சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

4.008   திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது - சிவனெனுமோசை - பியந்தைக்காந்தாரம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
சிவன் எனும் ஓசை அல்லது, அறையோ, உலகில்-திரு நின்ற செம்மை உளதே?-
அவனும் ஓர் ஐயம் உண்ணி; அதள் ஆடை ஆவது; அதன் மேல் ஒர் ஆடல் அரவம்;
கவண் அளவு உள்ள உள்கு; கரிகாடு கோயில்; கலன் ஆவது ஓடு, கருதில்;
அவனது பெற்றி கண்டும், அவன் நீர்மை கண்டும், அகம் தேர்வர், தேவர் அவரே.


[ 1]


விரி கதிர் ஞாயிறு அல்லர்; மதி அல்லர்; வேத விதி அல்லர்; விண்ணும் நிலனும்
திரி தரு வாயு அல்லர்; செறு தீயும் அல்லர்; தெளி நீரும் அல்லர், தெரியில்;
அரி தரு கண்ணியாளை ஒரு பாகம் ஆக, அருள் காரணத்தில் வருவார்
எரி அரவு ஆரம் மார்பர்; இமையாரும் அல்லர்; இமைப்பாரும் அல்லர், இவரே.


[ 2]


தேய் பொடி வெள்ளை பூசி, அதன் மேல் ஒர் திங்கள்-திலகம் பதித்த நுதலர்
காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர்; கரிகாடர்; கால் ஒர் கழலர்;
வேய் உடன் நாடு தோளி அவள் விம்ம, வெய்ய மழு வீசி, வேழ உரி போர்த்து
ஏ, இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும்! இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே?


[ 3]


வளர் பொறி ஆமை புல்கி, வளர் கோதை வைகி, வடி தோலும் நூலும் வளர,
கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர்; கிளர் காடும், நாடும், மகிழ்வர்;
நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி,
குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல், குலாவி உடனே.


[ 4]


உறைவது காடு போலும்; உரி-தோல் உடுப்பர்; விடை ஊர்வது; ஓடு கலனா;
இறை இவர் வாழும் வண்ணம் இதுவேலும், ஈசர் ஒரு பால் இசைந்தது; ஒரு பால்,
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான்;
அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது, அமரர் உலகே.


[ 5]


Go to top
கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி, கழல்கால் சிலம்ப, அழகு ஆர்
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார்; ஒருவர்; இருவர்;
மணி கிளர் மஞ்ஞை ஆல, மழை ஆடு சோலை மலையான் மகட்கும் இறைவர்
அணி கிளர் அன்ன வண்ணம், அவள் வண்ண வண்ணம்; அவர் வண்ண வண்ணம், அழலே.


[ 6]


நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர்; நளிர் கங்கை தங்கு முடியர்
மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல, கறை கொள் மணிசெய் மிடறர்;
முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும், எரி ஆடும் ஆறும், இவர் கைப்
பகை வளர் நாகம் வீசி, மதி அங்கு மாறும் இது போலும், ஈசர் இயல்பே?


[ 7]


ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி; மால் அயன் தன் உடல் வெந்து வீய, சுடர் நீறு
அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர்; தமியார் ஒருவர்; இருவர்;
களி கிளர் வேடம் உண்டு, ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார்-
அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக, எழில் வேதம் ஓதுமவரே.


[ 8]


மலை மடமங்கையோடும், வடகங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர்
தலை கலன் ஆக உண்டு, தனியே திரிந்து, தவவாணர் ஆகி முயல்வர்;
விலை இலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர்
அலைகடல் வெள்ளம் முற்றும் அலறக் கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே.


[ 9]


புது விரி பொன் செய் ஓலை ஒரு காது, ஒர் காது சுரிசங்கம் நின்று புரள,
விதி விதி வேத கீதம் ஒரு பாடும் ஓத, ஒரு பாடு மெல்ல நகுமால்;
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர்
இது இவர் வண்ண வண்ணம்; இவள் வண்ண வண்ணம்; எழில் வண்ண வண்ணம்,  இயல்பே!


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பொது - சிவனெனுமோசை
4.008   திருநாவுக்கரசர்   தேவாரம்   சிவன் எனும் ஓசை அல்லது,
Tune - பியந்தைக்காந்தாரம்   (பொது - சிவனெனுமோசை )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song