அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த, விடை ஆர் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேய இடம் கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ, படை ஆர் புரிசைப் பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே.
|
1
|
பகைவராய அசுரர்களின் திரிபுரங்கள் தாங்குதற்கரிய அழலில் அழுந்துமாறு விடைமிசை ஏறிவரும் திருமேனியராய்ச் சென்று சினந்த வித்தகராகிய சிவபிரான் மேவிய இடம் வாயில்களோடு கூடிய மாடவீடுகள் எங்கும் உயர்ந்து விளங்குவதும் வான வெளியைத் தடவும் மதில்களால் சூழப்பட்டதும் ஆகிய காவிரிப்பூம் பட்டினத்தைச் சேர்ந்த திருப்பல்லவனீச்சரமாகும். | |
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான், இமையோர் கண் ஆய் உலகம் காக்க நின்ற கண்ணுதல், நண்ணும் இடம் மண் ஆர் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்தி, பண் ஆர் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.
|
2
|
பகைவராய அசுரர்களின் கோட்டைகளாய திரி புரங்களைச் சினந்தழித்த எந்தையாகிய பெருமானும் தேவர்களின் கண்களாய் விளங்குவோனும் இவ்வுலகைக் காக்கின்ற கண்ணுதலும் ஆகிய சிவபிரான் மேவிய இடம் நன்கு அமைக்கப்பட்ட சோலைகளில் அழகிய வண்டுகள் நாள்தோறும் தேனுண்டு இசைபாடும் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும். | |
மங்கை அங்கு ஓர் பாகம் ஆக, வாள் நிலவு ஆர் சடைமேல் கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம் பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல் பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.
|
3
|
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு ஒளி பொருந்திய பிறை தங்கிய சடையின்மேல் கங்கை நங்கையையும் வாழ வைத்துள்ள கள்வனாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் மிக்க ஆழமான கடலினது வெள்ள நீரால் தானும்மேலே உயர்ந்துள்ள நீர் நிலையாகிய பொய்கைகளில் தாமரை மலர்கள் பூத்துள்ள காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும். | |
தார் ஆர் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார்பு-அகலம் நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம் போர் ஆர் வேல்கண் மாதர் மைந்தர் புக்கு இசைபாடலினால், பார் ஆர்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.
|
4
|
மாலையாகக் கட்டிய கொன்றை மலர்கள் பொன் போல் விளங்குமாறு சூட்டியுள்ள மார்பின் பரப்பில் நீரில் குழைத்த சாம்பலைச் சந்தனத்தைப் போலப் பூசியுள்ள குற்றமற்ற சிவபிரான் எழுந்தருளிய இடம் போர்செய்யத் தகுதியான கூரிய வேல் போலும் கண்களையுடைய மாதர்களும் இளைஞர்களும் கூடி இசை பாடுதலால் அதனைக் கேட்க மக்கள் வெள்ளம்போல் திரண்டுள்ள காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும். | |
மை சேர் கண்டர், அண்டவாணர், வானவரும் துதிப்ப, மெய் சேர் பொடியர், அடியார் ஏத்த மேவி இருந்த இடம் கை சேர் வளையார், விழைவினோடு காதன்மையால், கழலே, பை சேர் அரவு ஆர் அல்குலார், சேர் பல்லவனீச்சுரமே.
|
5
|
கருமை நிறம் பொருந்திய கண்டத்தினை உடைய வரும் மண்ணக மக்களும் விண்ணகத் தேவரும் துதிக்க மேனிமிசைத் திருநீறுபூசியவனும் ஆகிய நிமலன் அடியவர் புகழ மேவியிருந்தருளும் இடம் கைகளில் மிகுதியான வளையல்களை அணிந்தபாம்பின் படம் போன்ற அல்குலை உடைய இளமகளிர் விழைவோடும் காதலோடும் திருவடிகளை வழிபடச் சேர்கின்ற திருப்பல்லவனீச்சரமாகும். | |
| Go to top |
குழலின் ஓசை, வீணை, மொந்தை கொட்ட, முழவு அதிர, கழலின் ஓசை ஆர்க்க, ஆடும் கடவுள் இருந்த இடம் சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண்திரை மொண்டு எறிய, பழி இலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.
|
6
|
குழலோசைக்கு ஏற்ப வீணை மொந்தை ஆகியன முழங்கவும் முழவு ஒலிக்கவும் காலில் அணிந்துள்ள வீரக்கழல் நடனத்துக்கு ஏற்பச்சதங்கை போல இசைக்கவும் ஆடும் கடவுளாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் சுழிகள் பொருந்திய கடலில் காவிரி வெள்ளநீர் தெளிந்த நீரை முகந்து எறியுமாறு விளங்குவதும் பழியற்ற நன்மக்கள் வாழ்வதுமான புகார் நகரிலுள்ள பல்லவனீச்சரமாகும். | |
வெந்தல் ஆய வேந்தன் வேள்வி வேர் அறச் சாடி, விண்ணோர் வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம் மந்தல் ஆய மல்லிகையும், புன்னை, வளர் குரவின் பந்தல் ஆரும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.
|
7
|
தகுதி இல்லாத மிக்க கூட்டத்தை உடைய தக்கன் என்னும் வேந்தன் செய்த வேள்வியை அடியோடு அழித்துத் தேவர்கள் எல்லோரும் வந்து தன்னை விரும்பி வழிபட நின்ற பெருவீரனாகிய சிவபிரானது இடம் மென்மையான மல்லிகை வளர்ந்து பரவியுள்ள புன்னை குராமரம் ஆகியவற்றில் படர்ந்துள்ள காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும். | |
தேர் அரக்கன் மால்வரையைத் தெற்றி எடுக்க, அவன் தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர் கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர, பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.
|
8
|
சிறந்த தேரை உடைய இராவணன் பெருமை மிக்க கயிலை மலையைக் கைகளைப்பின்னி அகழ்ந்து எடுக்க மாலைகள் அழுத்தும் அவனது திண்ணிய தலைகள் பத்தையும் கால் விரலால் ஊன்றி நெரித்த சங்கரனது ஊர் மேகங்கள் வந்து அழுந்தி முகக்கும் கடல் கிளர்ந்து எழும் காலங்களிலும் அழியாது உணரப்படும் சிறப்பினதும் மக்கள் அக்குமணிமாலை பூண்டு போற்றி வாழும் பெருமையுடையதுமாகிய புகார் நகரைச் சேர்ந்த பல்லவனீச்சரமாகும். | |
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன், நெடுமால், தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம் வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப, பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.
|
9
|
ஆறு அங்கங்களையும் நான்கு வேதங்களையும் முறையே ஓதும் பிரமனும் திருமாலும் தம் கண்களால் தேருமாறு உயர்ந்து நின்ற சங்கரன் தங்கும் இடம் மரக்கலங்களை உடைய கடல் முத்துக்களையும் சங்கங்களையும் அலைக்கரங்களால் அலைத்துத் தருவதும் குற்றமற்றோர் வாழ்வதுமாய புகாரில் அமைந்துள்ள பல்லவனீச்சரம் ஆகும். | |
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார், கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார், கண்டு அறியாத இடம் தண்டு, உடுக்கை, தாளம், தக்கை, சார நடம் பயில்வார் பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே.
|
10
|
அளவுக்கு மீறி உண்டு ஆடையின்றி ஊரார் சிரிக்கத் திரியும் சமணர்களும் அவர்களைக் கண்டு தாமும் அவ்வாறு திரியாது ஆடையை மெய்யில் போர்த்து உழலும் புத்தர்களும் கண்டு அறியாத இடம் தண்டு உடுக்கை தாளம் தக்கை இவை பொருந்த நடனம் புரிபவராய் அடியவர் இடுக்கண்களைப் பண்டு முதல் தீர்த்தருளிவரும் பரமனார் எழுந்தருளிய பல்லவனீச்சரமாகும். | |
| Go to top |
பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சுரத்து எம் அத்தன்தன்னை, அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல் சித்தம் சேரச் செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய், ஒத்து அமைந்த உம்பர்வானில் உயர்வினொடு ஓங்குவரே.
|
11
|
பக்தர்கள் போற்றும் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விளங்கும் எம் தலைவனாகிய இறைவனை அழகிய சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் செழுந்தமிழை மனம் ஒன்றிச் சொல்லி வழிபடும் மக்கள் தீ வினையும் நோயும் இல்லாதவராய் அமைந்த ஒப்புடையவர் என்று கூறத் தேவர் உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வர். | |