சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய 'பகை கடிதல்'

Audio

திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே
அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே
இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே
குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே. ---(1)

மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முக உருவே எனநினை எனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே. ---(2)

இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே
மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே
குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே. ---(3)

பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே
நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால்
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே. ---(4)

அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே
மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே
இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே
குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. ---(5)

இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே
இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே
கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே. ---(6)

எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே
வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான்
பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே. ---(7)

இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே
கலகல கல எனமா கவினொடுவருமயிலே
குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே. ---(8)

இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே
சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே
தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே
குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. ---(9)

கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே
மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே. ---(10)

... ஸ்ரீ பகை கடிதல் முற்றிற்று.
Back to Top
This page was last modified on Thu, 22 Feb 2024 12:04:34 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

pagai kadithal