சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

4.100   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருஇன்னம்பர் - திருவிருத்தம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு ஏகாம்பரநாதர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=npcFMuLv1bM  
மன்னும் மலைமகள் கையால் வருடின; மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப் பொருள் ஆயின; தூக் கமலத்து
அன்ன வடிவின; அன்பு உடைத் தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன - இன்னம்பரான்தன் இணை அடியே.


[ 1]


பைதல்பிணக்குழைக் காளி வெங்கோபம் பங்கப்படுப்பான்
செய்தற்கு அரிய திருநடம் செய்தன; சீர் மறையோன்
உய்தல் பொருட்டு வெங் கூற்றை உதைத்தன; உம்பர்க்கு எல்லாம்
எய்தற்கு அரியன-இன்னம்பரான்தன் இணை அடியே.


[ 2]


சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின; தூ மலரால்
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின; மன்னும் மறைகள் தம்மில்
பிணங்கி நின்று இன்ன(அ)அளவு என்று அறியாதன; பேய்க்கணத்தோடு
இணங்கி நின்று ஆடின-இன்னம்பரான்தன் இணை அடியே.


[ 3]


ஆறு ஒன்றிய சமயங்களின் அவ் அவர்க்கு அப் பொருள்கள்
வேறு ஒன்று இலாதன; விண்ணோர் மதிப்பன; மிக்கு உவமன்
மாறு ஒன்று இலாதன; மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறு ஒன்று இலாதன-இன்னம்பரான்தன் இணை அடியே.


[ 4]


அரக்கர் தம் முப்புரம் அம்பு ஒன்றினால் அடல் அங்கியின் வாய்க்
கரக்க முன் வைதிகத் தேர்மிசை நின்றன; கட்டு உருவம்
பரக்க வெங்கான் இடை வேடு உரு ஆயின; பல்பதிதோறு
இரக்க நடந்தன-இன்னம்பரான்தன் இணை அடியே.


[ 5]


Go to top
கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின; கேடு படா
ஆண்டும் பலபலஊழியும் ஆயின; ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின; மேவு சிலம்பு
ஈண்டும் கழலின-இன்னம்பரான்தன் இணை அடியே.


[ 6]


போற்றும் தகையன; பொல்லா முயலகன் கோபப் புன்மை
ஆற்றும் தகையன; ஆறுசமயத்தவர் அவரைத்
தேற்றும் தகையன; தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றும் தகையன-இன்னம்பரான்தன் இணை அடியே.


[ 7]


பயம், புன்மை, சேர்தரு பாவம், தவிர்ப்பன; பார்ப்பதிதன்
குயம் பொன்மை மா மலர் ஆகக் குலாவின; கூட ஒண்ணாச்
சயம்பு என்றே, தகு தாணு என்றே, சதுர்வேதங்கள் நின்று
இயம்பும் கழலின-இன்னம்பரான்தன் இணைஅடியே.


[ 8]


அயன், நெடுமால், இந்திரன், சந்திராதித்தர், அமரர் எல்லாம்
சய சய என்று முப்போதும் பணிவன; தண்கடல் சூழ்
வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும்
இயபரம் ஆவன இன்னம்பரான்தன் இணைஅடியே.


[ 9]


தருக்கிய தக்கன்தன் வேள்வி தகர்த்தன; தாமரைப்போது,
உருக்கிய செம்பொன், உவமன் இலாதன; ஒண் கயிலை
நெருக்கிய வாள் அரக்கன் தலைபத்தும் நெரித்து, அவன்தன்
இருக்கு இயல்பு ஆயின-இன்னம்பரான்தன் இணை அடியே.


[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஇன்னம்பர்
3.095   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எண் திசைக்கும் புகழ் இன்னம்பர்
Tune - சாதாரி   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
4.072   திருநாவுக்கரசர்   தேவாரம்   விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர்
Tune - திருநேரிசை   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
4.100   திருநாவுக்கரசர்   தேவாரம்   மன்னும் மலைமகள் கையால் வருடின;
Tune - திருவிருத்தம்   (திருஇன்னம்பர் ஏகாம்பரநாதர் காமாட்சியம்மை)
5.021   திருநாவுக்கரசர்   தேவாரம்   என்னில் ஆரும் எனக்கு இனியார்
Tune - திருக்குறுந்தொகை   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)
6.089   திருநாவுக்கரசர்   தேவாரம்   அல்லி மலர் நாற்றத்து உள்ளார்
Tune - திருத்தாண்டகம்   (திருஇன்னம்பர் எழுத்தறிந்தவீசுவரர் கொந்தார்பூங்குழலம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song