சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.040   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொடி உடை மார்பினர், போர்
பண் - தக்கராகம்   (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணவீசுரர் வண்டார்பூங்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=OONhDo6cM7I
2.094   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சாகை ஆயிரம் உடையார், சாமமும்
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணநாதர் வண்டமர்பூங்குழலம்மை)
7.057   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தலைக்கலன் தலை மேல்-தரித்தானை, தன்னை
பண் - தக்கேசி   (திருவாழ்கொளிபுத்தூர் மாணிக்கவண்ணர் வண்டமர்பூங்குழலம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=5Dtfchw2rbI

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.040   பொடி உடை மார்பினர், போர்  
பண் - தக்கராகம்   (திருத்தலம் திருவாழ்கொளிபுத்தூர் ; (திருத்தலம் அருள்தரு வண்டார்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கவண்ணவீசுரர் திருவடிகள் போற்றி )
பொடி உடை மார்பினர், போர் விடை ஏறி, பூதகணம் புடை சூழ,
கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு, பலபல கூறி,
வடிவு உடை வாள் நெடுங்கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
கடி கமழ் மா மலர் இட்டு, கறைமிடற்றான் அடி காண்போம்.

[1]
அரை கெழு கோவண ஆடையின்மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து, ஐயம்
புரை கெழு வெண் தலை ஏந்தி, போர் விடை ஏறி, புகழ
வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
விரை கெழு மா மலர் தூவி, விரிசடையான் அடி சேர்வோம்.

[2]
பூண் நெடுநாகம் அசைத்து, அனல் ஆடி, புன்தலை அங்கையில் ஏந்தி,
ஊண் இடு பிச்சை, ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி,
வாள் நெடுங்கண் உமைமங்கை ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தாள் நெடு மா மலர் இட்டு, தலைவனது தாள்நிழல் சார்வோம்.

[3]
தார் இடுகொன்றை, ஒர் வெண்மதி, கங்கை, தாழ்சடைமேல் அவை சூடி,
ஊர் இடு பிச்சை கொள் செல்வம் உண்டி என்று பல கூறி,
வார் இடுமென்முலை மாது ஒரு பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
கார் இடு மா மலர் தூவி, கறை மிடற்றான் அடி காண்போம்.

[4]
கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, காதில் ஒர் வெண்குழையோடு
புன மலர்மாலை புனைந்து, ஊர் புகுதி என்றே பல கூறி,
வனமுலை மாமலை மங்கை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
இனமலர் ஏய்ந்தன தூவி, எம்பெருமான் அடி சேர்வோம்.

[5]
அளை வளர் நாகம் அசைத்து, அனல் ஆடி, அலர்மிசை அந்தணன் உச்சிக்
களை தலையில் பலி கொள்ளும் கருத்தனே! கள்வனே! என்னா,
வளை ஒலி முன்கை மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தளை அவிழ் மா மலர் தூவி, தலைவனது தாள் இணை சார்வோம்.

[6]
அடர் செவி வேழத்தின் ஈர் உரி போர்த்து, அழிதலை அங்கையில் ஏந்தி,
உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூறி,
மடல் நெடு மா மலர்க்கண்ணி ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தட மலர் ஆயின தூவி, தலைவனது தாள் நிழல் சார்வோம்.

[7]
உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடகக் கை அடர்த்து,
அயல் இடு பிச்சையோடு ஐயம் ஆர்தலை என்று அடி போற்றி,
வயல் விரி நீல நெடுங்கணி பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
சய விரி மா மலர் தூவி, தாழ்சடையான் அடி சார்வோம்.

[8]
கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த, காணலும் சாரலும் ஆகா
எரி உரு ஆகி, ஊர் ஐயம் இடு பலி உண்ணி என்று ஏத்தி,
வரி அரவு அல்குல் மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
விரிமலர் ஆயின தூவி, விகிர்தனது சேவடி சேர்வோம்.

[9]
குண்டு அமணர், துவர்க்கூறைகள் மெய்யில் கொள்கையினார், புறம் கூற,
வெண்தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி,
வண்டு அமர் பூங்குழல் மங்கை ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தொண்டர்கள் மா மலர் தூவ, தோன்றி நின்றான் அடி சேர்வோம்.

[10]
கல் உயர் மாக்கடல் நின்று முழங்கும் கரை பொரு காழி அ மூர்
நல் உயர் நால்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன்
வல் உயர் சூலமும் வெண்மழுவாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர்,
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.094   சாகை ஆயிரம் உடையார், சாமமும்  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருவாழ்கொளிபுத்தூர் ; (திருத்தலம் அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கவண்ணநாதர் திருவடிகள் போற்றி )
சாகை ஆயிரம் உடையார், சாமமும் ஓதுவது உடையார்,
ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார்;
தோகை மா மயில் அனைய துடியிடை பாகமும் உடையார்
வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[1]
எண்ணில் ஈரமும் உடையார்; எத்தனையோ இவர் அறங்கள்
கண்ணும் ஆயிரம் உடையார்; கையும் ஓர் ஆயிரம்
உடையார்;
பெண்ணும் ஆயிரம் உடையார்; பெருமை ஓர் ஆயிரம்
உடையார்;
வண்ணம் ஆயிரம் உடையார் வாழ் கொளிபுத்தூர் உளாரே.

[2]
நொடி ஒர் ஆயிரம் உடையார்; நுண்ணியர் ஆம், அவர்
நோக்கும்;
வடிவும் ஆயிரம் உடையார்; வண்ணமும் ஆயிரம்
உடையார்;
முடியும் ஆயிரம் உடையார்; மொய்குழலாளையும் உடையார்;
வடிவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[3]
பஞ்சி நுண் துகில் அன்ன பைங்கழல் சேவடி உடையார்;
குஞ்சி மேகலை உடையார்; கொந்து அணி வேல் வலன்
உடையார்;
அஞ்சும் வென்றவர்க்கு அணியார்; ஆனையின் ஈர் உரி
உடையார்;
வஞ்சி நுண்ணிடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[4]
பரவுவாரையும் உடையார்; பழித்து இகழ்வாரையும்
உடையார்;
விரவுவாரையும் உடையார்; வெண் தலைப் பலி கொள்வது
உடையார்;
அரவம் பூண்பதும் உடையார்; ஆயிரம் பேர் மிக
உடையார்;
வரவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[5]
தண்டும் தாளமும் குழலும் தண்ணுமைக்கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார்; கோலமும் பல பல உடையார்;
கண்டு கோடலும் அரியார்; காட்சியும் அரியது; ஒர் கரந்தை
வண்டு வாழ் பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[6]
மான வாழ்க்கை அது உடையார்; மலைந்தவர் மதில் பரிசு
அழித்தார்;
தான வாழ்க்கை அது உடையார்; தவத்தொடு நாம் புகழ்ந்து
ஏத்த,
ஞான வாழ்க்கை அது உடையார்; நள் இருள் மகளிர்
நின்று ஏத்த,
வான வாழ்க்கை அது உடையார் வாழ்கொளி புத்தூர்
உளாரே.

[7]
ஏழும் மூன்றும் ஒர் தலைகள் உடையவன் இடர்பட
அடர்த்து
வேழ்வி செற்றதும் விரும்பி, விருப்பு அவர் பலபல
உடையார்;
கேழல் வெண்பிறை அன்ன கேழ் மணிமிடறு நின்று இலங்க
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[8]
வென்றி மா மலரோனும், விரிகடல் துயின்றவர் தானும்,
என்றும் ஏத்துகை உடையார்; இமையவர் துதி செய,
விரும்பி,
முன்றில் மா மலர் வாசம் முது மதி தவழ் பொழில் தில்லை
மன்றில் ஆடல் அது உடையார் வாழ்கொளிபுத்தூர்
உளாரே.

[9]
மண்டை கொண்டு உழல் தேரர், மாசு உடை மேனி
வன்சமணர்,
குண்டர், பேசிய பேச்சுக் கொள்ளன்மின்! திகழ் ஒளி நல்ல
துண்ட வெண்பிறை சூடி, சுண்ண வெண்பொடி அணிந்து,
எங்கும்
வண்டு வாழ் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே.

[10]
நலம் கொள் பூம்பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன்,
வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர்
உளானை
இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார்,
நலம் கொள் சிந்தையர் ஆகி, நன்நெறி எய்துவர் தாமே.

[11]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.057   தலைக்கலன் தலை மேல்-தரித்தானை, தன்னை  
பண் - தக்கேசி   (திருத்தலம் திருவாழ்கொளிபுத்தூர் ; (திருத்தலம் அருள்தரு வண்டமர்பூங்குழலம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கவண்ணர் திருவடிகள் போற்றி )
தலைக்கலன் தலை மேல்-தரித்தானை, தன்னை என்னை நினைக்கத் தருவானை,
கொலைக் கை யானை உரி போர்த்து உகந்தானை, கூற்று உதைத்த(க்) குரை சேர் கழலானை,
அலைத்த செங்கண் விடை ஏற வல்லானை, ஆணையால் அடியேன் அடிநாயேன்-
மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .

[1]
படைக்கண் சூலம் பயில வல்லானை, பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை,
கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை, காமன் ஆகம்தனைக் கட்டு அழித்தானை,
சடைக்கண் கங்கையைத் தாழ வைத்தானை, தண்ணீர்மண்ணிக் கரையானை, தக்கானை,
மடைக்கண் நீலம் மலர் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, -மறந்து என் நினைக்கேனே? .

[2]
வெந்த நீறு மெய் பூச வல்லானை, வேத மால்விடை ஏற வல்லானை,
அந்தம் ஆதி(ய்) அறிதற்கு அரியானை, ஆறு அலைத்த(ச்) சடையானை, அம்மானை,
சிந்தை என் தடுமாற்று அறுப்பானை, தேவதேவன், என் சொல் முனியாதே
வந்து என் உள்ளம் புகும் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .

[3]
தடங்கையால் மலர் தூய்த் தொழுவாரைத் தன் அடிக்கே செல்லும் ஆறு வல்லானை,
படம் கொள் நாகம்(ம்) அரை ஆர்த்து உகந்தானை, பல் இல் வெள்ளைத் தலை ஊண் உடையானை,
நடுங்க ஆனை உரி போர்த்து உகந்தானை, நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தானை,
மடந்தை பாகனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .

[4]
வளைக்கை முன்கை மலை மங்கை மணாளன்; மாரனார் உடல் நீறு எழச் செற்று,
துளைத்த அங்கத்தொடு மலர்க் கொன்றை தோலும் நாலும் துதைந்த(வ்) வரை மார்பன்;
திளைக்கும் தெவ்வர் திரி புரம் மூன்றும் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ
வளைத்த வில்லியை; வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை; மறந்து என் நினைக்கேனே?.

[5]
திருவின் நாயகன் ஆகிய மாலுக்கு அருள்கள் செய்திடும் தேவர் பிரானை,
உருவினானை, ஒன்றா அறிவு ஒண்ணா மூர்த்தியை, விசயற்கு அருள் செய்வான்
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செங்கண் வேடனாய் என்னொடும் வந்து
மருவினான் தனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .

[6]
எந்தையை, எந்தை தந்தை பிரானை, ஏதம் ஆய(வ்) இடர் தீர்க்க வல்லானை,
முந்தி ஆகிய மூவரின் மிக்க மூர்த்தியை, முதல் காண்பு அரியானை,
கந்தின் மிக்க(க்) கரியின் மருப்போடு, கார் அகில், கவரி(ம்)மயிர், மண்ணி
வந்து வந்து இழி வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே?

[7]
தேனை ஆடிய கொன்றையினானை, தேவர் கைதொழும் தேவர் பிரானை,
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை, ஒற்றை ஏற்றனை, நெற்றிக் கண்ணானை,
கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த கள்ளப் பிள்ளைக்கும் காண்பு அரிது ஆய
வானநாடனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே?.

[8]
காளை ஆகி வரை எடுத்தான் தன் கைகள் இற்று அவன் மொய் தலை எல்லாம்
மூளை போத, ஒருவிரல் வைத்த மூர்த்தியை, முதல் காண்பு அரியானை,
பாளை தெங்கு பழம் விழ மண்டி, செங்கண் மேதிகள் சேடு எறிந்து, எங்கும்
வாளை பாய் வயல் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே?.

[9]
திருந்த நால்மறை பாட வல்லானை, தேவர்க்கும் தெரிதற்கு அரியானை,
பொருந்த மால்விடை ஏற வல்லானை, பூதிப்பை புலித்தோல் உடையானை,
இருந்து உணும் தேரரும் நின்று உணும் சமணும் ஏச நின்றவன், ஆர் உயிர்க்கு எல்லாம்
மருந்து அனான் தனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .

[10]
மெய்யனை, மெய்யில் நின்று உணர்வானை, மெய் இலாதவர் தங்களுக்கு எல்லாம்
பொய்யனை, புரம் மூன்று எரித்தானை, புனிதனை, புலித்தோல் உடையானை,
செய்யனை, வெளிய(த்) திருநீற்றில்-திகழும் மேனியன், மான்மறி ஏந்தும்
மை கொள் கண்டனை, வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே? .

[11]
வளம் கிளர் பொழில் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேன்? என்று
உளம் குளிர் தமிழ், ஊரன்-வன்தொண்டன், சடையன் காதலன், வனப்பகை அப்பன்,
நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன், நங்கை சிங்கடி தந்தை பயந்த
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம், செய்த பாவங்கள் தானே .

[12]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list