துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப் போய் நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பு ஆய் வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு, அஞ்சும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.
|
1
|
உறங்கும்போது கனவிடை வருபவரும் தம்மைத் தொழுமாறு செய்பவரும் முனைப்புக் காலத்து மறைந்து அன்பு செய்யும் காலத்து என் நெஞ்சம் புகுந்து நின்று நினையுமாறு செய்பவரும் ஆகிய இறைவர் முற்பிறவியில் நட்பாய் இருப்பதுபோலக் காட்டித்தன்னை வஞ்சனை செய்து கொன்ற கணவனை மறுபிறப்பில் அடைந்து அவனது வாழ்நாளைக் கவர்ந்த பெண்ணின் செயலுக்குத் துணைபோன வேளாளர்கள் அஞ்சி உயிர்த்தியாகம் செய்த திருவாலங்காட்டில் உறையும் எம் அடிகளாவார். | |
கேடும் பிறவியும் ஆக்கினாரும், கேடு இலா வீடுமாநெறி விளம்பினார், எம் விகிர்தனார் காடும் சுடலையும் கைக்கொண்டு, எல்லிக் கணப்பேயோடு ஆடும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.
|
2
|
பிறப்பு இறப்புக்களை உயிர்கட்குத் தந்தருளியவரும் அழிவற்ற வீட்டு நெறியை அடைதற்குரிய நெறிகளை உயிர்கட்கு விளம்பியவரும் ஆகிய நம்மின் வேறுபட்ட இயல்பினராகிய சிவபிரான் இடுகாடு சுடலை ஆகியவற்றை இடமாகக் கொண்டு இராப்போதில் பேய்க்கணங்களோடு நடனமாடும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார். | |
கந்தம் கமழ் கொன்றைக் கண்ணி சூடி, கனல் ஆடி, வெந்தபொடி-நீற்றை விளங்கப் பூசும் விகிர்தனார் கொந்து அண் பொழில்-சோலை அரவின் தோன்றிக் கோடல் பூத்த, அம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.
|
3
|
மணம் கமழும் கொன்றை மலர் மாலை சூடிக்கனலிடை நின்று ஆடி சுடுகாட்டில் `வெந்த` சாம்பலை உடல் முழுதும் விளங்கப் பூசும் வேறுபட்ட இயல்பினராகிய சிவபிரான் கொத்துக்கள் நிறைந்த பொழில்களிலும் சோலைகளிலும் பாம்பின் படம் போலக் காந்தள் மலர் மலரும் அழகிய குளிர்ந்த பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார். | |
பாலமதி சென்னி படரச் சூடி, பழி ஓராக் காலன் உயிர் செற்ற காலன் ஆய கருத்தனார் கோலம் பொழில்-சோலைப் பெடையோடு ஆடி மடமஞ்ஞை ஆலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.
|
4
|
இளம்பிறையை முடிமீது பொருந்தச் சூடி தனக்கு வரும் பழியை நினையாத காலனது உயிரைச் செற்ற காலகாலராய இறைவர் அழகிய பொழில்களிலும் சோலைகளிலும் இளமயில்கள் பெண் மயில்களோடு கூடிக்களித்து ஆரவாரிக்கும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார். | |
ஈர்க்கும் புனல் சூடி, இளவெண் திங்கள் முதிரவே பார்க்கும் அரவம் பூண்டு ஆடி, வேடம் பயின்றாரும் கார்க் கொள் கொடி முல்லை குருந்தம் ஏறி, கருந்தேன் மொய்த்து, ஆர்க்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.
|
5
|
ஈர்த்துச் செல்லுதலில் வலிய கங்கை நீரை முடி மிசைத் தாங்கி இளம்பிறையை விழுங்க அதனது வளர்ச்சி பார்த்திருக்கும் பாம்பை அணிகலனாகப் பூண்டு நடனம் ஆடிப் பல்வேறு வேடங்களில் தோன்றி அருள்புரிபவர் கார்காலத்தே மலரும் முல்லைக் கொடிகள் குருந்த மரங்களில் ஏறிப்படர அம்மலர்களில் உள்ள தேனை உண்ணவரும் கரிய வண்டுகள் மலரை மொய்த்து ஆரவாரிக்கும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார். | |
| Go to top |
பறையும் சிறு குழலும் யாழும் தம் பயிற்றவே, மறையும் பல பாடி, மயானத்து உறையும் மைந்தனார், பிறையும் பெரும்புனல் சேர் சடையினாரும் பேடைவண்டு அறையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.
|
6
|
பறை சிறுகுழல் யாழ் முதலிய கருவிகளைப் பூதங்கள் ஒலிக்க வேதங்களைப் பாடிக்கொண்டு மயானத்தில் உறையும் மைந்தராய் பிறை பெருகி வரும் கங்கை ஆகியவற்றை அணிந்த சடை முடியினர் ஆகிய சிவபெருமான் பெடைகளோடு கூடிய ஆண் வண்டுகள் ஒலிக்கும்சோலைகள் சூழ்ந்த பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார். | |
நுணங்குமறை பாடி ஆடி வேடம் பயின்றாரும், இணங்கும் மலைமகளோடு இரு கூறு ஒன்று ஆய் இசைந்தாரும் வணங்கும் சிறுத்தொண்டர் வைகல் ஏத்தும் வாழ்த்தும் கேட்டு, அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.
|
7
|
நுட்பமான ஒலிக் கூறுகளை உடைய வேதங்களைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் பல்வேறு திருவுருவங்களைக் கொள்பவரும் தம்மோடு இணைந்த பார்வதிதேவியுடன் இருவேறு உருவுடைய ஓருருவாக இசைந்தவரும் ஆகிய பெருமானார் தம்மை வணங்கும் அடக்கமுடைய தொண்டர்கள் நாள்தோறும் பாடும் வாழ்த்துக்களைக் கேட்டு தெய்வத் தன்மை மிகுந்து தோன்றும் பழையனூரைச் சேர்ந்த திருவாலங்காட்டு எம் அடிகள் ஆவார். | |
கணையும் வரிசிலையும் எரியும் கூடிக் கவர்ந்து உண்ண, இணை இல் எயில் மூன்றும் எரித்திட்டார், எம் இறைவனார் பிணையும் சிறுமறியும் கலையும் எல்லாம் கங்குல் சேர்ந்து அணையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.
|
8
|
அம்பு வில் நெருப்பு ஆகியன கூடிக் கவர்ந்து உண்ணுமாறு ஒப்பற்ற முப்புரங்களை எரித்தவராகிய எம் இறைவர் பெண் மான் ஆண்மான் அவற்றின் குட்டிகள் ஆகியன இரவிடைச் சென்றணையும் பழையனூரைச் சேர்ந்த ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார். | |
கவிழ மலை, தரளக் கடகக் கையால் எடுத்தான் தோள் பவழ நுனிவிரலால் பைய ஊன்றிப் பரிந்தாரும் தவழும் கொடிமுல்லை புறவம் சேர நறவம் பூத்து அவிழும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.
|
9
|
கயிலை மலை நிலை குலையுமாறு முத்துக்கள் பதித்த வீரக் கடகம் அணிந்த தன் கைகளால் எடுத்த இராவணனின் தோள் வலியைத் தம் பவழம் போன்ற கால்விரல் நுனியால் மெல்ல ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு இரங்கி அருள் புரிந்த சிவபிரானார் முல்லைக்கொடிகள் முல்லை நிலத்தின்கண் தவழ்ந்து படர நறவக் கொடிகள் மலர்களைப் பூத்து விரிந்து நிற்கும் பழையனூரைச் சேர்ந்த ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார். | |
பகலும் இரவும் சேர் பண்பினாரும், நண்பு ஓராது இகலும் இருவர்க்கும் எரி ஆய்த் தோன்றி நிமிர்ந்தாரும் புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய் அகலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.
|
10
|
பகல் இரவு போன்ற வெண்மை கருமை நிறங்களைக் கொண்ட நான்முகனும் திருமாலும் தங்களிடையே உள்ள உறவு முறையையும் கருதாது யார் தலைவர் என்பதில் மாறுபட்டு நிற்க அவ்விருவர்க்கும் இடையே எரியுருவாய்த் தோன்றி ஓங்கி நின்றவரும் ஆகம நூல்கள் புகலும் வழிபாடுகளில் தலை நிற்கும் அடியவர்க்குத் தீயன போக்கி அருள்புரிபவரும் ஆகிய பெருமான் பழையனூர்ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார். | |
| Go to top |
போழம்பல பேசிப் போது சாற்றித் திரிவாரும், வேழம் வரும் அளவும் வெயிலே துற்றித் திரிவாரும், கேழல் வினை போகக் கேட்பிப்பாரும்; கேடு இலா ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.
|
11
|
மாறுபட்ட சொற்களைப் பேசியும் காலத்துக்கு ஏற்றவாறு உண்மையல்லாதவைகளைச் சொல்லியும் திரியும் புறச்சமயத்தவரும் நன்மையல்லாதவற்றை உபதேசங்களாகக் கூறுபவரும் யானைத் தீ வரும் அளவும் வெயிலிடை உண்டு திரியும் மதவாதிகளுமாகிய புறச்சமயிகளைச் சாராது தம்மைச் சார்ந்த அடியவர்களைப் பற்றிய வினைகள் அகலுமாறு அவர்கட்கு உபதேசங்களைப் புரியச் செய்பவராகிய அழிவற்ற ஆளுமையுடையவர் ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார். | |
சாந்தம் கமழ் மறுகில் சண்பை ஞானசம்பந்தன் ஆம் தண் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளை, வேந்தன் அருளாலே, விரித்த, பாடல் இவை வல்லார் சேர்ந்த இடம் எல்லாம் தீர்த்தம் ஆகச் சேர்வாரே.
|
12
|
சந்தனம் கமழும் திருவீதிகளை உடைய சண்பைப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் அழகிய தண்ணிய ஆலங்காட்டு வேந்தனாக விளங்கும் அவ்விறைவன் திருவருளாலே போற்றி விரித்தோதிய இத்திருப்பதிகப் பாடல்களை வல்லவர்கள் சேர்ந்த இடங்களெல்லாம் புனிதமானவைகளாகப் பொருந்தப் பெறுவர். | |