சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

4.093   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கண்டியூர் - திருவிருத்தம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=NnhnaN6N0fs  
வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சித்
தானவர் மால் பிரமன்(ன்) அறியாத தகைமையினான்,
ஆனவன், ஆதிபுராணன், அன்று ஓடிய பன்றி எய்த
கானவனை, கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே.


[ 1]


வானமதியமும் வாள் அரவும் புனலோடு சடைத்
தானம் அது என வைத்து உழல்வான், தழல் போல் உருவன்,
கானமறி ஒன்று கை உடையான், கண்டியூர் இருந்த
ஊனம் இல் வேதம் உடையனை, நாம் அடி உள்குவதே.


[ 2]


பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை,
உண்டு, அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும்;
கண்டம் கறுத்த மிடறு உடையான்; கண்டியூர் இருந்த
தொண்டர் பிரானை- கண்டீர்- அண்டவாணர் தொழுகின்றதே.


[ 3]


முடியின் முற்றாதது ஒன்று இல்லை, எல்லாம் உடன் தான் உடையான்
கொடியும் உற்ற(வ்) விடை ஏறி, ஓர் கூற்று ஒருபால் உடையான்;
கடிய முற்று அவ் வினைநோய் களைவான், கண்டியூர் இருந்தான்;
அடியும் உற்றார் தொண்டர்; இல்லைகண்டீர், அண்டவானரே.


[ 4]


பற்றி ஓர் ஆனை உரித்த பிரான்,பவளத்திரள் போல்
முற்றும் அணிந்தது ஓர் நீறு உடையான், முன்னமே கொடுத்த
கல்- தம் குடையவன் தான் அறியான் கண்டியூர் இருந்த
குற்றம் இல் வேதம் உடையானை ஆம், அண்டர் கூறுவதே.


[ 5]


Go to top
போர்ப் பனை யானை உரித்த பிரான்; பொறி வாய் அரவம்
சேர்ப்பது, வானத் திரை கடல் சூழ் உலகம்(ம்) இதனைக்
காப்பது காரணம் ஆக, கொண்டான்; கண்டியூர் இருந்த
கூர்ப்பு உடை ஒள்வாள் மழுவனை ஆம், அண்டர் கூறுவதே.


[ 6]


அட்டது காலனை; ஆய்ந்தது வேதம் ஆறு அங்கம்; அன்று
சுட்டது காமனை, கண் அதனாலே; தொடர்ந்து எரியக்
கட்டு அவை மூன்றும் எரித்த பிரான்; கண்டியூர் இருந்த
குட்டம் முன் வேதப்படையனை ஆம், அண்டர் கூறுவதே.


[ 7]


அட்டும் ஒலிநீர், அணி மதியும், மலர் ஆன எல்லாம்,
இட்டுப் பொதியும் சடைமுடியான், இண்டைமாலை; அம் கைக்
கட்டும் அரவு அது தான் உடையான்; கண்டியூர் இருந்த
கொட்டும் பறை உடை கூத்தனை ஆம், அண்டர் கூறுவதே.


[ 8]


மாய்ந்தன, தீவினை; மங்கின நோய்கள் மறுகி விழத்
தேய்ந்தன; பாவம் செறுக்ககில்லா, நம்மை; செற்று அநங்கைக்
காய்ந்த பிரான், கண்டியூர் எம்பிரான், அங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரான், அல்லனோ, அடியேனை ஆட்கொண்டவனே?


[ 9]


மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அவ் வாசுகியைத்
தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி
உண்ட பிரான், நஞ்சு ஒளித்த பிரான், அஞ்சி ஓடி நண்ணக்
கண்ட பிரான், அல்லனோ, கண்டியூர் அண்டவானவனே?



[ 10]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கண்டியூர்
3.038   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்!
Tune - கொல்லி   (திருக்கண்டியூர் வீரட்டேசுவரர் மங்கைநாயகியம்மை)
4.093   திருநாவுக்கரசர்   தேவாரம்   வானவர் தானவர் வைகல் மலர்
Tune - திருவிருத்தம்   (திருக்கண்டியூர் செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song