This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
கபிலதேவ நாயனார் மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை
11 - Thirumurai Pathigam 11.020  
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை.
| [1] |
கைக்கும் பிணியொடு கான் தலைப்படும் ஏல்வையினில் எய்க்கும் கவலைக் கிடைந்தடைந் தேன்வெம்மை நாவளைக்கும் பைக்கும் அரவரை யான்தந்த பாய்மத யானைபத்துத் திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே.
| [2] |
அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சமே அப்பம் இடிஅவலோ டெள்உண்டை கன்னல் வடிசுவையில் தாழ்வானை ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே வாழ்வானை வாழ்த்தியே வாழ்.
| [3] |
வாழைக் கனிபல வின்கனி மாங்கனி தாஞ்சிறந்த கூழைச் சுருள்குழை அப்பம்எள் ளுண்டையெல் லாந்துறுத்தும் பேழைப் பெருவயிற் றோடும் புகுந்தென் உளம்பிரியான் வேழத் திருமுகத் துச்செக்கர் மேனி விநாயகனே.
| [4] |
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.
| [5] |
கனிய நினைவொடு நாடொறும் காதற் படும்அடியார்க் கினியன் இனியொ ரின்னாங் கிலம்எவ ரும்வணங்கும் பனிவெண் பிறைநறுங் கொன்றைச் சடைப்பலி தேரியற்கை முனிவன் சிறுவன் பெருவெங்கொல் யானை முகத்தவனே.
| [6] |
யானை முகத்தான் பொருவிடையான் சேய்அழகார் மான மணிவண்ணன் மாமருகன் மேல்நிகழும் வெள்ளக் குமிழி மதத்து விநாயகன்என் உள்ளக் கருத்தின் உளன்.
| [7] |
உளதள வில்லதொர் காதல்என் நெஞ்சில்வன் நஞ்சமுண்ட வளரிள மாமணி கண்டன்வண் டாடுவண் கோதைபங்கத் திளவளர் மாமதிக் கண்ணியெம் மான்மகன் கைம்முகத்துக் களகள மாமதஞ் சேர்களி யானைக் கணபதியே.
| [8] |
கணங்கொண்ட வல்வினைகள் கண்கொண்ட நெற்றிப் பணங்கொண்ட பாந்தட் சடைமேல் மணங்கொண்ட தாதகத்த தேன்முரலுங் கொன்றையான் தந்தளித்த போதகத்தின் தாள்பணியப் போம்.
| [9] |
போகபந் தத்தந்தம் இன்றிநிற் பீர்புனை தார்முடிமேல் நாகபந் தத்தந்த நாள்அம் பிறையிறை யான்பயந்த மாகபந் தத்தந்த மாமழை போல்மதத் துக்கதப்போர் ஏகதந் தத்துஎந்தை செந்தாள் இணைபணிந் தேத்துமினே.
| [10] |
ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால் எப்பொழுதும் மாத்தனிவெண் கோட்டு மதமுகத்துத் தூத்தழல்போல் செக்கர்த் திருமேனிச் செம்பொற் கழல்ஐங்கை முக்கட் கடாயானை முன்
| [11] |
முன்னிளங் காலத்தி லேபற்றி னேன்வெற்றி மீன்உயர்த்த மன்னிளங் காமன்தன் மைத்துன னேமணி நீலகண்டத் தென்னிளங் காய்களி றேஇமை யோர்சிங்க மே,உமையாள் தன்னிளங் காதல னேசர ணாவுன் சரணங்களே.
| [12] |
சரணுடை யேன்என்று தலைதொட் டிருக்க முரண்உடையேன் அல்லேன் நான்முன்னம் திரள்நெடுங்கோட் டண்டத்தான் அப்புறத்தான் ஆனைமுகத் தான்அமரர் பண்டத்தான் தாள்பணியாய் பண்டு.
| [13] |
பண்டம்தம் ஆதரத் தான்என் றினியன வேபலவும் கொண்டந்த நாள்குறு காமைக் குறுகுவர் கூர்உணர்வில் கண்டந்த நீண்முடிக் கார்மத வார்சடைக் கற்றைஒற்றை வெண்தந்த வேழ முகத்தெம் பிரானடி வேட்கையரே.
| [14] |
வேட்கை வினைமுடித்து மெய்யடியார்க் கின்பஞ்செய்து ஆட்கொண் டருளும் அரன்சேயை வாட்கதிர்கொள் காந்தார, மார்பிற் கமழ்தார்க் கணபதியை வேந்தா உடைத்தமரர் விண்.
| [15] |
விண்ணுதல் நுங்கிய விண்ணும்மண் ணும்செய் வினைப்பயனும் பண்ணுதல் நுங்கடன் என்பர்மெய் அன்பர்கள் பாய்மதமாக் கண்ணுதல் நுங்கிய நஞ்சமுண் டார்கரு மாமிடற்றுப் பெண்ணுதல் நும்பிரி யாஒரு பாகன் பெருமகனே.
| [16] |
பெருங்காதல் என்னோடு பென்னோடை நெற்றி மருங்கார வார்செவிகள் வீசி ஒருங்கே திருவார்ந்த செம்முகத்துக் கார்மதங்கள் சோர வருவான்தன் நாமம் வரும்.
| [17] |
வருகோள் தருபெருந் தீமையும் காலன் தமரவர்கள் அரு கோட் டருமவ ராண்மையும் காய்பவன் கூர்ந்தன்பு தருகோள் தருமர பிற்பத்தர் சித்தத் தறியணையும் ஒருகோட் டிருசெவி முக்கண்செம் மேனிய ஒண்களிறே.
| [18] |
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன் ஒளியானைப் பாரோர்க் குதவும் அளியானைக் கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள் நண்ணுவதும் நல்லார் கடன்.
| [19] |
நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தை நாணநின்ற பொல்லா முகத்தெங்கள் போதக மேபுரம் மூன்றெரித்த வில்லான் அளித்த விநாயக னேயென்று மெய்ம்மகிழ வல்லார் மனத்தன்றி மாட்டாள் இருக்க மலர்த்திருவே.
| [20] |
This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:37 +0000