ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, உமை நீறு சேர் திருமேனியர் சேறு சேர் வயல் தென் திருமாற் பேற்றில் மாறு இலா மணிகண்டரே.
|
1
|
சேற்று வளம் நிறைந்த வயல்கள் சூழ்ந்த அழகிய திருமாற்பேற்றில் ஒப்பற்ற நீலமணி போன்ற கண்டத்தை உடைய இறைவர் கடலிடத்தே ஊறிப் பொருந்திவந்த நஞ்சினை உண்டு உமையம்மையோடு கூடியவராய்த் திருநீறு பூசிய திருமேனியராய் விளங்குகிறார். | |
தொடை ஆர் மா மலர் கொண்டு, இருபோது, உம்மை அடைவார் ஆம், அடிகள்! என மடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறு உடையீரே! உமை உள்கியே.
|
2
|
வாய்க்கால் மடைகளில் நீர் நிறைந்து விளங்கும் நிலையான திருமாற்பேற்றைத் தமது இருப்பிடமாக உடையவரே உம்மை நினைந்து சிறந்த மாலைகளைத் தொடுத்து ஏந்திய கையினராய்க் காலை மாலை இருபோதும் உம்மைத்தலைவராக எண்ணி அடியவர் அடைகின்றனர். | |
பை ஆரும் அரவம் கொடு ஆட்டிய கையான் என்று வணங்குவர் மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற ஐயா! நின் அடியார்களே.
|
3
|
கருநிறம் பொருந்திய நஞ்சை உண்டு தேவர்களைக் காத்தருளிய நீலகண்டராய்த் திருமாற்பேற்றில் வீற்றிருக்கின்ற தலைவரே உம் அடியவர்கள் படம் பொருந்திய பாம்பைப் பிடித்து ஆட்டும் கைகளை உடையவர் என்று உம்மை வணங்குவார்கள். | |
சால மா மலர் கொண்டு, சரண்! என்று, மேலையார்கள் விரும்புவர் மாலினார் வழிபாடு செய் மாற்பேற்று நீலம் ஆர் கண்ட! நின்னையே.
|
4
|
திருமால் வழிபாடு செய்து அருள் பெற்றதால் திருமாற்பேறு என வழங்கும் இத்தலத்தில் விளங்கும் நீலநிறம் பொருந்திய கண்டத்தை உடையவரே நும்மை மேன்மை மிக்க பெரியோர்கள் மிகுதியான நறுமலர்களைக் கொண்டு அர்ச்சித்து உம்மையே சரண் என்று விரும்பி வழிபடுவர். | |
மாறு இலா மணியே! என்று வானவர் ஏறவே மிக ஏத்துவர் கூறனே! குலவும் திரு மாற்பேற்றில் நீறனே! என்றும் நின்னையே.
|
5
|
உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்டவரே விளங்கும் திருமாற்பேற்றில் வெண்ணீறுபூசி விளங்குபவரே ஒப்பற்ற மாணிக்கமணியே என்று உம்மையே வானவர் மிகமிக ஏத்தி மகிழ்வர். | |
| Go to top |
உரையாதார் இல்லை, ஒன்றும் நின் தன்மையை; பரவாதார் இல்லை, நாள்களும்; திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்று அரையானே! அருள் நல்கிடே!
|
6
|
அலைகள் பொருந்திய பாலியாற்றின் தென்கரையில் விளங்கும் திருமாற்பேற்றில் விளங்கும் அரசனே பொருந்திய நின் பெருந்தன்மையை வியந்து உரையாதார் இல்லை. நாள்தோறும் உன் பெருமைகளைப் பரவாதவர் இல்லை. அருள் நல்குவீராக. | |
அரசு அளிக்கும் அரக்கன் அவன்தனை உரை கெடுத்து, அவன் ஒல்கிட வரம் மிகுத்த எம் மாற்பேற்று அடிகளைப் பரவிடக் கெடும், பாவமே.
|
7
|
இலங்கை நாட்டை ஆளும் இராவணனின் புகழை மங்கச் செய்து பின் அவன் பிழை உணர்ந்து வேண்டிய அளவில் அவனுக்கு வரங்கள் பலவற்றையும் மிகுதியாக அளித்தருளிய எமது திருமாற்பேற்று அடிகளைப் பரவப் பாவம் கெடும். | |
இருவர்தேவரும் தேடித் திரிந்து, இனி ஒருவரால் அறிவு ஒண்ணிலன், மருவு நீள்கழல் மாற்பேற்று அடிகளைப் பரவுவார் வினை பாறுமே.
|
8
|
திருமால் பிரமன் ஆகிய இருவரும் அடிமுடி காணத்தேடித் திரிந்தும் ஒருவராலும் அறிய ஒண்ணாத இயல்பினனாகிய திருமாற்பேற்றுள் விளங்கும் சிவபிரானுடைய பெருமை விரிந்த திருவடிகளைப் பரவித்துதிப்பார் வினைகள் கெடும். | |
தூசு போர்த்து உழல்வார், கையில் துற்று உணும் நீசர்தம் உரை கொள்ளேலும்! தேசம் மல்கிய தென்திருமாற்பேற்றின் ஈசன் என்று எடுத்து ஏத்துமே!
|
9
|
ஆடையை மேனிமேற் போர்த்து உழல்வோரும் கைகளில் உணவை ஏற்று உண்ணும் இழிந்தோருமாகிய புத்த சமணர்களின் உரைகளை மெய்யெனக் கொள்ளாதீர். புகழ் பொருந்திய அழகிய திருமாற்பேற்றுள் விளங்கும் ஈசன் என்று பெருமானைப் புகழ்ந்து போற்றுமின். | |
மன்னி மாலொடு சோமன் பணி செயும் மன்னும் மாற்பேற்று அடிகளை மன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல் பன்னவே, வினை பாறுமே.
|
10
|
திருமாலும் சந்திரனும் தங்கியிருந்து பணிசெய்து வழிபட்ட நிலைபேறுடைய திருமாற்பேற்றுள் விளங்கும் இறைவனை நிலைத்த காழிமாநகருள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதினால் வினைகள் கெடும். | |
| Go to top |