![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
6.097
திருநாவுக்கரசர்
தேவாரம்
அண்டம் கடந்த சுவடும் உண்டோ? பண் - திருத்தாண்டகம் (பொது -வினாவிடைத் திருத்தாண்டகம் ) Audio: https://www.youtube.com/watch?v=WBrpAfWDe_4 |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
6.097  
அண்டம் கடந்த சுவடும் உண்டோ?
பண் - திருத்தாண்டகம் (திருத்தலம் பொது -வினாவிடைத் திருத்தாண்டகம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அண்டம் கடந்த சுவடும் உண்டோ? அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ? பண்டை எழுவர் படியும் உண்டோ? பாரிடங்கள் பல சூழப் போந்தது உண்டோ? கண்டம் இறையே கறுத்தது உண்டோ? கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ? தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி உண்டோ? சொல்லீர், எம்பிரானாரைக் கண்ட ஆறே!. | [1] |
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கிழை ஓர்பால் உண்டோ? வெள் ஏறு உண்டோ? விரிகின்ற பொறி அரவத் தழலும் உண்டோ? வேழத்தின் உரி உண்டோ? வெண்நூல் உண்டோ? வரி நின்ற பொறி அரவச் சடையும் உண்டோ? அச் சடை மேல் இளமதியம் வைத்தது உண்டோ? சொரிகின்ற புனல் உண்டோ? சூலம் உண்டோ? சொல்லீர், எம்பிரானாரைக் கண்ட ஆறே!. | [2] |
நிலா மாலை செஞ்சடை மேல் வைத்தது உண்டோ? நெற்றி மேல் கண் உண்டோ? நீறு சாந்தோ? புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ? பூதம் தற் சூழ்ந்தனவோ? போர் ஏறு உண்டோ? கலாம் மாலை வேல் கண்ணாள் பாகத்து உண்டோ? கார்க் கொன்றை மாலை கலந்தது உண்டோ? சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ? சொல்லீர், எம்பிரானாரைக் கண்ட ஆறே. | [3] |
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ? பாரிடங்கள் பல சூழப் போந்தது உண்டோ? உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ? ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ? கண் ஆர் கழல் காலற் செற்றது உண்டோ? காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ? எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ? எவ் வகை, எம்பிரானாரைக் கண்ட ஆறே?. | [4] |
நீறு உடைய திருமேனி பாகம் உண்டோ? நெற்றி மேல் ஒற்றைக் கண் முற்றும் உண்டோ? கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ? கொல் புலித் தோல் உடை உண்டோ? கொண்ட வேடம் ஆறு உடைய சடை உண்டோ? அரவம் உண்டோ? அதன் அருகே பிறை உண்டோ? அளவு இலாத ஏறு உடைய கொடி உண்டோ? இலயம் உண்டோ? எவ் வகை, எம்பிரானாரைக் கண்ட ஆறே?. | [5] |
பட்டமும் தோடும் ஓர் பாகம் கண்டேன்; பார் திகழப் பலி திரிந்து போதக் கண்டேன்; கொட்டி நின்று இலயங்கள் ஆடக் கண்டேன்; குழை காதில், பிறை சென்னி, இலங்கக் கண்டேன்; கட்டங்கக் கொடி திண்தோள் ஆடக் கண்டேன்; கனம் மழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்; சிட்டனைத் திரு ஆலவாயில் கண்டேன்-தேவனைக் கனவில் நான் கண்ட ஆறே!. | [6] |
அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன்; அலர் கொன்றைத்தார் அணிந்த ஆறு கண்டேன்; பலிக்கு ஓடித் திரிவார் கைப் பாம்பு கண்டேன்; பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்; கலிக் கச்சி மேற்றளியே இருக்கக் கண்டேன்; கறை மிடறும் கண்டேன்; கனலும் கண்டேன்; வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் -மறை வல்ல மா தவனைக் கண்ட ஆறே!. | [7] |
நீறு ஏறு திருமேனி நிகழக் கண்டேன்; நீள் சடைமேல் நிறை கங்கை ஏறக் கண்டேன்; கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ளக் கண்டேன்; கொடு கொட்டி, கை அலகு, கையில் கண்டேன்; ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன்; அடியார்கட்கு ஆர் அமுதம் ஆகக் கண்டேன்; ஏறு ஏறி இந் நெறியே போதக் கண்டேன்-இவ் வகை எம்பெருமானைக் கண்ட ஆறே!. | [8] |
விரையுண்ட வெண் நீறு தானும் உண்டு; வெண் தலை கை உண்டு; ஒரு கை வீணை உண்டு; சுரை உண்டு; சூடும் பிறை ஒன்று உண்டு; சூலமும் தண்டும் சுமந்தது உண்டு(வ்); அரையுண்ட கோவண ஆடை உண்டு(வ்); அலிக்கோலும் தோலும் அழகா உண்டு(வ்); இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு(வ்) இமையோர் பெருமான் இலாதது என்னே? | [9] |
மைப் படிந்த கண்ணாளும் தானும் கச்சி-மயானத்தான், வார்சடையான் என்னின், அல்லான்; ஒப்பு உடையன் அல்லன்; ஒருவன் அல்லன்; ஓர் ஊரன் அல்லன்; ஓர் உவமன் இ(ல்)லி; அப் படியும் அந் நிறமும் அவ் வண்ண(ம்)மும் அவன் அருளே கண் ஆகக் காணின் அல்லால், இப் படியன், இந் நிறத்தன், இவ் வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒணாதே. | [10] |
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன்; புலித்தோல் உடை கண்டேன்; புணரத் தன்மேல் மின் ஒத்த நுண் இடையாள் பாகம் கண்டேன்; மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன்; அன்னத் தேர் ஊர்ந்த அரக்கன் தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன்; சின்ன மலர்க் கொன்றைக் கண்ணி கண்டேன்- சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே!. | [11] |