தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே.
|
1
|
அங்கே அடற்பெருந் தேவரெல் லாந்தொழச் சிங்கா தனத்தே சிவன்இருந் தான்என்று சங்கார் வளையும் சிலம்பும் சலேல்எனப் பொங்கார் குழலியும் போற்றிஎன் றாளே.
|
2
|
அறிவு வடிவென் றறியாத என்னை அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி அறிவு வடிவென் றருளால் அறிந்தேன் அறிவு வடிவென் றறிந்திருந் தேனே.
|
3
|
அறிவுக் கழிவில்லை ஆக்கமும் இல்லை அறிவுக் கறிவல்ல(து) ஆதாரம் இல்லை அறிவே அறிவை அறிகின்ற(து) என்றிட்(டு) அறைகின் றனமரை ஈறுகள் தாமே.
|
4
|
மன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து முன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும் பொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப் பின்னிநின் றேன் `நீ பெரியை` என் றானே.
|
5
|
Go to top |
அறிவறி வாக அறிந்தன்பு செய்மின் அறிவறி வாக அறியும்அவ் வண்ணம் அறிவறி வாக அணிமாதி சித்தி அறிவறி வாக அறிந்தனன் நந்தியே.
|
6
|
அறிவறி வென்றங் கரற்றும் உலகம் அறிவறி யாமையை யாரும் அறியார் அறிவறி யாமை கடந்தறி வானால் அறிவறி யாமை அழகிய வாறே.
|
7
|
அறிவறி யாமையை நீவி யவனே பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போது அறிவாய வற்றினுள் தானாய் அறிவின் செறிவாகி நின்றவன் சீவனும் ஆமே.
|
8
|
அறிவுடை யார்நெஞ் சகலிட மாவ(து) அறிவுடை யார்நெஞ் சருந்தவ மாவ(து) அறிவுடை யார்நெஞ்சொ டாதிப் பிரானும் அறிவுடை யார்நெஞ்சத் தாகிநின் றானே.
|
9
|
மாயனு மாகி மலரோன் இறையுமாய்க் காயநன் னாட்டுக் கருமுத லானவன் சேயன் அணியனாய்த் தித்திக்கும் தீங்கரும் பாய் அமு தாகிநின் றண்ணிக்கின் றானே.
|
10
|
Go to top |
என்னை யறிகிலேன் இத்தனை காலமும் என்னை யறிந்தபின் ஏதும் அறிந்திலேன் என்னை யறிந்திட் டிருத்தலும் கைவிடா(து) என்னையிட் டென்னை உசாவுகின் றேனே.
|
11
|
மாய விளக்கது நின்று மறைந்திடும் தூய விளக்கது நின்று சுடர்விடும் காய விளக்கது நின்று கனற்றிடும் சேய விளக்கினைத் தேடுகின் றேனே.
|
12
|
தேடுகின் றேன்திசை யெட்டோ டிரண்டிலும் நாடுகின் றேன்நல மேயுடை யான்அடி பாடுகின் றேன்பர மேதுணை யாம்எனக் கூடுகின் றேன்குறை யாமனத் தாலே.
|
13
|
முன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர் பின்னைப் பெருமலம் வந்தவா பேர்த்திட்டுத் தன்னைத் தெரிந்து தன் பண்டைத் தலைவன்தாள் மன்னிச் சிவமாக வாரா பிறவியே. 15,
|
14
|