அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ, மங்குல்மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
|
1
|
நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதும் நாவினராகிய அந்தணர்கள் நாள்தோறும் தன் திருவடிகளை வணங்க வானமண்டலத்திலுள்ள சந்திரன் தவழ்ந்து செல்லுதற்கு இடமாய் உயர்ந்து விளங்கும் மாடவீதிகளை உடைய திருமருகலில் எழுந்தருளியுள்ள இறைவனே! செங்கயல்கள் நிறைந்த புனல்சூழ்ந்ததும் செல்வ வளம் நிறைந்ததுமான புகழார்ந்த திருச்செங்காட்டங்குடியில் எரியைக்கையில் ஏந்தி நள்ளிருளில் நட்டம் ஆடுதற்கு இடமாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறுதல் ஏன்? சொல்வாயாக. | |
நெய் தவழ் மூ எரி காவல் ஓம்பும் நேர் புரிநூல் மறையாளர் ஏத்த, மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் செய் தவ நால் மறையோர்கள் ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் கை தவழ் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
|
2
|
அவியாக அளிக்கப் பெறும் நெய் தவழ்ந்து எரியும் முத்தீயைப் பாதுகாப்பாக ஓம்பி வரும் நேர்மையாளரும் முப்புரி நூல் அணிந்த வேத வித்துக்களும் ஆகிய அந்தணர் ஏத்த கரிய மேகங்கள் தவழும் மாட வீடுகள் நிறைந்த வீதிகளை உடைய திருமருகலில் எழுந்தருளிய இறைவனே! தவங்கள் பலவும் செய்யும் நான்மறையோர் போற்றும் புகழ் பொருந்திய திருச்செங்காட்டங்குடியில் திருக்கரத்தில் மிக்க தீயை ஏந்தி ஆடுதற்கு இடமாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன? சொல்வாயாக. | |
தோலொடு நூல் இழை சேர்ந்த மார்பர், தொகும் மறையோர்கள், வளர்த்த செந்தீ மால்புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் சேல் புல்கு தண் வயல் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் கால் புல்கு பைங் கழல் ஆர்க்க ஆடும் கணபதி யீச்சுரம் காமுறவே?
|
3
|
மான் தோலோடு கூடிய முப்புரிநூல் அணிந்த மார்பினராய்த் திரளாய்நின்று வேதம் வல்ல அந்தணர்கள் வளர்த்த செந்தீயிலிருந்து எழுந்த கரிய புகைபோய் மிகவும் மிகுதியாக வெளிப்படும் மாடங்களோடு கூடிய வீதிகளை உடைய திருமருகலில் விளங்கும் இறைவனே சேல்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களை அடுத்த சோலைகளால் சூழப்பட்ட சிறப்புமிக்க திருச்செங்காட்டங்குடியில் காலில் கட்டிய கழல்கள் ஆர்க்க ஆடிக்கணபதியீச்சரத்தைக் காமுறுதற்குக் காரணம் என்ன? சொல்வாயாக. | |
நா மரு கேள்வியர் வேள்வி ஓவா நால் மறையோர் வழிபாடு செய்ய, மா மருவும் மணிக் கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் தே மரு பூம் பொழில் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் காமரு சீர் மகிழ்ந்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
|
4
|
நாவிற் பொருந்திய வாய்ப்பயிலப்பட்டுவரும் வேதங்களை ஓதி உணர்ந்தவர்களும் வேள்விகளை இடைவிடாமல் செய்து வருபவர்களுமாகிய நான்மறையாளர் வழிபடச் செல்வம் மருவிய மணிக்கோயிலை உடைய மருகலில் விளங்கும் மைந்தனே! தேன் நிறைந்த அழகிய பொழில்களால் சூழப்பெற்ற சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் விளங்குகின்ற அழகும் பெருமையும் மிக்க கணபதியீச்சரத்தைக் காமுற்று இராப்போதில் நடனம் ஆடுதற்குக் காரணம் யாது? சொல்வாயாக. | |
பாடல் முழவும் விழவும் ஓவாப் பல் மறையோர் அவர்தாம் பரவ, மாட நெடுங்கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் சேடகம் மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
|
5
|
பாடலும் அதற்கிசைந்த முழவு ஒலியும் திருவிழாக்கள் ஒலியும் இடைவிடாமல் நிகழ்வதும் மாட வீடுகளில் கட்டிய கொடிகள் வானைத்தடவுவதும் ஆகிய சிறப்புக்களை உடைய திருமருகலில் வேதங்கள் பலவும் கற்ற அந்தணாளர் பரவ எழுந்தருளிய இறைவனே! உயரமான மணம் மிக்க மலர்ச்சோலைகளால் சூழப்பெற்ற சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் காட்டிடமே நாடகமாடுதற்கு இடமாக இருக்கவும் ஆடுதற்குரிய இடமாகக் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன? சொல்வாயாக. | |
| Go to top |
புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்தொறும் போற்றி இசைப்ப, மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் சினை கெழு தண் வயல், சோலை, சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
|
6
|
கிரியைகள் பலவற்றாலும் அழகு செய்யப்பெற்ற முத்தீயை வளர்க்கும் கைகளை உடைய அந்தணர்கள் நாள்தோறும் தன் திருவடிகளைப்போற்ற இல்லங்களும் விளங்கும் மாடங்களும் நிறைந்த வீதிகளை உடைய திருமருகலில் விளங்கும் இறைவனே! நெற்பயிர்கள் திளைத்து வளரும் தண் வயல்களையடுத்த சோலைகளால் சூழப்பெற்ற நீர்வளம் மிக்க செங்காட்டங்குடியில் எரியேந்திக் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன? சொல்வாயாக. | |
பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடுந்தோள் வரையால் அடர்த்து, மாண் தங்கு நூல் மறையோர் பரவ, மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் சேண் தங்கு மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
|
7
|
கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட அணிகலன்கள் பொருந்திய மார்பினை உடைய இலங்கை மன்னன் இராவணனின் அழகிய பெரிய தோள்களை அம்மலையாலேயே அடர்த்து மாட்சிமை பொருந்திய நான்மறையோர் பரவத் திருமருகலில் எழுந்தருளி விளங்கும் இறைவனே! வானளாவிய மண மலர்ச்சோலைகளால் சூழப்பெற்ற சீர்மிக்க செங்காட்டங்குடியில் அழகிய உன் திருத்தோள்களை அசைத்து இரவில் நடமிடுதற்கு இடனாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் யாதோ? சொல்வாயாக. | |
அந்தமும் ஆதியும், நான்முகனும் அரவு அணையானும், அறிவு அரிய, மந்திரவேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய் செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் கந்தம் அகில் புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே?
|
8
|
நான்முகனும் அரவணையானும் ஆதியாய முடியையும் அந்தமாகிய அடியையும் அறிதற்கு அரியவனாய் மந்திர வடிவான வேதங்களை ஓதும் நாவினரான அந்தணர் பரவி ஏத்தத் திருமருகலில் விளங்கும் இறைவனே! செந்தமிழ் வல்லோர் பரவித் துதிக்கும் சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் அகில் புகை மணமே கமழும் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் யாதோ? சொல்வாயாக. | |
இலை மருதே அழகு ஆக நாளும் இடு துவர்க்காயொடு சுக்குத் தின்னும் நிலை அமண் தேரரை நீங்கி நின்று, நீதர் அல்லார் தொழும் மா மருகல், மலைமகள் தோள் புணர்வாய்! அருளாய் மாசு இல் செங்காட்டங்குடி அதனுள் கலை மல்கு தோல் உடுத்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?
|
9
|
மருத மரத்து இலையின் சாற்றினால் நிறமூட்டிய ஆடைகளை அணிந்த புத்தர் கடுக்காய் சுக்கு இவற்றைத் தின்னும் சமணர் ஆகியோரை விடுத்து சைவர்கள் தொழத்திருமருகலில் மலைமகளோடு உறையும் மைந்தனே! குற்றமற்ற செங்காட்டங்குடியில் மான்தோலை உடுத்தி நள்ளிருளில் ஆடுதற்கு இடனாய்க்கணபதியீச்சரத்தைக் காமுறுதற்குக் காரணம் யாதோ? சொல்வாயாக. | |
நாலும் குலைக் கமுகு ஓங்கு காழி ஞானசம்பந்தன், நலம் திகழும் மாலின் மதி தவழ் மாடம் ஓங்கு மருகலில் மற்று அதன்மேல் மொழிந்த, சேலும் கயலும் திளைத்த கண்ணார் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள் சூலம் வல்லான் கழல் ஏத்து, பாடல் சொல்ல வல்லார் வினை இல்லை ஆமே.
|
10
|
தொங்குகின்ற குலைகளோடு பாக்கு மரங்கள் ஓங்கி வளரும் சீகாழிப்பதியினனாய ஞானசம்பந்தன் நலம் திகழ்வதும் மேகமும் பிறையும் தவழும் மாடங்கள் ஓங்கியதுமான திருமருகல் இறைவனையும் சேல் கயல் ஆகிய மீன்வகைகளை ஒத்த கண்களை உடைய மகளிர் வாழ்வதும் சிறப்பு மிக்கதும் ஆகிய செங்காட்டங்குடியில் முத்தலைச் சூலம் ஏந்தியவனாய் விளங்கும் பெருமானையும் புகழ்ந்து ஏத்திய பாடல்களைச் சொல்லித் துதிக்க வல்லார் வினைகள் இல்லையாகும். | |
| Go to top |