சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
2.062   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காயச் செவ்விக் காமற் காய்ந்து,
பண் - காந்தாரம்   (திருமீயச்சூர் முயற்சிநாதேசுவரர் சுந்தரநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=nZvUZrPNWtM
5.011   திருநாவுக்கரசர்   தேவாரம்   தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,
பண் - திருக்குறுந்தொகை   (திருமீயச்சூர் முயற்சிநாதேசுவரர் சுந்தரநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=IjwwKbqNYI4

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.062   காயச் செவ்விக் காமற் காய்ந்து,  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருமீயச்சூர் ; (திருத்தலம் அருள்தரு சுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு முயற்சிநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
காயச் செவ்விக் காமற் காய்ந்து, கங்கையைப்
பாயப் படர் புன் சடையில் பதித்த பரமேட்டி
மாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை; தன்
மீயச் சூரைத் தொழுது, வினையை வீட்டுமே!

[1]
பூ ஆர் சடையின் முடிமேல் புனலர்; அனல் கொள்வர்;
நா ஆர் மறையர்; பிறையர்; நற வெண்தலை ஏந்தி,
ஏ ஆர் மலையே சிலையா, கழி அம்பு எரி வாங்கி,
மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே.

[2]
பொன் நேர் கொன்றைமாலை புரளும் அகலத்தான்,
மின் நேர் சடைகள் உடையான், மீயச்சூரானை,
தன் நேர் பிறர் இல்லானை, தலையால் வணங்குவார்
அந் நேர் இமையோர் உலகம் எய்தற்கு அரிது அன்றே.

[3]
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து
பாகம் உமையோடு ஆக, படிதம் பல பாட,
நாகம் அரைமேல் அசைத்து, நடம் ஆடிய நம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே.

[4]
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து
பாகம் உமையோடு ஆக, படிதம் பல பாட,
நாகம் அரைமேல் அசைத்து, நடம் ஆடிய நம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே.

[5]
குளிரும் சடை கொள் முடிமேல் கோலம் ஆர் கொன்றை
ஒளிரும் பிறை ஒன்று உடையான், ஒருவன், கை கோடி
நளிரும் மணி சூழ் மாலை நட்டம் நவில் நம்பன்,
மிளிரும்(ம்) அரவம் உடையான் மீயச்சூரானே.

[6]
நீலவடிவர் மிடறு, நெடியர், நிகர் இல்லார்,
கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார்,
காலர், கழலர், கரியின் உரியர், மழுவாளர்,
மேலர், மதியர், விதியர் மீயச்சூராரே.

[7]
புலியின் உரி தோல் ஆடை, பூசும் பொடி நீற்றர்,
ஒலி கொள் புனல் ஓர் சடைமேல் கரந்தார், உமை அஞ்ச
வலிய திரள் தோள் வன் கண் அரக்கர் கோன் தன்னை
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே.

[8]
காதில் மிளிரும் குழையர், கரிய கண்டத்தார்,
போதிலவனும் மாலும் தொழப் பொங்கு எரி ஆனார்
கோதி வரிவண்டு அறை பூம் பொய்கைப் புனல் மூழ்கி
மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே.

[9]
கண்டார் நாணும் படியார், கலிங்கம் முடை பட்டை
கொண்டார், சொல்லைக் குறுகார், உயர்ந்த
கொள்கையார்;
பெண்தான் பாகம் உடையார், பெரிய வரை வில்லா
விண்டார் புரம் மூன்று எரித்தார், மீயச்சூராரே.

[10]
வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர்,
நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன்
பாடல் ஆய தமிழ் ஈர் ஐந்தும் மொழிந்து, உள்கி,
ஆடும் அடியார், அகல் வான் உலகம் அடைவாரே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.011   தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருமீயச்சூர் ; (திருத்தலம் அருள்தரு சுந்தரநாயகியம்மை உடனுறை அருள்மிகு முயற்சிநாதேசுவரர் திருவடிகள் போற்றி )
தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,
வேற்றுக் கோயில் பல உள; மீயச்சூர்,
கூற்றம் பாய்ந்த குளிர்புன்சடை அரற்கு
ஏற்றம் கோயில் கண்டீர், இளங்கோயிலே.

[1]
வந்தனை அடைக்கும்(ம்) அடித்தொண்டர்கள்
பந்தனை செய்து பாவிக்க நின்றவன்,
சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர்,
எம்தமை உடையார், இளங்கோயிலே.

[2]
பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார்,
அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார்,-
நெஞ்சம்! வாழி நினைந்து இரு-மீயச்சூர்,
எம்தமை உடையார், இளங்கோயிலே!

[3]
நாறு மல்லிகை கூவிளம் செண்பகம்
வேறு வேறு விரித்த சடை இடை
ஆறு கொண்டு உகந்தான், திரு மீயச்சூர்,
ஏறுகொண்டு உகந்தார், இளங்கோயிலே.

[4]
வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
கவ்வ வண்ணக் கனல் விரித்து ஆடுவர்,
செவ்வவண்ணம் திகழ் திரு மீயச்சூர்,
எவ்வ வண்ணம், பிரான் இளங்கோயிலே?

[5]
பொன் அம் கொன்றையும், பூ அணி மாலையும்,
பின்னும் செஞ்சடைமேல் பிறை சூடிற்று;
மின்னும் மேகலையாளொடு, மீயச்சூர்,
இன்ன நாள் அகலார், இளங்கோயிலே.

[6]
படை கொள் பூதத்தன், பைங்கொன்றைத்தாரினன்,
சடை கொள் வெள்ளத்தன், சாந்தவெண் நீற்றினன்,
விடை கொள் ஊர்தியினான், திரு மீயச்சூர்,
இடை கொண்டு ஏத்த நின்றார், இளங்கோயிலே.

[7]
ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர்
வேறுகொண்டது ஓர் வேடத்தர் ஆகிலும்,
கூறு கொண்டு உகந்தாளொடு, மீயச்சூர்,
ஏறு கொண்டு உகந்தார், இளங்கோயிலே.

[8]
வேதத்தான் என்பர், வேள்வி உளான் என்பர்,
பூதத்தான் என்பர், புண்ணியன் தன்னையே;
கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர்,
ஏதம் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.

[9]
கடுக்கண்டன் கயிலாய மலைதனை
எடுக்கல் உற்ற இராவணன் ஈடு அற,
விடுக்கண் இன்றி வெகுண்டவன், மீயச்சூர்,
இடுக்கண் தீர்க்க நின்றார், இளங்கோயிலே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list