மரு ஆர் குழலிமாது ஓர் பாகம் ஆய், திரு ஆர் செம்பொன் பள்ளி மேவிய, கரு ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை மருவாதவர் மேல் மன்னும், பாவமே.
|
1
|
மணம் பொருந்திய கூந்தலை உடையவளாகிய பார்வதிதேவியை ஒரு பாகமாக உடையவராய்த் திருமகள் வாழும் செம்பொன்பள்ளி என வழங்கும் திருத்தலக்கோயிலில் எழுந்தருளிய கருநீலம் பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை வணங்கி அவற்றைத் தம் மனத்தே பொருந்தவையாதவர்களைப் பாவங்கள் பற்றும். | |
வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆய், சீர் ஆர் செம்பொன் பள்ளி மேவிய, ஏர் ஆர் புரிபுன்சடை, எம் ஈசனைச் சேராதவர் மேல் சேரும், வினைகளே.
|
2
|
கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவராய் சிறப்புப் பொருந்திய செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய அழகிய முறுக்கேறிய சிவந்தசடைமுடியை உடைய எம் ஈசனாகிய சிவபிரானைச் சென்று வணங்கி இடைவிடாது மனத்தில் நினையாதவர்களிடம் வினைகள் சேரும். | |
வரை ஆர் சந்தோடு அகிலும் வரு பொன்னித் திரை ஆர் செம்பொன் பள்ளி மேவிய, நரை ஆர் விடை ஒன்று ஊரும், நம்பனை உரையாதவர் மேல் ஒழியா, ஊனமே.
|
3
|
மலைகளில் செழித்து வளர்ந்த சந்தனமரங்களோடு அகில் மரங்களையும் அடித்துக் கொண்டு வருகின்ற பொன்னி நதிக்கரையில் விளங்கும் செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய வெண்ணிறம் பொருந்திய விடை ஒன்றை ஊர்ந்து வருபவனாகிய சிவபெருமான் புகழை உரையாதவர்களைப் பற்றியுள்ள குற்றங்கள் ஒழியா. | |
மழுவாள் ஏந்தி, மாது ஓர் பாகம் ஆய், செழு ஆர் செம்பொன் பள்ளி மேவிய, எழில் ஆர் புரிபுன்சடை, எம் இறைவனைத் தொழுவார் தம்மேல் துயரம் இல்லையே.
|
4
|
மழுவாகிய வாளை ஏந்தி உமையொருபாகனாய் வளம் பொருந்திய செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய அழகு பொருந்திய முறுக்கேறிய சிவந்த சடைமுடியை உடைய எம் இறைவனைத் தொழுபவர்கட்குத் துயரம் இல்லை. | |
மலையான் மகளோடு உடன் ஆய் மதில் எய்த சிலை ஆர் செம்பொன் பள்ளியானையே இலை ஆர் மலர் கொண்டு, எல்லி நண்பகல், நிலையா வணங்க, நில்லா, வினைகளே.
|
5
|
மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடு உடனாய் விளங்குபவனும் அசுரர்களின் மும்மதில்களை எய்தழித்த மலை வில்லை உடையவனுமாகிய செம்பொன்பள்ளியில் விளங்கும் சிவபிரானையே இலைகளையும் மலர்களையும் கொண்டு இரவிலும் நண்பகலிலும் மனம் நிலைத்து நிற்குமாறு வணங்குவார் மேல் வினைநில்லா. | |
| Go to top |
அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னிச் சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய, கறை ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை நிறையால் வணங்க, நில்லா, வினைகளே.
|
6
|
பாறைகளிற் பொருந்திவரும் நீரில் அகில் மரங்களையும் அடித்துவரும் பொன்னியாற்றின் கரையில் அமைந்த செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய விடக்கறை பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை மன ஒருமைப்பாட்டோடு வணங்க வினைகள் நில்லா. | |
பை ஆர் அரவு ஏர் அல்குலாளொடும் செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய, கை ஆர் சூலம் ஏந்து, கடவுளை மெய்யால் வணங்க, மேவா, வினைகளே.
|
7
|
அரவின் படம் போன்ற அழகிய அல்குலை உடைய உமையம்மையோடு வயல்கள் சூழ்ந்த செம்பொன்பள்ளியில் வீற்றிருக்கின்ற கையில் பொருந்திய சூலத்தை ஏந்தி விளங்கும் கடவுளை உடம்பால் வணங்க வினைகள் மேவா. | |
வான் ஆர் திங்கள் வளர் புன் சடை வைத்து, தேன் ஆர் செம்பொன் பள்ளி மேவிய, ஊன் ஆர் தலையில் பலி கொண்டு உழல் வாழ்க்கை ஆனான் கழலே அடைந்து வாழ்மினே!
|
8
|
வானத்தில் விளங்கும் பிறை மதியை வளர்ந்துள்ள சிவந்த தன் சடைமீது வைத்து இனிமை பொருந்திய செம்பொன்பள்ளியில் எழுந்தருளியவனும் புலால் பொருந்திய பிரமனது தலையோட்டில் பலியேற்று உழல்வதையே தன் வாழ்வின் தொழிலாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் திருவடிகளையே அடைந்து வாழ்மின். | |
கார் ஆர் வண்ணன், கனகம் அனையானும், தேரார் செம்பொன் பள்ளி மேவிய, நீர் ஆர் நிமிர்புன் சடை, எம் நிமலனை ஓராதவர்மேல் ஒழியா, ஊனமே.
|
9
|
நீலமேகம் போன்ற நிறமுடையோனாகிய திருமாலும் பொன்னிறமேனியனாகிய பிரமனும் தேடிக்காணொணாதவனும் செம்பொன்பள்ளியில் எழுந்தருளிய கங்கை அணிந்த நிமிர்த்துக் கட்டிய சிவந்த சடைமுடியை உடையவனுமாகிய குற்றமற்ற எம் இறைவனை மனம் உருகித்தியானியாதவர் மேல் உளதாகும் குற்றங்கள் நீங்கா. | |
மாசு ஆர் உடம்பர், மண்டைத் தேரரும், பேசா வண்ணம் பேசித் திரியவே, தேசு ஆர் செம்பொன் பள்ளி மேவிய ஈசா! என்ன, நில்லா, இடர்களே.
|
10
|
அழுக்கேறிய உடலினராகிய சமணரும் மண்டை என்னும் உண்கலத்தை ஏந்தித்திரிபவர்களாகிய புத்தரும் பேசக்கூடாதவைகளைப் பேசித்திரிய அன்பர்கள் `ஒளி பொருந்திய செம்பொன்பள்ளியில் மேவிய ஈசா!` என்று கூற அவர்களுடைய இடர்கள் பலவும் நில்லா. | |
| Go to top |
நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன் செறு ஆர் செம்பொன் பள்ளி மேயானைப் பெறும் ஆறு இசையால் பாடல் இவைபத்தும் உறுமா சொல்ல, ஓங்கி வாழ்வரே.
|
11
|
தேன் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட புகலிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் வயல்கள் சூழ்ந்த செம்பொன்பள்ளி இறைவன் அருளைப் பெறுமாறு பாடிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் இசையோடு தமக்குவந்த அளவில் ஓதவல்லவர் ஓங்கி வாழ்வர். | |