புண்ணியர், பூதியர், பூத நாதர், புடைபடுவார் தம் மனத்தார், திங்கள் கண்ணியர்! என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த, இருந்த ஊர் ஆம் விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி, எங்கும் பண் இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
1
|
அன்புடை அடியவர் புண்ணியம் திரண்டனைய வடிவினர் எனவும் நிறைந்த செல்வம் உடையவர் எனவும் பூதகணங்களின் தலைவர் எனவும் அருகில் வந்து பரவுவாரின் மனத்தார் எனவும் பிறைமதிக் கண்ணியர் எனவும் கைதொழுது போற்றச் சிவபிரான் எழுந்தருளிய ஊர் ஆகிய வானளாவ உயர்ந்த மாட மாளிகைகளோடு கூடியதும் மணம் கமழும் சோலைகளால் சூழப் பெற்றதும் எங்கும் பண்ணியலோடு கூடிய பாடல்கள் இடைவிடாது கேட்கப்படுவதும் ஆகிய ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை நாவே தொழுது பாடுவாயாக. | |
முத்தியர், மூப்பு இலர், ஆப்பின் உள்ளார், முக்கணர், தக்கன் தன் வேள்வி சாடும் அத்தியர் என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம் தொத்து இயலும் பொழில் பாடு வண்டு துதைந்து எங்கும் மதுப் பாய, கோயில் பத்திமைப் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
2
|
அடியவர்கள் முத்திச் செல்வத்தை உடையவர் என்றும் மூப்பு இலர் என்றும் மாட்டுத் தறியில் விளங்குபவர் என்றும் முக்கண்ணர் என்றும் தம்மை இகழ்ந்து செய்த தக்கனின் வேள்வியை அழித்தவர் என்றும் போற்றித் துதிக்கும் தலைவராகிய சிவபிரான் உமையம்மையாரோடு எழுந்தருளிய ஊராகிய பொழில்களில் கொத்தாக மலர்ந்த பூக்களில் வண்டுகள் தோய்தலால் எங்கும் தூயதேன்துளிகள் பாய்வதும் கோயிலில் பத்தி பூண்ட அடியவர் பாடும் பாடல் இடைவிடாது கேட்பதுமாகிய ஆவூர்ப்பசுபதியீச் சரத்தை நாவே தொழுது பாடுவாயாக. | |
பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார், போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார், இங்கு உயர் ஞானத்தர், வானோர் ஏத்தும் இறையவர், என்றும் இருந்த ஊர் ஆம் தெங்கு உயர் சோலை, சேர் ஆலை, சாலி திளைக்கும் விளை வயல், சேரும் பொய்கைப் பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
3
|
சினந்து வந்த கங்கையைத் தம் திருமுடியில் வைத்தவரும் பிறவி போதற்குரிய பிறப்பான மனிதப் பிறவி எடுத்து இழிவடைதற்கும் ஏற்றம் பெறுதற்கும் உரிய மக்களும் அவருள் இப்பிறப்பில் உயர்தற்குரிய சிவஞானத்தைப் பெற்றோரும் வான வரும் துதிக்கச் சிவபிரான் எழுந்தருளிய ஊர் உயரமாக வளர்ந்த தென்னஞ்சோலைகளும் கரும்பாலைகளும் செந்நெற்பயிர்களும் திளைத்து விளைவுதரும் வயல்களை உடையதும் பொய்கைகள் சூழ்ந்ததும் திருமகள் விரும்புவதுமாகிய வளம்சான்ற ஆவூர்ப்பசபதீயீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக. | |
தேவி ஒருகூறினர், ஏறு அது ஏறும் செல்வினர், நல்குரவு என்னை நீக்கும் ஆவியர், அந்தணர், அல்லல் தீர்க்கும் அப்பனார், அங்கே அமர்ந்த ஊராம் பூ இயலும் பொழில் வாசம் வீச, புரிகுழலார் சுவடு ஒற்றி, முற்றப் பா இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
4
|
உமாதேவியை ஒரு பாதியாக உடையவர் இடப வாகனத்தில் ஏறி வருபவர். வறுமை புகுதாது என்னைக் காப்பவர். எனக்கு உயிர் போன்றவர். கருணையர் என்துயர் போக்குதலால் எனக்குத் தந்தையாக விளங்குபவர். அவர் எழுந்தருளிய ஊர் பூக்கள் நிறைந்த பொழில்களின் வாசனை வீசுவதும் சுருண்ட கூந்தலை உடைய மகளிர் காலாலே தாளமிட்டு ஆடித் தேர்ந்த இசையோடு பாடும் பாடல்கள் இடைவிடாது கேட்கப்படுவதுமான ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை நாவே பாடுவாயாக. | |
இந்து அணையும் சடையார், விடையார், இப் பிறப்பு என்னை அறுக்க வல்லார், வந்து அணைந்து இன் இசை பாடுவார் பால் மன்னினர், மன்னி இருந்த ஊர் ஆம் கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடை இடை சேரும் வீதி, பந்து அணையும் விரலார்தம் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
5
|
திங்கள் தங்கும் சடையினரும் விடையை ஊர்தியாக உடையவரும் என்னைப் பற்றிய இப்பிறவியின் வினையை நீக்கி முத்தியளிக்க வல்லவரும் தம்மை வந்தடைந்து இன்னிசையால் பாடி வழிபடுவாரிடம் மன்னியிருப்பவரும் ஆகிய சிவபிரான் நிலைபெற்று விளங்கும் ஊர் பூங்கொத்தணிந்த கூந்தலை உடைய மங்கல மகளிர் வாழ்வதும் திருவிழாக்களில் மக்கள் கூட்டம் இடையிடையே சேரும் அகன்ற வீதிகளை உடையதும் பந்தாடும் கைவிரல்களினராகிய இளம்பெண்கள் நிறைந்ததுமாகிய ஆவூர்ப்பசுபதியீச்சரத்தை நாவே அதனைப் பாடுவாயாக. | |
| Go to top |
குற்றம் அறுத்தார், குணத்தின் உள்ளார், கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார், ஒற்றை விடையினர், நெற்றிக்கண்ணார், உறை பதி ஆகும் செறிகொள் மாடம் சுற்றிய வாசலில் மாதர் விழாச் சொல் கவி பாட, நிதானம் நல்க, பற்றிய கையினர், வாழும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
6
|
அடியவர் செய்யும் குற்றங்களை நீக்கியவரும் நற்குணங்களை உடையோரிடம் வாழ்பவரும் தம்மைக் கும்பிடுவார்க்கு அன்பு செய்பவரும் ஓர் எருதைத் தமக்கு ஊர்தியாகக் கொண்டவரும் பிறர்க்கில்லாத நெற்றிக்கண்ணை உடையவரும் ஆகிய சிவபிரான் உறையும் பதி செறிந்த மாட வீடுகளைச் சார்ந்துள்ள வாசலில் விழாக்காலங்களில் பெண்கள் புகழ்ந்து கவிபாடக் கேட்டு அவ்வீடுகளில் வாழும் செல்வர்கள் பொற்காசுகள் வழங்க அதனைப் பற்றிய கையினராய் மகளிர் மகிழ்ந்துறையும் ஆவூர்ப்பசுபதியீச்சரமாகும். நாவே அதனைத் தொழுது பாடுக. | |
நீறு உடையார், நெடுமால் வணங்கும் நிமிர் சடையார், நினைவார் தம் உள்ளம் கூறு உடையார், உடை கோவணத்தார், குவலயம் ஏத்த இருந்த ஊர் ஆம் தாறு உடை வாழையில் கூழை மந்தி தகு கனி உண்டு மிண்டிட்டு, இனத்தைப் பாறிடப் பாய்ந்து பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
7
|
திருவெண்ணீற்றை அணிந்தவரும் திருமாலால் வணங்கப் பெறுபவரும் நிமிர்த்துக் கட்டிய சடைமுடியுடையவரும் தம்மை நினைவார் உள்ளத்தில் குடிகொண்டிருப்பவரும் கோவண ஆடை தரித்தவரும் ஆகிய சிவபிரான் மண்ணுலக மக்கள் தம்மைப் புகழ்ந்து போற்ற எழுந்தருளிய ஊர் குள்ளமான மந்தி பழுத்துள்ள வாழைத்தாற்றில் உண்ணத்தகுதியான பழங்களை வயிறார உண்டு எஞ்சியுள்ள பழங்களை உண்ணவரும் குரங்குகளை அஞ்சுமாறு பாய்ந்து விரட்டும் தோட்டங்களை உடைய ஆவூர்ப்பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக. | |
வெண் தலை மாலை விரவிப் பூண்ட மெய் உடையார், விறல் ஆர் அரக்கன் வண்டு அமர் முடி செற்று உகந்த மைந்தர், இடம் வளம் ஓங்கி, எங்கும் கண்டவர், சிந்தைக் கருத்தின் மிக்கார், கதி அருள்! என்று கை ஆரக் கூப்பி, பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
8
|
வெண்மையான தலைகளை மாலையாகக் கோத்துப் பிற மாலைகளுடன் அணிந்துள்ள திருமேனியை உடையவரும் வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சூடிய வலிய இராவணனின் முடியை நெரித்து மகிழ்ந்த வலியரும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடம் எங்கும் வளம் ஓங்கியதும் தரிசித்தவர்கள் சித்தத்தால் உயர்ந்தவர்களாய்த் தமக்குக் கதியருள் என்று கைகளைக்கூப்பிப் பழமைதொட்டுச் சிவபெருமானுக்கு உரியனவாகிய மலர்களைச் சாத்தி வழிபடும் இயல்பினதும் ஆகிய ஆவூர்ப்பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக. | |
மாலும் அயனும் வணங்கி நேட, மற்று அவருக்கு எரி ஆகி நீண்ட, சீலம் அறிவு அரிது ஆகி நின்ற, செம்மையினார் அவர் சேரும் ஊர் ஆம் கோல விழாவின் அரங்கு அது ஏறி, கொடி இடை மாதர்கள் மைந்தரோடும், பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
9
|
திருமாலும் பிரமனும் வணங்கித் தேட அவர்கட்குச் சோதிப்பிழம்பாய் நீண்டு தோன்றிய அறிதற்கு அரியராய் விளங்கும் செம்மையராகிய சிவபிரான் எழுந்தருளிய ஊர் அழகிய விழாக்காலங்களில் கொடியிடைப் பெண்கள் அரங்கின்கண் ஏறி ஆடவர்களோடு கூடிப் பால்போன்று இனிக்கும் மொழிகளால் இறைவனை ஏத்தும் ஆவூர்ப் பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக. | |
பின்னிய தாழ்சடையார், பிதற்றும் பேதையர் ஆம் சமண் சாக்கியர்கள் தன் இயலும் உரை கொள்ளகில்லாச் சைவர், இடம் தளவு ஏறு சோலைத் துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி, தொடர்ந்த சிந்தைப் பன்னிய பாடல் பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!
|
10
|
பின்னித் தொங்கவிடப்பட்ட சடையை உடையவராய் அறிவின்மையோடு சமணர்கள் சாக்கியர்கள் ஆகியோர் தங்களைப் பற்றியும் தாங்கள் சார்ந்த மதங்களின் சிறப்புக்களைப் பற்றியும் கூற அவற்றை ஏலாதவராய் விளங்கும் சைவன் விரும்பி உறையும் இடம் முல்லைக் கொடி படர்ந்த சோலைகளில் மாதரும் மைந்தரும் நெருங்கிச் சுனையில் மூழ்கிச் சிவபிரானை மனம் ஒன்றிப் பாடும் ஆவூர்ப் பசுபதியீச்சரமாகும். நாவே அதனைப் பாடுவாயாக. | |
| Go to top |
எண் திசையாரும் வணங்கி ஏத்தும் எம்பெருமானை, எழில் கொள் ஆவூர்ப் பண்டு உரியார் சிலர் தொண்டர் போற்றும் பசுபதியீச்சுரத்து ஆதிதன்மேல், கண்டல்கள் மிண்டிய கானல் காழிக் கவுணியன்- ஞானசம்பந்தன்-சொன்ன கொண்டு, இனிதா இசை பாடி ஆடிக் கூடுமவர் உடையார்கள், வானே.
|
11
|
எட்டுத் திசையில் உள்ளவர்களும் வணங்கிப் போற்றும் எம் தலைவரும் அழகிய ஆவூரில் பழ அடியார்களால் போற்றப் பெறுபவரும் ஆகிய பசுபதியீச்சரத்து இறைவர்மேல் தாழை மரங்கள் நிறைந்த கடற்கரைச் சோலைகளால் சூழப்பட்ட சீகாழிப்பதியில் கவுணியர் குடியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய பாடல்களை இசையோடு பாடி ஆடி வணங்குபவர்கள் வானகத்தைத் தமது உடைமையாகப் பெறுவர். | |