சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.057   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விடையவன், விண்ணும் மண்ணும் தொழ
பண் - பஞ்சமம்   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Nhr4gstwUT4
4.045   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத
பண் - திருநேரிசை:கொல்லி   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=zy7SU8mdaHI
4.046   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து
பண் - திருநேரிசை   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=oos3CBD7shc
4.086   திருநாவுக்கரசர்   தேவாரம்   செற்றுக் களிற்று உரி கொள்கின்ற
பண் - திருவிருத்தம்   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=LUfkIoXphyA
5.024   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஒற்றி ஊரும் ஒளி மதி,
பண் - திருக்குறுந்தொகை   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ILf86m1z6LE
6.045   திருநாவுக்கரசர்   தேவாரம்   வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர்
பண் - திருத்தாண்டகம்   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Jp1uAZEaQA4
7.054   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அழுக்கு மெய் கொடு உன்
பண் - தக்கேசி   (திருவொற்றியூர் படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=O340VDp7Qoo
7.091   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
பண் - குறிஞ்சி   (திருவொற்றியூர் படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
11.030   பட்டினத்துப் பிள்ளையார்   திருவொற்றியூர் ஒருபா ஒருபது   திருவொற்றியூர் ஒருபா ஒருபது
பண் -   (திருவொற்றியூர் )

Back to Top
பட்டினத்துப் பிள்ளையார்   திருவொற்றியூர் ஒருபா ஒருபது  
11.030   திருவொற்றியூர் ஒருபா ஒருபது  
பண் -   (திருத்தலம் திருவொற்றியூர் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
இருநில மடந்தை இயல்பினின் உடுத்த
பொருகடல் மேகலை முகமெனப் பொலிந்த
ஒற்றி மாநகர் உடையோய் உருவின்
பெற்றியொன் றாகப் பெற்றோர் யாரே
மின்னின் பிறக்கம் துன்னும்நின் சடையே

மன்னிய அண்டம்நின் சென்னியின் வடிவே
பாவகன் பரிதி பனிமதி தன்னொடும்
மூவகைச் சுடரும்நின் நுதல்நேர் நாட்டம்
தண்ணொளி ஆரம் தாரா கணமே
விண்ணவர் முதலா வேறோர் இடமாக்

கொண்டுறை விசும்பே கோலநின் ஆகம்
எண்திசை திண்தோள் இருங்கடல் உடையே
அணியுடை அல்குல் அவனிமண் டலமே
மணிமுடிப் பாந்தள்நின் தாளிணை வழக்கே
ஒழியா தோடிய மாருதம் உயிர்ப்பே

வழுவா ஓசை முழுதும்நின் வாய்மொழி
வானவர் முதலா மன்னுயிர் பரந்த
ஊனமில் ஞானத் தொகுதிநின் உணர்வே
நெருங்கிய உலகினில் நீர்மையும் நிற்றலும்
சுருங்கலும் விரிதலும் தோற்றல்நின் தொழிலே

அமைத்தலும் அழித்தலும் ஆங்கதன் முயற்சியும்
இமைத்தலும் விழித்தலும் ஆகும்நின் இயல்பே
என்றிவை முதலாம் இயல்புடை வடிவினோ
டொன்றிய துப்புரு இருவகை ஆகி
முத்திறக் குணத்து நால்வகைப் பிறவி

அத்திறத் தைம்பொறி அறுவகைச் சமயமோ
டேழுல காகி எண்வகை மூர்த்தியோ
டூழிதோ றூழி எண்ணிறந் தோங்கி
எவ்வகை அளவினில் கூடிநின்று
அவ்வகைப் பொருளும்நீ ஆகிய இடத்தே.

[1]
இடத்துறை மாதரோ டீருடம் பென்றும்
நடத்தினை நள்ளிருள் நவிற்றினை என்றும்
புலியதள் என்பொடு புனைந்தோய் என்றும்
பலிதிரி வாழ்க்கை பயின்றோய் என்றும்
அருவமும் உருவமும் ஆனாய் என்றும்

திருவமர் மாலொடு திசைமுகன் என்றும்
உளனே என்றும் இலனே என்றும்
தளரான் என்றும் தளர்வோன் என்றும்
ஆதி என்றும் அசோகினன் என்றும்
போதியிற் பொலிந்த புராணன் என்றும்

இன்னவை முதலாத் தாமறி அளவையின்
மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப்
பிணங்கும் மாந்தர் பெற்றிமை நோக்கி
அணங்கிய அவ்வவர்க் கவ்வவை ஆகிப்
பற்றிய அடையின் பளிங்கு போலும்

ஒற்றி மாநகர் உடையோய் உருவே.

[2]
உருவாம் உலகுக் கொருவன் ஆகிய
பெரியோய் வடிவிற் பிறிதிங் கின்மையின்
எப்பொரு ளாயினும் இங்குள தாமெனின்
அப்பொருள் உனக்கே அவயவம் ஆதலின்
முன்னிய மூவெயில் முழங்கெரி ஊட்டித்

தொன்னீர் வையகம் துயர்கெடச் சூழ்ந்ததும்
வேள்வி மூர்த்திதன் தலையினை விடுத்ததும்
நீள்விசும் பாளிதன் தோளினை நெரித்ததும்
ஓங்கிய மறையோர்க் கொருமுகம் ஒழித்ததும்
பூங்கணை வேளைப் பொடிபட விழித்ததும்

திறல்கெட அரக்கனைத் திருவிரல் உறுத்ததும்
குறைபடக் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும்
என்றிவை முதலா ஆள்வினை எல்லாம்
நின்றுழிச் செறிந்தவை நின்செய லாதனின்
உலவாத் தொல்புகழ் ஒற்றி யூர

பகர்வோர் நினக்குவே றின்மை கண்டவர்
நிகழ்ச்சியின் நிகழின் அல்லது
புகழ்ச்சியிற் படுப்பரோ பொருளுணர்ந் தோரே.

[3]
பொருளுணர்ந் தோங்கிய பூமகன் முதலா
இருள்துணை யாக்கையில் இயங்கு மன்னுயிர்
உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும்
திருவினும் திறலினுஞ் செய்தொழில் வகையினும்
வெவ்வே றாகி வினையொடும் பிரியாது

ஒவ்வாப் பன்மையுள் மற்றவர் ஒழுக்கம்
மன்னிய வேலையுள் வான்திரை போல
நின்னிடை எழுந்து நின்னிடை ஆகி
பெருகியும் சுருங்கியும் பெயர்ந்தும் தோன்றியும்
விரவியும் வேறாய் நின்றனை விளக்கும்

ஓவாத் தொல்புகழ் ஒற்றி யூர
மூவா மேனி முதல்வ நின்னருள்
பெற்றவர் அறியின் அல்லது
மற்றவர் அறிவரோ நின்னிடை மயக்கே.

[4]
மயக்கமில் சொல்நீ ஆயினும் மற்றவை
துயக்க நின்திறம் அறியாச் சூழலும்
உறைவிடம் உள்ளம் ஆயினும் மற்றது
கறைபட ஆங்கே கரந்த கள்ளமும்
செய்வினை உலகினிற் செய்வோய் எனினும்
அவ்வினைப் பயன்நீ அணுகா அணிமையும்
இனத்திடை இன்பம் வேண்டிநின் பணிவோர்
மனத்திடை வாரி ஆகிய வனப்பும்
அன்பின் அடைந்தவர்க் கணிமையும் அல்லவர்ச்
சேய்மையும் நாள்தோறும்

என்பினை உருக்கும் இயற்கைய ஆதலின்
கண்டவர் தமக்கே ஊனுடல் அழிதல்
உண்டென உணர்ந்தனம் ஒற்றி யூர
மன்னிய பெரும்புகழ் மாதவத்
துன்னிய செஞ்சடைத் தூமதி யோயே.

[5]
தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி
ஆமதி யானென அமைத்த வாறே
அறனுரு வாகிய ஆனே றேறுதல்
இறைவன் யானென இயற்று மாறே
அதுஅவள் அவனென நின்றமை யார்க்கும்

பொதுநிலை யானென உணர்த்திய பொருளே
முக்கணன் என்பது முத்தீ வேள்வியில்
தொக்க தென்னிடை என்பதோர் சுருக்கே
வேத மான்மறி ஏந்துதல் மற்றதன்
நாதன் நானென நவிற்று மாறே

மூவிலை ஒருதாள் சூலம் ஏந்துதல்
மூவரும் யானென மொழிந்த வாறே
எண்வகை மூர்த்தி என்பதிவ் வுலகினில்
உண்மை யானென உணர்த்திய வாறே
நிலம்நீர் தீவளி உயர்வான் என்றும்

உலவாத் தொல்புகழ் உடையோய் என்றும்
பொருநற் பூதப் படையோய் என்றும்
தெருளநின் றுககினில் தெருட்டு மாறே
ஈங்கிவை முதலா வண்ணமும் வடிவும்
ஓங்குநின் பெருமை உணர்த்தவும் உணராத்

தற்கொலி மாந்தர் தம்மிடைப் பிறந்த
சொற்பொருள் வன்மையின் சுழலும் மாந்தர்க்
காதி ஆகிய அறுதொழி லாளர்
ஓதல் ஒவா ஒற்றி யூர
சிறுவர்தம் செய்கையிற் படுத்து
முறுவலித் திருத்திநீ முகப்படு மளவே.

[6]
அளவினில் இறந்த பெருமையை ஆயினும்
எனதுளம் அகலா தொடுங்கிநின் றுளையே
மெய்யினை இறந்த மெய்யினை ஆயினும்
வையகம் முழுதும்நின் வடிவெனப் படுமே
கைவலத் திலைநீ எனினும் காதல்

செய்வோர் வேண்டும் சிறப்பொழி யாயே
சொல்லிய வகையால் துணையலை ஆயினும்
நல்லுயிர்க் கூட்ட நாயகன் நீயே
எங்கும் உள்ளோய் எனினும் வஞ்சனை
தங்கிய அவரைச் சாராய் நீயே

அஃதான்று
பிறவாப் பிறவியை பெருகாப் பெருமையை
துறவாத் துறவியை தொடராத் தொடர்ச்சியை
நுகரா நுகர்ச்சியை நுணுகா நுணுக்கினை
அகலா அகற்சியை அணுகா அணிமையை

செய்யாச் செய்கையை சிறவாச் சிறப்பினை
வெய்யை தணியை விழுமியை நொய்யை
செய்யை பசியை வெளியை கரியை
ஆக்குதி அழித்தி ஆன பல்பொருள்
நீக்குதி தொகுத்தி நீங்குதி அடைதி
ஏனைய வாகிய எண்ணில் பல்குணம்
நினைதொறும் மயக்கும் நீர்மைய ஆதலின்
ஓங்குகடல் உடுத்த ஒற்றி யூர
ஈங்கிது மொழிவார் யாஅர் தாஅம்
சொல்நிலை சுருங்கின் அல்லது

நின்னியல் அறிவோர் யார்இரு நிலத்தே.

[7]
நிலத்திடைப் பொறையாய் அவாவினில் நீண்டு
சொலத்தகு பெருமைத் தூரா ஆக்கை
மெய்வளி ஐயொடு பித்தொன் றாக
ஐவகை நெடுங்காற் றாங்குடன் அடிப்ப
நரையெனும் நுரையே நாடொறும் வெளுப்பத்

திரையுடைத் தோலே செழுந்திரை யாகக்
கூடிய குருதி நீரினுள் நிறைந்து
மூடிய இருமல் ஓசையின் முழங்கிச்
சுடுபசி வெகுளிச் சுறவினம் எறியக்
குடரெனும் அரவக் கூட்டம்வந் தொலிப்ப

ஊன்தடி எலும்பின் உள்திடல் அடைந்து
தோன்றிய பல்பிணிப் பின்னகம் சுழலக்
கால்கையின் நரம்பே கண்ட மாக
மேதகு நிணமே மெய்ச்சா லாக
முழக்குடைத் துளையே முகங்க ளாக
வழுக்குடை மூக்கா றோதம்வந் தொலிப்ப
இப்பரி சியற்றிய உடலிருங் கடலுள்
துப்புர வென்னும் சுழித்தலைப் பட்டிங்
காவா என்றுநின் அருளினைப் பெற்றவர்
நாவா யாகிய நாதநின் பாதம்

முந்திச் சென்று முறைமையின் வணங்கிச்
சிந்தைக் கூம்பினைச் செவ்விதின் நிறுத்தி
உருகிய ஆர்வப் பாய்விரித் தார்த்துப்
பெருகிய நிறையெனுங் கயிற்றிடைப் பிணித்துத்
துன்னிய சுற்றத் தொடர்க்கயி றறுத்து

மன்னிய ஒருமைப் பொறியினை முறுக்கிக்
காமப் பாரெனுங் கடுவெளி அற்றத்
தூமச் சோதிச் சுடருற நிறுத்திச்
சுருங்கா உணர்ச்சித் துடுப்பினைத் துழாவி
நெருங்கா அளவில் நீள்கரை ஏற்ற

ஆங்கவ் யாத்திரை போக்குதி போலும்
ஓங்குகடல் உடுத்த ஒற்றியூ ரோயே.

[8]
ஒற்றி யூர உலவா நின்குணம்
பற்றி யாரப் பரவுதல் பொருட்டா
என்னிடைப் பிறந்த இன்னாப் புன்மொழி
நின்னிடை அணுகா நீர்மைய ஆதலின்
ஆவலித் தழுதல் அகன்ற அம்மனை

கேவலம் சேய்மையிற் கேளான் ஆயினும்
பிரித்தற் கரிய பெற்றிய தாகிக்
குறைவினில் ஆர்த்தும் குழவிய தியல்பினை
அறியா தெண்ணில் ஊழிப் பிறவியின்
மயங்கிக் கண்ணிலர் கண்பெற் றாங்கு

தாய்தலைப் படநின் தாளிணை வணக்கம்
வாய்தலை அறியா மயக்குறும் வினையேன்
மல்கிய இன்பத் தோடுடன் கூடிய
எல்லையில் அவாவினில் இயற்றிய வாகக்
கட்டிய நீயே அவிழ்க்கின் அல்லது

எட்டனை யாயினும் யான்அவிழ்க் கறியேன்
துன்னிடை இருளெனும் தூற்றிடை ஒதுங்கி
வெள்ளிடை காண விருப்புறு வினையேன்
தந்தையுந் தாயுஞ் சாதியும் அறிவும்நம்
சிந்தையுந் திருவுஞ் செல்கதித் திறனும்

துன்பமுந் துறவுந் தூய்மையும் அறிவும்
இன்பமும் புகழும் இவைபல பிறவும்
சுவைஒளி ஊறோசை நாற்றத் தோற்றமும்
என்றிவை முதலா விளங்குவ எல்லாம்
ஒன்றநின் அடிக்கே ஒருங்குடன் வைத்து
நின்றனன் தமியேன் நின்னடி அல்லது
சார்வுமற் றின்மையின் தளர்ந்தோர் காட்சிச்
சேர்விட மதனைத் திறப்பட நாடி
எய்துதற் கரியோய் யானினிச்
செய்வதும் அறிவனோ தெரியுங் காலே.

[9]
காலற் சீறிய கழலோய் போற்றி
மூலத் தொகுதி முதல்வ போற்றி
ஒற்றி மாநகர் உடையோய் போற்றி
முற்றும் ஆகிய முதல்வ போற்றி
அணைதொறுஞ் சிறக்கும் அமிர்தே போற்றி
இணைபிறி தில்லா ஈச போற்றி
ஆர்வஞ் செய்பவர்க் கணியோய் போற்றி
தீர்வில் இன்சுவைத் தேனே போற்றி
வஞ்சனை மாந்தரை மறந்தோய் போற்றி
நஞ்சினை அமிர்தாய் நயந்தோய் போற்றி

விரிகடல் வையக வித்தே போற்றி
புரிவுடை வனமாய்ப் புணர்ந்தோய் போற்றி
காண முன்பொருள் கருத்துறை செம்மைக்
காணி யாகிய அரனே போற்றி
வெம்மை தண்மையென் றிவைகுணம் உடைமையின்

பெண்ணோ டாணெனும் பெயரோய் போற்றி
மேவிய அவர்தமை வீட்டினிற் படுக்கும்
தீப மாகிய சிவனே போற்றி
மாலோய் போற்றி மறையோய் போற்றி
மேலோய் போற்றி வேதிய போற்றி

சந்திர போற்றி தழலோய் போற்றி
இந்திர போற்றி இறைவ போற்றி
அமரா போற்றி அழகா போற்றி
குமரா போற்றி கூத்தா போற்றி
பொருளே போற்றி போற்றி என்றுனை

நாத்தழும் பிருக்க நவிற்றின் அல்லது
ஏத்துதற் குரியோர் யாரிரு நிலத்தே.

[10]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.057   விடையவன், விண்ணும் மண்ணும் தொழ  
பண் - பஞ்சமம்   (திருத்தலம் திருவொற்றியூர் ; (திருத்தலம் அருள்தரு வடிவுடையம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கத்தியாகர் திருவடிகள் போற்றி )
விடையவன், விண்ணும் மண்ணும் தொழ நின்றவன், வெண்மழுவாள
படையவன், பாய் புலித்தோல் உடை, கோவணம், பல்கரந்தைச்
சடையவன், சாமவேதன், சசி தங்கிய சங்க வெண்தோடு
உடையவ(ன்), ஊனம் இ(ல்)லி உறையும்(ம்) இடம்
ஒற்றியூரே.

[1]
பாரிடம் பாணிசெய்ய, பறைக்கண் செறு பல்கணப்பேய்
சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கைத்
தார் இடும் போர் விடையவன்; தலைவன்; தலையே கலனா,
ஊர் இடும் பிச்சை கொள்வான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

[2]
விளிதரு நீரும், மண்ணும், விசும்போடு, அனல், காலும், ஆகி;
அளி தரு பேர் அருளான்; அரன் ஆகிய ஆதிமூர்த்தி;
களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த
ஒளி தரு வெண்பிறையான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

[3]
அரவமே கச்சு அது ஆக அசைத்தான்; அலர்க்கொன்றை அம்தார்
விரவி, வெண் நூல் கிடந்த விரை ஆர் வரைமார்பன்; எந்தை;
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து, படர்புன்சடை மேல்
உரவு நீர் ஏற்ற பெம்மான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

[4]
விலகினார் வெய்ய பாவம் விதியால் அருள்செய்து, நல்ல
பலகின் ஆர் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே,
அலகினால் வீசி நீர் கொண்டு, அடிமேல் அலர் இட்டு, முட்டாது
உலகினார் ஏத்த நின்றான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

[5]
கமையொடு நின்ற சீரான்; கழலும் சிலம்பும் ஒலிப்ப,
சுமையொடு மேலும் வைத்தான், விரிகொன்றையும்
சோமனையும்;
அமையொடு நீண்ட திண்தோள் அழகு ஆய பொன்-தோடு இலங்க,
உமையொடும் கூடி நின்றான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

[6]
நன்றியால் வாழ்வது உள்ளம், உலகுக்கு ஒரு நன்மையாலே,
கன்றினார் மும்மதிலும் கருமால்வரையே சிலையா,
பொன்றினார் வார் சுடலைப் பொடி-நீறு அணிந்தார் அழல் அம்பு
ஒன்றினால் எய்த பெம்மான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

[7]
பெற்றியால் பித்தன் ஒப்பான்; பெருமான்; கருமான் உரி-தோல்
சுற்றியான்; சுத்தி, சூலம், சுடர்க்கண் நுதல்மேல் விளங்க,
தெற்றியான் செற்று, அரக்கன்(ன்) உடலைச் செழு மால்வரைக்கீழ்
ஒற்றியான்; முற்றும் ஆள்வான்; உறையும்(ம்) இடம்
ஒற்றியூரே.

[8]
திருவின் ஆர் போதினாலும் திருமாலும், ஒர் தெய்வம் முன்னி,
தெரிவினால் காணமாட்டார்; திகழ் சேவடி சிந்தை செய்து,
பரவினார் பாவம் எல்லாம் பறைய, படர் பேர் ஒளியோடு
ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

[9]
தோகை அம்பீலி கொள்வார், துவர்க்கூறைகள் போர்த்து உழல்வார்
ஆகம செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமாக்
கூகை அம் மாக்கள் சொல்லைக் குறிக்கொள்ளன் மின்! ஏழ் உலகும்
ஓகை தந்து ஆள வல்லான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

[10]
ஒண்பிறை மல்கு சென்னி இறைவன்(ன்) உறை ஒற்றியூரை,
சண்பையர் தம் தலைவன்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன
பண் புனை பாடல்பத்தும் பரவிப் பணிந்து ஏத்த வல்லார்
விண் புனை மேல் உலகம் விருப்பு எய்துவர்; வீடு எளிதே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.045   வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத  
பண் - திருநேரிசை:கொல்லி   (திருத்தலம் திருவொற்றியூர் ; (திருத்தலம் அருள்தரு வடிவுடையம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கத்தியாகர் திருவடிகள் போற்றி )
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத கீதன் தன் பாதம்
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துள் கலந்து நின்று(வ்)
உள்ளத்துள் ஒளியும் ஆகும், ஒற்றியூர் உடைய கோவே.

[1]
வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா; வானவர் இறைவன் நின்று,
புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில்,
அசிர்ப்பு எனும் அருந்தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி
உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.

[2]
தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீா
வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள், வல்லீர் ஆகில்!
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார்
ஊனத்தை ஒழிப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே.

[3]
காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண்ணாதே,
சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு தன்னை
ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு
ஓமத்துள் ஒளி அது ஆகும், ஒற்றியூர் உடைய கோவே.

[4]
சமையம் மேல் ஆறும் ஆகி, தான் ஒரு சயம்பு ஆகி,
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன்;
கமையினை உடையர் ஆகிக் கழல் அடி பரவுவாருக்கு
உமை ஒரு பாகர் போலும்-ஒற்றியூர் உடைய கோவே.

[5]
ஒருத்தி தன் தலைச் சென்றாளைக் கரந்திட்டான்; உலகம் ஏத்த
ஒருத்திக்கு நல்லன் ஆகி, மறுப் படுத்து ஒளித்தும், ஈண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தான்; உணர்வினால் ஐயம் உண்ணி;
ஒருத்திக்கும் நல்லன் அல்லன் ஒற்றியூர் உடைய கோவே.

[6]
பிணம் உடை உடலுக்கு ஆகப் பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வு எனும் போகம் வேண்டா; போக்கல் ஆம், பொய்யை நீங்க;
நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு
உணர்வினோடு இருப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே.

[7]
பின்னு வார் சடையான் தன்னைப் பிதற்றிலாப் பேதைமார்கள்
துன்னுவார், நரகம் தன்னுள்;-தொல்வினை தீர வேண்டின்,
மன்னு வான் மறைகள் ஓதி, மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி,
உன்னுவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.

[8]
முள்குவார் போகம் வேண்டின் முயற்றியால்; இடர்கள் வந்தால்
எள்குவார்; எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார்
பள்குவார் பத்தர் ஆகிப் பாடியும் ஆடியும் நின்று
உள்குவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.

[9]
வெறுத்து உகப் புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும்; நெஞ்சே!
மறுத்து உக, ஆர்வச் செற்றக் குரோதங்கள் ஆன மாய!
பொறுத்து உகப் புட்பகத்தேர் உடையானை அடர ஊன்றி
ஒறுத்து உகந்து அருள்கள் செய்தார், ஒற்றியூர் உடைய கோவே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.046   ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருவொற்றியூர் ; (திருத்தலம் அருள்தரு வடிவுடையம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கத்தியாகர் திருவடிகள் போற்றி )
ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து ஓர் கொடுமை வைத்து
காம்பு இலா மூழை போலக் கருதிற்றே முகக்க மாட்டேன்;
பாம்பின் வாய்த் தேரை போலப் பலபல நினைக்கின்றேனை
ஓம்பி நீ உய்யக் கொள்ளாய், ஒற்றியூர் உடைய கோவே!

[1]
மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி,
சினம் எனும் சரங்கை ஏற்றி, செறி கடல் ஓடும் போது,
மதன் எனும் பாறை தாக்கி மறியும் போது, அறிய ஒண்ணாது
உனை உனும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே!

[2]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.086   செற்றுக் களிற்று உரி கொள்கின்ற  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் திருவொற்றியூர் ; (திருத்தலம் அருள்தரு வடிவுடையம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கத்தியாகர் திருவடிகள் போற்றி )
செற்றுக் களிற்று உரி கொள்கின்ற ஞான்று செரு வெண் கொம்பு ஒன்று
இற்றுக் கிடந்தது போலும், இளம்பிறை; பாம்பு, அதனைச்
சுற்றிக் கிடந்தது, கிம்புரி போலச் சுடர் இமைக்கும்;
நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால்-ஒற்றியூரனுக்கே.

[1]
சொல்லக் கருதியது ஒன்று உண்டு, கேட்கில்; தொண்டு ஆய் அடைந்தார்
அல்லல் படக் கண்டு பின் என் கொடுத்தி?-அலை கொள் முந்நீர்
மல்லல்-திரைச் சங்கம் நித்திலம் கொண்டு வம்பக் கரைக்கே
ஒல்லை(த்) திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே!

[2]
பரவை வரு திரை நீர்க் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல்
அரவம் அணி தரு-கொன்றை, இளந் திங்கள், சூடியது ஓர்
குரவ நறுமலர், கோங்கம், அணிந்து குலாய-சென்னி,
உரவு திரை கொணர்ந்து எற்று, ஒற்றியூர் உறை உத்தமனே!

[3]
தான் அகம்காடு, அரங்கு ஆக உடையது; தன் அடைந்தார்
ஊன் அகம் நாறும் உடை தலையில், பலி கொள்வது, தான்;
தேன் அகம் நாறும் திரு ஒற்றியூர் உறை வார் அவர்தாம்
தான் அகமே வந்து போனகம் வேண்டி உழிதர்வரே.

[4]
வேலைக்-கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த
மாலைச் சடையார்க்கு உறைவு இடம் ஆவது, வாரி குன்றா
ஆலைக் கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த
சோலை, திரு ஒற்றியூரை எப்போதும் தொழுமின்களே!

[5]
புற்றினில் வாழும் அரவுக்கும், திங்கட்கும், கங்கை என்னும்
சிற்றிடையாட்கும், செறிதரு கண்ணிக்கும், சேர்வு இடம் ஆம்-
பெற்றுடையான், பெரும் பேச்சு உடையான், பிரியாது எனை ஆள்
விற்று உடையான் ஒற்றியூர் உடையான் தன் விரிசடையே.

[6]
இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை; இமயம் என்னும்
குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்குக் கூறு இட்ட நாள்
அன்று, அரைக் கண்ணும் கொடுத்து, உமையாளையும் பாகம் வைத்த
ஒன்றரைக் கண்ணன் கண்டீர், ஒற்றியூர் உறை உத்தமனே!

[7]
சுற்றி வண்டு யாழ் செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு
பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர்; பிறர் இடை நீ
ஒற்றி கொண்டாய்; ஒற்றியூரையும் கைவிட்டு, உறும் என்று எண்ணி
விற்றி கண்டாய்; மற்று இது ஒப்பது இல், இடம்-வேதியனே!

[8]
சுற்றிக் கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவு அறியான்;
ஒற்றித் திரி தந்து நீ என்ன செய்தி? உலகம் எல்லாம்
பற்றித் திரி தந்து பல்லொடு நா மென்று கண் குழித்துத்
தெற்றித்து இருப்பது அல்லால், என்ன செய்யும், இத் தீவினையே?

[9]
அம் கள் கடுக்கைக்கு முல்லைப் புறவம்; முறுவல் செய்யும்
பைங்கண்-தலைக்கு சுடலைக் களரி; பரு மணி சேர்
கங்கைக்கு வேலை; அரவுக்குப் புற்று; கலை நிரம்பாத்
திங்கட்கு வானம்-திரு ஒற்றியூரர் திருமுடியே.

[10]
தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இறப் பாதம் தன்னால்
ஒருக்கின ஆறு அடியேனைப் பிறப்பு அறுத்து ஆள வல்லான்,
நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்த நஞ்சைப்
பரு(க்)கின ஆறு என் செய்கேன்?-ஒற்றியூர் உறை பண்டங்கனே!

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.024   ஒற்றி ஊரும் ஒளி மதி,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருவொற்றியூர் ; (திருத்தலம் அருள்தரு வடிவுடையம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கத்தியாகர் திருவடிகள் போற்றி )
ஒற்றி ஊரும் ஒளி மதி, பாம்பினை;
ஒற்றி ஊரும் அப் பாம்பும் அதனையே
ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன்
ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே.

[1]
வாட்டம் ஒன்று உரைக்கும் மலையான் மகள்
ஈட்டவே, இருள் ஆடி, இடு பிணக்-
காட்டில் ஓரி கடிக்க வெடித்தது ஓர்
ஓட்டை வெண் தலைக் கை-ஒற்றியூரரே.

[2]
கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின்,
ஆற்றுத் தண்டத்து அடக்கும் அரன் அடி!
நீற்றுத் தண்டத்தராய் நினைவார்க்கு எலாம்
ஊற்றுத்தண்டு ஒப்பர்போல், ஒற்றியூரரே.

[3]
சுற்றும் பேய் சுழலச் சுடுகாட்டு எரி
பற்றி ஆடுவர்; பாய் புலித்தோலினர்-
மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய்
ஒற்றியூர் புக்கு உறையும் ஒருவரே.

[4]
புற்றில் ஆடு அரவு ஆட்டி, உமையொடு
பெற்றம் ஏறு உகந்து, ஏறும் பெருமையான்
மற்றையாரொடு வானவரும் தொழ
ஒற்றியூர் உறைவான் ஓர் கபாலியே.

[5]
போது தாழ்ந்து புதுமலர் கொண்டு-நீர்-
மாது தாழ்சடை வைத்த மணாளனார்;
ஓது வேதியனார், திரு ஒற்றியூர்;-
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

[6]
பலவும் அன்னங்கள் பல்மலர்மேல்-துஞ்சும்,
கலவமஞ்ஞைகள் கார் என எள்குறும்,
உலவு பைம்பொழில் சூழ் திரு ஒற்றியூர்
நிலவினான் அடியே அடை-நெஞ்சமே!

[7]
ஒன்று போலும் உகந்து அவர் ஏறிற்று;
ஒன்று போலும் உதைத்துக் களைந்தது;
ஒன்று போல் ஒளி மா மதி சூடிற்று;
ஒன்று போல் உகந்தார், ஒற்றியூரரே.

[8]
படை கொள் பூதத்தார், வேதத்தர், கீதத்தர்,
சடை கொள் வெள்ளத்தர், சாந்தவெண் நீற்றினர்,
உடையும் தோல் உகந்தார், உறை ஒற்றியூர்
அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே.

[9]
வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை
வரையினால் வலி செற்றவர் வாழ்வு இடம்,
திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர்,
உரையினால் பொலிந்தார் உயர்ந்தார்களே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.045   வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர்  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருவொற்றியூர் ; (திருத்தலம் அருள்தரு வடிவுடையம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கத்தியாகர் திருவடிகள் போற்றி )
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மதமத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி,
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று, திசை சேர நடம் ஆடி, சிவலோக(ன்)னார்
உண்டார் நஞ்சு, உலகுக்கு ஓர் உறுதி வேண்டி; ஒற்றியூர் மேய ஒளி வண்ண(ன்)னார்;
கண்டேன், நான் கனவு அகத்தில்; கண்டேற்கு என்
தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்ட(வ்)வே.

[1]
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து, வெள் ஏறு ஏறி, அணி கங்கை செஞ்சடை மேல் ஆர்க்கச் சூடி,
பாகத்து ஓர் பெண் உடையார்; ஆணும் ஆவார்; பசு ஏறி உழி தரும் எம் பரமயோகி;
காமத்தால் ஐங்கணையான் தன்னை வீழக் கனலா எரி விழித்த கண் மூன்றி(ன்)னார்
ஓமத்தால் நால் மறைகள் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உறைகின்றாரே.

[2]
வெள்ளத்தைச் செஞ்சடை மேல் விரும்பி வைத்தீர்! வெண்மதியும் பாம்பும் உடனே வைத்தீர்!
கள்ளத்தை மனத்து அகத்தே கரந்து வைத்தீர்! கண்டார்க்குப் பொல்லாது கண்டீர்! எல்லே
கொள்ளத்தான் இசை பாடிப் பலியும் கொள்ளீர்! கோள் அரவும், குளிர்மதியும், கொடியும், காட்டி
உள்ளத்தை நீர் கொண்டீர் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உடைய கோவே!.

[3]
நரை ஆர்ந்த விடை ஏறி, நீறு பூசி, நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து, ஓர் தலை கை ஏந்தி,
உரையா வந்து, இல் புகுந்து, பலி தான் வேண்ட, எம் அடிகள்! உம் ஊர்தான் ஏதோ? என்ன,
விரையாதே கேட்டியேல், வேல்கண் நல்லாய்! விடும் கலங்கள் நெடுங்கடலுள் நின்று தோன்றும்,
திரை மோதக் கரை ஏறிச் சங்கம் ஊரும், திரு ஒற்றியூர் என்றார்; தீய ஆறே!.

[4]
மத்தமாகளியானை உரிவை போர்த்து, வானகத்தார் தானகத்தார் ஆகி நின்று,
பித்தர் தாம் போல் அங்கு ஓர் பெருமை பேசி, பேதையரை அச்சுறுத்தி, பெயரக் கண்டு,
பத்தர்கள் தாம் பலர் உடனே கூடிப் பாடி, பயின்று இருக்கும் ஊர் ஏதோ? பணியீர்! என்ன,
ஒத்து அமைந்த உத்தரநாள் தீர்த்தம் ஆக ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே.

[5]
கடிய விடை ஏறி, காளகண்டர் கலையோடு மழுவாள் ஓர் கையில் ஏந்தி,
இடிய பலி கொள்ளார்; போவார் அல்லர்; எல்லாம் தான் இவ் அடிகள் யார்? என்பாரே;
வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம்; மயிலாப்புள்ளே
செடி படு வெண்தலை ஒன்று ஏந்தி வந்து, திரு ஒற்றியூர் புக்கார், தீய ஆறே!.

[6]
வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார், வாழ்த்துவார், வந்து நிற்பார்,
எல்லை எம்பெருமானைக் காணோம் என்ன, எவ் ஆற்றால் எவ்வகையால் காணமாட்டார்;
நல்லார்கள் நால் மறையோர் கூடி நேடி, நாம் இருக்கும் ஊர் பணியீர், அடிகேள்! என்ன,
ஒல்லை தான் திரை ஏறி ஓதம் மீளும் ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே.

[7]
நிலைப்பாடே நான் கண்டது; ஏடீ, கேளாய்! நெருநலை நன்பகல இங்கு ஓர் அடிகள் வந்து,
கலைப்பாடும் கண்மலரும் கலக்க, நோக்கி, கலந்து பலி இடுவேன்; எங்கும் காணேன்;
சலப்பாடே; இனி ஒரு நாள் காண்பேன் ஆகில், தன் ஆகத்து   என் ஆகம் ஒடுங்கும் வண்ணம்,
உலைப்பாடே படத் தழுவி, போகல் ஒட்டேன்-ஒற்றியூர் உறைந்து இங்கே திரிவானையே.

[8]
மண் அல்லை; விண் அல்லை; வலயம் அல்லை; மலை அல்லை; கடல் அல்லை; வாயு அல்லை;
எண் அல்லை; எழுத்து அல்லை; எரியும் அல்லை; இரவு அல்லை; பகல் அல்லை; யாவும் அல்லை;
பெண் அல்லை; ஆண் அல்லை; பேடும் அல்லை; பிறிது அல்லை; ஆனாயும், பெரியாய்! நீயே;
உள்-நல்லை, நல்லார்க்கு, தீயை அல்லை உணர்வு அரிய ஒற்றியூர் உடைய கோவே!.

[9]
மரு உற்ற மலர்க் குழலி மடவாள் அஞ்ச, மலை துளங்கத் திசை நடுங்கச் செறுத்து நோக்கி,
செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள, திருவடியின் விரல் ஒன்றால் அலற ஊன்றி,
உரு ஒற்றி அங்கு இருவர் ஓடிக் காண ஓங்கின அவ் ஒள் அழலார் இங்கே வந்து,
திரு ஒற்றியூர், நம் ஊர் என்று போனார்; செறி வளைகள் ஒன்று ஒன்றாய்ச் சென்ற ஆறே!.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.054   அழுக்கு மெய் கொடு உன்  
பண் - தக்கேசி   (திருத்தலம் திருவொற்றியூர் ; (திருத்தலம் அருள்தரு வடிவுடையம்மை உடனுறை அருள்மிகு படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் திருவடிகள் போற்றி )
ஒரு நாள் திருவாரூரை மிக நினைந்து, ஒற்றியூர்ப் பெருமானை வணங்கிக்கொண்டு, ஒற்றியூரைக் கடந்து அடிபெயர்த்து வைத்தார். சங்கிலியார்க்குச் செய்த சபதம் பிழைத்த காரணத்தால், சுந்தரர்க்குக் கண்ணொளி மறைந்தது. சத்தியம் பிழைத்த காரணத்தான் இது நிகழ்ந்த தென்றெண்ணி ஒற்றியூர்ப் பெருமானை நினைந்து, அழுக்கு மெய்கொடு என்று தொடங்கும் திருப்பதிகம் பாடித் தொழுதார்.
அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன்; அதுவும் நான் படப் பாலது ஒன்று   ஆனால்,
பிழுக்கை வாரியும் பால் கொள்வர்; அடிகேள்! பிழைப்பன் ஆகிலும் திருவடிப் பிழையேன்!
வழுக்கி வீழினும் திருப் பெயர் அல்லால், மற்று நான் அறியேன், மறு மாற்றம்;
ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .  

[1]
கட்டனேன் பிறந்தேன், உனக்கு ஆள் ஆய்; காதல் சங்கிலி காரணம் ஆக,
எட்டினால்-திகழும் திருமூர்த்தி! என் செய்வான், அடியேன் எடுத்து உரைக்கேன்?
பெட்டன் ஆகிலும், திருவடி, பிழையேன், பிழைப்பன் ஆகிலும் திருவடிக்கு அடிமை;
ஒட்டினேன், எனை நீ செய்வது எல்லாம்; ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .

[2]
கங்கை தங்கிய சடை உடைக் கரும்பே! கட்டியே! பலர்க்கும் களை கண்ணே!
அங்கை நெல்லியின் பழத்து இடை அமுதே! அத்த! என் இடர் ஆர்க்கு எடுத்து உரைக்கேன்?
சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல, வயிரம் முத்தொடு பொன் மணி வரன்றி,
ஒங்கும் மா கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!.

[3]
ஈன்று கொண்டது ஓர் சுற்றம் ஒன்று அன்றால்; யாவர் ஆகில் என், அன்பு உடையார்கள்?
தோன்ற நின்று அருள் செய்து அளித்திட்டால் சொல்லுவாரை அல்லாதன சொல்லாய்;
மூன்று கண் உடையாய்! அடியேன் கண் கொள்வதே கணக்கு வழக்கு ஆகில்,
ஊன்று கோல் எனக்கு ஆவது ஒன்று அருளாய் ஒற்றியூர் எலும் ஊர் உறைவானே!.

[4]
வழித்தலைப் படுவான் முயல்கின்றேன்; உன்னைப் போல் என்னைப் பாவிக்க மாட்டேன்;
சுழித்தலைப் பட்ட நீர் அது போலச் சுழல்கின்றேன்; சுழல்கின்றது, என் உள்ளம்;
கழித்தலைப் பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றிக் கறகற இழுக்கை
ஒழித்து, நீ அருள் ஆயின செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!.

[5]
மானை நோக்கியர் கண் வலைப் பட்டு, வருந்தி, யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி,
தேனை ஆடிய கொன்றையினாய்! உன் சீலமும் குணமும் சிந்தியாதே
நானும் இத்தனை வேண்டுவது; அடியேன் உயிரொடும் நரகத்து அழுந்தாமை,
ஊனம் உள்ளன தீர்த்து, அருள் செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!.

[6]
மற்றுத் தேவரை நினைந்து உனை மறவேன்; நெஞ்சினாரொடு வாழவும் மாட்டேன்;
பெற்றிருந்து பெறா தொழிகின்ற பேதையேன் பிழைத்திட்டதை அறியேன்;
முற்றும் நீ எனை முனிந்திட அடியேன் கடவது என்? உனை நான் மறவேனேல்,
உற்ற நோய் உறு பிணி தவிர்த்து அருளாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .

[7]
கூடினாய், மலை மங்கையை; நினையாய்; கங்கை ஆயிரமுகம் உடையாளை
சூடினாய் என்று சொல்லிய புக்கால், தொழும்பனேனுக்கும் சொல்லலும் ஆமே;
வாடி நீ இருந்து என் செய்தி? மனனே! வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி,
ஊடினால், இனி ஆவது ஒன்று உண்டே? ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!.

[8]
மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய்; மைந்தனே! மணியே! மணவாளா!
அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால், அழையேல், போ, குருடா! எனத் தரியேன்;
முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன்? முக்கணா! முறையோ? மறை ஓதீ!
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே! .

[9]
ஓதம் வந்து உலவும் கரை தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை, நாளும்
ஞாலம் தான் பரவப்படுகின்ற நால் மறை அங்கம் ஓதிய நாவன்-
சீலம் தான் பெரிதும் மிக வல்ல சிறுவன், வன் தொண்டன், ஊரன்-உரைத்த
பாடல் பத்து இவை வல்லவர் தாம் போய்ப் பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.091   பாட்டும் பாடிப் பரவித் திரிவார்  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருவொற்றியூர் ; (திருத்தலம் அருள்தரு வடிவுடையம்மை உடனுறை அருள்மிகு படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் திருவடிகள் போற்றி )
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்-
காட்டும் கலமும் திமிலும் கரைக்கே
ஓட்டும் திரைவாய் ஒற்றியூரே.

[1]
பந்தும் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார், செந்தீவண்ணர்,
எம்தம் அடிகள், இறைவர்க்கு இடம்போல்-
உந்தும் திரைவாய் ஒற்றியூரே.

[2]
பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்,
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்,
தவழும் மதி சேர் சடையாற்கு, இடம்போல்-
உகளும் திரைவாய் ஒற்றியூரே.

[3]
என்(ன்)னது எழிலும் நிறையும் கவர்வான்,-
புன்னை மலரும் புறவில்-திகழும்-
தன்னை முன்னம் நினைக்கத் தருவான்,
உன்னப்படுவான், -ஒற்றியூரே

[4]
பணம் கொள் அரவம் பற்றி, பரமன்,
கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி,
வணங்கும் இடை மென்மடவார் இட்ட
உணங்கல் கவர்வான்,-ஒற்றியூரே.

[5]
படை ஆர் மழுவன், பலவெண் நீற்றன்,
விடை ஆர் கொடியன், வேத நாவன்,
அடைவார் வினைகள் அறுப்பான், என்னை
உடையான், உறையும்-ஒற்றியூரே.

[6]
சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன், வினையை வீட்ட
நன்றும் நல்ல நாதன், நரை ஏறு
ஒன்றை உடையான்,-ஒற்றியூரே.

[7]
கலவ மயில் போல் வளைக்கை நல்லார்
பலரும் பரவும் பவளப்படியான்,
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்,-
உலவும் திரைவாய் ஒற்றியூரே.

[8]
பற்றி வரையை எடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்;
எற்றும் வினைகள் தீர்ப்பார்;-ஓதம்
ஒற்றும் திரைவாய் ஒற்றியூரே.

[9]
ஒற்றி ஊரும் அரவும் பிறையும்
பற்றி ஊரும் பவளச் சடையான்
ஒற்றியூர் மேல் ஊரன் உரைத்த
கற்றுப் பாட, கழியும், வினையே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list