கணை நீடு எரி, மால், அரவம், வரை வில்லா, இணையா எயில் மூன்றும் எரித்த இறைவர் பிணை மா மயிலும், குயில், சேர் மட அன்னம், அணையும் பொழில் அன்பில் ஆலந் துறையாரே.
|
1
|
நீண்டு எரிகின்ற தீயையும் திருமாலையும் அம்பாகக் கொண்டு பூட்டி வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கட்டிய மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களையும் எரித்த இறைவர் தத்தம் பெடைகளோடுகூடிய பெரிய மயில்களும் குயில்களும் சேர்ந்து வாழும் அன்னங்களும் உறையும் பொழில் சூழ்ந்த அன்பிலாலந்துறையார் ஆவார். | |
சடை ஆர் சதுரன், முதிரா மதி சூடி, விடை ஆர் கொடி ஒன்று உடை எந்தை, விமலன்- கிடை ஆர் ஒலி ஓத்து அரவத்து இசை கிள்ளை அடை ஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே.
|
2
|
சடைமுடிகளோடு கூடிய சதுரப்பாடு உடையவராய் இளம்பிறையை முடிமிசைச் சூடி இடபக்கொடி ஒன்றை உடைய எந்தையாராகிய விமலர் வேதம் பயிலும் இளஞ்சிறார்கள் கூடியிருந்து ஓதும் வேத ஒலியைக் கேட்டு அவ்வோசையாலேயே அவற்றை இசைக்கின்ற கிளிகள் அடைதல் பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட அன்பிலாலந்துறை இறைவராவார். | |
ஊரும் அரவம் சடைமேல் உற வைத்து, பாரும் பலி கொண்டு ஒலி பாடும் பரமர் நீர் உண் கயலும், வயல் வாளை, வராலோடு ஆரும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.
|
3
|
ஊர்ந்து செல்லும் பாம்பைச் சடைமுடிமேல் பொருந்த அணிந்து உலகம் முழுதும் சென்று பலியேற்று இசை பாடி மகிழும் பரமராகிய பெருமானார் நீரின்வழி உணவுண்ணும் கயல்மீன்களை வயல்களிடத்துள்ள வாளை வரால் ஆகிய மீன்கள் உண்ணும் புனல்வளம் மிக்க அன்பிலாலந்துறையாராவார். | |
பிறையும் அரவும் உற வைத்த முடிமேல் நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார் மறையும் பலவேதியர் ஓத, ஒலி சென்று அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.
|
4
|
பிறைமதி பாம்பு ஆகியவற்றைப் பகை நீக்கி ஒருங்கே பொருந்த வைத்த முடிமீது நறுமணத்துடன் தோன்றும் வன்னித் தளிர்களும் மன்னிய சடையினர் வேதியர் பலர் வேதங்களை ஓத அவ்வொலி பல இடங்களிலும் ஒலிக்கும் நீர்வளம்மிக்க அன்பிலாலந்துறை இறைவராவார். | |
நீடும் புனல் கங்கையும் தங்க முடிமேல், கூடும் மலையாள் ஒருபாகம் அமர்ந்தார் மாடு முழவம் அதிர, மட மாதர் ஆடும் பதி அன்பில் ஆலந்துறையாரே.
|
5
|
முடிமேல் பெருகிவரும் நீரை உடைய கங்கை நதியையும் தங்குமாறு அணிந்து ஒருபாகமாகத் தம்மைத் தழுவிய மலைமகளைக் கொண்டுள்ள பெருமானார் பல இடங்களிலும் முழவுகள் ஒலிக்க இளம் பெண்கள் பலர் நடனங்கள் புரியும் அன்பிலாலந்துறை இறைவராவார். | |
| Go to top |
நீறு ஆர் திருமேனியர், ஊனம் இலார்பால் ஊறு ஆர் சுவை ஆகிய உம்பர் பெருமான்- வேறு ஆர் அகிலும், மிகு சந்தனம், உந்தி ஆறு ஆர் வயல் அன்பில் ஆலந்துறையாரே.
|
6
|
திருநீறு அணிந்த திருமேனியரும் குற்றம் அற்றவர்களின் உள்ளங்களில் பொருந்திய சுவையாக இனிப்பவருமாகிய தேவர் தலைவர் வேறாகப் பெயர்ந்து வரும் அகில் மரங்களையும் உயர்ந்த சந்தன மரங்களையும் அடித்துவரும் ஆற்றுநீர் பாயும் வயல்களை உடைய அன்பிலாலந்துறை இறைவர் ஆவார். | |
செடி ஆர் தலையில் பலி கொண்டு இனிது உண்ட படி ஆர் பரமன், பரமேட்டி தன் சீரை, கடி ஆர் மலரும் புனல் தூவி நின்று, ஏத்தும் அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே.
|
7
|
முடைநாற்றமுடைய தலையோட்டில் பலியேற்று அதனை இனிதாக உண்டருளும் தன்மையினைக் கொண்ட பரமனாகிய பரம்பொருள் மணம் பொருந்திய மலர்களையும் நீரையும் தூவி நின்று தன்புகழைத் துதிக்கும் அடியவர்களால் தொழப்படும் அன்பிலாலந்துறை இறைவராவார். | |
விடத் தார் திகழும் மிடறன், நடம் ஆடி, படத்து ஆர் அரவம் விரவும் சடை ஆதி, கொடித்தேர் இலங்கைக் குலக்கோன் வரை ஆர அடர்த்தார் அருள் அன்பில் ஆலந்துறையாரே.
|
8
|
ஆலகால விடக்கறை விளங்கும் கரிய கண்டத்தினரும் நடனமாடியும் படத்தோடு கூடிய அரவம் விரவும் சடையினை உடைய முதற்கடவுளும் கொடித்தேரைக் கொண்ட இலங்கையர் குலத்தலைவனாகிய இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி அடர்த்தவரும் ஆகிய சிவபிரான் அன்பர்கள் அருள் பெறுதற்குரிய இடமாக விளங்கும் அன்பில்ஆலந்துறை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளார். | |
வணங்கி மலர்மேல் அயனும், நெடுமாலும், பிணங்கி அறிகின்றிலர், மற்றும் பெருமை; சுணங்கு முகத்து அம் முலையாள் ஒருபாகம் அணங்கும் திகழ் அன்பில் ஆலந்துறையாரே.
|
9
|
தாமரை மலர்மேல் விளங்கும் அயனும் திருமாலும் சிவபிரானின் பெருமையை வணங்கி அறியாது தம்முட் பிணங்கித்தேடி அறியாதவராயினர். அப்பெருமான் சுணங்கு பொருந்திய முகப்பினை உடைய அழகிய தனத்தவளாய உமையம்மையை ஒருபாகத்தே அணங்காகக் கொண்டுள்ள அன்பிலாலந்துறை இறைவராவார். | |
தறியார், துகில் போர்த்து உழல்வார், சமண்கையர், நெறியா உணரா நிலை கேடினர்; நித்தல் வெறி ஆர் மலர் கொண்டு அடி வீழுமவரை அறிவார் அவர் அன்பில் ஆலந்துறையாரே.
|
10
|
தறிபோல ஆடையின்றி உள்ள சமணர்கள் நெய்த ஆடையினை உடலில் போர்த்து உழலும் புத்தர்கள் பரம் பொருளை முறையாக உணராததோடு நிலையான கேடுகளுக்கு உரியவர்களாய் உள்ளனர். அவர்களைச் சாராது நாள்தோறும் மணமலர்களைச் சூட்டித் தம் திருவடிகளில் வீழ்ந்து தொழும் அடியவர்களை நன்கறிந்தருளும் பெருமானார் அன்பிலாலந்துறை இறைவராவார். | |
| Go to top |
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல் கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன் பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய் விரவு ஆகுவர், வான் இடை; வீடு எளிது ஆமே.
|
11
|
பாம்புகள் வாழும் நீர் வளம் உடைய அன்பில் ஆலந்துறை இறைவர்மேல் வஞ்சனையில்லாத மக்கள் வாழும் சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பரவிப்பாடிய இப்பத்துப் பாடல்களையும் இசையோடு பாட வல்லவர் மறுமையில் வானக இன்பங்களுக்கு உரியவர்கள் ஆவர். அவர்களுக்கு வீட்டின்பமும் எளிதாம். | |