சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

4.029   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை அருள்தரு திருவதிகைநாயகி உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=qqYwyD7H4to  
Audio: https://www.youtube.com/watch?v=kAw-cHbeOLs  
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி,
வானினுள் வானவர்க்கும் அறியல் ஆகாத வஞ்சர்;
நான் எனில்-தானே என்னும் ஞானத்தார்; பத்தர் நெஞ்சுள்
தேனும் இன் அமுதும் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே


[ 1]


நொய்யவர்; விழுமியாரும்; நூலின் நுண்நெறியைக் காட்டும்
மெய்யவர்; பொய்யும் இல்லார்; உடல் எனும் இடிஞ்சில் தன்னில்
நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகிச்
செய்யவர்; கரிய கண்டர்-திருச் செம்பொன்பள்ளியாரே.


[ 2]


வெள்ளியர்; கரியர்;செய்யர்; விண்ணவர் அவர்கள் நெஞ்சுள்
ஒள்ளியர்; ஊழி ஊழி உலகம் அது ஏத்த நின்ற
பள்ளியர்; நெஞ்சத்து உள்ளார்; பஞ்சமம் பாடி ஆடும்
தெள்ளியர்; கள்ளம் தீர்ப்பார்-திருச் செம்பொன்பள்ளியாரே.


[ 3]


தந்தையும் தாயும் ஆகித் தானவன்; ஞானமூர்த்தி;
முந்திய தேவர் கூடி முறை முறை இருக்குச் சொல்லி,
எந்தை, நீ சரணம்! என்று அங்கு இமையவர் பரவி ஏத்தச்
சிந்தையுள் சிவம் அது ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே.


[ 4]


ஆறு உடைச் சடையர் போலும்; அன்பருக்கு அன்பர் போலும்;
கூறு உடை மெய்யர்போலும்; கோள் அரவு அரையர்போலும்;
நீறு உடை அழகர்போலும்-நெய்தலே கமழும் நீர்மைச்
சேறு உடை கமல வேலித் திருச் செம்பொன்பள்ளியாரே.


[ 5]


Go to top
ஞாலமும் அறிய வேண்டின்,நன்று என வாழல் உற்றீர்
காலமும் கழியல் ஆன கள்ளத்தை ஒழிய கில்லீர்
கோலமும் வேண்டா; ஆர்வச் செற்றங்கள் குரோதம் நீக்கில்
சீலமும் நோன்பும் ஆவார், திருச் செம்பொன்பள்ளியாரே.


[ 6]


புரி காலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும்;
எரி, காலே, மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும்;
தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலம் கண்ட எந்தை-திருச் செம்பொன்பள்ளியாரே.


[ 7]


கார் உடைக் கொன்றைமாலை கதிர் மதி அரவினோடும்
நீர் உடைச் சடையுள் வைத்த நீதியார்; நீதி உள்ள
பாரொடு விண்ணும், மண்ணும், பதினெட்டுக் கணங்கள், ஏத்தச்
சீரொடு பாடல் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே.


[ 8]


ஓவாத மறைவல்லானும், ஓத நீர்வண்ணன், காணா
மூவாத பிறப்பு இலாரும்; முனிகள் ஆனார்கள் ஏத்தும்
பூ ஆன மூன்று முந்நூற்று அறுபதும் ஆகும் எந்தை;
தேவாதிதேவர், என்றும்,-திருச் செம்பொன்பள்ளியாரே.


[ 9]


அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச் செய்து
சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான்
அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும்,
செங்கண் வெள் ஏறு அது ஏறும்-திருச் செம்பொன்பள்ளியாரே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்செம்பொன்பள்ளி
1.025   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மரு ஆர் குழலிமாது ஓர்
Tune - தக்கராகம்   (திருச்செம்பொன்பள்ளி சொர்னபுரீசர் சுகந்தவனநாயகியம்மை)
4.029   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு
Tune - திருநேரிசை   (திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
5.036   திருநாவுக்கரசர்   தேவாரம்   கான் அறாத கடி பொழில்
Tune - திருக்குறுந்தொகை   (திருச்செம்பொன்பள்ளி வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song