சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.009   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே!
பண் - இந்தளம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ClMAJFSSalA
3.028   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காலை ஆர் வண்டு இனம்
பண் - கொல்லி   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=xTdAl5WG7YY
3.048   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அங்கை ஆர் அழலன்(ன்), அழகு
பண் - கௌசிகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=DNcF10ZwiTY
6.039   திருநாவுக்கரசர்   தேவாரம்   நீறு ஏறு திருமேனி உடையான்
பண் - திருத்தாண்டகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=_NKLqKVOpKA
6.040   திருநாவுக்கரசர்   தேவாரம்   அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு
பண் - திருத்தாண்டகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=s6naaNXL7j0
7.024   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொன் ஆர் மேனியனே! புலித்தோலை
பண் - நட்டராகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பநாதர் அழகம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=gT_jrRKsfvo

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.009   களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே!  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருமழபாடி ; (திருத்தலம் அருள்தரு அழகாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வச்சிரத்தம்பேசுவரர் திருவடிகள் போற்றி )
களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே! கருதார் புரம்
உளையும் பூசல் செய்தான்; உயர்மால்வரை நல் விலா
வளைய வெஞ்சரம் வாங்கி எய்தான் மதுத் தும்பிவண்டு
அளையும் கொன்றைஅம்தார் மழபாடியுள் அண்ணலே.

[1]
காச்சிலாத பொன் நோக்கும் கன வயிரத்திரள்
ஆச்சிலாத பளிங்கினன்; அஞ்சும் முன் ஆடினான்;
பேச்சினால் உமக்கு ஆவது என்? பேதைகாள், பேணுமின்!
வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே!

[2]
உரம் கெடுப்பவன், உம்பர்கள் ஆயவர்தங்களை
பரம் கெடுப்பவன், நஞ்சை உண்டு பகலோன்தனை
முரண் கெடுப்பவன், முப்புரம் தீ எழச் செற்று, முன்,
வரம் கொடுப்பவன் மா மழபாடியுள் வள்ளலே.

[3]
பள்ளம் ஆர் சடையின் புடையே அடையப் புனல்
வெள்ளம் ஆதரித்தான், விடை எறிய வேதியன்,
வள்ளல், மா மழபாடியுள் மேய மருந்தினை
உள்ளம் ஆதரிமின், வினைஆயின ஓயவே!

[4]
தேன் உலாம் மலர் கொண்டு, மெய்த் தேவர்கள், சித்தர்கள்
பால்நெய் அஞ்சு உடன் ஆட்ட, முன் ஆடிய பால்வணன்
வானநாடர்கள் கைதொழு மா மழபாடி எம்
கோனை நாள்தொறும் கும்பிடவே, குறி கூடுமே.

[5]
தெரிந்தவன், புரம்மூன்று உடன்மாட்டிய சேவகன்,
பரிந்து கைதொழுவார் அவர்தம் மனம் பாவினான்,
வரிந்த வெஞ்சிலை ஒன்று உடையான், மழபாடியைப்
புரிந்து கைதொழுமின்! வினைஆயின போகுமே.

[6]
சந்த வார்குழலாள் உமை தன் ஒருகூறு உடை
எந்தையான், இமையாத முக்கண்ணினன், எம்பிரான்,
மைந்தன், வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினைச்
சிந்தியா எழுவார் வினைஆயின தேயுமே.

[7]
இரக்கம் ஒன்றும் இலான், இறையான் திருமாமலை
உரக் கையால் எடுத்தான்தனது ஒண் முடிபத்து இற
விரல் தலை நிறுவி, உமையாளொடு மேயவன்
வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே.

[8]
ஆலம் உண்டு அமுதம் அமரர்க்கு அருள் அண்ணலார்,
காலன் ஆர் உயிர் வீட்டிய மா மணிகண்டனார்
சால நல் அடியார் தவத்தார்களும் சார்வுஇடம்,
மால் அயன் வணங்கும், மழபாடி எம் மைந்தனே.

[9]
கலியின் வல் அமணும், கருஞ்சாக்கியப்பேய்களும்,
நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ் பதி
பலியும் பாட்டொடு பண் முழவும், பலஓசையும்,
மலியும் மா மழபாடியை வாழ்த்தி வணங்குமே!

[10]
மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக்
கலிசெய் மா மதில் சூழ் கடல் காழிக் கவுணியன்,
ஒலிசெய் பாடல்கள் பத்துஇவை வல்லார்.......உலகத்திலே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.028   காலை ஆர் வண்டு இனம்  
பண் - கொல்லி   (திருத்தலம் திருமழபாடி ; (திருத்தலம் அருள்தரு அழகாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வச்சிரத்தம்பேசுவரர் திருவடிகள் போற்றி )
காலை ஆர் வண்டு இனம் கிண்டிய, கார் உறும்,
சோலை ஆர் பைங்கிளி சொல் பொருள் பயிலவே,
வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம்
மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே.

[1]
கறை அணி மிடறு உடைக் கண்ணுதல், நண்ணிய
பிறை அணி செஞ்சடைப் பிஞ்ஞகன், பேணும் ஊர்
துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே,
மறை அணி நாவினான் மா மழபாடியே.

[2]
அந்தணர் வேள்வியும், அருமறைத் துழனியும்,
செந்தமிழ்க் கீதமும், சீரினால் வளர்தர,
பந்து அணை மெல்விரலாளொடும் பயில்வு இடம்
மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே.

[3]
அத்தியின் உரிதனை அழகு உறப் போர்த்தவன்;
முத்தி ஆய் மூவரில் முதல்வனாய் நின்றவன்;
பத்தியால் பாடிட, பரிந்து அவர்க்கு அருள்செயும்
அத்தனார்; உறைவு இடம் அணி மழபாடியே.

[4]
கங்கை ஆர் சடை இடைக் கதிர் மதி அணிந்தவன்,
வெங் கண் வாள் அரவு உடை வேதியன், தீது இலாச்
செங்கயல் கண் உமையாளொடும் சேர்வு இடம்
மங்கைமார் நடம் பயில் மா மழபாடியே.

[5]
பாலனார் ஆர் உயிர் பாங்கினால் உண வரும்
காலனார் உயிர் செகக் காலினால் சாடினான்,
சேலின் ஆர் கண்ணினாள் தன்னொடும் சேர்வு இடம்
மாலினார் வழிபடும் மா மழபாடியே.

[6]
விண்ணில் ஆர் இமையவர் மெய்ம் மகிழ்ந்து ஏத்தவே,
எண் இலார் முப்புரம் எரியுண, நகைசெய்தார்
கண்ணினால் காமனைக் கனல் எழக் காய்ந்த எம்
அண்ணலார்; உறைவு இடம் அணி மழபாடியே.

[7]
கரத்தினால் கயிலையை எடுத்த கார் அரக்கன
சிரத்தினை ஊன்றலும், சிவன் அடி சரண் எனா,
இரத்தினால் கைந்நரம்பு எடுத்து இசை பாடலும்,
வரத்தினான் மருவு இடம் மா மழபாடியே.

[8]
ஏடு உலாம் மலர்மிசை அயன், எழில் மாலும் ஆய்,
நாடினார்க்கு அரிய சீர் நாதனார் உறைவு இடம்
பாடு எலாம் பெண்ணையின் பழம் விழ, பைம்பொழில்
மாடு எலாம் மல்கு சீர் மா மழபாடியே.

[9]
உறி பிடித்து ஊத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்
நெறி பிடித்து, அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்மின்!
பொறி பிடித்த(அ)ரவு இனம் பூண் எனக் கொண்டு, மாந்
மறி பிடித்தான் இடம் மா மழபாடியே.

[10]
ஞாலத்து ஆர் ஆதிரை நாளினான், நாள்தொறும்
சீலத்தான், மேவிய திரு மழபாடியை
ஞாலத்தால் மிக்க சீர் ஞானசம்பந்தன் சொல்
கோலத்தால் பாடுவார் குற்றம் அற்றார்களே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.048   அங்கை ஆர் அழலன்(ன்), அழகு  
பண் - கௌசிகம்   (திருத்தலம் திருமழபாடி ; (திருத்தலம் அருள்தரு அழகாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வச்சிரத்தம்பேசுவரர் திருவடிகள் போற்றி )
அங்கை ஆர் அழலன்(ன்), அழகு ஆர் சடைக்
கங்கையான், கடவுள்(ள்), இடம் மேவிய
மங்கையான், உறையும் மழபாடியைத்
தம் கையால்-தொழுவார் தகவாளரே.

[1]
விதியும் ஆம்; விளைவு ஆம்; ஒளி ஆர்ந்தது ஓர்
கதியும் ஆம்; கசிவு ஆம்; வசி ஆற்றம் ஆம்;
மதியும் ஆம்; வலி ஆம் மழபாடி
நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே.

[2]
முழவினான், முதுகாடு உறை பேய்க்கணக்-
குழுவினான், குலவும் கையில் ஏந்திய
மழுவினான், உறையும் மழபாடியைத்
தொழுமின், நும் துயர் ஆனவை தீரவே!

[3]
கலையினான், மறையான், கதி ஆகிய
மலையினான், மருவார் புரம் மூன்று எய்த
சிலையினான், சேர் திரு மழபாடியைத்
தலையினால் வணங்க, தவம் ஆகுமே.

[4]
நல்வினைப் பயன், நால்மறையின் பொரு
கல்வி ஆய கருத்தன், உருத்திரன்,
செல்வன், மேய திரு மழபாடியைப்
புல்கி ஏத்துமது புகழ் ஆகுமே.

[5]
நீடினார் உலகுக்கு உயிர் ஆய் நின்றான்;
ஆடினான், எரிகான் இடை மாநடம்;
பாடினார் இசை மா மழபாடியை
நாடினார்க்கு இல்லை, நல்குரவு ஆனவே.

[6]
மின்னின் ஆர் இடையாள் ஒரு பாகம் ஆய்
மன்னினான் உறை மா மழபாடியைப்
பன்னினார், இசையால் வழிபாடு செய்து
உன்னினார், வினை ஆயின ஓயுமே.

[7]
தென் இலங்கையர் மன்னன் செழு வரை-
தன்னில் அங்க அடர்த்து அருள் செய்தவன்
மன் இலங்கிய மா மழபாடியை
உன்னில், அங்க உறுபிணி இல்லையே.

[8]
திருவின் நாயகனும், செழுந்தாமரை
மருவினானும், தொழ, தழல் மாண்பு அமர்
உருவினான் உறையும் மழபாடியைப்
பரவினார் வினைப்பற்று அறுப்பார்களே

[9]
நலியும், நன்று அறியா, சமண்சாக்கியர்
வலிய சொல்லினும், மா மழபாடியு
ஒலிசெய் வார்கழலான் திறம் உள்கவே,
மெலியும், நம் உடல் மேல் வினை ஆனவே.

[10]
மந்தம் உந்து பொழில் மழபாடி
எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான்,
கந்தம் ஆர் கடல் காழியுள் ஞானசம்-
பந்தன் மாலை வல்லார்க்கு இல்லை, பாவமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.039   நீறு ஏறு திருமேனி உடையான்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருமழபாடி ; (திருத்தலம் அருள்தரு அழகாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வச்சிரத்தம்பேசுவரர் திருவடிகள் போற்றி )
நீறு ஏறு திருமேனி உடையான் கண்டாய்; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய்;
கூறுஆக உமை பாகம் கொண்டான் கண்டாய்;
கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய்;
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய்; ஏழ் உலகும்   ஏழ்மலையும் ஆனான் கண்டாய்;
மாறு ஆனார் தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே.

[1]
கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய்; கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய்;
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய்; அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய்;
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனான் கண்டாய்;
மற்று இருந்த கங்கைச் சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.

[2]
நெற்றித் தனிக் கண் உடையான் கண்டாய்; நேரிழை ஓர் பாகம் ஆய் நின்றான் கண்டாய்;
பற்றிப் பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய்; பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய்;
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய்; செழு   மா மதி சென்னி வைத்தான் கண்டாய்;
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.

[3]
அலை ஆர்ந்த புனல் கங்கைச் சடையான் கண்டாய்;
அண்டத்துக்கு அப்பால் ஆய் நின்றான் கண்டாய்;
கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய்; கொல் வேங்கைத் தோல் ஒன்று உடுத்தான் கண்டாய்;
சிலையால்-திரிபுரங்கள் செற்றான் கண்டாய்; செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய்;
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.

[4]
உலந்தார் தம் அங்கம் அணிந்தான் கண்டாய்;
உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய்;
நலம் திகழும் கொன்றைச் சடையான் கண்டாய்; நால்வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்;
உலந்தார் தலை கலனாக் கொண்டான் கண்டாய்; உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன் தானே.

[5]
தாமரையான் தன் தலையைச் சாய்த்தான் கண்டாய்; தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டாய்;
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய்! புணர்ச்சிப் பொருள் ஆகி நின்றான் கண்டாய்;
ஏ மருவு வெஞ்சிலை ஒன்று ஏந்தி கண்டாய்; இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய்;
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.

[6]
நீர் ஆகி, நெடுவரைகள் ஆனான் கண்டாய்; நிழல்   ஆகி, நீள் விசும்பும் ஆனான் கண்டாய்;
பார் ஆகி, பௌவம் ஏழ் ஆனான் கண்டாய்; பகல் ஆகி, வான் ஆகி, நின்றான் கண்டாய்;
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய்; அணு ஆகி, ஆதி ஆய், நின்றான் கண்டாய்;
வார் ஆர்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.

[7]
பொன் இயலும் திருமேனி உடையான் கண்டாய்;
பூங்கொன்றைத்தார் ஒன்று அணிந்தான் கண்டாய்;
மின் இயலும் வார்சடை எம்பெருமான் கண்டாய்;
வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தான் கண்டாய்;
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய்;
தாங்க (அ)ரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய்;
மன்னிய மங்கை ஓர் கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.

[8]
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய்; அடையலர் தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய்;
காலால் அக் காலனையும் காய்ந்தான் கண்டாய்; கண்ணப்பர்க்கு அருள் செய்த காளை கண்டாய்;
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய்; பசு ஏறிப் பலி திரியும் பண்பன் கண்டாய்;
மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.

[9]
ஒரு சுடர் ஆய், உலகு ஏழும் ஆனான் கண்டாய்; ஓங்காரத்து உள் பொருள் ஆய் நின்றான் கண்டாய்;
விரி சுடர் ஆய், விளங்கு ஒளி ஆய், நின்றான் கண்டாய்; விழவு ஒலியும், வேள்வொலியும், ஆனான் கண்டாய்;
இரு சுடர் மீது ஓடா இலங்கைக்கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய்;
மரு சுடரின் மாணிக்கக் குன்று கண்டாய் மழபாடி   மன்னும் மணாளன் தானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.040   அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருமழபாடி ; (திருத்தலம் அருள்தரு அழகாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வச்சிரத்தம்பேசுவரர் திருவடிகள் போற்றி )
அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு அமுதா உண்டு, அமரர்கள் தம் தலை காத்த ஐயர்; செம்பொன்
சிலை எடுத்து மா நாகம் நெருப்புக் கோத்துத்   திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும்;
நிலை அடுத்த பசும் பொன்னால், முத்தால், நீண்ட நிரை வயிரப் பலகையால், குவையாத் துற்ற
மலை அடுத்த மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

[1]
அறை கலந்த குழல், மொந்தை, வீணை, யாழும், அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த,
மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆளக் கொடுத்தி அன்றே!
கறை கலந்த பொழில் கச்சிக் கம்பம் மேய கன   வயிரத் திரள் தூணே! கலி சூழ் மாடம்
மறை கலந்த மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

[2]
உரம் கொடுக்கும் இருள் மெய்யர், மூர்க்கர், பொல்லா ஊத்தைவாய்ச் சமணர் தமை உறவாக் கொண்ட
பரம் கெடுத்து, இங்கு அடியேனை ஆண்டு கொண்ட பவளத்தின் திரள் தூணே! பசும்பொன் முத்தே!
புரம் கெடுத்து, பொல்லாத காமன் ஆகம் பொடி ஆக விழித்து அருளி, புவியோர்க்கு என்றும்
வரம் கொடுக்கும் மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

[3]
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர், பொல்லா ஊத்தைவாய்ச் சமணர் உறவு ஆகக் கொண்டு
ஞான(அ)கம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனைப் பொருள் ஆக ஆண்டு கொண்ட,
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே! விண்ணவர் தம் பெருமான்! மேக
வானகம் சேர் மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

[4]
சிரம் ஏற்ற நான்முகன் தன் தலையும் மற்றைத் திருமால் தன் செழுந் தலையும் பொன்றச் சிந்தி,
உரம் ஏற்ற இரவி பல்-தகர்த்து, சோமன் ஒளிர்கலைகள் பட உழக்கி, உயிரை நல்கி,
நரை ஏற்ற விடை ஏறி, நாகம் பூண்ட நம்பியையே, மறை நான்கும் ஓலம் இட்டு
வரம் ஏற்கும் மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

[5]
சினம் திருத்தும் சிறுப் பெரியார் குண்டர் தங்கள் செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன்; தேடிப்
புனம் திருத்தும் பொல்லாத பிண்டி பேணும் பொறி இலியேன் தனைப் பொருளா ஆண்டு கொண்டு,
தனம் திருத்துமவர் திறத்தை ஒழியப் பாற்றி, தயா மூலதன் மவழி எனக்கு நல்கி,
மனம் திருத்தும் மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

[6]
சுழித் துணை ஆம் பிறவி வழித் துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே! தூய தெண்நீர்
இழிப்ப(அ)ரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் என் துணையே! என்னுடைய பெம்மான்! தம்மான்!
பழிப்ப(அ)ரிய திருமாலும் அயனும் காணாப் பருதியே! சுருதி முடிக்கு அணி ஆய் வாய்த்த,
வழித்துணை ஆம், மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

[7]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.024   பொன் ஆர் மேனியனே! புலித்தோலை  
பண் - நட்டராகம்   (திருத்தலம் திருமழபாடி ; (திருத்தலம் அருள்தரு அழகம்மை உடனுறை அருள்மிகு வச்சிரத்தம்பநாதர் திருவடிகள் போற்றி )
இறைவன் எழுந்தருளிய தலங்கள் பலவற்றையும் வழிபட எண்ணிய சுந்தரர், திருவாரூரினின்றும் புறப்பட்டு, நன்னிலம், வீழிமிழலை, திருவாஞ்சியம் நறையூர்ச்சித்தீச்சரம், அரிசிற்கரைப்புத்தூர், ஆவடுதுறை, இடைமருது, நாகேச்சரம், சிவபுரம், கலயநல்லூர், குடமூக்கு, வலஞ்சுழி, நல்லூர், சோற்றுத்துறை, கண்டியூர், ஐயாறு, பூந்துருத்தி ஆகிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு, திருவாலம்பொழிலை அடைந்தார். அன்றிரவு அவர் துயிலும் பொழுது, சிவபெருமான் அவர் கனவில் தோன்றி, மழபாடிக்கு வருதற்கு மறந்தாயோ என வினவி மறைந்தார். துயிலுணர்ந்தெழுந்த சுந்தரர், காவிரியைக் கடந்து, திருமழபாடி சென்று, இறைவனை வணங்கிப் பொன்னார் மேனியனே என்று தொடங்கித் திருப்பதிகம் பாடிப் போற்றினார்.
பொன் ஆர் மேனியனே! புலித்தோலை அரைக்கு அசைத்து,
மின் ஆர் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!
மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே!
அன்னே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.

[1]
கீள் ஆர் கோவணமும், திருநீறு மெய் பூசி, உன்தன்
தாளே வந்து அடைந்தேன்; தலைவா! எனை ஏன்றுகொள், நீ!
வாள் ஆர் கண்ணி பங்கா! மழபாடியுள் மாணிக்கமே!
கேளா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.

[2]
எம்மான், எம் அ(ன்)னை, என் தனக்கு எள்-தனைச் சார்வு ஆகார்;
இம் மாயப் பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்;
மைம் மாம் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
அம்மான்! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.

[3]
பண்டே நின் அடியேன்; அடியார் அடியார்கட்கு எல்லாம்
தொண்டே பூண்டொழிந்தேன்; தொடராமைத் துரிசு அறுத்தேன்;
வண்டு ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
அண்டா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.

[4]
கண் ஆய், ஏழ் உலகும் கருத்து ஆய அருத்தமும் ஆய்,
பண் ஆர் இன் தமிழ் ஆய், பரம் ஆய பரஞ்சுடரே!
மண் ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
அண்ணா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .

[5]
நாளார் வந்து அணுகி நலியாமுனம், நின் தனக்கே
ஆளா வந்து அடைந்தேன்; அடியேனையும் ஏன்றுகொள், நீ!
மாளா நாள் அருளும் மழபாடியுள் மாணிக்கமே!
ஆளா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .

[6]
சந்து ஆரும் குழையாய்! சடைமேல் பிறைதாங்கி! நல்ல
வெந்தார் வெண்பொடியாய்! விடை ஏறிய வித்தகனே!
மைந்து ஆர் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
எந்தாய்! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .

[7]
வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம்
செய்ய மலர்கள் இட, மிகு செம்மையுள் நின்றவனே!
மை ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
ஐயா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .

[8]
நெறியே! நின்மலனே! நெடுமால் அயன் போற்றி செய்யும்
குறியே! நீர்மையனே! கொடி ஏர் இடையாள் தலைவா!
மறி சேர் அம் கையனே! மழபாடியுள் மாணிக்கமே!
அறிவே! உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?.

[9]
ஏர் ஆர் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை,
வார் ஆர் கொங்கை உடன் மழபாடியுள் மேயவனை,
சீர் ஆர் நாவலர் கோன்-ஆரூரன்-உரைத்த தமிழ்
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே .

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list