உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன், பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ, மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும் அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.
|
1
|
உண்ணாமுலை என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவரும் தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை அடித்து வரும் அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும் திருவண்ணாமலை யாகும். அதனைத் தொழுவார் வினைகள் தவறாது கெடும். | |
தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி, தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற, ஆமாம் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல் பூ மாங் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே.
|
2
|
கிளைகளை வளைத்து இனிய மாங்கனிகளை உண்ட ஆண் குரங்குகள் விடுத்த அக்கொம்புகள் வேகமாகத் தீண்டப்படுதலால் தூய மழை மேகங்கள் மலைப் பாறைகளில் சிறிய நுண்ணியவான மழைத்துளிகளைச் சிதறுவதால் காட்டுப்பசுக்கள் மழை எனக்கருதி மர நிழலை அடையும் பொழில்களை உடைய அண்ணாமலை இறைவனின் அழகிய மலர் போன்றனவும் வீரக்கழல் அணிந்தனவுமான சிவந்த திருவடிகளை நினைவார் வினை இலராவர். | |
பீலிமயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம் சூலி மணி தரைமேல் நிறை சொரியும் விரி சாரல், ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல் காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே.
|
3
|
தோகைகளோடு கூடிய ஆண் மயில்கள் பெண் மயில்களோடு உறையும் பொழில் சூழ்ந்ததும் மூங்கில்கள் சூல் கொண்டு உதிர்க்கும் முத்துக்கள் நிறைந்து சொரிவதும் விரிந்த மலைப் பகுதிகளில் நீர்த் துளிகளோடு கூடிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடையதுமாகிய அண்ணாமலை இறைவனின் காலனது வலிமையைத் தகர்த்த சிவந்த திருவடிகளைத் தொழுவார் மேலன புகழ்.(தொழுவார் புகழ் பெறுவர் என்பதாம்). | |
உதிரும் மயிர் இடு வெண்தலை கலனா, உலகு எல்லாம் எதிரும் பலி உணவு ஆகவும், எருது ஏறுவது அல்லால், முதிரும் சடை இளவெண் பிறை முடிமேல் கொள, அடி மேல் அதிரும் கழல் அடிகட்கு இடம் அண்ணாமலை அதுவே.
|
4
|
உடலிலிருந்து பிரிக்கப்பட்ட மயிர் நீங்கிய பிரமனது வெண்மையான தலையோட்டை உண்கலனாக் கொண்டு உலகெலாம் திரிந்து ஏற்கும் பலியை உணவாகக் கொள்ளுதற்கு எருது ஏறி வருவதோடு முதிர்ந்த சடைமுடியின் மீது வெண்பிறையைச் சூடித்திருவடிகளில் அதிரும் வீரக்கழல்களோடு விளங்கும் சிவபிரானுக்குரிய இடம் திருவண்ணாமலையாகும். | |
மரவம், சிலை, தரளம், மிகு மணி, உந்து வெள் அருவி அரவம் செய, முரவம் படும் அண்ணாமலை அண்ணல் உரவம் சடை உலவும் புனல் உடன் ஆவதும் ஓரார், குரவம் கமழ் நறுமென்குழல் உமை புல்குதல் குணமே?
|
5
|
வெண் கடம்பமரம் சிலை முத்து மிக்க மணிகள் ஆகியவற்றை உந்திவரும் வெண்மையான அருவிகள் பறைபோல ஆரவாரம் செய்யும் திருவண்ணாமலையில் விளங்கும் அண்ணலாகிய சிவபிரான் சடையில் பாம்பும் கங்கையும் உடனாயிருந்து உலவுவதை ஓராமல் குராமணம் கமழும் மென்மையான கூந்தலை உடைய உமையம்மையாரைத் தழுவுதல் நன்றோ? | |
| Go to top |
பெருகும் புனல் அண்ணாமலை, பிறை சேர், கடல் நஞ்சைப் பருகும் தனை துணிவார், பொடி அணிவார், அது பருகிக் கருகும் மிடறு உடையார், கமழ் சடையார், கழல் பரவி உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே.
|
6
|
பெருகிவரும் அருவி நீரை உடைய திருவண்ணாமலையில் பிறைமதி தோன்றிய பாற்கடலிடைத்தோன்றிய நஞ்சை உட் கொள்ளும் அளவிற்குத்துணிபுடையவரும் அந்நஞ்சினை உண்டு கண்டம் கறுத்தவரும் திருவெண்ணீற்றை அணிந்தவரும் மணம் கமழும் சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தி உருகும் மனம் உடையவர்கட்கு மிக்க நோய்கள் எவையும் வாரா. | |
கரி காலன, குடர் கொள்வன, கழுது ஆடிய காட்டில் நரி ஆடிய நகு வெண் தலை உதையுண்டவை உருள, எரி ஆடிய இறைவர்க்கு இடம் இனவண்டு இசை முரல, அரி ஆடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே.
|
7
|
கரிந்த கால்களை உடையனவும் குடரைப் பிடுங்கி உண்பனவும் ஆகிய பேய்கள் ஆடும் இடுகாட்டில் நரிகள் உருட்டி விளையாடும் சிரிக்கும் வெண்டலை ஓடுகள் உதைக்கப்பட்டு உருள கையில் எரி ஏந்தி ஆடும் சிவபெருமான் வண்டுக் கூட்டங்கள் இசை பாடச் செவ்வரிபரந்த கண்களை உடைய உமையம்மையோடு எழுந்தருளிய இடம் திருவண்ணாமலை. | |
ஒளிறூ புலி அதள் ஆடையன், உமை அஞ்சுதல் பொருட்டால், பிளிறூ குரல் மதவாரணம் வதனம் பிடித்து உரித்து, வெளிறூபட விளையாடிய விகிர்தன்; இராவணனை அளறூபட அடர்த்தான்; இடம் அண்ணாமலை அதுவே.
|
8
|
ஒளி செய்யும் புலித்தோலை ஆடையாகக் கொண்டவனும் உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும் இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை. | |
விளவு ஆர் கனி பட நூறிய கடல்வண்ணனும், வேதக் கிளர் தாமரை மலர்மேல் உறை கேடு இல் புகழோனும், அளவா வணம் அழல் ஆகிய அண்ணாமலை அண்ணல் தளராமுலை, முறுவல், உமை தலைவன் அடி சரணே!
|
9
|
விளமரத்தின் கனியை உகுப்பது போல அம் மரவடிவாய் நின்ற அரக்கனை அழித்த கருங்கடல் வண்ணனாகிய திருமாலும் நீரில் கிளர்ந்து தோன்றிய தாமரை மலர்மேல் உறையும் குற்றம் அற்ற புகழாளனாகிய வேதாவும் அடிமுடிகளை அளவிட்டுக் காண இயலாதவாறு அழல் வடிவாய் நின்ற தலைவனும் தளராத தனபாரங்களையும் மலர்ந்த சிரிப்பையும் உடைய உமையம்மையின் கணவனும் ஆகிய சிவபிரானின் திருவடிகளே நமக்குக் காப்பு. | |
வேர் வந்து உற, மாசு ஊர்தர, வெயில் நின்று உழல்வாரும், மார்வம் புதை மலி சீவரம் மறையா வருவாரும், ஆரம்பர்தம் உரை கொள்ளன்மின்! அண்ணாமலை அண்ணல், கூர் வெண் மழுப்படையான், நல கழல் சேர்வது குணமே!
|
10
|
உடலில் வியர்வை தோன்றவும் அழுக்கேறவும் வெயிலில் நின்று உழல்வதைத் தவமாகக் கொள்வோராகிய சமணரும் மரவுரியால் மார்பை மிகவும் மறைத்து வருபவர் ஆகிய புத்தரும் போதிய பயிற்சியின்றித் தொடக்க நிலையில் உள்ளவர்கள் ஆதலின் அவர்களுடைய உரைகளைக் கொள்ளாதீர். திருவண்ணாமலையில் உறையும் தலைவனும் கூரிய வெண்மையான மழுவாயுதத்தைக் கைக்கொண்டவனும் ஆகிய சிவபெருமானது நன்மைதரும் திருவடிகளை அடைதலே மேலான குணம். | |
| Go to top |
வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரிசாரல், அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை, கொம்பு உந்துவ, குயில் ஆலுவ, குளிர் காழியுள் ஞான சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே.
|
11
|
வெம்மை மிக்க கதிரவன் ஒளி புகாதவாறு தடுக்கும் விரிந்த சாரலை உடையதும் அம்பைச் செலுத்தி முப்புரங்களை அழித்த சிவபிரான் எழுந்தருளியதுமான அண்ணாமலையைக் கொம்பு என்னும் வாத்தியங்களின் ஒலியைக் கேட்டு குயில்கள் எதிர் ஒலிக்கும் குளிர்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத் தமிழை ஓதவல்லவர்களின் திருவடிகளை வணங்குதல் சிறந்த தவமாம். | |