சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

7.098   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருநன்னிலத்துப்பெருங்கோயில் - பஞ்சமம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=LhGswCFTYDk  
Audio: https://www.youtube.com/watch?v=pa-SoygOe9U  
தண் இயல் வெம்மையினான்; தலையில் கடைதோறும் பலி,
பண் இயல் மென்மொழியார், இடக் கொண்டு உழல் பண்டரங்கன்
புண்ணிய நால்மறையோர் முறையால் அடி போற்று இசைப்ப
நண்ணிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.


[ 1]


வலம் கிளர் மாதவம் செய் மலை மங்கை ஓர் பங்கினனாய்,
சலம் கிளர் கங்கை தங்கச் சடை ஒன்று இடையே தரித்தான்
பலம் கிளர் பைம்பொழில்-தண்பனி வெண்மதியைத் தடவ,
நலம் கிளர்-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.


[ 2]


கச்சியன்; இன் கருப்பூர் விருப்பன்; கருதிக் கசிவார்
உச்சியன்; பிச்சை உண்ணி(ய்); உலகங்கள் எல்லாம் உடையான்
நொச்சி அம் பச்சிலையால், நுரைநீர்-புனலால்,-தொழுவார்
நச்சிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.


[ 3]


பாடிய நால்மறையான்; படு பல் பிணக்காடு அரங்கா
ஆடிய மா நடத்தான் அடி போற்றி! என்று அன்பினராய்ச்
சூடிய செங்கையினார் பலதோத்திரம் வாய்த்த சொல்லி
நாடிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.


[ 4]


பிலம் தரு வாயினொடு பெரிதும் வலி மிக்கு உடைய
சலந்தரன் ஆகும் இருபிளவு ஆக்கிய, சக்கரம் முன்
நிலம் தரு மாமகள்கோன் நெடுமாற்கு அருள்செய்த பிரான்
நலம் தரு நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே


[ 5]


Go to top
வெண்பொடி மேனியினான்; கருநீலமணி மிடற்றான்,
பெண் படி செஞ்சடையான், பிரமன் சிரம் பீடு அழித்தான்
பண்பு உடை நல்மறையோர் பயின்று ஏத்தி, பல்கால் வணங்கும்
நண்பு உடை-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.


[ 6]


தொடை மலி கொன்றை துன்றும் சடையன், சுடர் வெண்மழுவாள்
படை மலி கையன், மெய்யில் பகட்டு ஈர் உரிப்போர்வையினான்
மடை மலி வண்கமலம் மலர்மேல் மட அன்னம் மன்னி
நடை மலி-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.


[ 7]


குளிர்தரு திங்கள், கங்கை, குரவோடு, அர, கூவிளமும்,
மிளிர்தரு புன்சடைமேல் உடையான், விடையான் விரை சேர்
தளிர் தரு கோங்கு, வேங்கை, தட மாதவி, சண்பகமும்,
நளிர்தரு-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.


[ 8]


கமர் பயில் வெஞ்சுரத்துக் கடுங் கேழல் பின் கானவனாய்,
அமர் பயில்வு எய்தி, அருச்சுனனுக்கு அருள்செய்த பிரான்
தமர் பயில் தண் விழவில்-தகு சைவர், தவத்தின் மிக்க
நமர், பயில்-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.


[ 9]


கருவரை போல் அரக்கன் கயிலை(ம்) மலைக்கீழ்க் கதற,
ஒருவிரலால் அடர்த்து, இன் அருள் செய்த உமாபதிதான்
திரை பொரு பொன்னி நன்நீர்த் துறைவன், திகழ் செம்பியர்கோன்,
நரபதி,-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.


[ 10]


Go to top
கோடு உயர் வெங்களிற்றுத் திகழ் கோச்செங்கணான் செய் கோயில்,
நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனைச்
சேடு இயல் சிங்கிதந்தை-சடையன், திரு ஆரூரன்
பாடிய பத்தும் வல்லார் புகுவார், பரலோகத்துளே.


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநன்னிலத்துப்பெருங்கோயில்
7.098   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தண் இயல் வெம்மையினான்; தலையில்
Tune - பஞ்சமம்   (திருநன்னிலத்துப்பெருங்கோயில் )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song