சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
8.106   மாணிக்க வாசகர்    திருவாசகம்   நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக்
பண் - அயிகிரி நந்தினி   (உத்தரகோசமங்கை )
Audio: https://sivaya.org/audio/8.106. நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனை.mp3
Audio: https://sivaya.org/thiruvaasagam/06 Neethal vinnappam Thiruvasagam.mp3

Back to Top
மாணிக்க வாசகர்    திருவாசகம்  
8.106   நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக்  
பண் - அயிகிரி நந்தினி   (திருத்தலம் உத்தரகோசமங்கை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கட்டளைக்கலித்துறை
கடையவனேனைக் கருணையினால் கலந்து, ஆண்டுகொண்ட
விடையவனே, விட்டிடுதி கண்டாய்? விறல் வேங்கையின் தோல்
உடையவனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
சடையவனே, தளர்ந்தேன்; எம்பிரான், என்னைத் தாங்கிக்கொள்ளே.

[1]
கொள் ஏர் பிளவு அகலாத் தடம் கொங்கையர் கொவ்வைச் செவ் வாய்
விள்ளேன் எனினும், விடுதி கண்டாய்? நின் விழுத் தொழும்பின்
உள்ளேன்; புறம் அல்லேன்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
கள்ளேன் ஒழியவும், கண்டுகொண்டு ஆண்டது எக் காரணமே?

[2]
கார் உறு கண்ணியர் ஐம் புலன் ஆற்றங்கரை மரமாய்
வேர் உறுவேனை விடுதி கண்டாய்?விளங்கும் திருவா
ரூர் உறைவாய், மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
வார் உறு பூண் முலையாள் பங்க, என்னை வளர்ப்பவனே.

[3]
வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி, இப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய்? வெண் மதிக் கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,
தெளிகின்ற பொன்னும், மின்னும், அன்ன தோற்றச் செழும் சுடரே.

[4]
செழிகின்ற தீப் புகு விட்டிலின், சில் மொழியாரில் பல் நாள்
விழுகின்ற என்னை விடுதி கண்டாய்? வெறி வாய் அறுகால்
உழுகின்ற பூ முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,
வழி நின்று, நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே.

[5]
மறுத்தனன் யான், உன் அருள் அறியாமையின், என் மணியே;
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்? வினையின் தொகுதி
ஒறுத்து, எனை ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
பொறுப்பர் அன்றே பெரியோர், சிறு நாய்கள் தம் பொய்யினையே?

[6]
பொய்யவனேனைப் பொருள் என ஆண்டு, ஒன்று பொத்திக்கொண்ட
மெய்யவனே, விட்டிடுதி கண்டாய்? விடம் உண் மிடற்று
மையவனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
செய்யவனே, சிவனே, சிறியேன் பவம் தீர்ப்பவனே.

[7]
தீர்க்கின்ற ஆறு என் பிழையை, நின் சீர் அருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தர கோச மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே!

[8]
இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினைப் பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு
ஒரு தலைவா மன்னும் உத்தர கோச மங்கைக்கு அரசே
பொரு தலை மூவிலை வேல் வலன் ஏந்திப் பொலிபவனே!

[9]
பொலிகின்ற நின் தாள் புகுதப்பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்று
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளி தேர் விளரி
ஒலி நின்ற பூம் பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
வலி நின்ற திண் சிலையால் எரித்தாய் புரம், மாறுபட்டே.

[10]
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப, யான் உன் மணி மலர்த் தாள்
வேறுபட்டேனை விடுதி கண்டாய்? வினையேன் மனத்தே
ஊறும் மட்டே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே.

[11]
நெடுந்தகை, நீ, என்னை ஆட்கொள்ள, யான், ஐம் புலன்கள் கொண்டு
விடும் தகையேனை விடுதி கண்டாய்? விரவார் வெருவ,
அடும் தகை வேல் வல்ல உத்தரகோசமங்கைக்கு அரசே,
கடும் தகையேன் உண்ணும் தெள் நீர் அமுதப் பெரும் கடலே.

[12]
கடலினுள் நாய் நக்கி ஆங்கு, உன் கருணைக் கடலின் உள்ளம்
விடல் அரியேனை விடுதி கண்டாய்? விடல் இல் அடியார்
உடல் இலமே மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
மடலின் மட்டே, மணியே, அமுதே, என் மது வெள்ளமே.

[13]
வெள்ளத்துள் நா வற்றி ஆங்கு, உன் அருள் பெற்றுத் துன்பத்தின் [நின்]றும்
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய்? விரும்பும் அடியார்
உள்ளத்து உள்ளாய், மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
கள்ளத்து உளேற்கு, அருளாய் களியாத களி, எனக்கே.

[14]
களிவந்த சிந்தையொடு உன் கழல் கண்டும், கலந்தருள
வெளி வந்திலேனை விடுதி கண்டாய்? மெய்ச் சுடருக்கு எல்லாம்
ஒளிவந்த பூம் கழல் உத்தரகோசமங்கைக்கு அரசே,
எளிவந்த எந்தை பிரான், என்னை ஆளுடை என் அப்பனே!

[15]
என்னை அப்பா, அஞ்சல்,' என்பவர் இன்றி, நின்று எய்த்து அலைந்தேன்;
மின்னை ஒப்பாய், விட்டிடுதி கண்டாய்? உவமிக்கின், மெய்யே
உன்னை ஒப்பாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
அன்னை ஒப்பாய்; எனக்கு அத்தன் ஒப்பாய்; என் அரும் பொருளே!

[16]
பொருளே, தமியேன் புகல் இடமே, நின் புகழ் இகழ்வார்
வெருளே, எனை விட்டிடுதி கண்டாய்? மெய்ம்மையார் விழுங்கும்
அருளே, அணி பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே,
இருளே, வெளியே, இக பரம் ஆகி இருந்தவனே.

[17]
இருந்து என்னை ஆண்டுகொள்; விற்றுக்கொள்; ஒற்றி வை;' என்னின் அல்லால்,
விருந்தினனேனை, விடுதி கண்டாய்? மிக்க நஞ்சு அமுதா
அருந்தினனே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
மருந்தினனே, பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே.

[18]
மடங்க என் வல் வினைக் காட்டை, நின் மன் அருள் தீக் கொளுவும்
விடங்க, என்தன்னை விடுதி கண்டாய்?என் பிறவியை வே
ரொடும் களைந்து ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே,
கொடும் கரிக்குன்று உரித்து, அஞ்சுவித்தாய், வஞ்சிக் கொம்பினையே.

[19]
கொம்பர் இல்லாக் கொடிபோல், அலமந்தனன்; கோமளமே,
வெம்புகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணவர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
அம்பரமே, நிலனே, அனல், காலொடு, அப்பு, ஆனவனே.

[20]
ஆனை வெம் போரில், குறும் தூறு எனப் புலனால் அலைப்புண்
டேனை, எந்தாய், விட்டிடுதி கண்டாய்? வினையேன் மனத்துத்
தேனையும், பாலையும், கன்னலையும், அமுதத்தையும், ஒத்து,
ஊனையும், என்பினையும், உருக்காநின்ற ஒண்மையனே.

[21]
ஒண்மையனே, திருநீற்றை உத்தூளித்து, ஒளி மிளிரும்
வெண்மையனே, விட்டிடுதி கண்டாய்? மெய் அடியவர்கட்கு
அண்மையனே, என்றும் சேயாய் பிறர்க்கு; அறிதற்கு அரிது ஆம்
பெண்மையனே, தொன்மை ஆண்மையனே, அலிப் பெற்றியனே.

[22]
பெற்றது கொண்டு, பிழையே பெருக்கி, சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை, விடுதி கண்டாய்? விடிலோ கெடுவேன்;
மற்று, அடியேன் தன்னை, தாங்குநர் இல்லை; என் வாழ் முதலே,
உற்று, அடியேன், மிகத் தேறி நின்றேன்; எனக்கு உள்ளவனே.

[23]
உள்ளனவே நிற்க, இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளனலேனை விடுதி கண்டாய்? வியன் மாத் தடக் கைப்
பொள்ளல் நல் வேழத்து உரியாய், புலன், நின்கண் போதல் ஒட்டா,
மெள்ளெனவே மொய்க்கும் நெய்க் குடம் தன்னை எறும்பு எனவே.

[24]
எறும்பிடை நாங்கூழ் என, புலனால் அரிப்புண்டு, அலந்த
வெறும் தமியேனை விடுதி கண்டாய்? வெய்ய கூற்று ஒடுங்க,
உறும் கடிப் போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர்
பெறும் பதமே, அடியார் பெயராத பெருமையனே.

[25]
பெரு நீர் அற, சிறு மீன் துவண்டு ஆங்கு, நினைப் பிரிந்த
வெரு நீர்மையேனை விடுதி கண்டாய்? வியன் கங்கை பொங்கி
வரும் நீர் மடுவுள், மலைச் சிறு தோணி வடிவின், வெள்ளைக்
குரு நீர் மதி பொதியும் சடை, வானக் கொழு மணியே!

[26]
கொழு மணி ஏர் நகையார் கொங்கைக் குன்றிடைச் சென்று, குன்றி
விழும் அடியேனை விடுதி கண்டாய்? மெய்ம் முழுதும் கம்பித்து,
அழும் அடியாரிடை ஆர்த்து வைத்து, ஆட்கொண்டருளி, என்னைக்
கழு மணியே, இன்னும் காட்டு கண்டாய் நின் புலன் கழலே.

[27]
புலன்கள் திகைப்பிக்க, யானும் திகைத்து, இங்கு ஒர் பொய்ந் நெறிக்கே
விலங்குகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணும், மண்ணும், எல்லாம்
கலங்க, முந்நீர் நஞ்சு அமுது செய்தாய்; கருணாகரனே!
துலங்குகின்றேன் அடியேன்; உடையாய், என் தொழுகுலமே.

[28]
குலம் களைந்தாய்; களைந்தாய் என்னைக் குற்றம்; கொற்றச் சிலை ஆம்
விலங்கல் எந்தாய், விட்டிடுதி கண்டாய்? பொன்னின் மின்னு கொன்றை
அலங்கல் அம் தாமரை மேனி அப்பா, ஒப்பு இலாதவனே,
மலங்கள் ஐந்தால் சுழல்வன், தயிரில் பொரு மத்து உறவே.

[29]
மத்து உறு தண் தயிரின், புலன் தீக் கதுவக் கலங்கி,
வித்து உறுவேனை விடுதி கண்டாய்? வெண் தலை மிலைச்சி,
கொத்து உறு போது மிலைந்து, குடர் நெடு மாலை சுற்றி,
தத்து உறு நீறுடன் ஆரச் செம் சாந்து அணி சச்சையனே.

[30]
சச்சையனே, மிக்க தண் புனல், விண், கால், நிலம், நெருப்பு, ஆம்
விச்சையனே, விட்டிடுதி கண்டாய்? வெளியாய், கரியாய்,
பச்சையனே, செய்ய மேனியனே, ஒண் பட அரவக்
கச்சையனே கடந்தாய் தடம் தாள அடல் கரியே.

[31]
அடல் கரி போல், ஐம் புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை
விடற்கு அரியாய், விட்டிடுதி கண்டாய்? விழுத் தொண்டர்க்கு அல்லால்
தொடற்கு அரியாய், சுடர் மா மணியே, சுடு தீச் சுழல,
கடல் கரிது ஆய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக்கண்டனே.

[32]
கண்டது செய்து, கருணை மட்டுப் பருகிக் களித்து,
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய்? நின் விரை மலர்த் தாள்
பண்டு தந்தால் போல் பணித்து, பணிசெயக் கூவித்து, என்னைக்
கொண்டு, என் எந்தாய், களையாய் களை ஆய குதுகுதுப்பே.

[33]
குதுகுதுப்பு இன்றி நின்று, என் குறிப்பே செய்து, நின் குறிப்பில்
விதுவிதுப்பேனை விடுதி கண்டாய்? விரை ஆர்ந்து, இனிய
மது மதுப் போன்று, என்னை வாழைப் பழத்தின் மனம் கனிவித்து,
எதிர்வது எப்போது? பயில்வி, கயிலைப் பரம்பரனே!

[34]
பரம்பரனே, நின் பழ அடியாரொடும் என் படிறு
விரும்பு அரனே, விட்டிடுதி கண்டாய்? மென் முயல் கறையின்
அரும்பு, அர, நேர் வைத்து அணிந்தாய், பிறவி ஐ வாய் அரவம்
பொரும், பெருமான் வினையேன் மனம் அஞ்சி, பொதும்பு உறவே.

[35]
பொதும்பு உறு தீப்போல் புகைந்து எரிய, புலன் தீக் கதுவ,
வெதும்புறுவேனை விடுதி கண்டாய்? விரை ஆர் நறவம்
ததும்பும் மந்தாரத்தில் தாரம் பயின்று, மந்தம் முரல் வண்டு
அதும்பும், கொழும் தேன் அவிர் சடை வானத்து அடல் அரைசே.

[36]
அரைசே, அறியாச் சிறியேன் பிழைக்கு அஞ்சல்' என்னின் அல்லால்,
விரை சேர் முடியாய், விடுதி கண்டாய்? வெள் நகை, கரும் கண்,
திரை சேர் மடந்தை மணந்த திருப் பொன் பதப் புயங்கா,
வரை சேர்ந்து அடர்ந்து என்ன, வல் வினை தான் வந்து அடர்வனவே.

[37]
அடர் புலனால், நின் பிரிந்து அஞ்சி, அம் சொல் நல்லார் அவர் தம்
விடர் விடலேனை விடுதி கண்டாய்? விரிந்தே எரியும்
சுடர் அனையாய், சுடுகாட்டு அரசே, தொழும்பர்க்கு அமுதே,
தொடர்வு அரியாய், தமியேன் தனி நீக்கும் தனித் துணையே.

[38]
தனித் துணை நீ நிற்க, யான் தருக்கி, தலையால் நடந்த
வினைத் துணையேனை விடுதி கண்டாய்? வினையேனுடைய
மனத் துணையே, என் தன் வாழ் முதலே, எனக்கு எய்ப்பில் வைப்பே,
தினைத்துணையேனும் பொறேன், துயர் ஆக்கையின் திண் வலையே.

[39]
வலைத்தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு,
மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய்? வெள் மதியின் ஒற்றைக்
கலைத் தலையாய், கருணாகரனே, கயிலாயம் என்னும்
மலைத் தலைவா, மலையாள் மணவாள, என் வாழ் முதலே.

[40]
முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில் கடிப்ப மூழ்கி,
விதலைச் செய்வேனை விடுதி கண்டாய்? விடக்கு ஊன் மிடைந்த
சிதலைச் செய் காயம் பொறேன்; சிவனே, முறையோ? முறையோ?
திதலைச் செய் பூண் முலை மங்கை பங்கா, என் சிவகதியே!

[41]
கதி அடியேற்கு உன் கழல் தந்தருளவும், ஊன் கழியா
விதி அடியேனை விடுதி கண்டாய்? வெள் தலை முழையில்
பதி உடை வாள் அரப் பார்த்து, இறை பைத்துச் சுருங்க, அஞ்சி,
மதி நெடு நீரில் குளித்து, ஒளிக்கும் சடை மன்னவனே.

[42]
மன்னவனே, ஒன்றும் ஆறு அறியாச் சிறியேன் மகிழ்ச்சி
மின்னவனே, விட்டிடுதி கண்டாய்? மிக்க வேத மெய்ந் நூல்
சொன்னவனே, சொல் கழிந்தவனே, கழியாத் தொழும்பர்
முன்னவனே, பின்னும் ஆனவனே, இம் முழுதையுமே.

[43]
முழுது அயில் வேல் கண்ணியர் என்னும் மூரித் தழல் முழுகும்
விழுது அனையேனை விடுதி கண்டாய்? நின் வெறி மலர்த் தாள்
தொழுது செல் வானத் தொழும்பரில் கூட்டிடு; சோத்தம்' பிரான்;
பழுது செய்வேனை விடேல்; உடையாய், உன்னைப் பாடுவனே.

[44]
பாடிற்றிலேன்; பணியேன்; மணி, நீ ஒளித்தாய்க்குப் பச்சூன்
வீடிற்றிலேனை விடுதி கண்டாய்? வியந்து, ஆங்கு அலறித்
தேடிற்றிலேன்; சிவன் எவ் இடத்தான்? எவர் கண்டனர்?' என்று
ஓடிற்றிலேன்; கிடந்து உள் உருகேன்; நின்று உழைத்தனனே.

[45]
உழைதரு நோக்கியர் கொங்கை, பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்,
விழைதருவேனை விடுதி கண்டாய்? விடின், வேலை நஞ்சு உண்
மழைதரு கண்டன், குணம் இலி, மானிடன், தேய் மதியன்
பழைதரு மா பரன்' என்று என்று அறைவன், பழிப்பினையே.

[46]
பழிப்பு இல் நின் பாதப் பழம் தொழும்பு எய்தி, விழ, பழித்து,
விழித்திருந்தேனை விடுதி கண்டாய்? வெண் மணிப் பணிலம்
கொழித்து, மந்தாரம் மந்தாகினி நுந்தும், பந்தப் பெருமை
தழிச் சிறை நீரில், பிறைக் கலம் சேர்தரு தாரவனே.

[47]
தாரகை போலும் தலைத் தலை மாலை, தழல் அரப் பூண்
வீர, என் தன்னை விடுதி கண்டாய்? விடின், என்னை மிக்கார்
ஆர் அடியான்' என்னின், உத்தரகோசமங்கைக்கு அரசின்
சீர் அடியார் அடியான்' என்று, நின்னைச் சிரிப்பிப்பனே.

[48]
சிரிப்பிப்பன், சீறும் பிழைப்பை; தொழும்பையும் ஈசற்கு' என்று
விரிப்பிப்பன்; என்னை விடுதி கண்டாய்? விடின், வெம் கரியின்
உரிப் பிச்சன், தோல் உடைப் பிச்சன், நஞ்சு ஊண் பிச்சன், ஊர்ச் சுடுகாட்டு
எரிப் பிச்சன், என்னையும் ஆளுடைப் பிச்சன்' என்று ஏசுவனே.

[49]
ஏசினும், யான், உன்னை ஏத்தினும், என் பிழைக்கே குழைந்து
வேசறுவேனை விடுதி கண்டாய்? செம் பவள வெற்பின்
தேசு உடையாய்; என்னை ஆளுடையாய்; சிற்றுயிர்க்கு இரங்கி,
காய் சின ஆலம் உண்டாய் அமுது உண்ணக் கடையவனே.
திருச்சிற்றம்பலம். மாணிக்கவாசகர் அடிகள் போற்றி!

[50]
Back to Top

This page was last modified on Sun, 09 Mar 2025 21:46:14 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list column name thalam string value %E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88