புகழ் நாவலூரன்-வன்தொண்டன்-வாய்மொழி பாடல் பத்து
உன்னி இன் இசை பாடுவார், உமை கேள்வன் சேவடி சேர்வரே.

[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list