சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.051   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருச்சோபுரம் (தியாகவல்லி) - பழந்தக்கராகம் மாயாமாளவகௌளை சுத்த சாவேரி கல்யாணகேசரி ராகத்தில் திருமுறை அருள்தரு சோபுரநாயகியம்மை உடனுறை அருள்மிகு சோபுரநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=H2I_u74H02A   Add audio link Add Audio

வெங் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து, விளங்கும் மொழி
மங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை கொல் ஆம்?
கங்கையோடு திங்கள் சூடி, கடி கமழும் கொன்றைத்
தொங்கலானே! தூய நீற்றாய்! சோபுரம் மேயவனே!

1
கங்கை திங்கள் ஆகியவற்றை முடிமிசைச்சூடி மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்து தூய திருநீறு பூசித் திருச்சோபுரத்தில் விளங்கும் இறைவனே! கொடிய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்திய விளக்கமான மொழிகளைப் பேசும் மலைமங்கையை இடப்பாகத்தே கொண்டு மகிழும் உனது செயலின் மாண்பு எத்தகையதோ?.

விடை அமர்ந்து, வெண்மழு ஒன்று ஏந்தி, விரிந்து இலங்கு
சடை ஒடுங்க, தண் புனலைத் தாங்கியது என்னை கொள் ஆம்?
கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த,
தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய்! சோபுரம் மேயவனே!

2
வாயில்களாற் சிறந்த முப்புரங்களும் அனலுள் அழுந்துமாறு சினத்தோடு அம்பு செலுத்திய கொடிய மலை வில்லை உடையவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! விடைமீது அமர்ந்து வெண்மையான மழு ஒன்றைக் கையில் ஏந்தி விரிந்து விளங்கும் சடையின்கண் ஒடுங்குமாறு குளிர்ந்த நீரைத் தடுத்துத் தாங்கி இருத்தற்குக் காரணம் என்னையோ?.

தீயர் ஆய வல் அரக்கர் செந்தழலுள் அழுந்தச்
சாய எய்து, வானவரைத் தாங்கியது என்னை கொள் ஆம்?
பாயும் வெள்ளை ஏற்றை ஏறி, பாய் புலித்தோல் உடுத்த
தூய வெள்ளை நீற்றினானே! சோபுரம் மேயவனே!

3
பாய்ந்து செல்லும் வெண்ணிறமான விடையேற்றின் மீது ஏறி பாயும் புலியினது தோலை உடுத்துத்தூய வெண்ணீற்றை அணிந்துள்ளவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! கொடியவர்களாகிய வலிய அரக்கர் சிவந்த அழலுள் அழுந்துமாறு கணை எய்து தேவர்களை வாழ்வித்தது என்ன காரணம் பற்றியோ?

பல் இல் ஓடு கையில் ஏந்தி, பல்கடையும் பலி தேர்ந்து,
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை கொல் ஆம்?
வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும்
தொல்லை ஊழி ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே!

4
வில்லை வென்ற வளைந்த நுண்புருவத்தையும் வேல் போன்ற நீண்ட கண்ணையும் உடைய உமையம்மையோடும் பழமையான பல ஊழிக்காலங்களாக நிற்பவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! பல் இல்லாத மண்டையோட்டைக் கையிலேந்திப் பலர்இல்லங்களுக்கும் சென்று பலி ஏற்கும் அல்லல் பொருந்திய வாழ்க்கையின்மேல் நீ ஆதரவு காட்டுதற்குக் காரணம் என்னவோ?

நாற்றம் மிக்க கொன்றை துன்று செஞ்சடைமேல் மதியம்
ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை கொல் ஆம்?
ஊற்றம் மிக்க காலன்தன்னை ஒல்க உதைத்து அருளி,
தோற்றம் ஈறும் ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே!

5
வலிமை பொருந்திய காலனை அழியுமாறு உதைத் தருளி எல்லாப் பொருள்கட்கும் தோற்றமும் ஈறுமாகி நிற்பவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மணம் மிக்க கொன்றை மலர்கள் நிறைந்த செஞ்சடையின்மேல் பிறைமதியை அழகு பெறவைத்து மகிழ்தற்குக் காரணம் என்னையோ?
Go to top

கொல் நவின்ற மூ இலைவேல், கூர் மழுவாள் படையன்,
பொன்னை வென்ற கொன்றைமாலை சூடும் பொற்பு என்னை கொல் ஆம்?
அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து, அரை சேர்
துன்ன வண்ண ஆடையினாய்! சோபுரம் மேயவனே!

6
அன்னம் போன்ற மெல்லிய நடையினையுடைய உமையம்மையை ஒரு பாகமாகப் பொருந்தி இடையில் அழகிய கோவண ஆடையை அணிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! கொல்லும் தொழில் பொருந்திய மூவிலை வேலையும் தூய மழுவாட்படையையும் உடையவனே! நிறத்தால் பொன்னை வென்ற கொன்றை மாலையை நீ விரும்பிச் சூடுதற்குரிய காரணம் என்னையோ?

குற்றம் இன்மை, உண்மை, நீ என்று உன் அடியார் பணிவார்,
கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை கொல் ஆம்?
வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு, அயன் வெண் தலையில்
துற்றல் ஆன கொள்கையானே! சோபுரம் மேயவனே!

7
ஊன் வற்றிய ஆமை ஓட்டையும் ஒளி பொருந்திய பாம்பையும் அணிகலனாகப்பூண்டு பிரமனின் வெண்மையான தலையோட்டில் பலியேற்று உண்ணும் கொள்கையனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! குணமும் குற்றமும் நீயே என்று பணியும் உன் அடியவர்கட்குத் தாங்கள் கற்ற கல்வியும் கேள்வியும் அதனால் விளையும் ஞானமுமாக நீயே விளங்குதற்குக் காரணம் என்னவோ?

விலங்கல் ஒன்று வெஞ்சிலையாக் கொண்டு, விறல் அரக்கர்
குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை கொல் ஆம்?
இலங்கை மன்னு வாள் அவுணர்கோனை எழில் விரலால்
துலங்க ஊன்றிவைத்து உகந்தாய்! சோபுரம் மேயவனே!

8
இலங்கையில் நிலைபெற்று வாழும் வாட்போரில் வல்ல அவுணர் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே! திருச்சோபுரம் மேவிய இறைவனே! மேரு மலையைக் கொடியதொரு வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?.

விடம் கொள் நாகம் மால்வரையைச் சுற்றி, விரிதிரை நீர்
கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை கொல் ஆம்?
இடந்து மண்ணை உண்ட மாலும், இன் மலர்மேல் அயனும்,
தொடர்ந்து முன்னம் காணமாட்டாச் சோபுரம் மேயவனே!

9
மண்ணுலகை அகழ்ந்து உண்ட திருமாலும் இனிய தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும் முற்காலத்தே உன்னைத் தொடர்ந்து அடிமுடி காணமாட்டாராய் நின்றொழியத் திருச்சோபுரத்தில் மேவி விளங்கும் இறைவனே! தேவர்கள் விடத்தையுடைய வாசுகி என்னும் பாம்பை மந்தரம் என்னும் பெரிய மலையைச் சுற்றிக் கட்டி விரிந்த அலைகளையுடைய கடல்நீரைக் கடைந்தபோது அத னிடை எழுந்த நஞ்சை உண்டு மகிழ்தற்குக் காரணம் என்னையோ?

புத்தரோடு புன்சமணர் பொய் உரையே உரைத்து,
பித்தர் ஆகக் கண்டு உகந்த பெற்றிமை என்னை கொல் ஆம்?
மத்தயானை ஈர் உரிவை போர்த்து, வளர் சடைமேல்
துத்திநாகம் சூடினானே! சோபுரம் மேயவனே!

10
மதம் பொருந்திய யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து நீண்ட சடையின் மேல் புள்ளிகளையுடைய நாகப் பாம்பைச்சூடியவனே ! திருச்சோபுரம் மேவிய இறைவனே ! புத்தர் களும் சமணர்களும் பொய்யுரைகளையே பேசிப் பித்தராகத் திரி தலைக் கண்டு நீ மகிழ்தற்குக் காரணம் என்னையோ ?.
Go to top

சோலை மிக்க தண்வயல் சூழ் சோபுரம் மேயவனை,
சீலம் மிக்க தொல்புகழ் ஆர் சிரபுரக் கோன்-நலத்தான்,
ஞாலம் மிக்க தண் தமிழான், ஞானசம்பந்தன்-சொன்ன
கோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர், வான் உலகே.

11
சோலைகள் மிகுந்ததும் குளிர்ந்தவயல்களால் சூழப்பட்டதுமான திருச்சோபுரம் மேவிய இறைவனைச் சீலத்தால் மிக்க பழமையான புகழை உடைய அந்தணர்கள் வாழும் சிரபுரம் என்னும் சீகாழிப்பதியின் தலைவனும் நன்மைகளையே கருதுபவனும் உலகில் மேம்பட்ட தண் தமிழ் பாடியவனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய அழகுமிக்க இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் வானுலகை அடைவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்சோபுரம் (தியாகவல்லி)
1.051   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெங் கண் ஆனை ஈர்
Tune - பழந்தக்கராகம்   (திருச்சோபுரம் (தியாகவல்லி) சோபுரநாதர் சோபுரநாயகியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000