வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும் நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும் ஓதத் தகும்எட் டியோகத்தின் அந்தமும் ஆதிக் கலாந்தமும் ஆறந்த மாமே.
|
1
|
அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர் அந்தம்ஓர் ஆறும் அறிவார் அமலத்தர் அந்தம்ஓர் ஆறும் அறியா ரவர்தமக்(கு) அந்தமொ டாதி அறியஒண் ணாதே.
|
2
|
தானான வேதாந்தம் தான்என்னும் சித்தாந்தம் ஆனாத் துரியத்(து) அணுவன் தனைக்கண்டு தேனார் பராபரம் சேரச் சிவோகமாய் ஆனா மலம்அற் றருஞ்சித்தி ஆர்தலே.
|
3
|
நித்தம் பரனோ டுயிர்உற்று நீள்மனம் சத்தம் முதல்ஐந்து தத்துவம் தான்நீங்கிச் சுத்தம் அசுத்தம் தொடரா வகைநினைந்(து) அத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே.
|
4
|
மேவும் பிரமனே விண்டு உருத்திரன் மேவுமெய் யீசன் சதாசிவன் மிக்கப்பால் மேவும் பரம்விந்து. நாதம் விட ஆறா(று) ஓவும் பொழு(து)அணு ஒன்றுள தாமே.
|
5
|
Go to top |
உள்ள உயிர்ஆறா றாகும் உபாதியைத் தெள்ளி அகன்றுநா தாந்தத்தைச் செற்றுமேல் உள்ள இருள்நீங்க ஓர்உணர் வாகுமேல் எள்ளல்இல் நாதாந்தத்(து) எய்திடும் போதமே.
|
6
|
தேடும் இயம நியமாதி சென்றகன்(று) ஊடும் சமாதியில் உற்றுப் பரசிவன் பாடுறச் சீவன் பரமாகப் பற்றறக் கூடும் உபசாந்தம் யோகாந்தக் கொள்கையே.
|
7
|
கொள்கையி லான கலாந்தம் குறிக்கொள்ளில் விள்கையி லான நிவிர்த்தி மேதாதாதிக்(கு) உள்ளன ஆம்விந்து உள்ளே ஒடுங்கலும் தெள்ளி அதனைத் தெளிதலும் ஆமே.
|
8
|
தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவே(று) ஒளியுள் அமைந்துள்ள ஓரவல் லார்கட்(கு) அளிஅவ னாகிய மந்திரம் தந்திரம் தெளிவு உபதேசம் ஞானத்தொ(டு) ஐந்தாமே.
|
9
|
ஆகும் அனாதி கலைஆ கமவேதம் ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல் ஆகும் மனாதி உடல்அல்லா மந்திரம் ஆகும் சிவபோ தகம்உப தேசமே.
|
10
|
Go to top |
தேசார் சிவம்ஆகும் தன்ஞானத் தின்கலை ஆசார நேயம் அறையும் கலாந்தத்துப் பேசா உரையுணர் வற்ற பெருந்தகை வாசா மகோசர மாநந்தி தானே.
|
11
|
தானது வாகும் சமாதி தலைப்படில் ஆன கலாந்தநா தாந்தயோ காந்தமும் ஏனைய போதாந்தம் சித்தாந்த மானதும் ஞான மெனஞேய ஞாதுரு வாகுமே.
|
12
|
ஆறந்த மும்சென் றடங்கும்அஞ் ஞேயத்தே ஆறந்தம் ஞேயம் அடங்கிடும் ஞாதுரு கூறிய ஞானக் குறிஉடன் வீடவே தேறிய மோனம் சிவானந்த உண்மையே.
|
13
|
உண்மைக் கலைஆறொன் றைந்தின் அடங்கிடும் உண்மைக் கலாந்தம் இரண்டைந்தோ டேழந்தம் உண்மைக் கலைஒன்றில் ஈறாய நாதாந்தத்(து) உண்மைக் கலைசொல்ல ஓர்அந்த மாமே.
|
14
|
ஆவுடை யானை அரன்வந்து கொண்டபின் தேவுடை யான்எங்கள் சீர்நந்தி தாள்தந்து வீவற வேதாந்த சித்தாந்த மேன்மையைக் கூவி அருளிய கோனைக் கருதுமே.
|
15
|
Go to top |
கருது மவர்தம் கருத்தினுக் கொப்ப அரன்உரை செய்தருள் ஆகமந் தன்னில் வரும்சம யம்புறம் மாயைமா மாயை உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே.
|
16
|
வேதாந்த சித்தாந்தம் வேறிலா முத்திரை போதாந்தம் ஞானம்யோ காந்தம் பொதுஞேயம் நாதாந்தம் ஆனந்தம் சீருத யம்மாகும் மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கலே.
|
17
|
வேதாந்தந் தன்னில் உபாதிமேல் ஏழ்விடல் நாதாந்தம் பாசம் விடுநல்ல தொம்பதம் மீதாந்தம் காரணோ பாதியேழ் மெய்ப்பரம் போதந்தம் தற்பதம் போம்அசி என்பவே.
|
18
|
அண்டங்கள் ஏழுந் கடந்தகன் றப்பாலும் உண்டென்ற பேரொளிக் குள்ளால் உளவொளி பண்டுறு கின்ற பராசத்தி யென்னவே கொண்டனன் அன்றிநின் றான்எங்கள் கோவே.
|
19
|
கோவுணர்த் தும்சத்தி யாலே குறிவைத்துத் தேவுணர்த் தும்கரு மச்செய்தி செய்யவே பாஅனைத் தும்படைத்(து) அற்சனை பாரிப்ப ஓவனைத் துண்டொழி யாத ஒருவனே.
|
20
|
Go to top |
ஒருவனை உன்னார் உயிரினை உன்னார் இருவினை உன்னார் இருமாயை உன்னார் ஒருவனு மேஉள் ளுணர்த்திநின் றூட்டி அருவனு மாகிய ஆதரத் தானே
|
21
|
அரன்அன்பர் தானம தாகிச் சிவத்து வரும்அவை சத்திகள் முன்னா வகுத்திட்(டு) உரன்உறு சந்நிதி சேட்டிப்ப என்றும் திரன்உறத் தோயாச் சிவாநந்தி யாமே.
|
22
|
வேதாந்தம் தொம்பதம் மேவும் பசுஎன்ப நாதாந்தம் பாசம் விடநின்ற நன்பதி போதாந்தம் தற்பதம் போய்இரண் டைக்கியம் சாதா ரணம்சிவ சாயுச்சிய மாமே.
|
23
|
சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும் அவம அவமமாம் அவ்வீ ரிரண்டும் சிவமாம் சதாசிவன் செய்ததொன் றானால் நவமான வேதாந்த ஞானம்சித் தாந்தமே.
|
24
|
சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலால் சித்தாந்தத் தேநிற்போர் முத்திசித் தித்தவர் சித்தந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால் சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே.
|
25
|
Go to top |
சிவனைப் பரமனும் சீவனுட் காட்டும் அவமற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆனால் நவமுற் றவத்தையில் ஞானம் சிவமாம் தவமிக் குணர்ந்தவர் தத்துவத் தாரே.
|
26
|
தத்துவ மாகும் சகள அகளங்கள் தத்துவ மாம்விந்து நாதம் சதாசிவம் தத்துவ மாகும் சீவன்நல் தற்பரம் தத்துவ மாம்சிவ சாயுச் சியமே.
|
27
|
வேதமொ டாகமம் மெய்யாம் இறைவன்நூல் ஓதும் பொதுவும் சிறப்பும் என்றுள்ளன நாதன் உரைஅவை நாடில் இரண்டந்தம் பேதம தென்னில் பெரியோர்க் கபேதமே.
|
28
|
பரானந்தி மன்னும் சிவானந்த மெல்லாம் பரானந்தி மேன்மூன்றும் பாழுறா னந்தம் விராமுத்தி ரானந்தம் மெய்ந்நட னானந்தம் பொராநின்ற உள்ளமே பூரிப்பி யாமே.
|
29
|
ஆகும் கலாந்தம் இரண்டந்தம் நாதாந்தம் ஆகும் பொழுதில் கலைஐந்தாம் ஆதலின் ஆகும் அரனேபஞ் சாந்தக னாமென்ன ஆகும் மறைஆ கமம்மொழிந் தானே
|
30
|
Go to top |
அன்றாகும் என்னாதை ஐவகையந் தந்தம்மை ஒன்றான வேதாந்தம் சித்தாந்தம் முன்னிட்டு நின்றால் இயோகாந்தம் நேர்படும் நேர்பட்டால் மன்றாடி பாதம் மருவலும் ஆமே.
|
31
|
அனாதிசீ வன்னைம் மலமற்றப் பாலாம் அனாதி அடக்கித் தனைக்கண் டரனாய்த் தனாதி மலங்கெடத் தத்துவா தீதம் வினாவும்நீர் பால்ஆதல் வேதாந்த உண்மையே.
|
32
|
உயிரைப் பரனை உயர்சிவன் றன்னை அயர்வற்ற றறிதொந்தத் தசியெ னதனால் செயலற் றறிவாகி யும்சென் றடங்கி அயர்வற்ற வேதாந்தம் சித்தாந்தம் ஆமே.
|
33
|
மன்னிய சோகமாம் மாமறை யாளர்தம் சென்னிய(து) ஆன சிவோகமாம் ஈதென்ன அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள் துன்னிய ஆகம நூல்எனத் தோன்றுமே. 16,
|
34
|