ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; இவன் ஒளி வெள்ளியான் உறை வேற்காடு உள்ளியார் உயர்ந்தார்; இவ் உலகினில் தெள்ளியார்; அவர் தேவரே.
|
1
|
மிகவும் சிறந்த மெய்ப்பொருளை அன்போடு எண்ணினால் அவ்வெண்ணம் நற்கதிக்கு வாயிலாம். அத்தகைய மெய்ப்பொருளாய் வெண்மையான ஒளி வடிவினனாய் திருவேற்காட்டில் எழுந்தருளியுள்ள இவ்விறைவனை நினைந்தவர்கள் இவ்வுலகினில் உயர்ந்தவர் ஆவர். அவனைக் கண்டு தெளிந்த அவர்கள் தேவர்களாவர். | |
ஆடல் நாகம் அசைத்து, அளவு இல்லது ஓர் வேடம் கொண்டவன் வேற்காடு பாடியும் பணிந்தார் இவ் உலகினில் சேடர் ஆகிய செல்வரே.
|
2
|
ஆடுதற்குரிய பாம்பினை இடையிற்கட்டிய அளவற்ற பல்வேறு வடிவங்களைக் கொண்டருளிய திருவேற்காட்டு இறைவனைப்பாடிப் பணிந்தவர்கள் இவ்வுலகினில் பெருமை பொருந்திய செல்வர்கள் ஆவர். | |
பூதம் பாடப் புறங்காட்டு இடை ஆடி, வேதவித்தகன், வேற்காடு, போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு ஏதம் எய்துதல் இல்லையே.
|
3
|
பூதகணங்கள் பாட சுடுகாட்டின்கண் நடனம் ஆடி வேதங்களை அருளிய வித்தகனாக விளங்கும் திருவேற்காட்டு இறைவற்கு மலர்களும் சந்தனமும் நறும்புகை தரும் பொருள்களும் கொடுத்தவர்களுக்குத் துன்பங்கள் வருதல் இல்லையாம். | |
ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன், வீழ்சடையினன், வேற்காடு, தாழ்வு உடை மனத்தால், பணிந்து ஏத்திட, பாழ்படும், அவர் பாவமே.
|
4
|
ஆழமான கடல் என்று சொல்லத்தக்க கங்கை நதியை மறைத்துக்கொண்ட விழுது போன்ற சடைமுடியினை உடைய திருவேற்காட்டு இறைவனைப் பணிவான மனத்தோடு வணங்கித் துதிப்பவர்களின் பாவங்கள் அழிந்தொழியும். | |
காட்டினானும், அயர்த்திடக் காலனை வீட்டினான், உறை வேற்காடு பாட்டினால் பணிந்து ஏத்திட வல்லவர் ஓட்டினார், வினை ஒல்லையே.
|
5
|
மார்க்கண்டேயர் சிவனே முழுமுதல்வன் எனக் காட்டினாலும் அதனை உணராது மயங்கி அவர் உயிரைக் கவரவந்த அக்காலனை அழித்த சிவபிரான் உறையும் திருவேற்காட்டைப் பாடல்கள் பாடிப்பணிந்து வழிபடவல்லவர் தம் வினைகளை விரைவில் ஓட்டியவர் ஆவர். | |
| Go to top |
தோலினால் உடை மேவ வல்லான், சுடர் வேலினான், உறை வேற்காடு நூலினால் பணிந்து ஏத்திட வல்லவர், மாலினார், வினை மாயுமே.
|
6
|
தான் கட்டியும் போர்த்தும் உள்ள ஆடைகளைத் தோலினால் அமைந்தனவாகக் கொண்டுள்ள இறைவன் ஒளிபொருந்திய வேலோடு உறையும் திருவேற்காட்டை ஆகம நூல்களில் விதித்தவாறு வழிபட்டுத் துதிக்க வல்லவர்களாகிய ஆன்மாக்களைப் பற்றிய மயங்கச் செய்யும் வினைகள் மாய்ந்தொழியும். | |
மல்லல் மும்மதில் மாய்தர எய்தது ஓர் வில்லினான் உறை வேற்காடு சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர் செல்ல வல்லவர், தீர்க்கமே.
|
7
|
வளமை பொருந்திய முப்புரங்களும் அழிந்தொழி யுமாறு கணை எய்த ஒப்பற்ற மேருவில்லை ஏந்திய சிவபிரான் உறையும் திருவேற்காட்டைப் புகழ்ந்து சொல்லவல்லவர்கள் சுருங்கா மனத்தினராவர். அங்குச் சென்று தரிசிக்க வல்லவர் நீண்ட ஆயுள் பெறுவர். | |
மூரல் வெண் மதி சூடும் முடி உடை வீரன் மேவிய வேற்காடு வாரம் ஆய் வழிபாடு நினைந்தவர் சேர்வர், செய் கழல்; திண்ணமே.
|
8
|
மிக இளைய வெண்மையான பிறைமதியைச் சூடும் திருமுடியை உடைய வீரனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள திருவேற்காட்டை அன்போடு வழிபட நினைந்தவர் அப்பெருமானின் சிவந்த திருவடிகளைத் திண்ணமாகச் சேர்வர். | |
பரக்கினார் படு வெண் தலையில் பலி விரக்கினான் உறை வேற் காட்டூர், அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை நெருக்கினானை நினைமினே!
|
9
|
பிரமனின் தலையோட்டில் பலியேற்கின்ற சமர்த்தனாகிய சிவபிரான் உறையும் திருவேற்காட்டில் அரக்கன் ஆகிய இராவணனின் ஆண்மையை அடர்த்துக் கால்விரலால் சிறிதே ஊன்றி நெருக்கிய அவனை நினைமின்கள். | |
மாறு இலா மலரானொடு மால் அவன் வேறு அலான் உறை வேற்காடு ஈறு இலா மொழியே மொழியா எழில் கூறினார்க்கு இல்லை, குற்றமே.
|
10
|
ஒப்பற்ற தாமரை மலர் மேல் உறையும் நான்முகன் திருமால் ஆகியவர்களை வெற்றி கொள்வானாகிய சிவன் உறையும் திருவேற்காட்டு இறைவனைப் பற்றிய மொழியை ஈறிலாமொழியாக அப்பெருமானுடைய அழகிய நலங்களைக் கூறுபவர்களுக்குக் குற்றமில்லை. | |
| Go to top |
விண்ட மாம்பொழில் சூழ் திரு வேற்காடு கண்டு, நம்பன் கழல் பேணி, சண்பை ஞானசம்பந்தன் செந்தமிழ் கொண்டு பாட, குணம் ஆமே.
|
11
|
விரிந்த மலர்களையுடைய மாஞ்சோலைகள் சூழ்ந்த திருவேற்காட்டை அடைந்து அங்கெழுந்தருளியுள்ள இறைவன் திருவடிகளைப் பரவி சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகச் செந்தமிழ் கொண்டு பாடிப்போற்றுவார்க்கு நன்மைகள் விளையும். | |