சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

7.019   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருநின்றியூர் - நட்டராகம் அருள்தரு உலகநாயகியம்மை உடனுறை அருள்மிகு மகாலட்சுமியீசுவரர் திருவடிகள் போற்றி
Audio: https://www.youtube.com/watch?v=DhIte7qQ1tE  
அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை பங்கினர் ஆம்;
பற்றவனார்; எம் பராபரர் என்று பலர் விரும்பும்
கொற்றவனார்; குறுகாதவர் ஊர் நெடு வெஞ்சரத்தால்
செற்றவனார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே .


[ 1]


வாசத்தின் ஆர் மலர்க் கொன்றை உள்ளார்; வடிவு ஆர்ந்த நீறு
பூசத்தினார்; புகலி(ந்)நகர் போற்றும் எம் புண்ணியத்தார்;
நேசத்தினால் என்னை ஆளும் கொண்டார்; நெடுமால் கடல் சூழ்
தேசத்தினார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே.


[ 2]


அம் கையில் மூ இலை வேலர்; அமரர் அடி பரவ,
சங்கையை நீங்க, அருளித் தடங்கடல் நஞ்சம் உண்டார்;
மங்கை ஒர்பாகர்; மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல்
செங்கயல் பாயும் வயல் பொலியும் திரு நின்றியூரே .


[ 3]


ஆறு உகந்தார், அங்கம்; நால்மறையார்; எங்கும் ஆகி அடல்
ஏறு உகந்தார், இசை ஏழ் உகந்தார்; முடிக் கங்கை தன்னை
வேறு உகந்தார்; விரிநூல் உகந்தார்; பரி சாந்தம் அதா
நீறு உகந்தார்; உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே.


[ 4]


வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லார்; நறு நெய் தயிர் பால்
அஞ்சும் கொண்டு ஆடிய வேட்கையினார்; அதிகைப் பதியே
தஞ்சம் கொண்டார்; தமக்கு என்றும் இருக்கை, சரண் அடைந்தார்
நெஞ்சம், கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே .


[ 5]


Go to top
ஆர்த்தவர், ஆடு அரவம்(ம்) அரைமேல்; புலி ஈர் உரிவை
போர்த்தவர்; ஆனையின் தோல் உடல் வெம் புலால் கை அகலப்
பார்த்தவர்; இன் உயிர், பார், படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றைச்
சேர்த்தவருக்கு உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே .


[ 6]


தலை இடை ஆர் பலி சென்று அகம் தோறும் திரிந்த செல்வர்;
மலை உடையாள் ஒரு பாகம் வைத்தார்; கல்-துதைந்த நன்நீர்-
அலை உடையார்; சடை எட்டும் சுழல, அரு நடம் செய்
நிலை உடையார்; உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே .


[ 7]


எட்டு உகந்தார், திசை; ஏழ் உகந்தார், எழுத்து; ஆறும் அன்பர்
இட்டு உகந்து ஆர் மலர்ப் பூசை இச்சிக்கும் இறைவர்; முன்நாள்
பட்டு உகும் பார் இடைக் காலனைக் காய்ந்து, பலி இரந்து ஊண்
சிட்டு உகந்தார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே.


[ 8]


காலமும் ஞாயிறும் ஆகி நின்றார்; கழல் பேண வல்லார்
சீலமும் செய்கையும் கண்டு உகப்பார்; அடி போற்று இசைப்ப,
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க,
நீலநஞ்சு உண்டவருக்கு இடம் ஆம் திரு நின்றியூரே .


[ 9]


வாயார், மனத்தால் நினைக்குமவருக்கு; அருந்தவத்தில்-
தூயார்; சுடுபொடி ஆடிய மேனியர்; வானில் என்றும்
மேயார்; விடை உகந்து ஏறிய வித்தகர்; பேர்ந்தவர்க்குச்
சேயார்; அடியார்க்கு அணியவர்; ஊர் திரு நின்றியூரே .


[ 10]


Go to top
சேரும் புகழ்த் தொண்டர் செய்கை அறாத் திரு நின்றியூரில்
சீரும் சிவகதி ஆய் இருந்தானைத் திரு நாவல் ஆ-
ரூரன் உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய்,
பாரும் விசும்பும் தொழ, பரமன்(ன்) அடி கூடுவரே .


[ 11]



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருநின்றியூர்
1.018   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம்,
Tune - நட்டபாடை   (திருநின்றியூர் இலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
5.023   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொடுங் கண் வெண்தலை கொண்டு,
Tune - திருக்குறுந்தொகை   (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
7.019   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை
Tune - நட்டராகம்   (திருநின்றியூர் மகாலட்சுமியீசுவரர் உலகநாயகியம்மை)
7.065   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   திருவும், வண்மையும், திண் திறல்
Tune - தக்கேசி   (திருநின்றியூர் இலட்சுமிவரதர் உலகநாயகியம்மை)

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song